ஒரு சிறுபத்திரிகையைச் சேர்ந்த நண்பர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம். பதினைந்து ஆண்டுகளாக அந்தப் பத்திரிகையை நடத்தி வருகிறார். கண்களில் ஒத்திக் கொள்வது போல் இருக்கும். எந்த கோஷ்டியையும் சேராதவர். எனக்குத் தொடர்ந்து தன் பத்திரிகையை அனுப்பி வருகிறார். அவருக்கு ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டுமே என்று பதினைந்து ஆண்டுகளாகவே யோசித்து வருகிறேன். கைம்மாறு என்ன கைம்மாறு? கைக்காசையும் நண்பர்களிடமிருந்து பணம் திரட்டியும் பத்திரிகை நடத்தி வருபவருக்கு ஒரே ஒரு தேவைதான் இருக்க முடியும். அந்தத் தேவையை என்னால் பூர்த்தி செய்ய முடியாத நிலை என்பதால் என் நண்பர்களிடமெல்லாம் சொல்லி வருவேன். அறிமுகப்படுத்துவேன். மட்டுமல்லாமல் அந்தப் பத்திரிகைதான் தமிழிலேயே எனக்கு மிகவும் பிடித்த பத்திரிகை. நேர்த்தியிலும் அழகிலும் அதை மிஞ்ச முடியாது. எக்கச்சக்கமாக செலவாகியிருக்கக் கூடிய பத்திரிகை. அத்தனை தரமாக இருக்கும். அதில் வரும் ஓவியங்கள் உலகத் தரமாக இருந்ததால் என் புத்தக அட்டைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாமே என்ற எண்ணத்தில் அதில் ஒரு ஓவியரின் தொலைபேசி எண்ணை பத்திரிகை ஆசிரியரிடம் கேட்டேன். ஆசிரியருக்கு இப்போது ஒரு பெயர் கொடுக்க வேண்டும். கந்தன் என்று வைத்துக் கொள்வோம். கந்தன், ஆஹா தருகிறேன் சார் என்றார். அந்தக் காலத்து எழுத்தாளர்கள் சார் என்று விளிப்பதில்லை. இவர் கொஞ்சம் விதிவிலக்கு போல. ஒரு மணி நேரம் எதிர்பார்த்தேன். போன் நம்பர் வரவில்லை. மறுநாளும் வரவில்லை. சரி, மறந்து விட்டார் போல என்று விட்டு விட்டேன். ஆனால் அது எப்படி மறக்க முடியும் என்ற கேள்வியும் வந்து கொண்டே இருந்தது. ஏனென்றால், புத்தகங்களின் அட்டைப் படம் பற்றியும், ஓவியர்கள் பற்றியும் நீண்ட நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். நான் போன் நம்பர் கேட்ட ஓவியர் பற்றியே ஒரு பத்து நிமிடம் பேசியிருப்போம்.
எனக்கு இந்த விஷயம் மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டே இருந்தது. ஒரு வாரம் சென்று அவர் பத்திரிகையின் புதிய இதழ் தபாலில் வந்தது. வழக்கம் போலவே இதழ் பிரமாதமாக இருந்தது. எக்கச்சக்கமாக செலவு ஆகியிருக்கும். கவரில் அவரே என் முகவரியை எழுதியிருக்கிறார். அப்போதுமா அந்த ஓவியரின் தொலைபேசி எண் கேட்ட விஷயம் ஞாபகம் வந்திருக்காது என்று நினைத்தேன்.
இனி எனக்குத் தங்களின் பத்திரிகையை அனுப்ப வேண்டாம் என்று வாட்ஸப்பில் அவருக்கு செய்தி அனுப்பினேன். ஓகே சார் என்று பதில் அனுப்பினார். வேறு ஒரு எழுத்து கூட அவர் செய்தியில் இல்லை.
என் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களில் இது ஒன்று.
பல நண்பர்களிடம் இப்படித்தான் ஆகிறது. அது பற்றி நான் கவலையும் கொள்ளவில்லை. அவர்கள் என் அழைப்புக்குப் பதில் அழைப்பு தர முடியாமல் போயிருக்கலாம். சில சமயங்களில் missed calls போனில் தெரிவதில்லை. என் தோழி ஒருத்திக்கு போன் செய்தேன். ஒரு முக்கியமான விஷயம். பதில் இல்லை. மறுநாளும் பதில் இல்லை. மறுநாளும் பதில் இல்லை. நானும் அதோடு விட்டு விட்டேன். நான்கு நாட்கள் கழித்து அவள் என்னை அழைத்தபோது நான் எடுக்கவில்லை. ஒரு வாட்ஸப் செய்தி வந்தது. என்ன பிரச்சினை என்று. சீனியை அழைப்பேன். எடுக்க முடியாதபடி அவருக்கு வேலை இருக்கும். ஆனால் அதிக பட்சம் பன்னிரண்டு மணி நேரத்துக்குள் அவரிடமிருந்து பதில் அழைப்பு இருக்கும். தவிர்க்க முடியாதபடி போனால் அடுத்த நாளாவது அழைத்து விடுவார். தோழியை அழைத்து, குறைந்த பட்சம் நான் அழைத்தேன் என்றாவது உனக்குத் தெரியுமா என்று கேட்டேன். அதற்கு அவள், “எனக்கு 300 மிஸ்ட் கால்ஸ் வருகின்றன. நான் அதையெல்லாம் பார்ப்பதே இல்லை. நான்தான் என்னை வாட்ஸப்பில் அழையுங்கள், இல்லாவிட்டால் என் கணவரை அழையுங்கள் என்றேனே?” என்றாள். அவள் கணவரும் என் தீவிர வாசகர். நெருங்கிய நண்பர்.
