இன்று மாலை அராத்து போன் செய்து ஜி. குப்புசாமி மொழிபெயர்த்த வீட்டுக்கு இவ்வளவு அருகில் இவ்வளவு தண்ணீர் என்ற சிறுகதையைப் படித்தேன் என்றார். அருஞ்சொல் இதழில் வந்திருந்ததை நான் என் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதனால் படித்ததாகச் சொன்னார். நான் அந்தக் கதையை குப்புசாமியின் தேர்வுக்காகவும் அவரது மொழிபெயர்ப்புக்காகவும் அருஞ்சொல் இதழுக்காகவும் மட்டுமே பகிர்ந்திருந்தேன். நான் படிக்கவில்லை. படிக்கவும் நேரம் இல்லை. அதோடு ரேமண்ட் கார்வர் பற்றி அதிகம் பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். உலக அளவில் மிகவும் பிரபலமானவர். நான் அவருடைய ஒரு கதையைக் கூடப் படித்ததில்லை. இன்று அராத்து பேசியபோது, கதையின் முடிவில் ஒரு குழப்பம் இருப்பதாகவும் அது மொழிபெயர்ப்பில் நிகழ்ந்த குழப்பம் போல் தெரிவதாகவும் சொன்னார். மொழிபெயர்ப்பில் குழப்பம் என்றால் மொழியில் இல்லை; கதையில் ஏதோ பிசகு நடந்திருப்பது போல் தெரிவதாக. அச்சுப் பிழையா, வேறு ஏதாவது கதை இதில் சேர்ந்து விட்டதா, என்னவென்று புரியவில்லை என்றார்.
அதன் காரணமாக, ஔரங்கசீப்பைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டுப் படித்தேன். கடைசிப் பத்தியில் பெரும் குழப்பமாகத்தான் இருந்தது. சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு கடைசி வாக்கியம் இருந்தது. உடனே என்னிடம் இருந்த ரேமண்ட் கார்வரின் புத்தகத்தில் கதையின் மூலத்தைப் படித்தேன். அதில் இருந்தது இவ்வளவுதான். அது சரியான முடிவாகவும் இருந்தது.
B A C K home, Stuart sits at the table with a drink of whiskey in front of him. For a crazy instant I think something’s happened to Dean.
“Where is he?” I say. “Where is Dean?”
“Outside,” my husband says.
He drains his glass and stands up. He says, “I think I know what you need.”
He reaches an arm around my waist and with his other hand he begins to unbutton my jacket and then he goes on to the buttons of my blouse.
“First things first,” he says.
He says something else. But I don’t need to listen. I can’t hear a thing with so much water going.
“That’s right,” I say, finishing the buttons myself, “Before Dean comes. Hurry?”
டீன் என்பது ஸ்டூவர்ட் மற்றும் க்ளேர் தம்பதியின் குழந்தை. மூலத்தில் கதை இதோடு முடிகிறது. ஆனால் குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் ஒரு அத்தியாயமே புதிதாக இருக்கிறது. கடைசி அத்தியாயம். அதிலும் குப்புசாமியின் கடைசி வாக்கியம் கதைக்குப் பொருந்தவே இல்லை.
”அவர் வேறு ஏதோ சொல்கிறார். கேட்டுக்கொண்டே மெதுவாகத் தலையசைக்கிறேன். தூக்கம் வருகிறது. தூங்கி எழுந்தவுடன், “கடவுளே அவள் ஒரு குழந்தை, ஸ்டூவர்ட்” என்கிறேன்.”
இங்கே “அவள்” என்பது யார்? ஏன் இந்த அத்தியாயமே என் புத்தகத்தில் இல்லை? அது மட்டும் அல்ல. இணையத்தில் கிடைக்கும் இதே கதையில் என்னிடம் உள்ள மூல நூலில் இருப்பது போல்தான் உள்ளது. குப்புசாமியின் கடைசி அத்தியாயம் இணையத்திலும் காணவில்லை. புதிராக உள்ளது. இரண்டு இணைப்பையும் தருகிறேன்.
அருஞ்சொல்லில் வந்த குப்புசாமி மொழிபெயர்ப்பு:
இணையத்தில் கிடைக்கும் மூலக் கதை:
http://www.nyx.net/~kbanker/chautauqua/carver.htm
என்னிடம் உள்ள புத்தகத்திலும் கதையின் இதே வடிவம்தான் உள்ளது. என்னிடம் உள்ள புத்தகம் Collected Stories. The Library of America வெளியிட்டது.
மற்றபடி இது ஒன்றும் மொழிபெயர்க்கத் தகுந்த அளவுக்கு விசேஷமான கதை இல்லை. இம்மாதிரியான கதைகளையெல்லாம் நம் தமிழர்களுக்கே உள்ள Xenomaniaவின் காரணமாகவே கடந்த ஐம்பது ஆண்டுகளாக மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம். இருபத்து இரண்டு வயதில் சிறுகதை எழுதிப் பழகும் நம் பையன்களே இதை விட நல்ல கதை எழுதுகிறார்கள். ஸ்டூவர்ட், க்ளேர் தம்பதி. ஸ்டூவர்ட் தன் நண்பர்களுடன் மீன் பிடிப்பதற்காகத் தொலைதூரம் செல்கிறான். வார இறுதி. அங்கே ஒரு பெண் நதியில் வன்கலவி செய்யப்பட்டு கொலையுண்டு கிடக்கிறாள். நதியில் அடித்துச் சென்று விடாமல் அவளை ஒரு கயிறால் கட்டி விட்டு நண்பர்கள் மீன் பிடித்து, விஸ்கி குடித்துக் கொண்டாடி விட்டு மூன்று தினங்கள் சென்று திரும்பும்போது போலீஸுக்கு போன் செய்கிறார்கள். க்ளேர் கடும் கோபம் அடைகிறாள். இந்த அளவுக்கு சுரணையுணர்வு மழுங்கி இருக்கிறார்களே என்று. இது ஒரு கதையா? ஸ்டுப்பிட்.
ஆனால் இந்த ஒரு கதையை வைத்து நான் ரேமண்ட் கார்வர் பற்றி முடிவுக்கு வர மாட்டேன். ஆனால் மோசமான எழுத்தாளர் என்ற முடிவையும் எடுக்க மாட்டேன். என்னுடைய நேர நெருக்கடியில் ரேமண்ட் கார்வரை இனிமேலும் படிக்க முடியும் என்று தோன்றவில்லை. முதல் கதையே இத்தனை சாதாரணம். அவரை ஏன் மேலும் படிக்க வேண்டும்? இனிமேல் எதையும் படித்துப் பார்க்காமல் பகிரக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்.
எது எப்படியிருந்தாலும் கதையின் முடிவு பற்றிய குழப்பத்தை குப்புசாமிதான் விளக்க வேண்டும்.