சிறுகதை நேரம்: ஃபாத்திமா பாபு: மாயமான் வேட்டை

நேற்று இரவு ஒன்பது இருபதுக்கு க்ளப் ஹவுஸில் ஃபாத்திமா பாபுவின் சிறுகதை நேரம் தொடங்கியது.  ஒன்பது முப்பதுக்குக் கதையை வாசிக்க ஆரம்பித்தார்.  நேற்றைய கதை என்னுடைய மாயமான் வேட்டை.  பொதுவாக தமிழ்ச் சூழலில் கதையையோ கவிதையையோ வாசித்துக் கேட்பது எனக்கு ஆகாத காரியமாக உள்ளது.  காரணம், நான் அல்ல.  வாசிப்பவர்களுக்கு வாசிக்கத் தெரியவில்லை.  அதிலும் அந்தத் துறையில் பிரபலமாக இருப்பவர்கள் வாசிப்பதைக் கேட்கவே சகிக்கவில்லை.  கவிஞர்களின் கவிதை வாசிப்பும் கொடுமை.  ஆனால் ஐரோப்பிய மொழிகளில் இது போன்ற வாசிப்பு நிகழ்வுகள் பிரமாதமாக இருக்கின்றன.  ஃப்ரான்ஸில் மிஷல் வெல்பெக்கின் (Michel Houllebecq) வாசிப்புகள் பாப் பாடல் கேஸட்டுகளைப் போல் விற்கின்றன.  சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கியின் கவிதை வாசிப்புகளும் உலகப் புகழ் பெற்றவை.  பேசுவதற்கும் பேசிக் கேட்பதற்கும் மகா இனிமையான அனுபவத்தைத் தரும் தமிழ் மொழியில் இன்று உரைநடையையோ கவிதையையோ வாசிப்பதற்குத் திறமையான ஆட்கள் இல்லை.  என்னுடைய நண்பர்கள் ரம்யா வாசுதேவன், வித்யா சுபாஷ் ஆகிய இருவரும் இதில் தீவிர ஆர்வம் காட்டி செயல்பட்டு வருகிறார்கள்.  அவர்களின் வாசிப்பு பிரபலங்களின் வாசிப்பை விட நன்றாக உள்ளது. 

ஃபாத்திமா பாபுவின் குரல் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  தமிழ்நாடு முழுவதும் தெரிந்த குரல்.  ஆனால் அதை வைத்துக் கொண்டு அவர் எப்படிச் செயல்படுகிறார் என்பது முக்கியம்.  க்ளப் ஹவுஸில் தினந்தோறும் ஒரு சிறுகதையை வாசிக்கிறார் என்று அறிந்து ஆச்சரியம் அடைந்தேன்.  நேற்று என் கதை மாயமான் வேட்டை.

பாராட்டப் போவதில்லை.  எத்தனை பாராட்டினாலும் அது போதாது என்பதால் அதைச் செய்யப் போவதில்லை.  ஆனால் என்ன சொல்ல வேண்டும் என்றால், கதை வாசிப்பை ஒரு நிகழ்த்துக் கலையாக மாற்றி விட்டார் ஃபாத்திமா பாபு.  செவிகள் ஒரு நாடகத்தையே கேட்டுக் கொண்டிருந்தன.  அந்தக் காலத்து வானொலி ஒலிச் சித்திரத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளாதீர்கள்.  ஒலிச் சித்திரம் என்பதைக் கேட்டு ஒருமுறை என்னுடைய ஒரே சொத்தான ட்ரான்சிஸ்டரைத் தூக்கிப் போட்டு உடைத்திருக்கிறேன்.  என்னை மனப் பிறழ்வுக்கு உள்ளாக்கிய தமிழ்நாட்டுச் சீர்கேடுகளில் ஒன்றாக இருந்தது அந்நாளைய வானொலி ஒலிச் சித்திரம்.  கேட்டவுடன் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும்.  காரணம், இப்போதைய சூழலில் சொல்ல முடியாது.  சொன்னால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும்.  வேண்டாம்.  ஃபாத்திமா ஒலி வடிவில் நிகழ்த்தியது ஒரு அதிசயம்.  ஒரு தனியான கலை.  ஒரு புதிய genre.  கதை வாசிப்பில் அவருக்குள் நிகழ்வது ஒரு catharsis.  ஒரு சாமியாடி சாமி வந்ததும் எப்படித் துள்ளுவானோ அப்படி ஒரு துள்ளல்.  அந்தத் துள்ளலை கதையைக் கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேரும் உணர்ந்தார்கள்.  அந்த ஃபாத்திமா நான் அறிந்த, குழந்தைத்தனம் மிகுந்த ஃபாத்திமா அல்ல.  அது வேறு ஃபாத்திமா.  ஃபாத்திமா நாடகத் துறையைச் சேர்ந்தவரும் கூட என்பது எனக்கு ஞாபகம் வந்தது.  (பல ஆண்டுகளாக ”எனக்காக ஒரு நாடகம் எழுதுங்கள், நான் இயக்குகிறேன்” என்று சொல்லி வருகிறார்.) 

இத்தனை எழுதினாலும் நான் சொல்ல வந்ததைச் சொல்ல முடியவில்லை.  அவர் நிகழ்த்துவது நாடகமும் அல்ல.  அது ஒரு மேஜிக் அரங்கு போல் தெரிகிறது.  குரல்களின் மூலமாகவே புதியதொரு கலை வடிவத்தில் என் கதை வேறொரு ரூபத்தை எடுத்தது.  என் உணர்வுகள் ஆகாசத்துக்கும் பூமிக்குமாக எகிறி எகிறி அடித்துக் கொண்டிருந்தது.  வாசித்து முடித்து அவர் நார்மல் ஃபாத்திமாவாக மாறின பிறகுதான் நானும் சமநிலையை அடைந்தேன்.  இது போல் ஒரு முன்னூறு பேர் உணர்ந்திருப்பார்கள். 

மாயமான் வேட்டையே ஒரு நாடகீயமான கதை.  நேற்று நடந்தது ஒரு அதிசயம்.  ஆனாலும் இரண்டு திருஷ்டிகள்.  ஒன்று, என்னுடைய பைத்தியக்காரத்தனம்.  கதையின் ஆரம்ப வடிவத்தையே அவருக்கு நான் அனுப்பி விட்டேன்.  என் தளத்தில் வெளிவந்த செறிவான வடிவத்தை நான் அனுப்பத் தவறி விட்டேன்.  கதையின் மிக ஆழமான, மிகக் கடுமையான சம்பவம் நடக்கும் ஒரு பக்கம் ஃபாத்திமாவுக்கு அனுப்பப்பட்ட படிவத்தில் இல்லை.  கதையை ஏற்கனவே வாசித்திருந்தவர்கள் குறிப்பிட்டதும் அதை மனோகரன் மாசாணம் அனுப்பித் தர, அந்த ஒரு பக்கத்தை மட்டும் மீண்டும் வாசித்தார் ஃபாத்திமா.  நள்ளிரவு பன்னிரண்டரை வரை விவாதம் தொடர்ந்தது.  இன்னொரு திருஷ்டி, நடந்த அற்புதத்தைப் பதிவு செய்ய முடியவில்லை.  அந்த வசதி க்ளப்ஹவுஸில் இல்லை போல் இருக்கிறது. 

இன்று திர்லோக்புரி.  க்ளப்ஹவுஸ்.  ஒன்பது இருபது.  லிங்க் மிக விரைவில் தளத்திலும் முகநூலிலும் வெளியாகும். திர்லோக்புரியை ஃபாத்திமா பாபுவின் குரலில் கேட்கத் தயாராகுங்கள்… இன்று இரவு 9.20

நானும் கலந்து கொள்வேன். வாசிப்புக்குப் பிறகு கலந்துரையாடலும் உண்டு.