அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சாரு சார், வணக்கம்.
இன்று ‘அருஞ்சொல்’ வெளியானது. கடுமையான வேலை நெருக்கடி என்பதால், இணைப்பை உடனடியாக அனுப்பி வைக்க இயலவில்லை. இதுவே இணைப்பு: அருஞ்சொல் | News & Views Daily (arunchol.com)
நீங்கள் முழுமையாக ஒரு ஓட்டம் வாசித்து விட்டு, வெளிப்படையான விமர்சனங்களை எனக்குச் சொல்ல வேண்டும். நல்லபடி வந்திருப்பதாக நினைத்தால், உங்கள் வாசகர்களுக்கும் தளத்தின் வழியே பகிர்ந்து கொள்ளுங்கள்.
நேற்று ஒரே நாளில் ஐந்தாறு காணொளிகள் பதிவாகின. ஒரே நாளில் வெளியிட்டால் வாசகர்கள் கவனத்தைப் பெறாது என்பதால், அன்றாடம் ஒரு காணொளி என்று வெளியிடவிருக்கிறோம். வெளியானதும் இணைப்பை அனுப்பி வைக்கிறேன். (காணொளியில் முகம் பார்த்தேன். தளர்ச்சியாகவே தெரிகிறது. முகநூலில் சற்று முன் பார்த்த மார்க்ஸுடனான படத்தில் நன்றாக இருக்கிறீர்கள். உடல் நலம் பேணுங்கள்.
நன்றியும் அன்பும்
சமஸ்.
என் பிரியத்துக்குரிய சமஸ்,
உங்களுக்கு என்னுடைய இந்த நீண்ட பதிலைப் படிக்க நேரம் இருக்குமா என்று தெரியவில்லை. இப்போது உங்களுக்கு இருக்கும் நேர நெருக்கடியில் படிக்க முடியாமல் போனால் பிறகு எப்போதாவது பயண நேரத்தில் வாசியுங்கள். ஏனென்றால், உங்களுடைய கடிதத்தில் நீங்கள் கூறியுள்ள யோசனைக்கு (உடல் நலம் பேணுங்கள்) நான் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுக் காலமாக பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதுவே சுமார் அறுநூறு எழுநூறு பக்கங்கள் இருக்கலாம். அவ்வளவையும் சுருக்கி இப்போது எழுத வேண்டும். ஆயாசமாகத்தான் இருக்கிறது. முதலில் ஒரு முகமன் கூறும் விதத்தில் வாழ்த்துக்கள் சமஸ் என்று ஒரு பதில் எழுதி விடலாம் என்றே தோன்றியது. ஆனாலும் நீங்கள் எழுதியிருப்பது எனது வாழ்வியல் அடிப்படையையே உலுக்குவது போல் இருந்ததாலும் உங்களை என் குடும்பம் என்று கருதுவதாலும் இந்தக் கடிதத்தை என் வேலையையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு எழுதுகிறேன். இப்போது நான் ஔரங்கசீப் பற்றி ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். காலை நான்கு மணிக்கு எழுந்து இரவு பதினொன்று அல்லது பதினொன்றரைக்கே உறங்கச் செல்கிறேன். அதை ஒதுக்கி வைத்து விட்டு இதை எழுதுகிறேன் என்றால், உங்களுக்கு நான் எத்தனை தூரம் மதிப்பு தருகிறேன் என்பது புரியும்.
பிரச்சினைக்கு வருகிறேன். தயவுசெய்து நேரம் இருக்கும்போது தஸ்தயேவ்ஸ்கியின் A Nasty Story என்ற சிறுகதையைப் படித்துப் பார்க்கவும். பின்வரும் இணைப்பில் 36ஆவது பக்கத்தில் உள்ளது அந்தக் கதை.
