நேற்று இதே நேரம் ஆத்மார்த்தி போனில் பேசினார். ஆத்மார்த்தி என்பதால் எடுத்தேன். இல்லாவிட்டால் இந்த நேரத்தில் போனைத் தொடுவதில்லை. உங்களுக்குப் பிடித்த நூறு பேரைப் பற்றி எழுதுங்கள் என்றார். ஆறு ஏழு பெயர்களைக் குறிப்பிட்டு முகநூலில் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன் இல்லையா, அதன் விளைவு. அந்த நூறு பேர் பட்டியலில் முதலில் வருபவர் ஆதி சங்கரர்.
1724-இல் பிறந்து 1804-இல் காலமானவர் தத்துவவாதி இம்மானுவல் காண்ட் (Immanual Kant). அவரது Critique of Pure Reason என்ற புத்தகத்தின் அடிப்படைச் சிந்தனைகளில் ஒன்று என்னவென்றால், கோட்பாடு என்பது கோட்பாடாக மட்டுமே இருந்தால் அது வறட்டுத்தனமாகவும் பயன்படுத்த இயலாததாகவும் போய் விடும். புத்திஜீவிகள் வறுத்த முந்திரியை மென்று கொண்டு பேசிக் கொண்டிருப்பதற்கு வேண்டுமானால் உதவுமே தவிர மனித வாழ்வுக்குப் பயன்படாது. அதே சமயம், அனுபவத்தை மட்டுமே நம்முடைய தேடலின் அடிப்படையாகக் கொண்டால் அது அறிவையோ ஞானத்தையோ சார்ந்ததாக இராது. ஆக, கோட்பாடும் (தத்துவமும்) அனுபவமும் சேர வேண்டும். அந்த வகையில் இந்த இரண்டையும் இணைத்த இந்தியத் தத்துவவாதியாக நாம் ஆதி சங்கரரைக் கூறலாம். அவர் தத்துவவாதி மட்டும் அல்ல. மகத்தான கவிஞரும் கூட. கி.பி. 700-இல் பிறந்து வெறும் 32 ஆண்டுகளே வாழ்ந்த ஆதி சங்கரர் ஏராளமான தத்துவ நூல்களையும் சௌந்தர்ய லஹரி போன்ற குறுங்காவியங்களையும் பாஷ்யங்களையும் எழுதியிருக்கிறார். இந்திய மரபில் தாந்த்ரீகம் என்பது ஒரு யோக முறை. சங்கரரின் சௌந்தர்ய லஹரி ஒரு அற்புதமான பக்திப் பாடலாக இருந்தாலும் தாந்த்ரீக யோகத்திலும் அதற்கு ஒரு தவிர்க்க முடியாத இடம் உண்டு.
சௌந்தர்ய லஹரியின் முதல் ஸ்லோகம்:
ஷிவ ஷக்த்யா யுக்தோ யதி பவதி ஷக்தஹா ப்ரபவித்தும்
ந சேதவம் தேவோ ந கலு குஆல: ஸ்பந்திதுமபி
அதஸ்த்வாமாராத்யாம் ஹரிஹர விரிஞ்சாதிபிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய: ப்ரபவதி
இதன் பொருள்: அன்னையே, பராசக்தியான உன்னுடன் இணைந்தால் மட்டுமே பரமசிவனால் ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகிய முத்தொழில்களையும் செய்ய முடியும். இல்லாவிட்டால் அவரால் அசையவும் இயலாது. ஆகவே, ஹரி, ஹரன், பிரும்மா ஆகியோர் போற்றும் உன்னைத் துதிக்க முற்பிறவிகளில் புண்ணியம் செய்யாதவர்களால் எங்ஙனம் முடியும்?
இப்படி எடுத்த எடுப்பிலேயே சக்தியில்லாவிட்டால் சிவன் இல்லை என்று சொல்லும் ஆதி சங்கரர், இன்னொரு ஸ்தோத்திரத்தில் கொடுக்கும் ஒரு அதிரடி இது:
நரம் வர்ஷீயாம்ஸம் நயநவிரஸம் நர்மஸூ ஜடம்
தவாபாங்காலோகே பதித மநுதாவந்தி ஸதஸ:
கலத்வேணீபந்தா: குசகலஸ விஸ்ரஸ்த ஸிசயா
ஹடாத் த்ருட்யத் காஞ்ச்யோ விகலித துகூலா யுவதய
தேவி, உன் கடைக்கண் பார்வையில் விழுந்த ஒருவனை, அவன் கிழவனாகவோ, பார்ப்பதற்குக் குரூபியாகவோ, சிற்றின்பக் கேளிக்கைகளில் ஈடுபாடு இல்லாதவனாகவோ இருந்தாலும் கூட நூற்றுக்கணக்கான இளம் யுவதிகள் அவன் பின்னால் தங்கள் தலைப் பின்னல் அவிழ்ந்து விழ, கூர்த்த முலைகளிலிருந்து சேலை விலகி விழ, இடுப்பு ஆபரணங்கள் கீழே கழன்று விழ ஓடி வருவார்கள். மேலே கண்ட ஸ்லோகத்தை ஆறு நாட்கள் கிழக்கு முகம் அமர்ந்து 1000 தடவை ஜெபித்தால் விரும்பின பெண் கிடைப்பாள். விருப்பத்திலும் ஒரு தர்மம் இருக்க வேண்டும் என்கிறது தாந்த்ரீகம். முறையற்று விரும்பினால் வாழ்நாள் பூராவும் பெண் துணை கிடைக்காமல் அல்லலுற வேண்டியதுதான்.
