அராத்துவின் புதிய பன்றி கவிதை

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினால் ஸ்ரீராமுக்கு ஒரே ஜாலிதான் போல. நெரூதாவின் நாய்க் கவிதையை எனக்கு அனுப்பினார். மணி மாலை 4.46. என் பொருட்டு எழுதியதாகத் தெரியவில்லை. உடனே அராத்துவுக்கு அனுப்பி இதற்குப் பன்றி கவிதை தேவை என்று எழுதினேன். 5.02க்கு அவர் பன்றி கவிதை அனுப்பினார். எனக்கு நகுலனும் சுந்தர ராமசாமியும்தான் ஞாபகம் வருகிறார்கள். இப்படி எழுதுவதற்கு எத்தனை நாய்க் கவிதை வரப் போகிறதோ, பயமாக இருக்கிறது. சும்மா கிடந்த சீனி நெரூதா புண்ணியத்தால் பெரும் கவியாகி விட்டார். குறிப்பிடப்படும் கவிதை கீழே:

அரைமயக்கத்தில் கிடக்கும்பன்றியின் ரோமங்கள்

தீக்கங்குகளால் பொசுக்கப் படுகின்றன.
ரோமம் எரியும்வாசனை எழுப்ப

குற்றுயிரும் குலை உயிருமாய்

விழிப்பு வந்த பன்றியின் தோல்கள்
துடிக்கத் துடிக்க உரிக்கப்படுகிறது.
தோல் உரிக்கப்பட்ட பன்றி

குழந்தையின் மென்மையான சருமத்துடன்

மெல்ல அசைந்தபடி இருக்கிறது.
அதை அறுத்துக் கறி சமைப்பதற்கு முன்
குழந்தை போல எவ்வளவு அழகாக இருக்கிறது
என்று அந்த வேட்டைக்காரன்

ஒரு கணம் நினைத்துக் கொள்கிறான்.
பன்றியின் கண்களும் அவன் கண்களும் சந்தித்துக் கொள்கின்றன.
வேட்டைக்காரன் கண்களில் கருணை பொழிகிறது.
தன் தோலை

தனக்கு மீண்டும் போர்த்தி விடுவான்

என்ற நம்பிக்கையில்
பன்றி தன் கடைசி மூச்சை விடுகிறது.

அராத்து