எப்போதுமே என் விருப்பத்தின் பேரில் வாழ முடியவில்லையே என்ற குறை எனக்குள் உண்டு. இப்போதும் எப்போதும் என் விருப்பம் வெளியிலிருந்து வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டு எப்போதும் எழுதுவது, படிப்பது. ஆனால் பெரும்பகுதி நேரம் பூனை பராமரிப்பில் செலவாகிறது. பாண்டிச்சேரியை சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஒரு நண்பர் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு விஸ்தாரமான குடிசை கட்டி வைத்திருக்கிறார். பார்ப்பதற்கு அந்தக் காலத்துப் பேரரசர்களின் கூடாரம் போல் இருக்கும். அரவம் நெருங்காமல் இருக்க சுற்றி வர நந்தியாவட்டைச் செடிகளும் சமையல்காரரும் உண்டு. மற்றபடி மரங்களும் பட்சிகளும் மட்டுமே சகவாசிகள். அந்தக் குடிசை கட்டப்பட்ட நாளிலிருந்து இன்று வரை யாருமே தங்கினதில்லை. நான் அங்கே போய் என் வாழ்நாள் முழுவதும் தங்கிக் கொள்ளலாம். ஒருநாள் கூடப் போனதில்லை. எட்டிப் பார்த்ததோடு சரி. குடும்பச் சிறையில் அதிக பட்சம் மூன்று வார காலம்தான் ’பரோல்’ கிடைக்கும்.
இப்போது லக்கி நான்கு குட்டிகள் போட்டிருக்கிறது. ஒன்றரை மாதம் ஆகிறது. இத்தனை அழகான, இத்தனை ஒழுங்கான பூனைக்குட்டிகளை நான் பார்த்ததில்லை. ஒன்று, முழுமையான கருப்பு. என்னையும் ஒரு பூனை என்றே நினைத்துக் கொண்டு நான்கும் என்னோடு விளையாடிக் கொண்டிருப்பதால் அவைகளுக்கு பயம் என்ற உணர்ச்சியே இல்லை போலும் என்று நினைத்த நான் அதில் உள்ள டெட்டியைத் (முழுக் கருப்பு) தூக்கிக் கொண்டு என் அறைக்கு வந்தேன். என் அறையில் ஏசி மெக்கானிக் வேலை செய்து கொண்டிருந்தார். ஜாலியாக என்னோடு விளையாடிக் கொண்டே வந்தது வேற்று மனிதரைப் பார்த்து விட்டு கராபுரா என்று கத்தியபடி விழுந்தடித்து ஓடி விட்டது. மகிழ்ச்சியாக இருந்தது. நம்மிடம் மட்டும்தான் நகத்தைக் காட்டவில்லை. பூனைகளும் பெண்களைப் போலவே இருக்கின்றனவே என நினைத்துக் கொண்டேன்.
கார்த்திக்கும் (என் மகன்) அனுவும் (மருமகள்) இரண்டு நாய்களும் ஒரு பெர்ஷியன் பூனையும் வளர்க்கிறார்கள். நாய்கள் இரண்டும் சிங்கம் போல் பெரியவை. உணவு விடுதிக்குச் சென்றால் கூட மூன்றையும் அழைத்துக் கொண்டுதான் செல்வார்கள். அதாவது, இருவரும் வீட்டுப் பிராணிகளுக்கு இடம் அளிக்கும் உணவு விடுதிகளுக்கும் தங்கும் விடுதிகளுக்கும் மட்டுமே செல்வார்கள். பூனையும் நாயும் விரோதிகள் என்பார்கள். வீட்டிலேயே வளர்த்தால் அப்படியில்லை. அவர்களின் பூனை அந்த நாய்களின் முதுகில்தான் படுத்துத் தூங்கும். அவ்வளவு தோஸ்த்.
பிராணிகள் விஷயத்தில் இருவரும் தீவிரவாதிகள். ஊருக்குப் போனாலும் மூன்றையும் அழைத்துக் கொண்டுதான். இன்னும் ஒரு வாரத்தில் மூன்றையும் அழைத்துக் கொண்டு மும்பையிலிருந்து காரில் சென்னை வருகிறார்கள். குடும்பம் பெரிது என்பதால் அதற்காகவே ஒரு பெரிய கார் வாங்கியிருப்பதாகச் சொன்னான். அடுத்த வாரத்திலிருந்து பதினைந்து தினங்கள் ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் வாழப் போகிறேன். தனியாக ஒரு வனத்தில் அமர்ந்து எழுத நினைத்துக் கொண்டிருக்கும் எனக்கு இறைவன் விதித்த வாழ்க்கையை எண்ணிச் சிரிக்கிறேன்.