சௌந்தர்ய லஹரியின் நூறு ஸ்லோகங்களையும் தனித்தனியாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஜெபித்தால் இன்னின்ன பலன்கள் கிட்டும் என்று தாந்த்ரீகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. த்வதந்ய என்று தொடங்கும் நான்காவது ஸ்லோகத்தை 36 நாட்கள் கிழக்கு முகமாக அமர்ந்து 3000 தடவைகள் ஜெபித்தால் சகல நோய்களும் நீங்கி, பட்டம் பதவிகள் கிடைக்கும் என்கிறது தாந்த்ரீகம்.
18-ஆவது சுலோகம் ஸ்த்ரீ வசியத்துக்கு உரியது. இளம் சூரியனின் அழகையொத்த உனது உயிரொளியின் கிரணங்களால் தேவலோகத்தையும் பூலோகத்தையும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் மூழ்கியிருப்பதாக எண்ணி யார் தியானிக்கிறானோ அவனுக்கு மருண்டோடும் மானின் விழிகளைக் கொண்ட ஊர்வசி உள்ளிட்ட தேவகன்னிகைகள் பலரும் வசமாவர். இதேபோல் இன்னொரு ஸ்லோகமும் இருக்கிறது. அதையும் தொடர்ந்து இத்தனை நாள் ஜெபித்தால் எப்பேர்ப்பட்ட பெண்ணும் வசமாவாள், மிருகங்களும் வசமாகும். இன்னொரு ஸ்லோகம். ஸூதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய என்று தொடங்கும் 28-ஆவது ஸ்லோகம் கொரோனா போன்ற கொடிய நுண்ணுயிரிகளையும் வீர்யம் இழக்கச் செய்யக் கூடியது. ஸ்லோகத்தில் கொரோனா என்று வருகிறதா என்று என்னைக் கேட்கக் கூடாது. எப்பேர்ப்பட்ட கொடிய நோயும் அண்டாது. அவ்வளவுதான். இதேபோல் செம்பைத் தங்கமாக்குவது, கூடு விட்டுக் கூடு பாய்வது போன்ற சித்திகளுக்கும் சௌந்தர்ய லஹரியில் வழிமுறை சொல்லப்பட்டிருக்கிறது.
35ஆவது ஸ்லோகம் கவித்துவத்தின் உச்சங்களில் ஒன்று.
மனம் நீ, வெளி நீ,
காற்றும் நீ, தீயும் நீ,
புனல் நீ, புவியும் நீ,
நீயே பிரபஞ்சமாக வடிவெடுத்திருக்கிறாய் அன்னையே
உன்னையன்றி இங்கே யாருமில்லை
ஆனால்
இவ்வாறு நீ பிரபஞ்ச வடிவம் எடுப்பதன் பொருட்டு
சிவனின் பத்தினியாக ரூபம் கொள்கிறாய்.
இந்த ஸ்லோகத்தை 1000 தடவை – கிழக்கு முகம் அமர்ந்து – 45 நாள் ஜெபித்தால் மார்பு நோய் நீங்கும்.
ஆதி சங்கரர் எழுதிய சிவானந்த லஹரியும் கவித்துவ உச்சங்கள் கொண்டதுதான். அதில் ஒன்று இது:
சிவனே, ஆதி வேடனே!
ஏன் நீ அங்கேயும் இங்கேயும் வேட்டை தேடி அலைய வேண்டும்?
என் மனமென்ற வனத்தில் ஆணவம், பொறாமை, காமம் போன்ற
பல கொடிய மிருகங்கள் திரிந்து கொண்டிருக்கின்றன.
வா, வந்து இந்த மிருகங்களை வேட்டையாடிக் கொன்று விளையாடிக்
களி…
எல்லோரும் இறைவனிடம் ஏதேதோ வேண்டுவார்கள். சங்கரரோ இறைவனிடம் ’உனக்கு நான் வேட்டைக்கு இடம் தருகிறேன்’ என்று சொல்கிறார்.
ஆதி சங்கரரின் விவேக சூடாமணியில் ஒரு தத்துவ முடிச்சு (59-ஆவது ஸ்லோகம்) இது: பேருண்மை என்பது என்ன என்று தெரியாமல் இருப்பதால் சாஸ்திரங்களைப் படிப்பது பயனற்றது. அதே சமயம் பேருண்மை என்பது என்னவென்று தெரிந்திருப்பதாலும் சாஸ்திரங்களைப் படிப்பது பயனற்றதாகிறது. அதே விவேக சூடாமணியின் 13-ஆவது ஸ்லோகத்தில், பேருண்மை என்பதை ஸ்நானத்தினாலோ, தானத்தினாலோ அல்லது நூறு வகைப் பிராணாயாமத்தினாலோ அடைந்து விட முடியாது; அறிஞர்களின் மூலமே அறிந்து கொள்ள முடியும் என்கிறார்.
32 ஆண்டுகள் மட்டுமே நீடித்த தன்னுடைய குறுகிய கால வாழ்வில் 8 வயதில் காலடியிலிருந்து கிளம்பிய ஆதி சங்கரர் அயோத்யா, உஜ்ஜய்ன், விருந்தாவன், திருப்பதி, தக்ஷசீலம், பத்ரிநாத், அமர்நாத், இந்திரப்ரஸ்தா (அவர் காலத்தில் தில்லியின் பெயர்), துவாரகா, கயா, ஜ்வாலாமுகி, கன்யாகுமரி, காத்மண்டு, காசி, ராமேஸ்வரம், மதுரா, கைலாஷ், நாளந்தா, பெஷாவர் (இப்போது பாகிஸ்தானில் உள்ளது), பிரயாகை (இலஹாபாத்), சோம்நாத், ஸ்ரீநகர், சிருங்கேரி என்று அவர் கால் பதியாத ஊர்களே இல்லை என்ற அளவுக்கு ஹிந்துஸ்தான் முழுவதையும் கால்நடையாகவே சுற்றி வந்தார்.
இந்திய ஆன்மீகவாதிகளில் ஆதி சங்கரரை பெரும் புரட்சிக்காரராகவே நான் பார்க்கிறேன். சாஸ்திரங்களையும் சடங்குகளையும் அவர் பிரம்மத்தை அறிவதற்கான அடிப்படைத் தகுதிகளாகக் கொள்ளவில்லை. இது ஒரு காரணம். இன்னொரு காரணம், அவர் மனித சரித்திரத்தின் தத்துவ, சிந்தனைப் போக்கையே தலைகீழாக மாற்றுகிறார், ஒரே ஒரு வாக்கியத்தின் மூலம். அது: ஜகத் மித்யா, பிரம்ம சத்யம். உலகம் மாயை. பிரம்மம் சத்தியம். நாம் எதையெல்லாம் சத்தியம், உண்மை, எதார்த்தம் என்று நம்பி வருகிறோமோ அது மாயை. எது நிரூபணம் இல்லாதது, எது கற்பனையானது, எது நம்முடைய நம்பிக்கையை மட்டுமே சார்ந்து இருக்கிறது என்று நினைக்கிறோமோ அதுதான் உண்மை. அதாவது, நிரூபணமே இல்லாத கடவுள், பாவம், புண்ணியம், மறுபிறவி என்பதெல்லாம் நிஜம். எதைக் கண்கூடாகக் காண்கிறோமோ, எதை இந்த விஞ்ஞானம் நமக்கு ”உண்மை” என்று அறிவுறுத்துகிறதோ அது மாயை. இதைத்தான் அவர் தன்னுடைய நூற்று சொச்ச புத்தகங்களின் மூலம் நமக்குத் தந்திருக்கிறார். இதற்கு அவர் ஆதாரமாகக் கொள்வது வேதங்கள். அவர் ஏராளமாக எழுதியிருந்தாலும் அவற்றில் நாம் அடிப்படையாகப் பயில வேண்டியவை பிரம்ம சூத்திர பாஷ்யம், கவிதை நூல்களான விவேக சூடாமணி, நிர்வாண சதகம் மற்றும் 68 ஸ்லோகங்களால் ஆன ஆத்ம போதம் என்ற சிறிய நூல். இந்தியாவில் தோன்றிய பௌத்தமும் ஜைனமும் இந்தியாவில் வேரூன்றாமல் போனதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தத்துவ ரீதியாகவே அந்த இரண்டு மதங்களும் இங்கே திரும்பவும் மறு உருவாக்கம் ஆகாமல் போனதற்கு ஆதி சங்கரரும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஏனென்றால், ஆதி சங்கரரின் மாயா வாதம் பௌத்தம் முன்வைத்த சூன்ய வாதத்தின் மாறு வேடமே என்றே கருத இடம் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் ஆதி சங்கரர் பௌத்தத்தை சனாதன தர்மத்துக்குள் இணைத்து விட்டார். (அந்தக் காரணத்தினாலே சங்கரரை ’மாறுவேடத்தில் இருக்கும் பௌத்தர்’ என்று சொல்வதுண்டு!) இங்கே சனாதன தர்மம் என்ற பெயரை கவனியுங்கள். சங்கரர் காலத்தில் இந்து மதம் என்ற பெயரே இல்லை. இந்து மதம் அப்போது சனாதன தர்மம் என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டது. ஹிந்து மதம் என்ற பெயர் அராபிய முஸ்லீம்கள் கொடுத்தது. அரபி மொழியில் ‘ச’ என்ற எழுத்தின் உச்சரிப்பு ‘ஹ’. அரபி மொழியின் இந்த ஒரு உச்சரிப்புத்தன்மைதான் ஹிந்து மதம் என்ற பெயர் உண்டாகவே காரணம்.
***
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai