அன்பு சாரு,
உங்கள் வலைதளத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறவன் என்றாலும், உங்களுக்குக் கடிதம் எழுதியதில்லை. கோணல் பக்கங்கள் வழி நீங்கள் எனக்கு அறிமுகம். ஜீரோ டிகிரி உள்ளிட்ட உங்களின் புனைவு/அபுனைவு ஆக்கங்களை வாசித்திருக்கிறேன் என்றாலும் அவை குறித்து எழுத வேண்டும் எனத் தோன்றியதே இல்லை.
உங்கள் இலக்கிய வடிவம் தமிழின் தனித்துவமான ஒன்று என்றாலும், அவ்வடிவம் எனக்கு உவப்பானது இல்லை. தொடர்ந்து நீங்கள் தக்க வைத்திருக்கும் ’இலக்கிய இளமை’க்காகவே உங்களைத் தொடர்கிறேன். யாருக்காகவும் சமரசம் செய்து கொள்ள மறுக்கும் உங்களின் ‘வெளிப்படைத்தன்மையும்’ பிடிக்கும். எழுத்தை விட உரையாடல்களில் நீங்கள் காத்திரமாக இருப்பதாக நான் உணர்ந்திருக்கிறேன்.
வலைதளத்தில் நீங்கள் எழுதும் கட்டுரைகளில் பெரும்பாலானவை எதிர்வினைகளாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன. அதிலும் பல கட்டுரைகள் வெற்றுப்புலம்பல்களாகவே எனக்குப் படுகின்றன. தொடந்து எழுதி வருவதன் ஊடாக நீங்கள் கடந்து செல்ல வேண்டியவற்றுக்குக் கூட அதிக முக்கியத்துவம் தந்து விடுகிறீர்கள். இது என் தனிப்பட்ட விமர்சனம். அதனாலும் உங்களுக்கு எழுதாமல் இருந்திருக்கலாம்.
பிடித்த ஆளுமை என ஆதிசங்கரர் தொடர்பான ஒரு பதிவை எழுதி இருந்தீர்கள். அதை வாசித்த பிறகு உங்களுக்கு எழுதியே ஆக வேண்டும் எனத்தோன்றியது. உங்கள் கட்டுரையில் “எது நிரூபணம் இல்லாதது, எது கற்பனையானது, எது நம்முடைய நம்பிக்கையை மட்டுமே சார்ந்து இருக்கிறது என்று நினைக்கிறோமோ அதுதான் உண்மை. அதாவது, நிரூபணமே இல்லாத கடவுள், பாவம், புண்ணியம், மறுபிறவி என்பதெல்லாம் நிஜம். எதைக் கண்கூடாகக் காண்கிறோமோ, எதை இந்த விஞ்ஞானம் நமக்கு ”உண்மை” என்று அறிவுறுத்துகிறதோ அது மாயை. இதைத்தான் அவர் தன்னுடைய நூற்று சொச்ச புத்தகங்களின் மூலம் நமக்குத் தந்திருக்கிறார்” என ஒரு பத்தி வருகிறது. அது ஆதிசங்கரரின் தத்துவ அடிப்படையின் அப்பட்டமான திரிபு. சங்கரரின் அத்வைத சித்தாந்த அடிப்படையையே நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லையோ என அஞ்சினேன். அதனாலேயே கடிதத்தை எழுதியே ஆக வேண்டும் என முடிவு செய்தேன். உங்களைப் பெரிதும் மதிப்பதால் கொஞ்சம் கவனமாக எழுத வேண்டும் என முடிவு செய்ததால் ஒருநாள் தாமதமாகிப் போனது.
நான் தத்துவவியல் மாணவனோ அல்லது ஆராய்ச்சியாளனோ கிடையாது. எனினும், அத்வைத சித்தாந்தம் உள்ளிட்ட இந்துமதச் சித்தாந்தங்கள் குறித்த பல்லாண்டுகாலத் தேடலில் இருந்தவன். அதனால் நீங்கள் செய்திருப்பது பொருட்பிழை என என்னால் உறுதியாகச் சொல்ல இயலும்.
ஆதிசங்கரரின் “பிரம்மம் சத்யம் ஜெகத் மித்யா” எனும் வரிக்கு வருவோம். அது வேதாந்த நூலான பிரம்ம சூத்திரத்தில் இடம்பெறும் வரி. அதற்கு “பிரம்மம் மட்டுமே உண்மை; பிற அனைத்தும் தோற்றங்களே” என்பதே பொருள். உலகியல் நிகழ்வுகள் யாவற்றையுமே சங்கரர் தோற்றங்கள் என்றே தெளிவாகச் சொல்கிறார். உங்கள் விளக்கத்தை இப்போது வாசித்துப் பாருங்கள்.
பள்ளி மற்றும் கல்லூரிக்காலங்களில் பெரியாரியச் சிந்தனையாளன் நான். அச்சிந்தனை மரபில் ஆதிசங்கரர் கொடிய வில்லனாகவே எனக்குச் சொல்லப்பட்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால், இன்றைய சங்கர மடங்களின் செயல்பாடுகளைக் கொண்டே சங்கரரை உருவகித்துக் கொள்ளவும் தயார்படுத்தப்பட்டிருந்தேன். காலப்போக்கில், நிகழ்ந்த சிந்தனை மாற்றங்களால் சுஜாதாவின் வழி பிரம்ம சூத்திரம் நூல் அறிமுகமானது. அந்நூலின் வழி சங்கரர் அறிமுகமானார். சுஜாதாவின் சங்கரரும், பெரியாரிய சங்கரரும் கதாநாயக எதிர் வில்லனாகத் தெரிந்தார்கள். தொடர் வாசிப்பிலேயே ஜெயமோகன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் வழியாகவே சங்கரர் தத்துவம் குறித்த தெளிவு கிட்டியது. அத்தெளிவில் அவர் கதாநாயகனாகவோ வில்லனாகவோ இல்லை. ஒரு தத்துவ ஆசிரியனாக மட்டுமே புலப்பட்டார். கூடுதலாக, ஒரு குறிப்பிட்ட தத்துவத்தரப்பின் சமகால அமைப்பு முறையைக் கொண்டு அதன் மூலவரைப் ’பகுத்தறிந்து’ விடலாகாது என்பதும் உறைத்தது. இவ்வகையிலான சிந்தனை விரிவில் இன்று பெரியாரும் எனக்கு அணுக்கமான ஆசானாகத்தான் இருக்கிறார்.
மேலும், சங்கரர் வேதங்களின் அந்தமான வேதாந்தத்துக்கே முதன்மை தருகிறார். அதனால்தான் அவரது தத்துவம் அத்வைத வேதாந்தம் எனச்சொல்லப்பெறுகிறது. பிரம்ம சூத்திரம் எனும் வேதாந்த நூலுக்கு சங்கரர், இராமானுஜர் மற்றும் மத்வாச்சாரியர் போன்றோர் வியாக்கியானம் செய்திருக்கின்றனர். அவ்வியாக்கியான்ங்களே அத்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம் எனும் தத்துவ மரபுகளாக இன்று அறியப்படுகின்றன.
கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து சமயப்பண்பாடு தொடர்பான தனிப்பட்ட கற்றலை நான் தொடர்ந்து மேற்கொண்டேன். அதன்வழி, பல சமகால ஆசிரியர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்களில் ஜெயமோகன் குறிப்பிடத்தக்கவர். (அவரின் பல கருத்துக்களில் எனக்கு முரணும் உண்டு. அதையும் குறிப்பிட்டே ஆக வேண்டி இருக்கிறது). அவர் அத்வைத சிந்தனைப்பள்ளியைச் சேர்ந்தவர். அதை வெளிப்படையாகவே அறிவிக்கவும் செய்தவர். எனினும், அத்தரப்புக்கு ஆதரவு கோரும் பிரசுரங்களையோ அல்லது செயல்பாடுகளையோ அவர் தளத்திலோ அல்லது அவரின் நிகழ்ச்சிகளிலோ நான் கண்டதில்லை. பலமுறை ஒரு உளவாளி போல அவர் அமைப்பின் கூட்டங்களில் பங்கு கொண்டிருக்கிறேன். எங்கும் அத்வைத மரபை நிலைநாட்டும்படியான ’நிறுவனச் செயல்பாடுகளை’ அவர் மேற்கொண்டதே இல்லை. இது ஜெயமோக புராணம் போலப் படும். வேறுவழியில்லை, ஆதிசங்கரரை நான் கண்டடையக் காரணமான முன்னோடியைக் குறிப்பிடாமல் கடிதத்தை நிறைவு செய்ய விரும்பவில்லை.
சத்திவேல்,
கோபிசெட்டிபாளையம்.
திரு சத்திவேல்,
உங்களுடைய கடிதம் அன்பு என்ற வார்த்தையுடன் தொடங்குகிறது. ஒருவனைக் கூப்பிட்டு செருப்பால் அடித்து விட்டு பிறகு என்னய்யா அன்பு வேண்டியிருக்கிறது? எனக்கு என் எழுத்துதான் உயிர் மூச்சு என்று ஆயிரம் முறை சொல்லி விட்டேன். அப்படிச் சொல்லியும் எங்கிருந்தாவது புறப்பட்டு வந்து ஜெயமோகன் தான் என் ஆசான், நீங்கள் எழுதுவது எனக்கு உவக்கவில்லை, நீங்கள் எழுதுவது புலம்பல், நீங்கள் எழுதுவது வெறும் எதிர்வினை என்றால் நான் என்ன செய்ய முடியும்? இன்னும் எத்தனை காலத்துக்கு இதையே சொல்லிக் கொண்டிருப்பீர்கள்? 43 ஆண்டுகளாக இதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வயதே அத்தனை இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் முன்பு சுந்தர ராமசாமியின் சீடர்கள் இதே வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது ஜெயமோகனின் வாசகர்களும், எழுத்தாளர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டு ஒரு இளம் எழுத்தாளர் என்னை போர்னோ எழுத்தாளர் என்று எழுதினார். அதில் தப்பே இல்லை. ஆனால் எனக்குக் கடிதம் எழுதினால் நான் பதிலுக்குப் புலம்பத்தான் செய்வேன். நீங்கள் எழுதியிருக்கும் கடிதம் என் மூஞ்சியில் மூத்திரம் அடிப்பது போல் இருக்கிறது. அப்படிச் செய்தால் நீங்கள் பதிலுக்கு என்ன செய்வீர்கள்? ங்கோத்தா என்றுதானே திட்டுவீர்கள்? கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பீர்களா? இப்படி மூத்திரம் அடிக்கும் கடிதங்கள் அவ்வப்போது வருவதால்தான் தொடர்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறேன். அந்தக் காலத்தில் ஆளுக்கு ஒரு கையில் துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு சுட்டுக் கொள்வார்கள். நாம் நாகரீகம் அடைந்து விட்டோம். நீங்கள் என் மூஞ்சியில் மூத்திரம் பெய்தால் நான் பதிலுக்கு இப்படி ஒரு புலம்பல் குறிப்பு எழுதுவேன். அதோடு சரி.
என் எழுத்தை நிராகரிப்பது உங்கள் உரிமை. உங்கள் சுதந்திரம். அதில் குறுக்கிட கடவுளுக்கும் உரிமை இல்லை. என் எழுத்தை மலம் என்று கூட நீங்கள் சொல்லலாம். ஆனால் எனக்குக் கடிதம் எழுதிச் சொன்னால் நீங்கள் என் சாபம் தின்பீர்கள். உங்கள் வசைகளை, உங்கள் விமர்சனங்களை உங்கள் வலைத்தளத்தில் எழுதுங்கள். சூரியனைப் பார்த்து யாரோ எச்சில் துப்பினால் சூரியனுக்கா நட்டம்? ஆனால் எனக்குக் கடிதம் எழுதினால் நான் இப்படித்தான் பதில் எழுதுவேன். எனக்கு ங்கொம்மா ங்கோத்தா என்ற வசை கடிதங்கள் வராத நாளே இல்லை. அதையெல்லாம் பார்த்தவுடனேயே குப்பையில் தள்ளி விடுவேன். ஏனென்றால் அவற்றை எழுதுபவர்கள் ஒரு சிலர்தான். தங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கூட மாற்றாமல் அனுப்புவார்கள். பார்த்தவுடன் குப்பைக்குப் போய் விடும். உங்கள் கடிதம் அப்படி இல்லையே? ஆனால் உங்கள் கடிதத்தை என் நண்பர்களுக்கு அனுப்பினேன். இந்தக் குப்பையையெல்லாம் தூக்கிப் போடுங்கள், ஔரங்கசீப்பில் கவனம் செலுத்துங்கள் என்றுதான் சொன்னார்கள். ஆனால் வாயில் ஊறி விட்ட எச்சில் கோழையைத் துப்பாமல் வைத்திருக்க முடியாதே? இதற்கு நான் பதில் எழுதினால்தான் எனக்கு நிம்மதி ஆகும். சில நண்பர்கள் இருக்கிறார்கள், தன் மூஞ்சியில் உங்களைப் போல் யாராவது மூத்திரம் போனாலும் தண்ணீரால் அலம்பி விட்டு மூத்திரம் போனவனின் தோளிலோ ——–லோ கை போட்டுக் கொண்டு போவார்கள். ஆனால் என் படைப்பு அப்படி இல்லையே, என்ன செய்ய?
