நேற்று வாட்ஸப்பில் ஜெயமோகனின் கடிதம் ஒன்றை காயத்ரி எனக்கு அனுப்பியிருந்தாள். அவளுடைய அப்பாம்மை கதை பற்றி. சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால், ஜெயமோகன் மற்றும் என்னுடைய ரசனை இரண்டும் இருவேறு துருவம் என்பது ஊர் அறிந்த விஷயம். நான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மரியோ பர்கஸ் யோசாவை அவருக்குப் பிடிக்காது. இப்படி ஆயிரம் உதாரணம் சொல்லலாம். ஆனால் அவ்வப்போது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதும் உண்டு. காயத்ரியின் அப்பாம்மை கதை ஜெயமோகனுக்குப் பிடித்திருந்தது என்று அறிந்து மகிழ்ச்சி. இன்னொரு நுணுக்கமான விஷயமும் உண்டு. பத்து ஆண்டுகள் என்னிடம் இலக்கியம் பயின்ற மாணவி காயத்ரியிடம் என்னுடைய எழுத்தின் சாயலே இல்லை என்பது அறிந்துதான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். துளிக்கூட இல்லை.
இன்று முகநூலில் காயத்ரியின் இந்தப் பதிவும் ஜெயமோகனின் கடிதமும், கடைசியில் கதையும்…
என் முதல் சிறுகதையை ஜெயமோகனுக்கு, ‘நேரம் கிடைத்தால் படியுங்கள்’ என்று அனுப்பியிருந்தேன். பன்னிரெண்டே மணி நேரத்தில் பதில் அனுப்பியிருந்தார். உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி ஜெ. என் முதல் கதையை, ரசனையிலும் சிந்தனையிலும் இரு வேறு துருவங்களாக விளங்கும் சாரு, ஜெயமோகன் இருவருமே பாராட்டியிருப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. அதே சமயம் இந்தப் பாராட்டுகள் என் தலைக்குள் ஏறி விடாமலிருக்க இறை சக்தி அருள் புரியட்டும்!!!
Love you Charu, Love you Jeyamohan…
காயத்ரி ஆர்
***
அன்புள்ள காயத்ரி,
உங்கள் கதை படித்தேன். கதைக் கரு அழகாக உள்ளது வழக்கமானதாக இல்லை என்பது ஒரு முதல் கதைக்கு முக்கியமான தகுதி. நுண்ணிய விவரணைகளும் சிறப்பாக உள்ளன. நுண் சித்தரிப்புகள் வழியாகத்தான் ஒரு கதை உண்மையில் நிகழ்த்தப்படுகிறது .அதை கலை என்று நாம் கொள்வது புலன்களாலும் மனத்தாலும் நாம் அவதானித்து பதிவு செய்யும் நுணுக்கமான தகவல்கள் வழியாகவே. அதுதான் ஒரு கதை உண்மையிலேயே நம்மைச்சுற்றி நிகழ்கிறது ,நாம் அதை பங்கு கொள்கிறோம் என்று நமக்கு காட்டுகிறது. இந்த அம்சங்கள் இதில் சிறப்பாக உள்ளன. ஆகவே இதை இந்த அளவிலேயே ஒரு தரமான கதை என்று சொல்ல முடியும் .வாழ்த்துக்கள்.
இந்த கதைக்கு, இலக்கியரீதியாக மேலதிகமாக என்ன தேவைப்படுகிறது என்று பார்த்தால் சிலவற்றை சொல்லலாம். முதன்மையாக ஒரு கதை ‘நிகழவேண்டும்’ ‘சொல்லப்பட’க்கூடாது. நிகழ்ந்தால் வாசகன் அதில் ஈடுபடுகிறான். சொல்லப்பட்டால் வாசகன் தெரிந்துகொள்கிறான். அந்நிகழ்ச்சியில் ஈடுபடும் ஒருவர் கதைசொல்லியாக இருந்து அதை வாசகனுக்குக் காட்டலாம். ஆனால் நேரடியாக ஆசிரியனே வாசகர்களை நோக்கி சொல்வது போல் இருந்தால் அது கதையனுபவத்தை அளிப்பதில்லை.
ஏனென்றால் அது வாசகனை ஒரு குறிப்பிட்ட வகையில் பார்ப்பதற்காக கட்டாயப்படுத்துகிறது. அதில் பன்முக வாசிப்பு என்று இலக்கியத்தின் அடிப்படையாக இருக்கக் கூடிய ஒன்று இல்லாமலாகிறது. கதையின் முடிவில் ஆசிரியரின் கருத்து திரண்டு வந்து விடுகிறது. அது வற்புறுத்தல் ஆகிவிடுகிறது. வாசகன் உண்மையில் அப்படி ஒரு சூழலில் இருந்தால் அவனுக்கு என்னென்ன தோன்றுமோ எல்லாமே இக்கதையிலும் தோன்றினால் இயல்பாகவே அதில் பன்முக வாசிப்பு வந்துவிடும்
நீங்களே பார்க்கலாம், நீங்கள் இன்றைய யுகத்துப் பெண். உங்களிடம் ஒன்று வற்புறுத்தப் பட்டால் உடனடியாக உங்கள் மனதிற்குள் அதற்கெதிரான எண்ணம்தான் உருவாகிறது இல்லையா ? கலையை வாசிக்கும் அனைவருமே சொல்வது இது. சொல்லாதே ,காட்டு. நானே அனுபவித்து அறிந்து கொள்கிறேன். அந்த மனநிலையில்தான் நவீன வாசகன் இருக்கிறான்.
இந்த அம்சத்தை கணக்கில் கொண்டால் இந்தக் கதையில் இருக்கக்கூடிய சில பிரச்சினைகள் உங்கள் கவனத்திற்கு வரும். இதில் ஒரு கதைசொல்லி கதை சொல்கிறார் .அவர் அச்சூழலில் இருந்து அதை அறிந்து எல்லாவற்றையும் சொல்ல முடியும் .ஆனால் அவர் ஆசிரியர் வற்புறுத்துவதையெல்லாம் வாசகனிடம் சொல்லக்கூடாது .இந்த வேறுபாடு முக்கியம்.
இந்த கதையில்சொல்லப்பட்ட மையம் என்பது வாசகனே சென்றடையும் படியாக இருந்தால் சிறப்பாக இருக்கும்இந்த கதையில் வரும் அப்பாம்மா பாட்டியின் குணச்சித்திரச் சித்தரிப்புதான் கதையின் ‘உடல்’. அந்தப்பாட்டியின் அழகுணர்வு நுண்ணுணர்வு நாசூக்கு ஆகியவை காட்டப்படுகின்றன. அவர் இறப்பால் மறுகணமே என்ன ஆகிறார்? எப்படி அவர் வெறும் பிணம் ஆக கருதப்படுகிறார் என்பது கதை . இது பிராமணவீடுகளில் வழக்கம். இறந்ததுமே சடலத்தை வெளியே போட்டுவிடுவார்கள். தரையில் போடுவார்கள். அதை எந்தவகையிலும் மரியாதையாக நடத்தமாட்டார்கள். அதை அவமானப்படுத்துவது வழியாக அது இறந்த மனிதர் அல்ல என்று தங்களுக்குத் தாங்களே நம்பி கொள்கிறார்கள். இறந்தவர் வேறு எங்கோ இருக்கிறார், அங்கிருப்பது வெறும் உடல், ஒரு கட்டை, ஒரு கூடு, சக்கை என்று தங்களை தாங்களே கருதிக் கொள்வது அந்த காலத்து மனிதர்களுக்கு தத்துவார்த்த ரீதியாக தேவையாக இருந்திருக்கிறது.
