சாரு, அதன் பொருள் விநாயகரை உடைக்க வேண்டும் என்பதல்ல. விநாயகருக்குள் இருப்பவர் புத்தர் என்பதே. விநாயகர் ஒரு பூர்வ புத்தர். இது ஒரு உருவகம் மட்டுமே.
இது அபிலாஷ்.
புத்திஜீவிகளின் பிரச்சினையே இதுதான். ஒரு குழந்தை ஒரு பொம்மைக்குத் தலை சீவிப் பொட்டிட்டு புடவை கட்டி சோறு ஊட்டுகிறது. நான் புத்திஜீவி. நான் என்ன செய்ய வேண்டும்? அந்தக் குழந்தையிடம் சென்று “ஏய் முட்டாள் குழந்தையே, இது ஒரு உயிரில்லாத பொம்மை. இதற்கு உயிரில்லை, இது ஒரு மரம்” என்று சொல்ல வேண்டும். குழந்தையின் நம்பிக்கையில் மூத்திரம் போவது போன்ற செயல் அது. சராசரி மனிதர்களிடம் போய் தத்துவ விவாதம் செய்வது, அதுவும் ஒரு பண்டிகை தினத்தில் செய்வது மற்றவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவது ஆகும். இன்றைய தினம் ஹிந்துத்துவ அரசியல் முன்னணியில் இருக்கிறது. இது இந்தியாவின் மத நல்லிணக்கத்துக்கு ஆபத்து. இந்த நிலையில் ஹிந்துக்களைத் தொடர்ந்து நோண்டிக் கொண்டே இருப்பதும், அவமானப்படுத்திக் கொண்டே இருப்பதும் ஹிந்துக்களை ஒருங்கிணைக்க மட்டுமே உதவும். விநாயகர் எப்படி பூர்வ புத்தர் என்பதை விரிவான கட்டுரையாக பிறிதொரு தினத்தில் எழுத வேண்டுமே தவிர இன்றைய பண்டிகை தினத்தில் எழுதுவது வக்கிரம். புத்திஜீவி வக்கிரம். டேய் மூடர்களே என்று மற்றவர்களைப் பார்த்து விளிப்பதற்குச் சமம். அப்படிச் சொல்வதற்கு எந்த புத்திஜீவிக்கும் உரிமை கிடையாது. சராசரி மனிதன் அடிக்கத்தான் வருவான். அடித்தால் ஐயோ கருத்து சுதந்திரம் இல்லையே என்று புலம்பக் கூடாது. எப்போது நீங்கள் ஒரு பண்டிகை தினத்தில் பண்டிகையை சந்தோஷத்துடன் கொண்டாடுபவர்களை அவமானப்படுத்துகிறீர்களோ அப்போதே உங்களைத் தாக்குவதற்கான ஆயுதத்தை நீங்கள் மற்றவர்களிடம் கொடுக்கிறீர்கள் என்றே பொருள். நடத்துங்கள்.