சுந்தர ராமசாமியை நாலைந்து முறை சந்தித்திருக்கிறேன். அவரிடம் போய் ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு குப்பை என்ற என் அபிப்பிராயத்தை நான் சொன்னதில்லை. சொன்னால் செருப்பைக் கழற்றி அடிக்க அவருக்கு உரிமை உண்டு. என்னுடைய அபிப்பிராயத்தை நான் விரிவாக, ஒரு சிறிய புத்தகமாகவே எழுதியிருக்கிறேன். அதற்குப் பிறகும்தான் அவரை அவர் வீட்டில் சந்தித்தேன். அவரை நான் புனைவெழுத்துக்கும் வெளியே ஒரு புத்திஜீவியாக மதிக்கிறேன். அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்த போது அகிலனை மலக்கிடங்கு என்று சொன்ன ஒரே தமிழன் சு.ரா.தான். உண்மையைச் சொல், அதையும் உரத்துச் சொல் என்று எனக்குக் கற்பித்த ஆசான் சு.ரா.
”உங்கள் இலக்கிய வடிவம் தமிழின் தனித்துவமான ஒன்று என்றாலும், அவ்வடிவம் எனக்கு உவப்பானது இல்லை” என்கிறீர்கள். உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. உவப்பாக இல்லாததைச் செய்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அதனால்தான் உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. நான் என்ன கஞ்ஜாவா? கஞ்ஜாவுக்குத்தான் தன்னைப் பயன்படுத்துபவர்களை அடிமையாக்கும் தன்மை இருக்கிறது. என்னைப் பிடிக்காமலேயே ஏன் நீங்களெல்லாம் என்னை மாய்ந்து மாய்ந்து படிக்கிறீர்கள்? எனக்கு வரும் பெரும்பாலான கடிதங்கள் இப்படித்தான் இருக்கின்றன. படித்தால் கம்பளிப்பூச்சி ஊர்வது போல் இருக்கிறது. ஆனாலும் படிக்காமல் இருக்க முடியவில்லை. நீங்களெல்லாம் அப்படிப்பட்ட மஸாக்கிஸ்டுகளா? அல்லது, நான் அப்படிப்பட்ட ஒரு சைத்தானா?
பரவாயில்லை. கடவுளை விட சைத்தான் வசீகரமானவன்.
அந்த எழுத்தாளர் ஒரு காலத்தில் தமிழ் இலக்கியத்தின் சாம்ராட் என்று மதிக்கப்பட்டவர். ஆனால் விஷ்ணுபுரம் என்ற ஒரே ஒரு நாவலின் மூலம் அவரது ஒட்டு மொத்த இலக்கியமும் முடிவுக்கு வந்தது. அதுதான் அவரது பௌதிக வாழ்வின் முடிவுக்கும் காரணமாக இருந்தது. இதற்காக ஜெயமோகன் ஒன்றும் செய்ய முடியாது. அவர் எழுத வேண்டியதை அவர் எழுதினார். நான் அவருடைய ஆசானாக இருந்திருந்தால் அப்படி ஒரு மாணவனை உருவாக்கியதற்காகப் பெருமை கொண்டிருப்பேன். ஆனால் அவரது ஆசான் மன உளைச்சல் கொண்டார். அது அவரை விழுங்கி விட்டது.
இதை விடுங்கள். சமீபத்தில் உலகப் புகழ் பெற்ற முராகாமியின் சிறுகதைத் தொகுதி ஒன்றைப் படித்தேன். படு சாதாரணமாக இருந்தது. அதேபோல் உம்பர்த்தோ எக்கோ போன்றவர்களும் கூட என்னை ஈர்க்கவில்லை. அதற்காக நான் அவர்களுக்குக் கடிதம் எழுதி புலம்பிக் கொண்டிருக்கவில்லை. நாளை அவர்களை நேரில் சந்தித்தால் உங்கள் எழுத்து தண்டம் என்றும் சொல்ல மாட்டேன். நீ எழுதுவது எனக்கு உவப்பானதாக இல்லை என்று ஒரு எழுத்தாளனிடம் சொல்பவன் மூடன். உவப்பாக இல்லாவிட்டால் படிக்காதீர் நண்பரே. நான் என்ன உங்களைக் கட்டாயப்படுத்தவா செய்கிறேன்? எனக்கு உம்பர்த்தோ எக்கோ, முராகாமியெல்லாம் சுத்தப் பேத்தல் என்று தோன்றியது. விட்டு விட்டேன். அவ்வளவுதான் செய்ய முடியும். அதற்காக நான் நினைப்பதுதான் சரி என்று வாதிட முடியுமா? வேண்டுமானால் ஒரு நீண்ட கட்டுரை எழுதலாம். எழுதினால் யாருக்கு என்ன பயன்? அவர்கள் இருவரையும் உலகமே கொண்டாடுகிறது. அதேபோல், ஐயா, என்னை, என் எழுத்தை வ்ளதிமீர் நொபகோவுடன் ஒப்பிட்டு ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இங்கே சென்னையில் அல்ல. மேற்கத்திய இலக்கிய உலகில். நான்கு ஆண்டுகளாக ஐரோப்பாவின் புகழ் பெற்ற கலை சஞ்சிகையான ArtReview Asia வில் தொடர் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதன் ஆசிரியர் ஸீரோ டிகிரியைப் படித்து விட்டுத்தான் அந்தப் பத்திரிகையில் தொடர் கட்டுரை எழுத என்னை அழைத்தார். எனக்கு ஓவியம் சிற்பம் தெரியாதே என்றேன். அது ஓவியப் பத்திரிகை. என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள் என்றார் ஆசிரியர். ஆங்கிலத்தில் எழுத முடியாதே என்றேன். மொழிபெயர்த்துக் கொடுங்கள் என்றார். ஒன்றும் இல்லாமலா அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஸீரோ டிகிரியை Asian Classic என்று வகைப்படுத்தி பாடமாகப் பயில்கிறார்கள்? ஒன்றுமில்லாமலா 50 Writers, 50 Books என்ற ஹார்ப்பர் காலின்ஸ் தொகுதியில் ஸீரோ டிகிரியை சேர்த்திருக்கிறார்கள்? இந்தியாவில் எழுதப்பட்ட ஐம்பது முக்கிய நூல்களில் ஸீரோ டிகிரி ஒன்று என்று சொல்கிறது ஹார்ப்பர் காலின்ஸ்.
உங்களுக்கு அதில் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் நல்லது நண்பரே, எனக்கு சு.ரா.விடமிருந்து கிடைக்கவில்லை. உம்பர்த்தோ எக்கோவிடமிருந்து கிடைக்கவில்லை. அது உங்கள் விஷயம். உங்கள் மூத்திரம். அதைக் கொண்டு வந்து என் மூஞ்சியில் அடிக்காதீர்.
ஆதி சங்கரர் விஷயம். அது பற்றி உங்களோடு பேச விரும்பவில்லை. அடிப்படை நாகரீகம் தெரியாத ஒருவரோடு என்னால் உரையாட முடியாது. நான் அத்தனை நல்லவன் அல்ல. மேலும், ஜெயமோகனை நான் ஒரு materialist, மார்க்ஸிஸ்ட், கொஞ்சம் அத்வைதி என்றெல்லாம்தான் வகைப்படுத்துகிறேன். அபிலாஷ் எனக்கு அனுப்பியுள்ள வாய்ஸ் மெஸேஜில் இதையேதான் சொல்லியிருக்கிறார். அவரது கட்டுரைகளிலும் எழுதியிருக்கிறார். அவரது மதிப்பீடுகளில் நான் உடன்படுகிறேன். சொல்லப் போனால், அபிலாஷின் கட்டுரையிலிருந்துதான் ஜெயமோகனை நான் இன்னும் சரியாகப் புரிந்து கொண்டேன். அவருக்கும் மார்க்ஸீயவாதிகளுக்குமான சண்டை மார்க்ஸீயவாதத்துக்குள் உள்ள உள் முரண்கள். அதாவது, ஜெயமோகன் அத்வைதமும் மார்க்ஸீயமும் கலந்த கலவை. அந்தக் காரணத்தினால்தான் ஞானி அவரைக் கொண்டாடினார். ஊட்டி மார்க்ஸிஸ்ட் என்னை முற்றாகப் புறக்கணிப்பதற்கும், ஜெயமோகனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி சீண்டுவதற்கும் கூட இதுதான் காரணம். மார்க்ஸிஸ்டுகளின் முதல் எதிரி நான். அவர்கள் என்னை annihilate செய்ய விரும்புவார்கள். ஜெயமோகனுக்கு வக்கீல் நோட்டீஸ் மட்டுமே அனுப்பி மிரட்டுவார்கள்.
இதற்கு நீங்கள் பதில் எழுதினால் அதைப் படிக்காமல் குப்பையில் போட்டு விடுவேன்.
மற்றபடி நீங்கள் என்னைப் பற்றி அன்பாக சில வார்த்தைகள் எழுதியிருப்பது என்னை அவமானப்படுத்துகிறது. என் எழுத்து எதையுமே படித்ததில்லை என்று சொல்லி மார்தட்டிய ஒரு இயக்குனர் சாரு மிகவும் அன்பான மனிதர் என்று சொன்ன மாதிரிதான். ஷேம். ஷேம்.
சாரு