புலம்பெயர்ந்து வாழ்வதில் இருக்கும் மிகப்பெரிய நன்மை நம் சொந்த தேசத்தைக் குறித்து நன்றாகத் தெரிந்து கொள்ள முடியும் என்பதுதான். அந்த வகையில் நம் சமூகம் எவ்வளவு கீழ்மையாக இருக்கிறது என்பதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். இதை வெளியே சொன்னால் நம்மை ஏதோ தீவிரவாதியைப் போல நடத்துகிறார்கள். அன்பின் பெயரால் நடக்கும் வன்முறையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உண்மையான அன்பு என்பது என்ன தெரியுமா? சாம்பார் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சாப்பிடும் ஆர்வத்தில் உங்கள் சட்டையில் மஞ்சள் கறை படிந்துவிடுகிறது. உங்கள் சட்டையில் ஏதோ இருக்கிறது என்பது யாராவது ஒருவர் சுட்டிக் காட்டினால் என்ன செய்வீர்கள்? நீ எப்படி அதைச் சொல்லலாம் என கோபித்துக் கொள்வீர்களா? அப்படிக் கோபித்துக்கொண்டால் யாருக்கு நஷ்டம்? இந்தச் சுட்டிக் காட்டும் பணியைத்தான் இங்கு சாரு நிவேதிதா தொடர்ந்து செய்து வருகிறார். சுரணையற்ற சமூகம் சேற்றை வாரி அவர்மீது அடிக்கிறது.
கொஞ்ச நாளுக்கு முன்னால் இந்த Body Shaming செய்வதைப் பற்றி கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். மேலோட்டமாகப் பார்த்தால் அன்பாக சொன்ன விஷயமாகத் தெரியும் இந்த ‘உடம்பைப் பார்த்துக்கொள்’ வாக்கியம் சுரணை இருப்பவர்களுக்கு மிகப் பெரும் மனசங்கடங்களைத் தரக்கூடியது. முன்பின் தெரியாத ஒருவரின் அந்தரங்க வெளியில் பிரவேசிக்கும் உரிமையை யார் உங்களுக்குக் கொடுத்தது? இந்த அடிப்படை சுரணையுணர்வின்றி ஒரு சமூகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. உடல் சார்ந்து மட்டுமல்ல, கலாசாரம் என்கிற பெயரில் இப்படி Personal Spaceல் சர்வ சாதரணமாக உலவுகிறார்கள். அடுத்த பெரும் கொடுமை, உபசரிப்பு. எனக்கு விருப்பமான உணவை நீங்கள் எனக்கு வழங்கலாம். தவறில்லை. ஆனால் அதை நான் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று நீங்கள் முடிவெடுக்க முடியாது. ‘இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்’ என்று என் தட்டில் நீங்கள் அடுக்கிக் கொண்டு போகக் கூடாது. காஃபியை நீங்கள் எந்த சூட்டில் குடிக்க வேண்டும் என்று சொல்லக் கூடாது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழ்நாட்டை விட்டு வெளியில் வந்த பிறகு இதைப் பற்றியெல்லாம் விரிவாக சிந்திக்க முடிகிறது. ஏனெனில் இங்கே என் அந்தரங்க வெளிக்குள் யாரும் பிரவேசிப்பதில்லை. விடுமுறைக்காக இந்தியா வந்திருந்த சமயம் நான் அதிகம் கேட்ட வார்த்தைகள்: ‘என்ன, இப்படி ஊதிப் போய்ட்ட!’, ‘என்ன முடியெல்லாம் நரைக்க ஆரம்ச்சிடுச்சு!’, ‘பேலியோ டயட் இரு, உடம்பு குறையும்!’. பைத்தியம் பிடித்துவிடுவது போன்றிருந்தது. ஆனால் இங்கே அப்படியல்ல. ‘You are so handsome!’, ‘உன்னுடைய உடைத் தேர்வுகள் அபாரமாக இருக்கிறது!’, ‘உன் சிரிப்பு அற்புதமாக இருக்கிறது!’, ‘உன் தலைமுடி அழகாக இருக்கிறது!’. இவற்றுடன் ‘ஹனி’, ‘டார்லிங்’ போன்ற விளிச் சொற்களைச் சேர்த்துக்கொள்ளவும். எவ்வளவு வேற்றுமை என்று கவனித்தீர்களா? வாழ்நாளெல்லாம் இங்கே ஒரு அகதியாகக் கூட வாழ்ந்துவிடலாம்.
ஏன் இந்த வேற்றுமை என்று உற்றுநோக்கினால், பேசுவதற்கான விஷயங்கள் நம் நாட்டில் மிகக் குறைவாக இருக்கிறது. ஒன்று சினிமா; அதை விட்டால் அரசியல். இசையைக் குறித்து பேசலாம் என்றால் இளையராஜா அல்லது ரஹ்மான். சினிமாவைக் தாண்டி இசை பேசினால் சாஸ்திரீய சங்கீதம் பேசுபவர்களைக் குறிப்பிட்ட பிரிவுக்குள் அடக்கப்பார்ப்பது. எழுதுவதற்கே மன உளைச்சல் தரக் கூடியதாக இருக்கிறது. ஆனால் இங்கே இருவர் மூவர் கூடும் போது அரசியலும் மதமும் பேசக் கூடாதென்ற எழுதப்படாத விதியிருக்கிறது. சமீபத்தில் அமெரிக்கா எங்கும் சுற்றி வரும் தம்பதியர்களைச் சந்தித்தேன். இருவருக்கும் 80க்கு மேல் வயதாகிறது. பார்த்தால் 60 வயதுக்காரர்களைப் போலிருந்தார்கள். அருமையான கலிபோர்னிய ஒயின் அருந்திக்கொண்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். இருவரும் மிசிசிப்பியிலிருந்து வந்திருக்கிறார்கள். எனக்கு மிசிசிப்பி என்றதும் எல்விஸ் ப்ரஸ்லி நினைவுக்கு வந்தார். அவரது வீடு அன்றும் இன்றும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம். ‘Grace Land’ என்று பெயர். அதைக் குறித்துச் சொன்னதும் அவர்கள் எல்விஸ் உயிருடன் இருந்த போது ‘க்ரேஸ் லாண்ட்’ சென்று வந்தக் கதையைச் சொன்னார்கள். இடையில் ‘blue suede shoes’ பாடல் போட்டு நடனம் ஆடினோம். ஆம், 80 வயது தம்பதியர்கள் நடனமாடினார்கள். முதுமையின் ஒரு சுவடும் நாங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த வீட்டில் இல்லவேயில்லை. அமெரிக்காவின் 50 மாகாணங்களையும் தங்கள் Recreational Vehicle ல் பயணித்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. நீங்கள் பார்த்ததில் அழகன இடமென்று எதைச் சொல்வீர்கள் என்று கேட்டேன். தாமதிக்காமல் அலாஸ்கா என்றார்கள். ஒரு வருடம் கோடை முழுவதையும் அலாஸ்காவில் செலவழித்திருக்கிறார்கள். அலாஸ்காவின் அழகு மொத்ததையும் என் கண்முன்னே விரியச் செய்துவிட்டார்கள். தூரத்து மலைகளில் இன்னும் பனி உருகாமல் வெள்ளையாக இருக்க அதன் அடிவாரம் முழுவதும் வண்ண மயமான பூக்கள் பூத்திருந்ததாக சொன்னார்கள். உறைந்திருந்த ஏரியில் வாகனத்தில் பயணித்ததையும், சிறிய விமானத்தில் பறந்து பனிக்கரடிகள் தம் குட்டிகளுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்ததையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அடுத்ததாக யூட்டாவின் பனிக்கால அழகைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். வயோமிங் தேசியப் பூங்காக்களின் அழகை வருணித்துக்கொண்டிருந்தார்கள். விடைபெறும் போது நானும் இப்படி அமெரிக்கா முழுவதும் சுற்றிவர வேண்டும் என்று ஆசீர்வதிக்கும்படி கேட்டு ஆசீர்பெற்றுக்கொண்டேன். இப்படி நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வாழ்வை ரசித்து வாழ்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் புத்திஜீவியாக இருக்கும் ஒருவர் நாற்பது வயதுக்கு மேல் வாழ்தல் கொடுமை என்கிறார். இன்னொருவர் வாழ்க்கையைக் கொண்டாடுபவரைப் பார்த்து ‘ஆள் கொஞ்சம் களைப்பாகத் தெரிகிறீர்களே!’ ’வயதாகி விட்டது, உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்கிறார். நோய்மையை குணப்படுத்துவதற்கு முதலில் நாம் நோயின் தன்மையை அறிந்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த சமூகமும் நோய்மை அடைந்திருப்பதற்கான கூறுகள் இந்த உளவியல் சித்ரவதைகள். நான் சந்தித்த மனிதர்களையும் என் வாழ்க்கை முறையையும் வைத்து கொண்டாட்டம் என்பதை ஆடம்பரம் என்று கருத வேண்டாம். கிடைத்திருப்பது ஒரேயொரு வாழ்க்கை; அதனால் வாழ்தலையே கொண்டாட்டமாக மாற்ற முடியும். அந்த ரசவாதத்தை நான் சாருவிடமிருந்துக் கற்றுக்கொண்டேன். வாழ்க்கை மிக அழகாக இருக்கிறது…
வளன் அரசு