அதற்கப்பால் அந்த தருணத்தின் பலதளங்கள் உள்ளன.அவர் உயிருடன் கம்பீரமாக இருந்தகாரணத்தாலே அவரை அவமானப்படுத்தி பார்க்கும் எண்ணம் அங்கிருப்பவர்களிடம் அவர்கள் அறியாமல் உள்நுழைந்து இருக்கிறதா என்பது கதையின் மையம். பொதுவாக பிணங்களை பார்க்கும் ஆர்வம் மக்களுக்கு உண்டு. அதற்கும் அப்பால் போவது கதைசொல்லிப் பெண்ணின் உள்ளம் உள்ளே வரும்போது. அவள் ஏன் பார்க்கிறாள்? அவள் ஏன் ஓடிப்போகவில்லை? ஏனென்றால் அவளுக்கும் அந்த ஆர்வம் உள்ளது. அவளாலும் தவிர்க்கமுடியவில்லை.
இறந்தவரின் கம்பீரம் இருப்பவர்களுக்கு அளிக்கும் ஒவ்வாமை ஒரு தளம். இறப்பை மனிதர்கள் எதிர்கொள்வதிலுள்ள தத்தளிப்பு இன்னொரு தளம். அந்தச் சடலம் செத்தவரா இல்லை வெறும் சதையா என்ற தத்துவச் சிக்கல். இதை வாசகர்கள் சென்றடையவேண்டும். இதை தத்துவார்த்தமாக பார்க்கலாமா அல்லது தனிமனித அற்பத்தனமாக பார்க்கலாமா என்பதெல்லாம் வாசகனுடைய கற்பனைக்கே விடப்பட வேண்டும். அவனை யோசிக்கத் தூண்ட வேண்டும். இதில் எது அங்கே செயல்படுகிறது என நாம் சொல்லக்கூடாது. அந்த குழப்பம் அதில் இருக்க வேண்டும். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் இப்படி நிகழ்கிறது என்று ஒரு பெண் அங்கிருந்து கொண்டு பார்த்து பதிவு செய்வது போல் இந்த கதை இருக்க வேண்டும்
அந்த பாட்டியின் அழகுணர்வின் மேல் பெருமதிப்பு கொண்ட அந்தப் பெண் கொள்ளும் அதிர்ச்சி நேரடியாக, கதையின் உச்சியாக இருந்தால் அதுவே கதை என ஆகிவிடும். கதை குறுகிவிடும். ‘இதை நான் பார்த்துவிட்டேன். இதுதான் என் கடைசி வரை நினைவில் இருக்கப்போகிறதா?” இவ்வளவுதான் கதை என ஆகிவிடும். ஆனால் இக்கதை அங்கிருந்தும் மேலே செல்லலாம். நாம் பிணத்தை நினைவில் வைத்துக்கொள்கிறோமா, இறந்தவரையா? அந்த வினா நோக்கி கதை சுட்டி நிற்கலாம்.
அந்தப்பாட்டியின் அழகுணர்வு, நாசூக்கு ஆகியவற்றைச் சொல்லும் நுண்செய்திகள் வழியாக அவரை சித்தரிக்கலாம். கதையே நினைவில் பாட்டி எப்படி நிற்பார் என்பது. ஆகவே நினைவில் அவர் எப்படி இருக்கிறார் என்பதே முக்கியம். அருண்மொழியின் பாட்டி மதுரை சுங்கிடி புடவை மட்டுமே கட்டுவார். அது ஓர் அடையாளம். அப்படி. அவர் புடவையை நன்றாகக் காயவைக்காமல் அரை ஈரமாக எடுத்து கையால் நீவி இறுக்கமாக மடித்து அயர்ன் செய்வதுபோல ஆக்கிவிடுவார். இப்படி சில அடையாளங்களாகவே நாம் மனிதர்களை நினைவுகூர்கிறோம். அந்த அடையாளம் எப்படி பிணத்தின் அடையாளமாக ஆகிறது, எப்படி மனிதர் பிணமாக ஆகிறார் என்பதுதான் கதை.
அதேபோல கதையின் தொடக்கம் ராம ராம என்று ஆரம்பிக்க கூடாது. அது வார இதழ்களில் வழக்கமாக ஆரம்பிக்கப்படும் பாணி. அது நமக்கு வார இதழ் கதைகளை நினைவூட்டுகிறது. நம் அனுபவம் சிதறிவிடுகிறது. நல்ல கதைக்கு நல்ல தொடக்கம் வேண்டும். தீவிரமான ஒரு வரி. கதையின் மையத்தை உணர்த்தும் வரி. சினிமாவில் அந்த சினிமாவின் மையமே முதல்காட்சியாக இருக்கிறதே அது போல.
இந்தக்கதை என்ன? இதன் மையம் ‘நினைவில் நிற்பது’ தானே. அப்படியென்றால் நினைவில் நிற்பதே முதல் வரியாக இருக்கலாம் இல்லையா? ஓர் உதாரணத்திற்காக சொல்கிறேன் ”பாட்டிக்கு மாம்பழமே பிடிக்காது. ஆனால் மாம்பழக்கலர் புடவைதான் கட்டுவார். ஒரு பெரிய மாம்பழமாகத்தான் அவர் நினைவில் நின்றிருக்கிறார்’ என்பது ஓர் ஈர்க்கும் வரி. சட்டென்று மையத்துக்கு கொண்டுசென்றுவிடும்.
கதை முடிவில் இனிமேல் யோனிதானே நினைவில் இருக்கும் என கதைசொல்லி நேரடியாகச் சொல்வது போல் வராமலிருக்கலாம். அந்த குளிப்பாட்டும் சடங்கும் பாட்டியின் உடை,பாவனை பற்றி வருவதுபோலவே நுட்பமாகச் சொல்லப்படலாம். விஷுவலாக. அந்த உடல் எப்படி இருந்தது. அந்த குளிப்பாட்டும் சடங்கு எப்படி நடந்தது. அந்த உடலை அப்பாம்மா என்று நினைக்க முடிந்ததா இல்லையா? அந்த நிமிடங்களில் கதைசொல்லும் பெண் ஏன் அதை கூர்ந்து கவனித்தாள்? அவளுக்குள் இருந்து ஒரு ரகசியக் கண் அதை விரும்பியதா?
அப்படி நுட்பமாக அந்தக் காட்சியைச் சொல்லிவிட்டு மீண்டும் அந்த மையமான நினைவில் கொள்ளுதலில் சென்று தொட்டு, எதையும் முடிவாகச் சொல்லாமல் கதையை முடிக்கலாம். அதாவது உண்மையில் இவள் மனதில் இனி எப்படி பாட்டி எஞ்சுவாள்? அதை வாசகனே ஊகிக்கலாம். வாசகன் கற்பனையில் அந்த வினா வளரலாம். அவனே முடிவை அடையலாம். அப்போதுதான் அது கலை. அது பன்முக வாசிப்பை அளிக்கும்.
*
முதல் கதையிலேயே ஆழமான ஒன்றை, அசலான ஒன்றை தொட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நீங்கள் நிறைய எழுதமுடியும். கலைத்தன்மையுடன் எழுதவும் முடியும். கதையின் தொழில்நுட்பம் மட்டுமே நீங்கள் கற்றுக்கொள்வதற்கு கொஞ்சம் உள்ளது
எழுதுங்கள். நம் சாதாரண வாழ்க்கையின் அத்தனை வெறுமையையும் பொருளின்மையையும் எழுத்து இல்லாமலாக்கிவிடுவதைக் காண்பீர்கள்.வாழ்த்துக்கள்
ஜெ
அப்பாம்மை: சிறுகதை: காயத்ரி. ஆர். – Charu Nivedita (charuonline.com)