https://archive.org/details/shortstories00dost/page/n7/mode/2up
கதையில் வரும் ஒரு பெரிய அதிகாரி ஒரு சிறந்த மனிதாபிமானி. ஒருநாள் அவர் தன் சகாவுடன் குடித்து விட்டு நள்ளிரவில் வீடு திரும்பும்போது வழியில் ஒரு கல்யாண கோலாகலத்தைப் பார்த்து யாருடைய கல்யாணம் என்று எட்டிப் பார்க்கிறார். மணமகன் தன் அலுவலகத்தில் பணி புரியும் ஒரு குமாஸ்தா என்று அறிந்து உள்ளே போய் கலந்து கொள்கிறார். ஒரு கான்ஸ்டபிளின் கல்யாணத்தில் கமிஷனர் கலந்து கொண்டால் என்ன ஆகும்? அந்த மாதிரி. கலந்து கொண்டதோடு மட்டும் அல்ல. குடிக்கவும் செய்கிறார். (ருஷ்யா இல்லையா?) ஏற்கனவே ஏகப்பட்ட குடியில் இருந்தவர் மேலும் குடித்து விட்டு வாந்தி. கடைசியில் நடக்கக் கூட முடியாமல் முதலிரவுக்கென்று அலங்கரித்து வைத்திருந்த கட்டிலிலேயே உறங்கியும் விடுகிறார். ஏற்கனவே மணமகன் ஏழை என்பதால் மணமகள் வீட்டில் ஏகக்கடுப்பில் இருந்தவர்களுக்கு இந்த அல்லோலகல்லோலத்தைப் பார்த்து ரொம்பப் பிரச்சினை ஆகி விடுகிறது. முதலிரவே நடக்கவில்லை. தன் உயர் அதிகாரிக்காக உயர்ந்த ரக வோட்கா வாங்கின விதத்தில் மணமகனுக்கு ஏகப்பட்ட கடன் வேறு. எல்லாமே ஒரே ரசாபாசம். திருமணமே முறிந்து விடுகிறது என்று நினைக்கிறேன்.
இப்படியாகத்தான் நம் இந்தியாவின் மனிதாபிமானிகள் எல்லோரும் நடந்து கொள்கிறார்கள் என்பது என் கருத்து. நீங்கள் என் மீது கொண்ட மிகுதியான அன்பினால்தான் என் உடல்நலன் பற்றி விசாரித்து அதற்கான வழிகளையும் சொல்கிறீர்கள் என்று புரிகிறது. ஆனால் அந்த யோசனை, அந்த அன்பான விசாரிப்பு என்னை ஒரு மனநோயாளியாக மாற்றி விடும் என்பதையும் நான் உயிரோடு இருக்கும் வரை உங்கள் கடிதம் கொடுத்த மன அழுத்தத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் மறக்க மாட்டேன் என்பதையும் உங்களுக்குப் புரிய வைப்பதுதான் என்னுடைய இந்தக் கடிதத்தின் நோக்கம். எனக்கு அதன் வீர்யத்தோடு விளக்கத் தெரியவில்லை. ஒருவருக்குத் தன் மீது இருக்கும் சுய நம்பிக்கையையும் சுய அபிமானத்தையும் அடித்து நொறுக்கிக் காலி பண்ணும் கரிசனையே தங்களுடையது. இனிமேல் கண்ணாடியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குப் பெருமையாக இருக்காது. உங்கள் நினைப்பும் உங்கள் வார்த்தைகளும்தான் ஞாபகம் வரும். மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே என்று சொன்ன கதைதான். என் ஆயுட்கால வாழ்வியல் நடைமுறைகளை ஒரே வார்த்தையில் துவம்சம் செய்யும் அக்கறை தங்களுடையது.
அடிப்படைத் தவறு என்ன தெரியுமா சமஸ்? என் எழுத்து எதையுமே நீங்கள் படிக்கவில்லை. எதையுமே. ஏனென்றால், பக்கத்துக்குப் பக்கம், கதைக்குக் கதை, கட்டுரைக்குக் கட்டுரை, நாவலுக்கு நாவல் நான் இளமையை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறேன். இளமையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் ஒரு கதை எழுதியிருந்தேன். நான் இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் வேளையில் என்னிடம் இண்டர்நெட் தொடர்பு இல்லை. வெறுமனே தட்டச்சு மட்டுமே செய்கிறேன். எனவே இணையத்தில் போய் அந்தக் கதையை எடுக்க இயலவில்லை. ஒரு ஹோமியோ மருத்துவரிடம் கதைசொல்லிக்கு நேர்காணல். நூறு இருநூறு கேள்விகள் கேட்கிறார் மருத்துவர். இரண்டே இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பொய்யான பதில் சொல்லி விடுகிறேன். (ஆம், கதைசொல்லி நான்தான்) உங்கள் பாலியல் ஈடுபாடு, செயல்பாடு எப்படி? இது கேள்வி. ஆங்கிலத்தில் கேட்கிறார். மருத்துவர் ஒரு பேரழகி. இளம் பெண். எனக்குக் கூச்சம். ஆண் என்றால் உண்மை சொல்லியிருப்பேன். அவர் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசிக்கிறேன். அவரே சாய்ஸ் தருகிறார். நார்மல் ஆர் அப்நார்மல். நான் நார்மல் என்று பொய் சொல்கிறேன். அடுத்த கேள்வி, மாஸ்டர்பேஷன்? நான் திருதிருவென்று விழிக்கிறேன். அவர் வாரத்துக்கு எத்தனை தடவை என்கிறார். அது ஒரு ஸூம் சந்திப்பு என்பதால் நேரடியாக என்னைப் பார்த்துக் கேட்கிறார். என் வயதும் அவருக்குத் தெரியும். நானோ ஒரு மணி நேரத்துக்கு முன்னால்தான் அந்தக் காரியத்தில் ஈடுபட்டு விட்டு வந்திருக்கிறேன். ஆனால் ”அது ஆச்சு டாக்டர் நாலு வருஷ இருக்கும்” என்று புளுகுகிறேன்.
இதை ஒரு புன்சிரிப்போடு கடந்து சென்று விட்டார்கள் என் வாசகர்கள். யாரும் திடுக்கிடவில்லை. யாரும் எனக்கு வசை கடிதங்கள் எழுதவில்லை.
காரணம் என்னவென்றால், நான் ஒரு மேற்கத்தியனைப் போல் வாழ்கிறேன். இதை முப்பது ஆண்டுக் காலமாக தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறேன். சமீபத்தில் நான் எழுதிய மாயமான் வேட்டை என்ற சிறுகதையையும் உங்களுக்கு நேரம் இருக்கும் போது படியுங்கள். கடந்த 2019 இறுதியில் சீலே சென்றிருந்தேன். உங்களுக்கும் தெரியும். அந்த அனுபவத்தை வைத்து எழுதியது மாயமான் வேட்டை. அது ஒரு ஆட்டோஃபிக்ஷன் கதை. அதில் வரும் கதைசொல்லி நான்தான். அதில் வரும் ரொபர்த்தோ என் வழிகாட்டி. வயது என்னைப் போலவே 67 (அந்த ஆண்டில்). ஒருநாள் அவன் சில பாலியல் தொழிலாளிகளை என் அறைக்கு அழைத்துக் கொண்டு போகலாம் என்று ஒற்றைக் காலில் நிற்கிறான். அவர்களும் நான் எழுத்தாளன் என்பதால் வருவதற்கு விரும்புகிறார்கள். வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். பிறகு கடைசியில் டேய் ரொபர்த்தோ, இந்த மைனஸ் அஞ்சு டிகிரி குளிரில் என் குஞ்சு எங்கே இருக்கிறது என்றே தெரியலடா, ப்ளீஸ், என்னை விட்ரு, ஒன்றுக்குப் போவதற்கே அதை ரொம்பப் பாடுபட்டுத் தேடிக் கொண்டிருக்கிறேன், எங்கோ போய் குடலுக்குள் ஒளிந்து கொண்டு விடுகிறது என்று சொல்லி அந்த ஆபத்திலிருந்து தப்பினேன். வேறு ஒன்றும் இல்லை. காதல் இல்லையேல் காமம் இல்லை என்று நம்பும் ஒருசில மட மட்டிகளில் நானும் ஒருவன்.
அந்த ரொபர்த்தோவுக்கு மூன்று வயதில் ஒரு மகளும் ஆறு வயதில் ஒரு மகனும் உண்டு. திருமணம் ஆகி இப்போதுதான் ஏழு எட்டு ஆண்டுகள் ஆகின்றன. மூன்றாவது திருமணம்.
அதே மாதிரி மனநிலையில் உள்ளவன்தான் நான். மனநிலை அப்படி இருந்தால் உடல்நிலையும் அப்படித்தான் இருக்கும். ஏனென்றால், சினிமா நடிகர்கள் மட்டும் என்ன சொர்க்கத்தில் உருவாக்கப்பட்டவர்களா? கமல் என்றால் கிசுகிசு, சாரு என்றால் அறிவுரையா? கமல் என்னை விட ஒரு வயசுதான் சிறியவர். ஆனால் அவருடைய இப்போதைய கேர்ள் ஃப்ரெண்ட் யார் என்பதுதான் சமீபத்திய ட்ரெண்ட். அதை விடுங்கள். அவராவது நடிகர். சல்மான் ருஷ்டி எழுத்தாளர்தானே? அவர் வயது இப்போது 75. அவருடைய கேர்ள் ஃப்ரெண்டின் பெயர் Rachel Eliza Griffiths. இதற்கும் முன்னால் ஒரு இருபது வயதுப் பெண்ணோடு சுற்றிக் கொண்டிருந்ததாகக் கிசுகிசு. ஓர்ஹான் பாமுக் என்னை விட ஒரு வயசு மூத்தவர் (69). அவருடைய சமீபத்திய கேர்ள் ஃப்ரெண்ட் நம்முடைய இந்திய எழுத்தாளர் கிரன் தேசாய். இப்படிப் போய்க் கொண்டிருக்கிறது உலகம். நீங்கள் என்னவென்றால், உடல்நலம் பேணுங்கள் என்கிறீர்கள். மனம் மிக நொந்து போனேன் சமஸ்.
பல விஷயங்களை நான் உங்களிடம் இந்தப் பொதுவான கடிதத்தில் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிக்கிறேன். இந்திரா பார்த்தசாரதியின் இப்போதைய வயது 91. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் மிகுந்த விரக்தியுடன் என்னிடம் சொன்னார், வெளியே போகவே பயமாக இருக்கிறது சாரு என்று. ஏன் சார் என்றேன். ஏதோ நான் மரணப் படுக்கையில் கிடப்பது போல் நினைத்துக் கொண்டு உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அன்பு பாராட்டுகிறார்கள். அவர்களின் த்வனியையும் குரலையும் பார்க்கும் போது நாம் ஏற்கனவே இறந்து போய் விட்டது போல் தோன்றுகிறது என்றார்.
என்னிடம் முன்பெல்லாம் ஹெல்த் எப்படி இருக்கிறது என்று கேட்டாலே ஒரு பத்து பக்கத்துக்கு விமர்சனக் கட்டுரை எழுதி விடுவேன். இப்போதுதான் அந்தக் கேள்வியை நிறுத்தியிருக்கிறார்கள். அப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம் நான் என்ன எயிட்ஸ் நோயாளியா என்றே திருப்பிக் கேட்பது வழக்கம். இப்படிப்பட்ட கேள்விகள் யாரிடம் கேட்கப்பட்டாலும் கேட்கப்பட்டவர்கள் நோயாளிகளாகவே நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இது ஒரு மனரீதியான தாக்குதல். அன்பு, பாசம் என்ற பெயரில் நடக்கும் வன்முறை. உண்மையில் இப்படிக் கேட்பவர்களின் மனம்தான் முதுமை அடைந்து விட்டிருக்கிறது. இவர்கள் முதலில் செய்ய வேண்டியது, அவர்கள்தான் இளமையை நோக்கி நகர வேண்டும்.
என் பிரியத்துக்குரிய சமஸ், என் மீது மிகுந்த அன்பு கொண்டே அந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறீர்கள். புரிகிறது. ஆனால் நீங்கள் அமிர்தம் என்று அளித்திருப்பது அமிர்தம் அல்ல, விஷம் என்பதைப் புரிய வைப்பதற்காகவே இந்தக் கடிதம். மட்டுமல்ல. இம்மாதிரி அக்கறையான விசாரிப்புகள், ஆலோசனைகள் ஒவ்வொரு மனிதரின் மீதும் இன்னொரு மனிதரால் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இது இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறது. என் நண்பர் ராகவன் தினந்தோறும் இப்படிப்பட்ட அன்பு வன்முறைக்கு உள்ளாகிறார்.
சரி, உங்களுடைய இந்தக் கடிதத்துக்கு முன்பு நேற்று பேசும் போது என்ன சொன்னீர்கள்? உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.
சாரு சார், நான் என் நண்பர்களிடம் சொல்லி விட்டேன். ”’சாரு சாரிடம் மூன்று முறை பேசும்போதும் கவனித்தேன். சாரு சாருக்கு பேச்சு குழறுகிறது. சாரு சாருக்கு வயது ஆகி விட்டது. அதனால் கூட்டமாகப் போய் பேட்டி எடுக்காதீர்கள். ஒன்றிரண்டு பேர் போனால் போதும். சாரு சாருக்கு வயதாகி விட்டது. கவனமாக இருங்கள். அவருக்குப் பேசும்போது பேச்சு குழறுகிறது. மூன்று முறை பேசினேன். மூன்று முறையும் குழறுகிறது. சாரு சாருக்கு வயசாய்டுச்சு. கவனம். கவனம்’ என்று சொல்லியிருக்கிறேன் சார். கவலையே வேண்டாம். ஒருத்தரோ ரெண்டு பேரோதான் வருவார்கள்.” பேச்சை முடிக்கும் போதும் “உடம்பைப் பார்த்துக்கோங்க சார்” என்றீர்கள். குரலில் அத்தனை அன்பும் ஆதூரமும் தெரிந்தது. அந்த அன்பும் அக்கறையும்தான் எனக்கு மன உளைச்சலைத் தந்தது.
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்பதை ஒரு மதத்தைப் போல் கொண்டாடித் தீர்ப்பவன் நான். சமீபத்தில் ஒரு மலை வாசஸ்தலத்தில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அ.மார்க்ஸும் இருந்தார். இரவு முழுவதும் பேச்சு. அதிகாலை ஐந்து மணி இருக்கும். இன்னும் உறங்கப் போகவில்லை. அப்போது ஒரு சூஃபி ஃபக்கீரைப் போல் முழுமையான ecstacy நிலையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தேன். மறுநாள் என் நண்பர் சுரேஷ் சொன்னார். ”68 வயதில் காலை ஐந்து மணி ஆகியும் உறங்காமல் இப்படி எக்ஸ்டஸியில் நடனம் ஆடிக் கொண்டிருக்க எனக்கு வாய்த்தால் கடவுளுக்கு நன்றி சொல்வேன்.” 68 வயதில் இல்லை சமஸ். 78 வயதிலும் இப்படித்தான் ஆடிக் கொண்டிருப்பேன், இறைவன் அனுமதித்தால்! குஷ்வந்த் சிங் 100 வயது வரை ஆடினார். நூறாவது வயதை அடைய மூன்று மாதங்களே இருந்த நிலையில்தான் இறந்தார். அவருடைய கடைசி இரவிலும் அவருக்குப் பிடித்தமான ஸ்காட்ச் விஸ்கியை அருந்தி விட்டுத்தான் உறங்கினார். ஆக, இளமை விஷயத்தில் அறுபத்தெட்டிலும் மற்ற நண்பர்களுக்கு முன்னுதாரணமாகத்தான் விளங்குகிறேனே தவிர அன்பான அறிவுரை கேட்கும் நிலையில் இல்லை.
இன்று அவந்திகாவுக்கு நடந்தது இந்த விஷயம். ஒரு ஆன்மீக வகுப்பு. வாரம் ஒருமுறை. ஒரு வகுப்புக்கு அவள் செல்லவில்லை. உடனே வகுப்பு எடுத்த பெண்மணி “உடம்பு சரியில்லையா? மிகவும் கவலையாகி விட்டது” என்று அவளுக்கு ஒரு மெஸேஜ். இன்று நேரிலும் போன் போட்டு விசாரிப்பு. அன்பினாலும் அக்கறையினாலும்தான் கேட்டார் அந்தப் பெண்மணி. ஆனால் அதோடு அந்த ஆன்மீக வகுப்பிலிருந்து அவந்திகா நின்று விட்டாள்.
ஆறு மாதத்துக்கு ஒருமுறை நாங்கள் இருவரும் வேலை பார்த்த அலுவலகத்துக்குப் போய் நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்று சாட்சி சொல்லி கையெழுத்துப் போட்டு விட்டு வர வேண்டும். அப்போது அவந்திகா அவளோடு வேலை பார்த்த சகாக்களைப் போய்ப் பார்ப்பது வழக்கம். ஒருத்தர் பாக்கியில்லாமல் ”ஐயோ, உடம்புக்கு என்ன, இப்டி துரும்பா இளைத்துப் போய் விட்டீர்களே, ஷுகரா? விஷயம் தெரியுமா, நம் பாக்கியம் இல்லை பாக்கியம். அவ போன வாரம் ஷுகராலதான் செத்துட்டா” என்பார்கள். பாக்கியத்தின் வயது நாற்பது. அவந்திகாவின் உடம்பு வேலை செய்து செய்து இளைத்தது. ஒரு நாளில் பதினான்கு மணி நேரம் உடல் உழைப்பில் ஈடுபடுபவள். ஒருத்தர் பாக்கியில்லாமல் கேட்பதால் சகாக்கள் யாரையும் இப்போது பார்ப்பதில்லை.
சீனி கம் என்ற படத்தில் இந்தியர்களின் இந்த மனோபாவத்தைக் கிழி கிழி என்று கிழித்திருப்பார் இயக்குனர். வணிக சினிமா என்றாலும் எனக்கு மிகப் பிடித்த படம்.
என் வாசகிகள் பலரும் என் முகம் ஜொலிக்கிறது, என் குரலைக் கேட்டால் மெஸ்மரைஸ் செய்கிறது என்கிறார்கள். முகம் ஜொலிக்க என்ன செய்கிறீர்கள் என்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஃபாத்திமா பாபு க்ளப் ஹவுஸில் நான் பேசியதைப் பார்த்து என் குரலைப் புகழோ புகழ் என்று புகழ்ந்தார். அதிலும் குரலுக்குப் பிரசித்தி பெற்ற ஃபாத்திமா.
ஆனால் இங்கே பொதுவில் வந்து உங்களுக்கு என் தோழிகள் யாரும் சாட்சி கூற மாட்டார்கள். நம் சமூகம் கட்டுப்பெட்டி சமூகம். அதையெல்லாம் அனுமதிக்காது.
நன்றி. வணக்கம்.
என்றும் தங்கள் வாசகன்,
சாரு
10.10 p.m.
23.0.2021.
அன்புள்ள சமஸ்,
இது இரண்டாவது கடிதம். சென்ற கடிதத்தில் சொல்லாத சில ரகசியங்களை – இதுவரை என் வாசகர்களிடம் கூட சொல்லாத ரகசியங்கள் அவை – சொல்லப் போகிறேன். இளமை என்பது மனோநிலைதான். ஆனால் அந்த மனதையும் வெளிப்படுத்தக் கூடிய ஒரு நல்ல ஊடகம் தேவை அல்லவா? இதற்குத் தமிழ் சமூகத்திலேயே எனக்கு இணையான ஒருவர் இருந்தார். அவர் தங்களுக்குப் பிடித்தமான தலைவர்தான். எங்கள் ஊர்க்காரர். ஆம். திமுக தலைவர் கருணாநிதி. எழுபது வயதில் கிருஷ்ணமாச்சாரியை அழைத்து யோகா கற்றுக் கொண்டார் இல்லையா? இப்படிப்பட்ட ஒரு அரசியல் தலைவரை உலகத்தில் எங்கேயாவது காண முடியுமா? மோடி இருக்கிறார். ஆனால் அவர் ஆர் எஸ் எஸ்ஸிலிருந்து வந்தவர். அங்கே உடற்பயிற்சியும் யோகாவும் அடிப்படை அம்சங்கள். ஆனால் குடி உல்லாசம் போன்றவற்றை மட்டுமே பொழுதுபோக்காகக் கொண்ட அரசியல் கட்சிக் கலாச்சாரத்திலிருந்து வந்த ஒருவர் எழுபது வயதில் யோகா கற்றுக் கொள்கிறார், அதிலும் ஒரு பிராமணரை அழைத்து என்றால் அதில் உள்ள விசேஷத்தன்மையை கவனியுங்கள். அதைத்தான் நான் ”உடல் வளர்க்கும் கலாச்சாரம்” என்று குறிப்பிட விரும்புகிறேன். இது நாம் போற்றுகின்ற காந்தியிடமும் இருந்தது. இது ஒரு தவம் மாதிரி. கிருஷ்ணமாச்சாரி சூர்ய நமஸ்கார ஸ்தோத்திரங்களை சம்ஸ்கிருதத்தில் சொல்லவும், அது பிடிக்காத கருணாநிதி அதன் பொருளைத் தமிழில் கேட்டுப் பெற்று, தமிழில் சொல்கிறேனே, தமிழில் அதன் அர்த்தம் நன்றாகத்தானே இருக்கிறது என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.
உடம்பு பற்றித் தீவிரமான கொள்கை உறுதி கொண்டவர்கள் எனக்குத் தெரிந்து காந்தியும் கருணாநிதியும் அடியேனும்தான். ஆம், உடம்பு வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்பதை பதினைந்து வயதிலிருந்து நான் என் மந்திரமாகவே பின்பற்றி வருகிறேன். ஐஸ்வர்யா ராய் போன்றவர்கள் அழகிப் போட்டியில் கலந்து கொள்கிறார்கள், வெற்றி பெறுகிறார்கள் இல்லையா? அதை ஒரு மதம் போல் பயில வேண்டும். இல்லாவிட்டால் வெற்றி பெற முடியாது. பதினைந்து வயதிலிருந்து நீராவிக் குளியல் எடுக்க வேண்டும். முகத்துக்கு நீராவி பிடிக்க ஒரு சிறிய மின் உபகரணம் இருக்கிறது. அதில் நீரை ஊற்றி மின்சாரத்தைப் பாய்ச்சி, அது தளபுளா என்று கொதிக்கும்போது முகத்தை அதில் காண்பிக்க வேண்டும். மின் அதிர்ச்சியெல்லாம் வராத வகையில்தான் வடிவமைத்திருப்பார்கள். பயம் இல்லை. அந்த உபகரணத்தையும் நான் பயன்படுத்தி வருகிறேன். சோப்பு உபயோகிப்பது இல்லை. கடலை மாவு, பயத்த மாவு போன்றவைதான். இப்படி ஒரு நூறு குறிப்புகள் உள்ளன சமஸ்.
ஒரு அழகிப் போட்டிக்கு நான் நடுவராக இருந்தேன். மேலே மேடையில் அழகிகள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். கீழே நடுவர் நான். அதனால் சுலபமாக அவர்களின் பாதங்களைப் பார்க்க முடிந்தது. பாதங்களில் வெடிப்பு இருந்தது. வெடிப்பு இல்லாத ஒரு பெண்ணையே அழகியாகத் தேர்ந்தெடுத்தேன். நான் உங்களை அடுத்த முறை சந்திக்கும்போது என் குதிகாலைக் காண்பிக்கிறேன். அசிங்கம் பார்க்காமல் அந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தீர்கள் என்றால் ஆறு மாதக் குழந்தையின் கன்னம் போல் மிருதுவாக இருப்பதை உணர்வீர்கள். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் பாளம் பாளமாக வெடித்துக் கிடந்தது என் குதிகால் பகுதி. Pumice stone உபயோகித்தேன். இருபத்தைந்து ஆண்டுகளாக. பூகம்ப வெடிப்பிலிருந்து பெறப்பட்ட கற்களே pumice stones. அதனால்தான் என் குதிகால்கள் இப்படி மாறின. ஒரு செவிலிப் பெண்ணின் மனநிலையோடு என் கன்னத்தையும் நீங்கள் தொட்டுப் பார்க்கலாம். அதே உதாரணம்தான். ஆறு மாதக் குழந்தையின் கன்னம் போலவே இருப்பதை உணர்வீர்கள். காரணம், இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சில பசைகளை உபயோகிக்கிறேன். முன்பு ஷாநாஸ் ஹுஸைன். அந்தக் காலத்தில் அந்தப் பெண்மணிதான் இந்தியாவின் டாப். இப்போது தங்கம் கலந்த ஒரு பசை வந்துள்ளது. Forest essentials. Soundarya Radiance Cream. உங்களாலும் என்னாலும் அதன் விலையைக் கற்பனை கூட செய்ய முடியாது. எனக்கு என் நண்பர் ஒருவர் பல ஆண்டுகளாகத் தருவித்துக் கொடுக்கிறார். கொரோனா காலத்தில் நான் இதைப் பயன்படுத்துவதை மிகுந்த கோபத்துடன் நிறுத்தினேன். கொரோனா வந்து டாட்டா சொல்ல நேர்ந்தால் உடம்பையே காட்ட மாட்டார்கள் என்பதால் நிறுத்த வேண்டி