வேடிக்கை பார்க்கும் பூனை…

நான் சொல்வதை உங்களில் பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம்.  நம்புவதோ நம்பாமல் இருப்பதோ அவரவர் விருப்பம்.  கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் ஒரு நண்பர் இன்னொரு நண்பரின் முகநூல் பதிவை எனக்கு அனுப்பி இதைப் பொருட்படுத்த வேண்டாம், வேலையைப் பாருங்கள் என்று சொன்னார்.  ஐயோ, அவரை நான் ப்ளாக் செய்து பல ஆண்டுகள் ஆயிற்றே என்றேன்.  அந்த நண்பரை என் எழுத்து எப்படித் துன்புறுத்தியிருக்கிறது என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  துன்புறுத்தினால் துன்புறுத்துபவரின் எழுத்தைப் படிக்காமல் இருப்பது மட்டுமே ஒரே வழி என்று நினைத்துக் கொண்டேன்.  ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இதுவும் கூட அவரைத் துன்புறுத்தலாம்.  போகட்டும்.  என்னை யாரேனும் பாராட்டினால் முன்பெல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.  முன்பு என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு.  ஆனால் அந்த அனுபவம் அப்போது அதிகம் கிடைத்ததில்லை.  கிடைத்ததே இல்லை என்று சொன்னால் பொருந்தும்.  பிறகு சில காலம் சென்று என் எழுத்தைப் பாராட்டினால் லஜ்ஜையாக இருக்கும்.  நிறுத்தி விட்டால் தேவலாம் போல் இருக்கும்.  இப்போதெல்லாம் என்னைப் பலரும் பாராட்டுவதைக் கேட்கிறேன். அதைக் கேட்கும்போது எனக்கு எந்த உணர்வையும் எழுப்புவதில்லை.  நான் எதுவும் உணர்வதில்லை.  உதாரணம் சொல்கிறேன்.  திருவண்ணாமலையில் திரியும் சாதுக்களைப் போய்ப் பாராட்டினால் அவர்களுக்கு மகிழ்ச்சி அடைவார்களா?  நீங்கள் பாராட்டுவதை சும்மா கேட்டுக் கொண்டிருப்பார்கள்.  ஒருவர் என்னைப் பாராட்டுவதைக் கேட்கும் போது எனக்கு அப்படித்தான் இருக்கிறது. 

இன்னொரு உதாரணம் தருகிறேன்.  மரணங்கள் என்னை பாதிப்பதில்லை.  எனக்கு சம்பவிக்க இருக்கும் மரணம் கூட.   நாளை அமெரிக்கா செல்வதற்கு விமானத்தைப் பிடிக்கப் போக வேண்டுமானால் – வருவது குளிர்காலம் – என்னென்ன எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வு வருகிறது அல்லவா?  அதைப் போல, எப்போது வரும் என்று சொல்ல முடியாத மரண தேவனை மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தகுந்த நிலையில் இன்ன இன்ன விஷயங்களை முடித்து வைத்து விட வேண்டும் என்று மட்டுமே தோன்றுகிறது.  முடிக்காமல் போனாலும் பிரச்சினை இல்லை.  உலகம் அழிந்து விடாது.  இந்த நிலையில் மற்றவர்களின் மரணமும் பாதிப்பதில்லை.  நானும் நண்பர்களும் அ. மார்க்ஸும் பேசிக் கொண்டிருந்தோம்.  இரவு பதினோரு மணி இருக்கும். ஒரு மலை வாசஸ்தலம்.  இழப்பு பற்றி பேச்சு ஓடிக் கொண்டிருந்தது.  மார்க்ஸ் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிக் கொண்டிருந்தார்.  அவர் முடித்ததும் நான் உணர்ச்சியே அற்ற குரலில் எந்த இழப்பும் என்னை பாதிப்பதில்லை, அது இழப்பு என்று கூடத் தோன்றுவதில்லை என்றேன்.  நண்பர்கள் விழித்தார்கள்.  உதாரணம் சொன்னேன்.  ஒரு வீட்டில் ஒரு மரணம் நடந்துள்ளது.  அந்த வீட்டுக்கு வந்து போகும் ஒரு பூனை அந்த மரணத்தையும் அந்த மரணத்துக்காக வந்துள்ள மனிதர்களையும் எப்படிப் பார்க்குமோ அப்படித்தான் அந்த மரணத்தை நான் பார்க்கிறேன் என்றேன்.  அந்த அளவுக்கு இழப்பும் மரணமும் எனக்கு அந்நியமாக இருக்கிறது. ஏதோ வித்தியாசமாக எழுதிப் பேர் வாங்க வேண்டும் என்பதற்காக இதை நான் எழுதவில்லை.  அப்படித்தான் என் மனம் செயல்படுகிறது.  அப்படித்தான் நான் இருக்கிறேன்.  “அது ஓர் உச்சபட்ச மனநிலை” என்று நெகிழ்ந்து சொன்னார் சுரேஷ் ராஜமாணிக்கம்.

