வயது (குறுங்கதை)

கோயம்பத்தூர் புத்தக விழாவில் ஒரு மூத்த எழுத்தாளரைச் சந்திக்க நேர்ந்தது.  நீண்ட கால நண்பர்.  சந்தித்து சில ஆண்டுகள் இருக்கும்.  பத்து ஆண்டுகள் கூட இருக்கலாம்.  எனக்குப் பிரியமான எழுத்தாளரும் கூட.  அவரோடு இருந்தால் எப்போதும் சிரிப்பும் அமளியுமாகவே இருக்கும்.  

குசலம் விசாரித்த பிறகு உரையாடலை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை.  நண்பர் என்னைப் போலவே ஒரு குடிவிரும்பி.  குடி பற்றிய அல்லது எது பற்றியுமே சங்கோஜமோ, கூச்ச உணர்வோ, குற்ற மனப்பான்மையும் இல்லாத அளவுக்கு வெளிப்படையானவர்.

அதனால் இப்படி ஆரம்பித்தேன்.  

”இப்போதும் குடிக்கிறீர்களா?”

”ம்.  குடிக்கிறேன்.  ஆனால் தினமும் ஒரு பெக் தான்.  வயசாய்டிச்சில்லே?”

அதிர்ச்சியான நான் பேச்சைத் திசை திருப்பலாமென்று ”இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றேன்.

”நேரமெல்லாம் பேரப்புள்ளைங்களோடயே போய்டுது.  ஸ்கூல் விட்டு வந்தா அம்மா அப்பாவைக் கூடப் பார்க்கப் போறதில்ல.  பக்கத்து வீடுதான்.  நேரா நம்ம வீட்டுக்குத்தான் ஓடி வந்துர்றானுவொ.  அப்டித்தான் போவ்து, நமக்கும் வயசாய்டிச்சில்லே?”

மீண்டும் பேச்சை மாற்றினேன்.  

”குஷ்வந்த் சிங்கும் தினமும் ஒரு பெக்தான் அடிப்பார்னு கேள்விப்பட்டிருக்கேன்…”

”ஆமா ஆமா…  மக சொன்னா, தினம் ஒரு பெக் வேணாம்ப்பா, ரெண்டு நாளைக்கு ஒரு பெக் குடின்னு…  அப்டியும் செய்யலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்.  நமக்கும் வயசாய்டிச்சில்லே?”

ங்கொக்கா மக்கா…  வார்த்தைகளை வெளியில் விடவில்லை.  மூத்தவர்.  

முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்துக்காகக் கொஞ்சம் நிதானித்தேன்.  அவரும் புன்முறுவல் மாறாத முகத்துடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.  புன்முறுவல் இல்லாமல் அவர் முகத்தை நீங்கள் கற்பனை செய்ய முடியாது.  

ஆங், சப்ஜெக்ட் கிடைத்து விட்டது.

”ஆமாம், இங்கிருந்து உங்கள் வீடு எவ்ளோ தூரம்?”

”அதை ஏன் கேட்கிறீங்க?  முப்பது கிலோமீட்டர்.  வூபர்ல கொள்ளைக் காசு கேட்கிறான்.  என்னா பண்றது, அதுக்குன்னு பஸ்லயா வர முடியும்?  வயசாய்டிச்சில்லே?”

ங்கொய்யால.  டேய் டேய் டேய்.  எவன்டா என்னை கோவை புத்தக விழாவுக்குப் போகச் சொன்னது?  

சரி, பேச்சை வட துருவத்திலிருந்து தென் துருவத்துக்குக் கொண்டு வருவோம் என்று மையத்தை என் பக்கம் மாற்றினேன்.

”இப்போல்லாம் நான் ரெமி மார்ட்டின் குடிக்கிறதில்லே.  வைன் மட்டும்தான்.  அதுவும் மாசத்தில நாலு நாள்…”

அதைச் சொன்ன போது அது ஸேம் ஸைட் கோல் என்று எனக்குத் தெரியாமல் போய் விட்டது.

”ஆமா ஆமா, ரெமி மார்ட்டின்லாம் எப்டி முடியும்?  வயசாய்டிச்சில்லே?”

அப்போது அந்தப் பக்கம் வந்த கவிஞர் சதீஷ்குமார் டீ குடிக்கிறீங்களா சார் என்று எங்கள் இருவரையும் பார்த்துக் கேட்டார். 

நான் வேண்டாம் என்று தலையாட்டினேன்.  மூத்தவர் ”குடிக்கலாம், ஷுகர் வேண்டாம்” என்று சதீஷிடம் சொல்லி விட்டு, ”இப்போல்லாம் ஷுகரையே தொட்றதில்லே, வயசாய்டிச்சில்லே?” என்றார்.

உங்களுக்கு மன உளைச்சல் கண்டால் வேர்த்து வேர்த்து விட்டு, உடம்பில் தண்ணீர்ப் பற்று இல்லாதது போல் நா வறண்டு தாகம் எடுக்குமா?  எனக்கு அப்படி ஆகும்.  அப்போது அப்படி ஆனதால் பக்கத்தில் எங்கோ பராக்கு பார்த்துக்கொண்டிருந்த நண்பர் ஹெர்மனிடம் கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டேன்.

கொடுத்தார்.  மடக் மடக்கென்று குடித்தேன்.  மூத்தவர் சொன்னார், ”நிறைய தண்ணீர் குடிக்கணும்.  இல்லேன்னா மூத்திரக் கடுப்பு வந்துரும்.  வயசாய்டுச்சில்லே?” என்றார்.

சரி, நான் கிளம்புகிறேன் என்று விடை பெற்றுக்கொண்டு முகமெல்லாம் வெளிறிய நிலையில் விஷ்ணுபுரம் ஸ்டாலை நோக்கி நடந்தேன்.  அப்போது என் எதிரே வந்த சுஷில்குமார் பாரதி ”என்ன சாரு, வித்தியாசமா இருக்கீங்க?” என்றார்.  

”வயசாய்டிச்சில்லே?” என்று என்னையறியாமல் வாய் முணுமுணுத்தது.  அதைக் கேட்டு சுஷில்குமார் பாரதியின் முகம் வெளிற ஆரம்பித்ததைக் கண்டேன்.