நேர்ந்தது. உடம்பே கிடைக்காது என்கிறபோது பசை போட்டு என்ன பயன், சொல்லுங்கள். இப்போது கொரோனா குறைந்திருப்பதால் மீண்டும் உபயோகிக்க ஆரம்பத்திருக்கிறேன். இன்னொரு காமெடி பாருங்கள். பசை உபயோகிக்காத காலத்தில் பசையின் விலையை எனக்கு அனுப்பி விடுங்கள், பிற்பாடு என் பயணத்துக்கு உதவும் என்றேன் நண்பரிடம். ம்ஹும் முடியாது என்று அன்புடன் மறுத்து விட்டார். அவர் பணமாகத் தர மாட்டார், பொருளாகத்தான் தருவார் போல. அவர் அப்படித்தான். முன்பு நான் குடித்துக் கொண்டிருந்த போது தவறாமல் ரெமி மார்ட்டின் அனுப்பிக் கொண்டிருந்தார். அதெல்லாம் கமல், பாலா போன்றவர்கள் சாப்பிடும் மது. ஏதோ இறைவனின் கிருபையால் எனக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. குடியை நிறுத்தியதும் அந்தப் பணத்தைக் கேட்டேன். அப்போதும் மறுத்து விட்டார். அவர் மட்டும் அனுப்பியிருந்தால் ஜெயமோகனைப் போல் ஒரு ஹில் ரிஸார்ட்டே வாங்கியிருப்பேன். அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்தான். ஆனாலும் பணக்காரர்களே ஒரு தினுசுதான் சமஸ். அவர்களை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.
இப்படியெல்லாம் அழகையும் இளமையையும் ஆராதனை செய்து கொண்டிருக்கும் ஒரு ஹெடோனிஸ்ட் தீவிரவாதியிடம் வந்து உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றால் கோபம் வருமா, வராதா?
மற்றபடி உங்கள் அன்புக்கு என் மனம் நெகிழ்ந்த நன்றி.
உங்கள்,
சாரு
5.22 a.m.
23.9.2021.
(இதை ஒரு பொதுவான பிரச்சினையாகக் கருதியே இந்தக் கடிதங்களை வெளியிட்டிருக்கிறேன். உடனே சமஸுக்கும் சாருவுக்கும் சண்டை என்று பொருள் கொண்டு விட வேண்டாம். சமஸ் என்றைக்கும் என் அன்புக்குரியவர். அவருக்கும் நான் அப்படியே. அவருடைய அருஞ்சொல்லுக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். சமஸ் இதற்கு நீண்ட பதில் எழுதியிருந்தார். அதை வெளியிட வேண்டாம் என்று நினைக்கிறேன். இந்தப் பிரச்சினையை முன்வைக்க வேண்டும் என்று விரும்பினேன். ஏனென்றால், அவந்திகா, ராகவன், இந்திரா பார்த்தசாரதி என்று பலரும் இத்தகைய அன்புத் தொல்லையால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இதை வாசிக்கும் நண்பர்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் இதுபோல் கேட்காதீர்கள். என்ன, உடம்பு சரியில்லையா என்று கேட்பதே என்னைப் பொறுத்தவரை வன்முறைதான்.
மதியம் மூன்று மணிக்கு எனக்கு போன் செய்யும் நண்பர்கள் மிகுந்த அக்கறையுடன் சியஸ்டாவா, தொந்தரவு செய்து விட்டேனா என்று கேட்கும்போதே மிகுந்த எரிச்சல் அடைவேன். ஏனென்றால், இரவிலேயே வெறும் ஐந்து மணி நேரம் உறங்குபவன் நான். ஆனால் அரை மணி நேரம் ஆழ்நிலைத் தியானம் செய்வதால் சரியாகிறது. என்னைச் சார்ந்த விஷயங்கள் பலவும் சாமான்ய மனிதர்களால் பின்பற்ற முடியாதது. அந்த கவனம் தேவை.)