புத்தரும் விநாயகரும்: சிறுகதை: அராத்து

புத்தர் : மிஸ்டர் விநாயகா , நான் தான் நீ என்கிறார்கள். அம்மா அப்பாவைச் சுற்றி விட்டு , டகால்டி செய்து என் சகோதரனை ஏமாற்றும் பழக்கம் எனக்கு இல்லை . நெஞ்சம் பற்றி எரிகிறது

விநாயகர் : ஹேய் , ப்ரூ , மேஜிக்கல் ரியலிஸம் தெரியாதா ?

புத்தர் : ப்ரூ , மேஜிக்கல் ரியலிஸம் தெரிந்த ஆட்கள்தான் இப்படி விளையாடுகிறார்கள்.

விநாயகர் : கூல் ப்ரூ , அராத்துன்னு ஒரு ஆள் இருக்கான். அவனை வச்சி , “tamil god murugan weds pop star angelica “ அப்படின்னு ஒரு இங்கிலீஷ் நாவல் எழுத வச்சிடலாம்.

புத்தர் : ப்ரூ , லூஸா நீ ? நான் என்ன பேசறேன் , நீ என்ன பேஸ்றே ?

விநாயகர் : இப்ப இதான் ப்ரூ டிரெண்ட் , கூல் . பொண்டாட்டிய வுட்டு ஓடனவன் தானே நீ ? அவங்களும் ஒன்ன மாதிரி உன்னை விட்டுட்டு ஓடிப்போய் ஒக்காந்து இருந்தா என்னா ஆகியிருக்கும்னு , அப்ப பெரியார் இருந்தா கேட்டிருப்பாரு .

புத்தர் : சித்தார்த்தனா ஓடிப்போனான் ? பேரும் ஆளும் மாறிப்போன புத்தன் தானே ஓடிப்போனான் ?

விநாயகர் : அதான் , அதுக்குத்தான் இப்ப உன் பெயரையே மாற்றி என்னை விநாயகர் என்று அழைக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். நான் பேச்சிலர். உன் கறையைத் துடைக்கத்தான் அந்தக் காலத்தில் இந்த ஏற்பாடு போல.

புத்தர் : என்ன ப்ரூ ஒரே குழப்பமா இருக்கு. நீயும் நானும் ஒண்ணா ? வேற வேறா ? என்னைத்தான் உன்னையா மாத்திட்டாங்களா ?

விநாயகர் : தத்துவம் தெரியுமா ப்ரூ? உனக்குத் தெரியாத தத்துவமா ? ஆசையே துன்பத்திற்குக் காரணம்னு தத்துவம் சொன்ன ஆளாச்சே …இருந்தாலும் , இப்ப தத்துவம் வேற லெவலுக்கு போயிடிச்சி. இருத்தலியல் தெரியுமா ?

புத்தர் : என்ன ப்ரோ கண்ணை மூடி மரத்துக்கு அடியில் ஒக்காந்தா , பறத்தலியல் தான், அதெல்லாம் சும்மா டுமான்ஸு , எவன் எங்க ஒரு எடத்துல இருக்கான் இப்பல்லாம் ? அவனவன் அட் எ டைம்ல நாலு எடத்துல இருக்கான்.

விநாயகர் : ஹலோ ப்ரூ , ரொம்ப சீன் போடக்கூடாது. நாம ரெண்டு பேரும் இப்ப பேசிட்டு இருக்கோம் இல்ல , அப்ப ரெண்டு பேரும் ரெண்டு விதமா இருக்கோம்னு தானே அர்த்தம் ?

புத்தர் : ஹை , எனக்கே சீனா ? சக்தியும் சிவமும் ஒண்ணு , ஹரியும் விஷ்ணுவும் ஒண்ணு , அப்டின்னு எல்லாம் நீங்க பஜனை பண்ணிட்டு தனித்தனியா இல்லியா ? தனித்தனியா டயலாக் எல்லாம் பேசிக்கிட்டது இல்லியா ? திருவிளையாடல் படம் பாத்திருப்பியே ப்ரூ , நானும் அந்த கண்றாவியைப் பாத்தேன். சக்தி கோச்சிகிட்டு அம்மா அப்பா வீட்டுக்கு போற மாதிரி எல்லாம் இருந்துச்சே …அதை மாதிரி நீயும் நானும் ஒண்ணா இருந்தே இப்டி பேசிகிட்டு இருக்கலாமே ? என்னை உன்னையா மாத்தி வச்சி விளையாடலாமே ?

விநாயகர் : அப்பனைப் பாடும் வாயால் ஆண்டி சுப்பனைப் பாடுவேனோன்னு பாடி இருக்காங்க ப்ரோ, அது மாதிரி , புத்தனைப் பாடும் வாயால் , எலியாண்டி கணேஷைப் பாடுவேனோன்னு பாடி இருப்பாங்களே ….

புத்தர் : ப்ரூ , நீ ரொம்ப குழப்பற …நான் தனி ரூட்டு. ஆள் மாறாட்டம் தான் இங்க புகார்.

விநாயகர் : ரொலான் பார்த் தெரியுமா ?புத்தர் : நம்ம ஆள்தான் …ஏன் விநாயகர் : நம்ம ஆள்தான் , ஆனா நம்ம ஆளுங்களுக்கேத் தெரியலையே , அதான் சாரு நிவேதிதான்னு ஒரு ஆசாமியை விளம்பர ஏஜண்டா போட்டு நம்மா ஆளை நம்ம ஆளுங்களுக்கு காட்டிக் குடுத்தேன்.

புத்தர் : அதுக்கு என்ன இப்போ ?

விநாயகர் : அந்த சாரு நிவேதிதா என்ன மாதிரி இருக்காரா ? உன்னை மாதிரி இருக்காரா ?

புத்தர் : நம்ம ரெண்டு பேர் மாதிரியும் தான் இருக்கான் அந்த ஆளு. என்ன அவனுக்கு தும்பிக்கை வச்சா உன்னை மாதிரி இருப்பான். ஆனா பொம்பளை விஷயத்துல நம்ம ரெண்டு பேரு மாதிரியும் இல்லையே ? அத ஏன் இப்ப கேக்கற ?

விநாயகர் : அது ஒண்ணும் இல்ல , ரொலான் பார்த் என்ன சொல்லி இருக்கான் ? ஆத்தர் ஈஸ் டெட் .

புத்தர் : உனக்குத்தான் ஆத்தர் , எனக்கு இல்ல . எனக்கு வரலாறு இருக்கு .

விநாயகர் : வரலாறு எழுதனவனும் ஒரு ஆத்தர்தான் , புராணம் எழுதனவும் ஒரு ஆத்தர்தான் என் வென்று.

புத்தர் : இப்ப நாம புத்தகத்துக்குள்ளயா நின்னு பேசிட்டு இருக்கோம் ?

விநாயகர் : பின்ன நான என்ன டிவி பேட்டியிலயா ஒக்காந்துட்டு இருக்கோம் ? இல்ல சுய சரிதையா எழுதிட்டு இருக்கோம் ?

புத்தர் : ப்ரூ , நீ என்ன சொன்னாலும் , உன்னை உடைச்சிப் பாத்தா நான் இருப்பேன். நான் வரலாறு. நீ புராணம்.

விநாயகர் : என்னை ஏன் ப்ரூ உடைக்கணும் ? அதான் கரைச்சி கரைச்சி வெளாடறாங்களே , நீ குளம் , குட்டை , கடல்ல இருந்து எல்லாம் மேலேறி வரலாமே? என்னைக் கரைச்சா ஒண்ணுமே இல்ல ப்ரூ .

புத்தர் : கரக்ட்தான் ப்ரோ , என்னைக் கரைச்சாலும் ஒண்ணும் இல்ல ப்ரோ. பட் நீ என்னமோ ஜாலியா பேசி என்னை ஏமாத்துற மாதிரி இருக்கு ப்ரோ.

விநாயகர் : சரி ப்ரூ , கூல் , நீதான் சீனா , மியான்மர் , தாய்லாந்து , இலங்கை , ஜப்பான் ல எல்லாம் பெருசு பெருசா ஒக்காந்துட்டுதான ப்ரோ இருக்க ? அங்கல்லாம் உன்னை கரைக்கிறது கூட இல்ல .

புத்தர் : எங்க ? அங்கல்லாம் எவன் என் பேச்சைக் கேட்கறான் ?விநாயகர் : இங்க மட்டும் என் பேச்சைக் கேட்கறானா ?

புத்தர் : ப்ச் , ஆள் மாறாட்டம் இங்க உண்மையா ? பொய்யா ? அதைச்சொல்லு ப்ரூ.

விநாயகர் : இங்க என் பொறந்த நாளுக்கும் டாஸ்மாக் லீவ் கிடையாது. உன் பொறந்த நாளுக்கும் லீவ் கிடையாது. ஆனா உன் ஆளுங்க லீவ் விடச்சொல்லி போராடறாங்க. யார் பொறந்த நாளுக்கு மொதல்ல லீவ் விடறாங்கன்னு பாத்து முடிவு பண்ணிக்கலாம் ப்ரூ.

புத்தர் : இருந்தாலும் ப்ரூ , சினிமால ஒரு மரு மச்சம் வச்சில்லாம் ஆள் மாறாட்டம் பண்றானுங்க . இவனுங்க தொப்பை , தும்பிக்கை வச்சில்லாம் ஓவரா பண்ணி இருக்குறதா படிக்கிறதை நினைக்கிறப்பதான்…

விநாயகர் : அதெல்லாம் விடு ப்ரூ , புத்தர் அப்டிங்கறவன் ஒரு ஆள் கிடையாது , ஆயிரக்கணாக்கான புத்தர் உண்டுன்னு சொல்றானுங்க. அதுல நான் ஒரு புத்தர்னு இருந்துட்டு போறேன். உனக்கு கொழுக்கட்டை புடிக்குமா ப்ரூ !