பிடித்த பத்து பேர்

தனக்குப் பிடித்த பத்து பேர் என்று ஒரு பட்டியலைப் பல நண்பர்களும் முகநூலில் முகம் தெரியாத தோழிகளும் தோழர்களும் அடிக்கடி வெளியிடுவதைக் காண்பதுண்டு.  இதை ஆரம்பித்து வைத்தது க.நா.சு. என்று நினைக்கிறேன்.  வெகுஜன வெளியில் சுஜாதா.  சுஜாதாவின் பட்டியலில் எப்போதும் இடம் பிடித்தவர் ஒரு கவிஞர்.  இல்லை, நீங்கள் நினைப்பவர் இல்லை.  இவர் பெயர் “ப”வில் ஆரம்பிக்கும்.  அந்தப் பெயரை சுஜாதாவின் பட்டியலில் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சுஜாதாவின் fetishதான் இப்படி வேறொரு ரூபம் எடுத்து வெளிவருகிறது என்று நினைப்பேன். இல்லாவிட்டால் இலக்கிய சுரணையுணர்வு கொண்ட சுஜாதா அப்படி ஒரு பெயரை விடாமல் தொடர்ந்து பிடித்துக் கொண்டிருந்ததற்கு வேறு காரணமே என்னால் யூகிக்க முடிந்ததில்லை.  இப்போது அந்தப் பெயர் யாருக்கும் தெரியாது.  சமீபத்தில் அ. மார்க்ஸை சந்திக்க நேர்ந்தபோது ஆர்வத்துடன் அந்த நண்பர் எப்படி இருக்கிறார் என்றுதான் கேட்டேன்.  தனிப்பட்ட முறையில் அவரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.  எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார்.  அவர் சுந்தர ராமசாமியை சந்தித்த கதை படு சுவாரசியமானது.  சு.ரா.வை சந்தித்ததோடு நிற்கக் கூடாதா?  என் கவிதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.  சு.ரா. பொய் சொல்லுவாரா என்ன?  தினமும்தான் பேப்பர் படிக்கிறேனே என்று பதில் சொல்லியிருக்கிறார்.  சங்கராச்சாரியாரும் தி.க. வீரமணியும் சந்தித்த மாதிரி இருந்திருக்கிறது.  அந்தக் ”கவிஞர்” யார் என்று உங்களால் யூகிக்கவே முடியாது.  அந்த அளவுக்குத் தலைமுறை இடைவெளி பெரிதுபட்டுக் கிடக்கிறது.  யாருக்கும் எதுவுமே தெரியவில்லை.  நிறப்பிரிகை என்ற பத்திரிகையின் பெயர் கூட யாருக்கும் தெரியாத காலத்துக்கு வந்து விட்டோம்.  வெறும் முப்பதே ஆண்டுகள் ஒரு நூற்றாண்டைப் போல் தோற்றம் தருகிறது.   

போகட்டும்.  பட்டியலுக்கு வருவோம்.  பொதுவாக எந்த ஒரு பட்டியலுமே எனக்கு மிகப் பெரிய மன உளைச்சலையும் எரிச்சலையுமே தரக் கூடியதாக இருந்து வருகிறது.  யாருக்கு எது பிடித்தால் உனக்கு என்னடா என்று என்னையே சாடியபடி அந்த மன உளைச்சலிலிருந்து வெளிவருவேன்.  ஏன் மன உளைச்சல் என்றால், நான் ஒரு எழுத்தாளரை எழுத்தாளர் என்றே நினைக்க மாட்டேன்.  அவர்தான் என் கடவுள் என்ற ரேஞ்ஜில் பட்டியல் போடுவார் அன்பர்.  இதில் மன உளைச்சல் அடைய என்ன இருக்கிறது?  என்ன இருக்கிறது என்றால், பட்டியல் போட்ட நண்பர் என்னுடைய மிக நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பார்.  அதுதான் மன உளைச்சலுக்குக் காரணம்.  வெளிப்படையாகவே சொல்கிறேனே, சுந்தர ராமசாமியைத் தனது இலக்கிய ஆசான் என்றும், முன்னோடி என்றும் நினைப்பவர்களோடு என்னால் ஹலோ கூட சொல்லிப் பழக முடியாது என்றே தோன்றுகிறது.  நான் சுந்தர ராமசாமியை எந்த இடத்தில் என் ஆசான் எனச் சொல்கிறேன், அசோகமித்திரனுக்கும் அவருக்கும் என்ன வேறுபாடு என்பதைப் பலமுறை விளக்கி எழுதி விட்டேன்.  அதனால் இங்கே சொல்லத் தேவையில்லை.  ஆனால் இலக்கிய ரீதியாக எனக்கு அவரிடம் கற்றுக் கொள்ள எதுவும் இல்லை.  அதேபோல் கமல்ஹாசன், அப்துல் கலாம் என்று தொடங்கும் பட்டியல்களும் எனக்கு மிகப் பெரிய மன உளைச்சலை உண்டு பண்ணுபவை.  உடனடியாக அம்மாதிரி நண்பர்களிடமிருந்து நான் விலகி விடுகிறேன். முகநூலில் unfollow செய்து விடுகிறேன்.  இனிமேல் அவர்களின் பதிவுகள் என் கண்களில் படாது. 

பட்டியலில் என் பெயர் இடம் பெற வேண்டும் என்று நான் எப்போதுமே எதிர்பார்த்தது இல்லை.  காரணம், அதனால் கிடைக்கும் பெருமை எனக்குள் என்ன பண்ணும் என்றே எனக்குத் தெரியாது.  உதாரணமாக, பிறந்ததிலிருந்தே உப்பு என்ற சுவையையே அறிந்திராத ஒரு நாய்க்கு அல்லது பூனைக்கு அல்லது மனிதனுக்கு உப்பு பற்றிய உணர்வு இருக்காதுதானே?  இன்னொரு உதாரணம் தருகிறேன்.  ஒரு தோழி சொன்னாள்.  ”அவந்திகா ஊருக்குப் போய் விட்டால் – அதாவது, அவந்திகா உங்கள் அருகில் இல்லாவிட்டால் நீங்கள் மிகவும் சிரமப்படுவீர்கள்.” அந்த அனுபவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாதே என்றேன்.  என் வீட்டில் அவந்திகா இல்லாமல் நான் ஒரு நாளைக் கூட கழித்தது இல்லை.  அவள் இல்லாமல் சிரமப்படுவேனா என்ற அனுபவமே எனக்கு இல்லாத போது நான் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்?

அதேபோல், பட்டியலில் என் பெயர் இருந்தால் எனக்கு அது மகிழ்ச்சி அளிக்குமா என்றால் இல்லை என்றே சொல்லுவேன்.  ஏனென்றால்,  பெரியோரை வியத்தலும் இலமே என்பது என் ஆசான் உரைத்தது.  என்னை ஒருவர் புகழ்ந்தால் அப்படிப் புகழ்பவர் என்னை விடப் பெரியவராக இருக்க வேண்டும்.  மற்றபடி என்னைப் புகழ்பவர்கள் தங்களின் அடையாளத்தையே தெரிவித்துக் கொள்கிறார்கள் என்று பொருள்.  நான் இன்ன இடத்தைச் சேர்ந்தவன் என்று சொல்வது போல.   

கிம் கி டுக்

நிகோஸ் கஸான்ஸாகிஸ்

ஓஷோ

Wilfred Thesiger

நீட்ஷே

ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸ்

மொட்ஸார்ட்  

இப்படி எனக்குப் பிடித்த ஒரு நூறு ஆளுமைகளை என்னால் பட்டியலிட முடியும்.  அதெல்லாம் இப்போதைக்கு எனக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.   அதெல்லாம் பொழுதுபோக்காகச் செய்ய வேண்டியது.  போக்குவதற்கு நிறைய பொழுது இருப்பவர்கள் செய்ய வேண்டியது.  அவ்வளவு நேர வசதி என்னிடம் இல்லை. 

இதெல்லாம் இன்று மனோகரன் மாசானம் வெளியிட்ட பட்டியலைப் பார்த்த போது ஞாபகம் வந்தது. 

Osho

Che

Charu Nivedita

Basheer

Jack ma

Vitalik Buterin

Tarantino

Kim Ki Duk

Rajinikanth

Al Pacino

இந்தப் பட்டியலில் பஷீரையும் ஓஷோவையும் சாருவையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  மற்றவர்களைப் பிடிக்காது என்று அர்த்தம் அல்ல.  சினிமாக்காரர்களோடு நான் அதிகம் ஒட்டுவதில்லை.  மற்றபடி சமீப காலமாக ஒவ்வொரு பட்டியலையும் பார்த்து அந்தந்த நண்பர்களை முகநூலில் ப்ளாக் பண்ணிக் கொண்டு வருகிறேன்.  அந்த அளவுக்கு எரிச்சலூட்டின அந்த mediocre பட்டியல்கள்.  அப்படி எரிச்சலூட்டாமல் புன்முறுவல் பூக்க வைத்தது மனோவின் பட்டியல்.  இரண்டு பேரைத் தவிர மற்ற அவ்வளவு பேரைப் பற்றியும் நான் அவ்வப்போது சிலாகித்து எழுதியிருக்கிறேன்.  இப்படி ஒரு பட்டியலைப் போடும் அளவுக்கு என் வாசகர்கள் என் எழுத்தினால் தயாராகி இருக்கிறார்கள் என்பது எனக்குப் பெருமை.   

அல்லது, இப்படி மென்மையாகவும் சொல்லலாம்: அப்துல் கலாம் என்றோ கமல்ஹாசன் என்றோ பட்டியலை ஆரம்பிக்காத ஒரு ஆயிரம் வாசகர்களை உருவாக்கியிருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

***

 

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai