என்னைச் சந்திக்க ப்ரூ ரூமுக்கு வருவாரா த்ரிஷா?

இந்தியாவிலேயே ரொம்பக் கட்டுப்பெட்டி சமூகம் தமிழ்நாடுதான்.  இன்று காலை ஃபாத்திமா பாபுவிடமிருந்து ஒரு வாட்ஸப் செய்தி.  தெரிந்த செய்திதான் என்றாலும் குஷ்வந்த் சிங் சம்பந்தப்பட்டது என்றால் திரும்பத் திரும்ப படிக்கலாம்.  குஷ்வந்த் இல்லஸ்ட்ரேடட வீக்லியின் ஆசிரியராக இருந்த காலம்.  அவருக்கு ஒரு போன் வருகிறது. 

நான் நர்கீஸ் தத் பேசுகிறேன்.

எந்த நர்கீஸ் தத்?  சினிமா நடிகை?

ஆமாம்.

யார்?  மதர் இண்டியா…

ஆமாம்.  ஆமாம்.  எனக்கு உங்களைப் பார்க்க வேண்டும்.  வரலாமா?

வாருங்கள்.

அரை மணி நேரத்தில் நர்கீஸ் தத் குஷ்வந்த்தின் அலுவலகத்துக்கு வருகிறார்.  விஷயம் இதுதான்.  குஷ்வந்துக்கு கஸௌலி என்ற மலை வாசஸ்தலத்தில் ஒரு வில்லா உள்ளது.  அங்கேதான் நர்கீஸின் பிள்ளைகள் படிக்கிறார்கள்.  அவர்களைப் பார்க்கச் செல்கிறார் நர்கீஸ்.  அந்த ஊரில் அந்தச் சமயத்தில் ஓட்டல்களில் அறை இல்லை.  உங்கள் வில்லாவில் ஒரே ஒரு இரவு நான் தங்கிக் கொள்ளலாமா?

தாராளமாக… ஆனால் ஒரே ஒரு நிபந்தனை.

என்ன?

என்னுடைய படுக்கையில் ஒரு இரவு நர்கீஸ் தத் படுத்தார் என்று என் நெருங்கிய நண்பர்களிடம் சொல்லிக் கொள்வேன்.  சம்மதமா?

வெடிச் சிரிப்புடன் நிச்சயம் நிச்சயம் என்கிறார் நர்கீஸ்.

இந்தச் சம்பவத்தைப் பிறகு நர்கீஸே பல பேட்டிகளில் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

இங்கே தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட வசதியில் இருப்பவர் ஜெயமோகன் மட்டுமே.  அவருக்குத்தான் ஐஸ்வர்யா ராயையும் தெரியும்.  ஆனால் துரதிர்ஷ்டம் ஜெயமோகன் குஷ்வந்த் இல்லை.  குஷ்வந்த்தின் குணநலன்கள் பொருந்திய எனக்கோ வில்லா இல்லை.

பல ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஒரு சம்பவம் நடந்தது.  என் நெருங்கிய நண்பர் ஒருவர் திரைப்பட இயக்குனர். பல படங்களை இயக்கியதில்லை என்றாலும் எல்லோராலும் மதிக்கப்படுபவர்.  மிகவும் திறமைசாலி.  பாலிவுட்டிலும் அவரைத் தெரியும்.  அந்தக் காலத்தில் தமிழ்நாடே கிறங்கிப் பைத்தியமாகக் கிடந்த ஒரு கவர்ச்சி நடிகையை என்னிடம் அறிமுகப்படுத்தினார்.  இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.  இயக்குனர் பெரும் படிப்பாளி.  நாங்கள் சந்தித்தால் இரவு முழுவதும் ஷேக்ஸ்பியரையே பேசிக் கொண்டிருப்போம்.  சமகாலத் தமிழ் இலக்கியமும் அவருக்கு அத்துப்படி.  அவர் யாருக்கு என்னை அறிமுகம் செய்தாலும் ஒரு காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸை ஃபிடல் காஸ்ட்ரோ தன் நண்பருக்கு எப்படி அறிமுகப்படுத்துவாரோ அப்படித்தான் அறிமுகப்படுத்துவார்.  “இவர் புத்தகத்தைப் படிக்காமல் இவரிடம் எதுவும் பேசி விடாதீர்கள்.  புரியாது” என்பார்.  சரி, படித்து விட்டே பேசுகிறேன் என்று நடிகர் சொன்னால், படித்தாலும் உங்களுக்குப் புரியுமா என்பது சந்தேகம்தான் என்பார் சிரித்தபடி.  அந்த அளவுக்கு என் மீது மதிப்பு வைத்திருப்பவர்.

நடிகையிடம் அதே அளவு மரியாதையுடன் என்னை அறிமுகப்படுத்தினார்.  நடிகை ஆறு அடி உயரம்.  நான் ஐந்து அடி ஐந்து அங்குலம்.  அண்ணாந்துதான் பேச வேண்டும்.  அண்ணாந்து பேச தலையை உயர்த்தினால் சங்கடம்.  சங்க காலக் கொங்கை.  சங்கக் கவிதைகளைப் படித்திருக்கிறீர்களா?  அதெல்லாம் வெறும் இலக்கியத்தில்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  இப்போது நேரில்.  இதை என் ப்ளாகில் எழுதித் தொலைத்து விட்டேன்.  பிரச்சினை என்னவென்றால், நடிகையின் பெயர் போட்டு.

அரை மணி நேரத்தில் இயக்குனரிடமிருந்து போன்.  பதிவைத் தூக்கி விடுங்கள் என்று.  தூக்கி விட்டேன்.  பிறகு அது பற்றிக் கேட்ட போது சொன்னேன்.  குஷ்வந்த் நர்கீஸ் பற்றி மட்டும் அல்ல, இந்திரா காந்தி  பற்றிக் கூட இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார்.  ஆனாலும் அவர்கள் அதை ரசிக்கத்தானே செய்தார்கள் என்றேன்.  இவரும் ரசிக்கக் கூடியவர்தான் சாரு.  ஆனால் நூறு போன் வந்து விட்டதாம்!  போனில் கேட்பவர்களுக்கு பதில் சொல்லியே மாளவில்லை என்று துக்கப்பட்டார் என்றார்.  பெரிய இயக்குனர் தலைவரே போன் செய்து துக்கம் விசாரித்தாராம்.

இப்படிப்பட்ட சூழலில் குஷ்வந்த் சிங் மாதிரியெல்லாம் எழுத முடியுமா?  முதலில் இங்கே எழுத்தாளனுக்கு அப்படிப்பட்ட மரியாதை இருக்கிறதா?  என்னைச் சந்திக்க ப்ரூ ரூமுக்கு வருவாரா த்ரிஷா?