இரண்டு விஷயங்கள் மட்டுமே என்னை ஈர்க்கின்றன.  என் எழுத்து இந்தியாவை விட்டு வெளியே செல்ல வேண்டும்.  ஒரு நண்பர் நெகிழ்ந்து போய் சொன்னார், சாருவை குறைந்த பட்சம் ஆசிய அளவிலாவது தெரிய வேண்டாமா?  இரண்டாவது, பயணம்.   

மற்றபடி, இப்போதெல்லாம் யாராவது என்னைப் பாராட்டினால் அவர்கள் அவர்களையே பாராட்டிக் கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது. பாபாகாவும், ரிஷியும் தங்களைப் பாராட்டி எழுதிக் கொண்ட சில வார்த்தைகளை இங்கே உங்களிடையே பகிர்கிறேன். 

பாபாகா: சாரு நிவேதிதா என்றவுடன் பலருக்கும் பலவிதமான கருத்துக்களும், அபிப்ராயங்களும், நேசமும் தோன்றும்.அதையெல்லாம் நினைத்து நான் பொறாமைப்பட்டிருக்கிறேன். என்னை பொறுத்தவரை அவர் பின்நவினத்துவத்தின் ஒரு ஈடுயிணையற்ற மாஸ்டர். ஸீரோ டிகிரி படித்துவிட்டு நான் வந்த முடிவு அது ஒரு pill book என்பது தான். எப்படி ஒரு எக்ஸ்டஸி மாத்திரை நம்முள் வேலை செய்கிறதோ அப்படித்தான அந்த நாவலும் வேலை செய்யும்.ஏழு வருடங்கள் முன்பு என் நண்பனிடம் கூறினேன் ‘என் முதல் நாவலை பூப் பழங்களுடன் ஒரு தாம்பாளத்தில் வைத்து சாருவிடம் தருவேன் என்று. அது நடக்க ஏழு வருடங்கள் ஆன விரக்தி மற்றவர்களிடத்தில் சொல்லி மாளாது. அந்த விரக்தி சாருவையும் தன்னுள்ளே சுற்றிக்கொண்டுவிட்டது என்பது கசப்பு தான். இப்போது அவரிடமிருந்தே அங்கீகாரம் கிடைத்துவிட்டது. ஸீரோ டிகிரியை முதன்முதலில் படித்த ரயில்பயணத்துக்கு என் உலகம் விரைகிறது. நாம் பயணிக்கும் அந்த மெக்கானிக்கல் இயந்திரம் அல்ல ஒரு ரயில்.அது நம்மை சுற்றியிருக்கும் ஜியாமெட்ரி. அங்கு தான் வெறிகொண்டு கொந்தளிக்கிறது ஒரு நாவல். நன்றி சாரு. வேறொருவனாக இருந்தால் பலவருடங்கள் முன்பே உங்களை சந்தித்து அளவளாவி இருப்பான். நான் ஒரு விசித்திரமான தத்தி. இதற்கெல்லாம் காரணமாக இருந்த Gayathri R மற்றும் Ramjee Narasiman இருவருக்கும் என் பணிவான நன்றிகள்.

ரிஷி:  ஸீரோ டிகிரி என் வாழ்வையே புரட்டிப் போட்ட நாவல். சாருவைப் பார்த்து அவரைப் போல வாழ முயற்சித்து தோற்றுப் போயிருக்கிறேன். அந்த அளவுக்கு நான் சாரு பைத்தியம். என் வாழ்வை இந்த அளவிற்கு யாரும் Influence செய்ததில்லை. தூர நின்று பல வருடங்களாக ரசித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய ஓவியங்களைப் பார்த்து பிடித்துப் போய் அவரே நேரில் கூப்பிட்டு பாராட்டியிருக்கிறார். சில ஓவியங்கள் அவருடைய புத்தகங்களுக்கு அட்டைப் படமாக வெளிவந்தது. நான் தீவிரமாக நேசிக்கும் என் வாழ்வையே மாற்றிய கலைஞனின் புத்தகங்களில் என் ஓவியம். இதை விட என்ன வேண்டும்! சாருவை வாழ் நாள் முழுக்க கொண்டாடுவேன். He’s my Master. Thanks to Gayathri R Ramjee Narasiman

ரிஷிக்கு என் பதில்:  தோற்றெல்லாம் போகவில்லை ரிஷி.  வாழ்வதில் வாழ்வதுதான் சவால்.  வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை.  ஏனென்றால், நம்முடைய தோல்விகளும் நம்முடைய படைப்புகளாக மாறி தோல்வி வெற்றியாகி ரசவாதம் அடைந்து விடுகிறது.  வான்கோவின் தோல்விகள்தான் அவன் ஓவியங்கள்?  அவன் என்ன வெற்றிகரமான மனிதனா என்ன?