இப்படி என் அழைப்பைப் பார்க்காமல் இருக்க பல நியாயமான காரணங்கள் இருக்கின்றன.
மொத்தத்தில், எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், என்னோடு பழகும்போது ஒரு பேரரசனோடு பழகுவது போல் பழகுங்கள். இல்லாவிட்டால் பழகவே வேண்டாம். எழுத்தும், படிப்பும், இசையும், இருக்கின்ற ஒருசில நண்பர்களுமே எனக்குப் போதும். ஆஃப்டர் ஆல் ஒரு கலெக்டர், ஒரு எம்மெல்லே கேட்டால் அவருடைய காரியத்தை எத்தனை கனகச்சிதமாக ஒரு பிசிறு இல்லாமல் செய்து தருகிறது இந்த சமூகம்? நான் கலெக்டரை விடவும் எம்மெல்லேயை விடவும் முக்கியமான ஆள். நான் கேட்கும் வேலையைக் கச்சிதமாக, ஒரு பிழை இல்லாமல் செய்து தர முடியாதா? முடியாது என்கிற போது நாம் சந்திக்கவே வேண்டாமே? என்னிடம் ஏன் உதவிக்கு மட்டும் வருகிறீர்கள்? என்னிடம் ஏன் நட்பு மட்டும் பாராட்டுகிறீர்கள்?
வாசகர் வட்ட சந்திப்புக்கு ஒருத்தர் வருகிறார். மாலை நான்கு மணிக்கு வந்தவர், இன்னொரு முக்கியஸ்தருக்கு வைத்திருக்கும் வெளிநாட்டு மதுவை எடுத்துக் குடித்து விட்டு படுத்து உறங்கி விடுகிறார். யாரிடமும் எந்த அனுமதியும் கேட்கவில்லை. பதினெட்டு மணி நேரம் உறங்கி விட்டு கிளம்பும்போது என்னிடம் வந்து “ரொம்ப டயர்டா இருந்துச்சு சாரு, தூங்கிட்டேன், இப்போ கிளம்புறேன்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். இது என்ன டாஸ்மாக் என்றா நினைத்தீர்கள்? இனிமேல் இது போன்ற ஆட்களை உள்ளே விடாதீர்கள் என்று சீனியிடமும் கார்த்திக்கிடமும் அறிவுறுத்தியிருக்கிறேன். இத்தனைக்கும் மிக நீண்ட கால நண்பர் அவர். இனிமேலான வாசகர் வட்ட சந்திப்புகளில் ஐந்தாறு பேர் மட்டும்தான். அனுமதி இல்லாமல் குடிக்கவும் கூடாது. யாரையும் வேலை வாங்கக் கூடாது. நீங்களேதான் வேலையை எடுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டும். அப்படி இல்லாதவர்கள் வராதீர்கள்.
என் நண்பர் ஒருத்தர். அவரோடு எப்படி வேண்டுமானாலும் நீங்கள் பழகலாம். எல்லோரையும் அரவணைத்துக் கொள்வார். அந்த விஷயத்தில் அவர் ஒரு குடியானவர் மாதிரி. நான் அப்படி அல்ல. ஒரு பேரரசனோடு பழகுவது போல்தான் நீங்கள் பழக முடியும். நான் உங்கள் தோள் மீது கை போடுவேன்தான். பதிலுக்கு நீங்கள் போட்டால் நட்பு துண்டிக்கப்படும்.
கடைசி இரண்டு வாக்கியங்களுக்கு என்ன அர்த்தம் என்று பலமுறை எழுதி விட்டேன். இன்னொரு முறையும் எழுதுகிறேன். தோள் மீது கை போட்டால் எனக்கே பாடம் எடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ”யார் தோள் மீதும் கை போடாதீர்களேன்” என்று ஒரு தோழியின் அறிவுரை கிடைத்தது. இல்லை. தோள் மீதுதான் கை போடுவேன். தோள் மீது விழுந்த கை பேரரசனுடையது என்று உங்களுக்குத் தெரிய வேண்டும். தெரியாவிட்டால் கையை விலக்கிக் கொண்டு வேறு இடம் கிளம்பி விடுவேன். எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை…