கிழட்டுத்தனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனோடு இன்று நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குப் போயிருந்தேன்.  பூங்காவில் பெருங்கூட்டம்.  இனிமேல் போக மாட்டேன்.  எம்மார்சி நகர் பெங்களூர் மாதிரி இருக்கிறது.  திரும்பின இடமெல்லாம் பூங்கா.  பூங்காவில் ஆட்களே இல்லை.  பெரிய பெரிய சாலைகள்.  சாலைகளிலும் ஆட்கள் இல்லை.  ராகவன் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு நாங்கள் வேலை பார்த்த அஞ்சலகத் தலைமையகத்துக்குச் சென்றிருந்தாராம்.  அவரைப் பார்த்த ஒவ்வொருவருமே “ஐயோ” என்றுதான் பேச்சையே ஆரம்பித்திருக்கிறார்கள்.  “ஐயோ, ஷுகரா?  ஏன் இப்படி இளைத்து விட்டீர்கள்?  ஷுகர் செக் பண்ணினீர்களா?”  இதைத் தவிர யாரும் வேறு எதுவுமே பேசவில்லையாம்.  அங்கே வேலை செய்பவர்களில் 99 சதவிகிதம் மனம் பிறழ்ந்தவர்கள்தான் என்று பதில் சொன்னேன்.  சென்ற வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றிருக்கிறார்.  இவர் வயதை ஒத்த நண்பர் ஒருவர். பார்த்து பத்து ஆண்டுகள் இருக்கும்.  எடுத்த எடுப்பில் “டேய் ராகவா, என்னடா ஆச்சு ஒனக்கு, ஷுகரா, என்னடா இப்டி ஆய்ட்டே, ஷுகர் டெஸ்ட் எடுத்துப் பாத்தியா? எவ்ளோ இருந்தது?  ஒன்னைப் பார்த்தா முன்னூறு நானூறு இருக்கும் போல்ருக்கே?” என்கிறார்.  ராகவன் இந்த விஷயத்தில் என்னை மாதிரியே.

“ஆமடா, அதை ஏன் கேழ்க்கிறே?  போன வாரம்தான் எடுத்தேன்.  முன்னூத்தம்பது இருக்கு.  ஒரே மாத்தரையா முழுங்கறேன்…”

“பார்த்தயா?  ஃபர்ஸ்ட் லுக்லயே தெரிஞ்சுடுத்தே?  பார்த்தாலே ‘சிக்’கா தெரியறேடா… ஒடம்பைப் பார்த்துக்கிறதுக்கென்னா?  நோகாம பென்ஷன் வறது.  பிறகு என்ன?  வாக்கிங் போறயா, இல்லையா? போறேன்னா எப்டி ஷுகர் இப்டி ஷூட் அப் ஆகும்?  வாக்கிங்கே போறதில்லே போலருக்கு… ம்?  அதை விட ஒனக்கு வேறன்ன வேலை நொட்றது?”

“ஆமடா… வாக்கிங்கே போக முடியறதில்லை.  ஆத்துல எடுபிடி வேலைல்லயே நேரம் போத மாட்டேன்றது.  ஆமா, நீ வாக்கிங் போறயா?”

“ம்ச… எங்கே?  எல்லாம் ஒன் கதைதான்.  எப்பவாவது போறதுதான்…”

இன்னும் ஒரு பதினைந்து நிமிடம் இப்படியே ஓடியிருக்கிறது பேச்சு.  கடைசி வரை வாக்கிங் பற்றிய உபதேசம்தான்.  உபதேசம் கொடுத்தது வாக்கிங்கே போகாதவர்.  அவர் வயதும் ராகவன் வயதுதான்.  65.  எடை 120 கிலோ இருக்குமாம்.  நீர் யானை போன்ற தொப்பை.  அந்த ஆள் ராகவனுக்கு ஆலோசனையும் புத்திமதியும்.  இத்தனைக்கும் ராகவன் தினமும் காலையில் ஒன்றரை மணி நேரம் வாக்கிங் செல்வதோடு நிறுத்தாமல் மாலையும் ஒரு மணி நேரம் வாக்கிங் செல்பவர்.  பார்க்க ஜேம்ஸ்பாண்ட் மாதிரி இருப்பார்.  உடம்பில் ஒரு துளி அநாவசிய சதை இருக்காது.  அதைத்தான் ஷுகர் ஷுகர் என்று அங்கலாய்க்கிறது சமூகம். 

இங்கே எனக்கு ஆலோசனை தருபவர்கள் அத்தனை பேரும் இப்படித்தான் இருக்கிறார்கள்.  தியானம் செய்வதில்லை, நடைப் பயிற்சி செய்வதில்லை.  ஆனால் பிறத்தியாருக்கு அறிவுரை.  காரணம், அதீதமான அன்பும் அக்கறையும்.  இது ஒரு தேசிய வியாதியாகவே இந்தியாவில் பரவி விட்டது.  என்ன, உடம்பு இளைத்துப் போயிருக்கிறது என்றோ, என்ன உடம்பு குண்டாகி விட்டது என்றோ கேட்பதை அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் body shaming என்றே பார்க்கிறார்கள்.  சும்மா போகிறவரைக் கூப்பிட்டு செவுளில் அறைவது மாதிரி.  அல்லது, இங்கே ஜாதி ரீதியாக அவமானப்படுத்துவதைப் போன்றது.  சிறைத் தண்டனைக்குரிய குற்றம். 

நான் எந்தக் காலத்திலும் மறக்க முடியாத ஒரு சம்பவம் இது.  கார்லோஸ் கார்லோஸ் என்று நான் அன்புடன் அழைக்கும் நண்பர் ஒருவர்.  நாகர்கோவில்காரர்.  நாகர்கோவில்காரர்கள் என்றாலே எனக்கு அதீதமான பயமும் அலர்ஜியும் உண்டு.  (சில விதிவிலக்குகள் உண்டு.  அன்னபூர்ணி, வாஸ்தோ, சுதாகர் கமிலோஸ்…) அந்த பயத்தை அதிகப்படுத்துவதைப் போல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கார்லோஸ் என்னை ஒரு கேள்வி கேட்டார்.  1985இல் அவரை பெங்களூரில் சந்தித்தது.  30 ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் பார்க்கிறேன்.  ஒரு இலக்கிய விழா.   எடுத்த எடுப்பில் என்ன கேள்வி கேட்டார் தெரியுமா?  “என்ன சாரு, இப்டி வயசாயிடுச்சு ஒங்களுக்கு?  இப்டி தளந்து போய்ட்டீங்க?”

எப்பேர்ப்பட்ட ஒரு எதிர்மறையான ஆள் பாருங்கள்.  முப்பது ஆண்டுகள் சென்று சந்திக்கும் ஒரு நண்பனிடம் கேட்கும் கேள்வி!  அதிலும் உடம்பைப் பேணுவதை ஒரு மதமாகக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து!

கேட்டதும் பொளேர் என்று செவுளிலேயே ஒரு இழுப்பு இழுக்கலாமா என்ற அளவுக்குக் கோபம் வந்து விட்டது எனக்கு.  ஆனால் ஒரு காலத்தில் என் குருவாக இருந்தவர்.  என்னை விட பத்து வயது மூத்தவர்.  ஆம், தமிழவனின் இயற்பெயர்தான் கார்லோஸ்.   அவருடைய மடத்தனமான கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்?  தாய்லாந்து வேசியைப் போல் ஹீ ஹீ என்று ஒரு இளி இளித்து வைத்தேன்.  இம்மாதிரி ஆட்களெல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை.  இவர் இப்படிக் கேட்டதற்குப் பிறகுதான் ஒரு 25 வயதுப் பெண்ணுடன் பப்புக்குச் சென்று நடனமாடியதெல்லாம் நடந்தது.  பிரச்சினை என்னவென்றால், இதையெல்லாம் இங்கே ஒழுக்கத்தோடு சம்பந்தப்படுத்தி என்னை ஸ்த்ரீலோலன் என்று நிறுவுவதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.  நடிகர்களுக்குக் கிடைக்கும் லைசன்ஸ் எழுத்தாளர்களுக்குக் கிடைப்பதில்லை.  ஒரு தோழியோடு பப்புக்குப் போய் நடனமாடினால் என்ன என்று கேட்டால் பதில் இல்லை.  இந்த வயதான கோஷ்டியோ வயசாச்சு வயசாச்சு என்று சொல்லியே மாரடிக்கிறார்கள்.  இப்படிச் சொல்லும் ஆட்களை டென் டௌனிங் பப்புக்கு உள்ளேயே விட மாட்டார்கள் என்பது இவர்களுக்குத் தெரியுமா?  இளைய சமூகத்தினரோடு இவர்களுக்கு எந்த விதத்திலாவது தொடர்பு உண்டா?  இளைய சமூகம் என்ன நினைக்கிறது என்று ஒரு சதவிகிதமாவது இவர்களுக்குத் தெரியுமா?  இதெல்லாம் தெரியாமல் என்னிடம் வந்து வயசாச்சு வயசாச்சு என்று சொல்வது எத்தகைய மதியீனம்?

நேற்று பாஸ்டனில் வசிக்கும் வளன் அரசு பேசினான்.  சமீபத்தில் ஒரு அமெரிக்கத் தம்பதியைப் பார்த்திருக்கிறான்.  கணவர் வயது 85.  மனைவி 80.  இன்னமும் இருவரும் உலகப் பயணம் போய்க் கொண்டும் வைன் அருந்திக் கொண்டும் வாழ்க்கையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.  யாரும் அவர்களிடம் போய் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதில்லை.  எனக்குத் தெரிந்து இந்திரா பார்த்தசாரதி 85 வயதிலும் இங்கே வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.  சமூகத்துக்குப் பயந்தே வாக்கிங்கை நிறுத்தி விட்டதாகச் சொன்னார்.  உடம்பைப் பார்த்துக்கோங்க என்று சொல்லி சொல்லியே மனதை சிதைத்து விடுகிறார்கள் என்றார்.  இப்டித் தளர்ந்துட்டீங்களே.  இப்டித் தளர்ந்துட்டீங்களே.  இப்டித் தளர்ந்துட்டீங்களே.  பார்க்கிறவனெல்லாம் இதே கேள்வி.  அவர் கையில் கோல் வைத்திருப்பதால்.  கேட்பவனுக்கெல்லாம் நாற்பது வயது.  ஏதோ எழுத வருகிறது.  வேண்டாம். 

வளனின் அனுபவத்தை எழுதச் சொல்லியிருக்கிறேன். 

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai