பாபாகாவின் புதிய நாவல்: அத்தியாயம் 2

2 இப்ராஹிமின் சிறுகதையொன்றை பெருங்கதையாக நிரவிக்கொண்டிருந்தார் மைந்தன். அவருக்கு இப்போழுதெல்லாம் கதை சொல்லுவதே தொழிலாகிப் போய்விட்டது. ஒரு நாள் அவர் மனைவியிடம் ஒரு ஊருல ஒரு இட்லி இருந்தது என்று கதை சொல்ல ஆரம்பித்த போது அவரது மனைவி பயந்தே போனாள். அவருக்காக கேஸரோலில் வைத்திருந்த ஐந்து இட்லிகளில் நான்கை அன்று மதியம் எடுத்து இரண்டாம் சிற்றுண்டிப் பசியில் அவள் விழுங்கிவிட்டாள். அதை சொல்லிக்காட்டத்தான் அந்தப் பரிதாபமான கதை ஆரம்பித்தது. இப்ராஹிம் எழுதிய தீ ஏன் சொட்டியது என்ற கதைத் தொகுப்பில் சென்னையின் நடுவில் ஒரு எரிமலை இருப்பதைப் போல் அவன் புனைந்திருந்த சிறுகதையைத் தான் அன்று மைந்தன் பொங்க வைத்துக்கொண்டிருந்தார். அந்த எரிமலை வெடித்து மௌன்ட் ரோடில் தீப்பிழம்பாக ஓடுகிறது. அதை ஒரு ஏழை அவனது இரும்புச் சட்டியில் அள்ளும் போது அந்த சட்டி தீப்பிழம்பில் உருகி நடுவில் ஓட்டையாகிப் போகிறது, அவன் நகரத்தையே அந்த ஓட்டை வழியாகப் பார்க்கிறான் என்று முடிந்தது அந்தக் கதை. அங்க அடிச்சாயான் என்ன அங்க அடிச்சான். இனிமே எழுத என்ன இருக்கு . சின்னப் பையன் என்ன எழுதிட்டான் பாருங்க என்று மைந்தன் கண்ணைத் துடைத்துக் கொண்ட போது கைத்தட்டலோசை அந்தச் சின்ன அரங்கம் முழுவதும் அதிர்ந்தது.இந்த ஆள் உண்மையிலேயேதான் நம்மள பாராட்டுறானா. இவ்வளவு நல்ல மனசு இருக்கா இவருக்கு. நாம மட்டும் ஏன் டென்னீஸ் ரெஃபரி மாதிரி எப்போவூம் ஹைட்டு ஸ்டூல்ல ஒக்காந்துனு எப்போ பாரு ஃபௌல்னு கத்தறோம். நாம்ப ஏதோ ஒன்னு எழுதறோம் எதையோ சொல்ல. இவரு அத படிச்சு எதையோ புரிஞ்சுக்குறாரு. பறவைங்க கூட்டம் வானத்துல மாறிக்கிட்டே இருக்குற ஒரு வடிவத்துல சேர்ந்து பறக்குதுங்க . ஏன்னு கேட்டா அதுங்களுக்கு ஜ்யாமெட்ரி தெரியாதுனு ஒரு சுலபமான பதிலக் கொடுத்துடலாம். அதுங்க நல்ல ஒரு வட்டமாவோ சதுரமாவோ வானத்துல ஏன் பறக்க மாட்டேங்குதுங்கங்கறுதுக்கு அதான் பதில். ஆனா ஒரு வேள அதுங்க அந்தக் கசமுசா ஷேப்புங்கற ஜியாமெட்ரில தான் பறக்க ஆசப்படுதுங்களா நமக்குத் தான் அந்த ஜியாமெட்ரி புரியலாயா. அதுங்களுக்கு அது தெரிஞ்சுருக்கா? இது மாதிரி தான் இருக்கு இவர் என்ன பாராட்டுறது. முதல் வரிசையில் கேள்வி உட்கார்ந்திருந்தாள். அவளுடன் அவளது தோழன் என்று வெளிப்படையாகப் பொய் சொல்லிக் கொண்டு உள்ளூற அவளைக் காதலித்த மோகித்த கன்னம் வரித்து சிரித்த பின்பு பல்லைக் காட்டும் பழக்கமுடைய குகன் உட்கார்ந்திருந்தான். அவனைக் கண்டாலே இப்ராஹிமுக்கு அடிமனதில் ஒரு அச்சம். குகன் தனது எட்டாவது வயதில் நல்ல பாம்பு ஒன்று தன்னைக் கொத்தியது என்றும் பிறகு அந்த விஷம் உயிருக்கு எந்த பாதகமும் அல்லாமல் அவனது வலது கண்ணின் கருவிழியை மட்டும் நீலமாக்கி விட்டது என்றும் எல்லாரிடமும் கூறிவந்தான். அதை நிரூபிக்க இடது கண்ணின் ப்லூ லென்ஸை கழற்றிக் காண்பிப்பான். அந்த இன்னொரு கண்ணிலும் லென்ஸ் தான் அவன் மாட்டியிருக்கிறான் என்று சொல்ல இப்ராஹிமுக்கு மனம் அலறும். அந்தப் பூனைக்கண்ணன் மேல் அவனுக்கு இருந்த அச்சத்தால் அவனது அலறலை ஸ்ப்ரிங்காய் அழுத்தி வைத்திருந்தான். இப்ராஹிமின் மாமா முகம்மத் ஒரு கணித மேதை. அவர் சின்ன வயதில் அவனிடம் ஒரு கணக்கு விந்தையை ஒரு ஐம்பது கிலோ துவரம் பருப்பு மூட்டையை வைத்து சொன்னார். அவர் கணித மேதையாக இருந்தாலும் அவர் மளிகைக் கடைதான் வைத்திருந்தார். அந்தக் கணக்கு விந்தையின் படி அந்தத் துவரம் பருப்பு மூட்டையிலுள்ள பருப்பு அத்தனையும் ஒரு குவியலில் இருப்பது போல் தெரிந்தாலும் அவை அடுக்குகளில்தான் உள்ளது என்பதே நிஜம். மொத்தம் அந்த மூட்டையில் n அடுக்குகள் உள்ளன. அதன் முதல் அடுக்கான மேல் அடுக்கில் x1 பருப்புகள் உள்ளன. அதன் இரண்டாவது அடுக்கில் x2 பருப்புகள் உள்ளன. இப்படிச் சென்று கொண்டே சென்றால் கடைசி அடுக்கில் xn பருப்புகள் இருக்கும். இதன் ஸிக்மா கூட்டுத் தொகை தான் பருப்புகளின் எண்ணிக்கை. இதைக் கூறிவிட்டுத்தான் இப்ராஹிமின் மாமா அவனிடம் வினவினார். முதல் அடுக்கில் இருக்கும் பருப்புகள் அந்த அடுக்கை முற்றிலுமாக இடமில்லாமல் அடைக்காததினால்தான் பருப்புகளின் நடுவில் இருக்கும் இடைவெளியில் அடுத்த அடுக்கின் பருப்புகள் தெரிகின்றன. அந்த அடுக்கின் இடைவெளியில்தான் அதற்கடுத்த அடுக்கின் பருப்புகள் தெரிகின்றன. இது நடக்கவில்லையென்றால் மேலே இருக்கும் பருப்புகள் மட்டும்தான் நம் கண்ணிற்குத் தெரியும். அப்போது குவியல் என்ற காட்சியே கண்ணுக்குத் தெரிய வாய்ப்பில்லை. முகம்மதின் கேள்வி இதுதான். இந்தக் கணக்கின் படி மூட்டையின் தரையான அடி நம் கண்ணிற்கு பருப்புகள் நடுவில் இருக்கும் இடைவெளிகளின் வழி தெரியுமா தெரியாதா? கேள்வியிடம் ஒரு நாள் இந்தக் கேள்வியை எழுப்பினான் இப்ராஹிம். அவனிடம் அதைத் தாண்டி அன்று மிச்சம் மூன்று கேள்விகள் இருந்தன. குகனின் நீலக்கண்களின் கீழ் இரண்டு கருவிழிகள் மூட்டையின் தரையாய் இப்ராஹிமை பயமுறுத்தின.