கொண்டாட்டம்

என் அன்றாடச் செலவு மிகவும் கம்மி.  எப்போதும் கணினியில் தட்டச்சு செய்து கொண்டும், படித்துக் கொண்டும் இருக்கும் ஒருவனுக்கு என்ன செலவு இருக்க முடியும்?  ஆனாலும் அன்றாடச் செலவுக்குக் கொஞ்சம் காசு தேவை தானே?  மாதாமாதம் அனுப்பும் நண்பர் சென்ற மாதம் அனுப்பவில்லை.  நிலைமை மோசமாகி விட்டது.  பல ஊடக நண்பர்கள், “நீங்கள் பணம் கேட்டு எழுதுகிறீர்களே, பணம் அனுப்புகிறார்களா?” என்று கேட்கிறார்கள்.  அனுப்புகிறார்கள்.  மாதம் 200 ரூ அனுப்பும் ஒரு நண்பர்.  மாதம் 500 ரூ அனுப்பும் ஒரு நண்பர்.  இவர்களெல்லாம் என் தெய்வங்கள்.  எப்போதாவது – ஆறு மாதத்துக்கு ஒருமுறை –  ஒருசில ஆயிரங்களில் அனுப்பும் ஓரிருவர். இதுதான் என் செலவுக்கான வருமானம்.  என்னால் ஒரு பைசா செலவு இல்லாமல் துறவியைப் போல் வாழ்ந்து விட முடியும்.  ஒரு நண்பர் வேட்டி சட்டை எடுத்துக் கொடுத்து விடுகிறார்.  ஒரு தோழி மொபைலுக்கு டாப் அப் செய்து விடுகிறார்.  இப்படி என்னைக் கவனித்துக் கொள்ள நண்பர்கள் உண்டு.  ஆனால் இரண்டு நாய்கள் என் குழந்தைகள் போல் உள்ளனவே?  இது கூட நானாக வேண்டி எடுத்துக் கொண்ட பொறுப்பு அல்ல.  என் குடும்பத்தினரால் எனக்குக் கொடுக்கப்பட்டது. 

நான் வாசகர்களிடன் காசு கேட்பது பற்றி பிரபஞ்சன் விகடனில் நையாண்டி செய்திருந்தார்.  என் பெயரைக் குறிப்பிடவில்லை.  குறிப்பிடா விட்டாலும் வாசகர்களிடம் காசு கேட்கும் ஒரே எழுத்தாளன் நான் தானே?  இப்படித்தான் நான் இந்த சமூகத்தை எதிர்கொள்ள விரும்புகிறேன்.  எழுத்தாளனை அவமானப்படுத்தும் இந்த சமூகத்தை இப்படித்தான் நான் அவமானப்படுத்த விரும்புகிறேன்.  என் சிறுவயதில் நடந்த சம்பவம் இது.  ஒரு தனவந்தர் வீடு.  தம்பதியருக்கு ஒரே பிள்ளை.  அம்மாவுக்குப் பிள்ளை மீது கொள்ளைப் பாசம்.  கணவரிடம் சொல்லி எல்லா சொத்தையும் பிள்ளையின் பெயரில் எழுதிக் கொடுக்க வைத்தார் தாய்.  தனவந்தரும் எந்தப் பேச்சும் இல்லாமல் எழுதிக் கொடுத்தார்.  இது நடந்து கொஞ்ச நாளில் அந்த அம்மாள் இறந்து விட்டார்.  மகனுக்குத் திருமணம் முடிந்ததும் மருமகளும் மகனும் சேர்ந்து அந்த முதியவரை வீட்டை விட்டுத் துரத்தி விட்டனர்.  அந்த முதியவர் என்ன செய்தார் தெரியுமா?  தெருத் தெருவாக, வீடு வீடாகப் பிச்சை எடுத்தார்.  மகன் வீட்டுப் பக்கம் மட்டும் போக மாட்டார்.  எங்கள் வீட்டில் எப்படியும் ஒருவேளை சோறு போட்டு விடுவோம்.  இதனால் எழுந்த ஊரின் பழிச் சொல் பற்றி அந்தப் பிள்ளையும் மருமகளும் கண்டு கொள்ளவே இல்லை.  ”எங்களை அவமானப்படுத்துவதற்காக கிழவனே இப்படிச் செய்கிறான்” என்றார்கள் இருவரும்.  அந்தக் கிழவரின் நிலைதான் என்னுடையதும். 

அந்தத் தாத்தாவுடன் என் வீட்டுத் திண்ணையில் பல நாட்கள் பேசியிருக்கிறேன்.  நாங்களே அப்போது கொடும் வறுமையில் இருந்ததால் அவருக்கு ஒருவேளை உணவுதான் கொடுக்க முடிந்தது.  இல்லாவிட்டால் அவரை நாங்களே பராமரித்திருப்போம்.  இரவில் அவர் இடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்த ரங்கையன் மடத்தில் படுத்துக் கொள்வார்.  அவர் செல்வாக்காக இருந்த போதும் நான் பார்த்திருக்கிறேன்.  அவர் வீடு வீடாகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது நான் பள்ளி இறுதி ஆண்டில் இருந்தேன்.  அதனால் விவரம் புரியும் வயது.  ஒருநாள் அவரிடம் ஏன் தாத்தா இப்படி என்றேன் ஆதூரத்துடன்.  ”கண்மூடித்தனமாக பெண்டாட்டி பேச்சைக் கேட்டால் இப்படித்தான்.  ஐம்பது வேலி நிலத்தை அந்தப் பயலுக்கு எழுதிக் கொடுத்த நான் எனக்காக ஒரே ஒரு ஓலைக் குடிசையையும் நாலு தென்னையையும் வைத்துக் கொண்டிருந்தால் இப்படி ஆகுமா?” என்று கேட்டார். 

அதை விடுங்கள்.  கதைக்கு வருவோம்.  செல்வாக்காக வாழ்ந்த அவர் அதே ஊரில் பிச்சை எடுத்தார் அல்லவா?  அது அவர் தன் மகனுக்குக் கொடுத்த பதிலடி.  ஊரே அவர் மகனையும் மருமகளையும் காறித் துப்பியது. 

அந்தக் கிழவர் எப்படிப் பிச்சை எடுத்தாரோ அதேபோல் தான் நானும் பிச்சை எடுக்கிறேன்.  ங்கோத்தா என்ன சமூகமடா இது? மாங்கு மாங்கென்று நாள் பூராவும் எழுதுகிறேன். மணிக் கணக்கில், நாள் கணக்கில் உழைத்து தொலைக்காட்சியில் சர்வதேச சினிமா பற்றிப் பேசுகிறேன்.  ஒரு தம்பிடி வர மாட்டேன் என்கிறது.  பத்திரிகைகளில் தரும் பணம் பற்பசை வாங்கத்தான் தேறும்.  சமீபத்தில் ஒரு இயக்குனரின் பேட்டியை பத்திரிகையில் படித்தேன்.  மூன்று படம் எடுத்தவர் அவர்.  முதல் படம் மசாலா படம், செம ஓட்டம்.  அடுத்த படம் திருட்டுப் படம்.  ஓடவில்லை.  இன்னொரு படம் பாசாங்குப் படம்.  Fake படம்.  அதுவும் ஓடவில்லை. இப்போது நான்காவது படம் எடுக்க ஒரு வரி யோசித்தார். உடனே ஸ்பான்ஸர்கள் போட்டி போட்டுக் கொண்டு கோடிகளைக் கொட்ட அமெரிக்கா போய் விட்டார் இயக்குனர்.  ஏன் தெரியுமா?  பனி கொட்டுவதை அவர் அருகே இருந்து பார்த்து உணர்ந்தால்தான் அந்தப் பாத்திரம் உருவாகுமாம்?  அது ஒரு ஸைக்கோ த்ரில்லர்.  அதற்காக நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸைக்காலஜி பேராசிரியர்கள் இரண்டு பேர் அந்த இயக்குனருக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள்.  20 லட்சம் பேர் படிக்கும் பத்திரிகையில் ஆறு பக்கத்துக்குப் பேட்டி வந்துள்ளது.  இவ்வளவுக்கும் அந்த இயக்குனரை யாருமே தொடர்பு கொள்ள முடியாது.  ஏண்டா என் உயிரை வாங்குறீங்க என்று ஊடக நண்பர்களைப் பார்த்துக் கத்துவார்.  எந்தத் தொலைபேசி அழைப்பையும் எடுக்க மாட்டார்.  அவரை யாராலுமே அணுக முடியாது.  An unimaginable recluse.

ஆனால் எழுத்தாளனின் நிலைமை என்ன தெரியுமா?  அந்தக் காலத்தில் – இல்லை, இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது – கழைக் கூத்தாடிகள் இரண்டு பக்கமும் கம்பு நட்டு, நடுவில் கயிறு கட்டி, அந்தக் கயிற்றில் ஆறு வயதுப் பெண் குழந்தையை அதன் தலையில் மூன்று சொம்பையும், காலில் ஒரு வளையத்தையும் வைத்து நடக்க வைப்பார்கள்.  பார்த்திருக்கிறீர்கள்தானே?  அதேபோல் எழுத்தாளர்களை ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு பள்ளிக்கூடமாக அழைத்துச் சென்று பேச வைக்கிறார்கள்.  நெஞ்சு கொதிக்கிறது.  மனம் பதறுகிறது.  இதுவா எழுத்தாளனின் வேலை?  இப்படியா ஒரு பத்திரிகை எழுத்தாளனை நடத்துவது?  ஓநாய்க் குலச் சின்னம் நாவல் ஒரு கோடி பிரதி விற்றுள்ளது.  அந்த எழுத்தாளன் பில் கேட்ஸைப் போல் கோடீஸ்வரனாகி அடுத்த நாவலுக்கான ஆராய்ச்சியில் மூழ்கி விட்டான்.  முதல் நாவலே பத்து ஆண்டுகள் எழுதப்பட்டது. அடுத்த நாவல் எப்போது என்று கேட்டால் பத்தாண்டுகள் ஆகும் என்கிறான்.  இன்னும் பத்தாண்டுகளுக்கு அவனிடம் ஒரு பேட்டி கூட எடுக்க முடியாது.  He is the real recluse.  பத்தாண்டுகள் சென்று அவனுடைய அடுத்த நாவல் வரும்.  மூன்று கோடி விற்கும்.

தன்னுடைய அடுத்த படத்துக்கான முதல் வரியை யோசித்ததுமே நியூயார்க்கில் போய் அமர்ந்து கொண்டிருக்கிறாரே அந்த இயக்குனரைக் கொண்டாடுவது போல் தமிழ்ச் சமூகத்தில் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும் என்கிறேன்.  கொண்டாட்டம் என்றால் இதுதான்.  என்னைப் போல் இப்படி அஞ்சுக்கும் பத்துக்கும் இணையதளத்தில் எழுதி கையேந்துவது அல்ல.

இதற்கு இடையில் இன்னொரு விபரீதமும் நடக்கிறது. சென்ற மாதம் மதுரைக்குச் சென்றிருந்தேன்.  ராணி மங்கம்மாள் சத்திரத்தில் தங்கினேன். பெயரில்தான் சத்திரமே தவிர கொஞ்சம் செலவு அதிகமாக விடுதி அது.  பூர்ண சந்திரனும் டிமிட்ரியும்தான் செலவு எல்லாம். அப்போது என்னைப் பார்க்க, சந்தித்துப் பேச சில நண்பர்கள் ஆர்வப்பட்டு டிமிட்ரியிடம் பேசியிருக்கின்றனர்.  ஏற்கனவே வாசகர் வட்ட நண்பர்களால் நிரம்பியிருக்கிறது அறை.  இந்த நிலையில் புதிய நண்பர்களுக்கு அங்கே இடம் இல்லை.  அதனால் மறுத்திருக்கிறார் டிமிட்ரி.  உடனே அவர்களை நியோநாஜிகள் என்று நாலு பக்கத்தில் திட்டி முகநூலில் ஒரு பதிவு போட்டார் என்னைச் சந்திக்க விரும்பிய நண்பர்.  பிறகு எப்படியோ என் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டதும் நான் ஆஹா வாருங்கள் என்று சொல்லி விட்டேன். 

ஒரு இடைச்செருகல்.  கோணல் பக்கங்கள் மூன்றாம் தொகுதியை எப்படி நான் பதிப்பித்தேன் என்று நூறு முறை எழுதியிருக்கிறேன்.  ஞாபகம் உள்ளதா?  வாழ்நாள் பூராவும் எனக்கு பதிப்பகம் இல்லை.  நாயை விரட்டுவது போல் என்னை விரட்டுவார்கள்.  நண்பர்களாகவே இருந்தும் என்னிடம் காசு வாங்கிக் கொண்டுதான் அச்சடித்துக் கொடுப்பார்கள்.  வித்தியாசம் புரிகிறதா?  ஒரு பதிப்பகத்தில் உத்தமத் தமிழ் எழுத்தாளனின் புத்தகம் வரிசையாக பதிப்பிக்கப்படும்.  ஆனால் அதே நண்பர் என் புத்தகத்தை என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு அச்சடித்து மட்டுமே கொடுப்பார்.  நானே தான் விற்பேன்.  அதாவது, நண்பர்களிடம் ஓசியில் கொடுப்பேன்.  ஆனால் கோணல் பக்கங்கள் மூன்றாம் தொகுதி மட்டும் வாசகர்களின் பணத்தின் மூலம் பிரசுரம் ஆனது.  இன்னும் 300 பிரதிகள் பரணில் கிடக்கிறது.  அதில் ஒரு 20 பிரதிகளைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு – மதுரையில் போர்ட்டர் வைத்தேன், செம கனம் – மதுரை போனேன்.  400 பக்க நூல் செம மலிவு விலையில் 200 ரூ.  ஏழு ஆண்டுகளுக்கு முன் பதிப்பித்ததால் 200 ரூ. இன்றைய விலை 400 அல்லது 350 வைக்கலாம்.  மதுரை நண்பர்கள் அனைவரும் 200 கொடுத்து வாங்கிக் கொண்டனர்.  அவர்களிடம் நான் காசே வாங்கி இருக்கக் கூடாது.  என் மதுரை செலவு அவ்வளவையும் அவர்கள்தானே கவனிக்கிறார்கள்?  பணம் வேண்டாம் என்றேன்.  அவர்கள் கேட்கவில்லை. இந்த நிலையில் கோவையிலிருந்து விஷ்வாவும், மதுரையிலிருந்து அருணாச்சலமும் – இருவரும் சகோதரர்கள் – வந்து என்னை சந்தித்தனர்.  அவர்களை நான் முதன்முதலாகப் பார்க்கிறேன்.  ஒரு பெரிய சந்தன மாலையை அணிவித்தனர்.  அறையே மணந்தது.  சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பும் போது இரண்டு பிரதிகளை எடுத்துக் கொண்டு 3000 ரூபாயைக் கொடுத்தனர். 

இதன் பெயர் தான் ஐயா கொண்டாட்டம்!  ஏனென்றால், அங்கே நாங்கள் அறை வாடகை கட்ட வேண்டும்.  சாப்பிட வேண்டும்.  சென்னையிலிருந்து மதுரைக்கு ரயில் செலவு.  பணம் வேண்டுமே?  அதில் அவர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  இவ்வளவுக்கும் அவர்கள் சாருவைக் கொண்டாடுகிறோம் அது இது என்று எந்த பந்தாவும் பண்ணவில்லை. ஆனால் என் மீது வெறி கொண்ட நண்பர்கள் – gatecrash செய்து வந்த நண்பர்கள் – என்னுடைய இரவு உணவுக்கான வெள்ளரிக்காயோ, ஆப்பிளோ, எலுமிச்சையோ கூட எடுத்து வரவில்லை.  இரவில் நான் காய்கறி ஸலாத் அல்லது பழம் தான் உண்பேன்.  சரி, போகட்டும்.  வந்தவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?  ”அழகிரி அடுத்து என்ன செய்வார் தல?” என்று என்னிடம் கேட்டனர்.  ஏன் கேட்கிறோம் தெரியுமா தல?  நீங்கள் தான் சென்ற சட்டசபை தேர்தலில் மிகச் சரியாக தேர்தல் கணிப்பு செய்தீர்கள்.  உங்கள் எழுத்தை ஒரு வார்த்தை விடாமல் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறோம்.  அதனால்தான் கேட்கிறோம்.  அழகிரி அடுத்து என்ன செய்வார்?

தனியாக இருந்தால் மின்விசிறியில் வேட்டியைப் போட்டுத் தற்கொலை செய்து கொள்ளலாம்.  இவ்வளவு பேர் இருக்கிறார்களே? என் செய்வேன்?  என்று இறைவனிடம் கெஞ்சினேன்.

சரி.  அடுத்தது. கோணல் பக்கங்கள் நான்கு பிரதிகளை எடுத்துக் கொண்டார்கள்.  அவர்கள் அதற்குப் பணம் தர மாட்டார்கள் என்று யூகித்தோ என்னவோ டிமிட்ரி, யாரிடமோ சொல்வது போல் “டேய் மருது,  நீ ரெண்டு புக் எடுத்தீல்ல, நானூறு குடுத்துரு” என்று சத்தமாகக் கத்தினார்.  வந்த கொண்டாட்டக்காரர்கள் என்னிடம் நான்கு பிரதிகளுக்கு 500 ரூ கொடுத்ததை டிமிட்ரி பார்த்தார்.  கொலை வெறி ஆகி விட்டார் என்பது அவர் கண்களில் தெரிந்தது.  ரொம்பப் பணிவாக நாலு புக்கு எண்ணூறு ரூவாங்க என்றார்.  உடனே வந்த கொண்டாட்டக்காரரின் தலைவர் இன்னும் ஒரு 200 ரூபாயை என்னிடம் கொடுத்தார். 

ஏங்க, என் புத்தகத்தை வாங்கிக் கொண்டு எனக்குப் பிச்சையா போடுகிறீர்கள்?  இதுதான் நீங்கள் அறிந்த கொண்டாட்டமா? இந்த ஓல்மாரி வேலையை ஒரு ஓட்டலில் போய் செய்வீர்களா?  எதற்காக நாலு பிரதிகளை வாங்கி கொண்டு 500-ஐக் கொடுத்தீர்கள்?  நான் உங்களை வாங்கிக் கொள்ள சொன்னேனா?  ஒரு குருட்டுப் பிச்சைக்காரனைத் திருடுவதுதான் நீங்கள் அறிந்த கொண்டாட்டமா? 

இதற்கிடையில் இன்னொரு அக்கிரமமும் நடந்தது.  அது ஒரு பத்து வயதுக் குழந்தையை வன்கலவி செய்தது போன்றது. 

என் நண்பன் என்னைக் கேட்டான்.  ஏன் உன் முகம் டல்லாக இருக்கிறது என்று. 

என் வசந்தம் என்னைப் பிரிந்து விட்டது என்றேன்.

ஓ அதான் சம்மர் வெய்யிலில் வாடிய தாமரை போல் இருக்கின்றாயா என்றான். 

இதேபோல் 200 பக்கங்கள் எழுதப்பட்ட இரண்டு கவிதைத் தொகுதிகளை என்னிடம் கொடுத்து 30 புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.  (நிச்சயம் நான் போன ஜென்மத்தில் பத்து பேரையாவது சித்ரவதை செய்து கொலை செய்திருப்பேன்.  அந்தப் பாவம்தான் தமிழ் எழுத்தாளனாகப் பிறந்து இந்த அக்கிரமத்தையெல்லாம் சகித்துக் கொள்ள வைக்கிறது!)

இதுவா கொண்டாட்டம்?

எழுத்தாளனைக் கொண்டாடுவது என்றால் என்னவென்று ஒரு எளிய உதாரணம் சொல்கிறேன்.  அவன் பெயர் வளன் அரசு.  நான் பிறந்து வளர்ந்த மாவட்டத்தில் ஒரு ஊரில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியாருக்குப் படிக்கிறான்.  வாழ்நாள் பூராவும் பிரம்மச்சரியம் காக்க வேண்டிய பணி அது.  தயாராக இருக்கிறான்.  என் எழுத்தைத் தன் சுவாசமாகக் கொண்டிருக்கிறான்.  ஒருநாள் போன் செய்து ஒரு பிரச்சினை சாரு என்றான்.  சாரு என்றே அழைப்பான்.  வயது 20.  என்ன பிரச்சினை என்றேன்.  நான் நேற்று முழுவதும் சாப்பிடவில்லை.  கோபம்.  வருத்தம்.  துக்கம். ஏன் என்றேன்.  எங்கள் காலை உணவின் போது பிஸ்மில்லா கானின் ஷெனாயைப் போட்டேன்.  என் சக மாணவர்கள் அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை அணைத்து விட்டு விஜய் படப் பாட்டைப் போட்டார்கள்.  நான் சாப்பிடாமல் எழுந்து வந்து விட்டேன்.  அன்று முழுதும் சாப்பிடவில்லை.  சாப்பிடாதது பிரச்சினை இல்லை.  ஆனால் நான் துக்கமாக இருக்கிறேன்.  ஏன் இந்த வாழ்க்கை இவ்வளவு மலினமாக இருக்கிறது?  என்னால் தாங்க முடியவில்லை சாரு. 

என் கண்கள் கலங்கின.  வளன்… நீங்கள் (அப்போதெல்லாம் நான் அவனை மரியாதையோடு வாங்க போங்க என்றுதான் அழைத்தேன்) செய்வது அராஜகம்.  அநியாயம்.  உங்கள் சக மாணவர்களையும் ஏன் நீங்கள் உங்கள் தரத்திலேயே எதிர்பார்க்கிறீர்கள்?  இது அநியாயம் இல்லையா?  அவர்கள் சாருவைப் படித்தது இல்லையே?  மேலும், அவர்களுக்கான ரசனையைக் குறை சொல்ல நீங்கள் யார்? நீங்கள் அவர்களை விட உசத்தியோ?  பெரிய புடுங்கியோ?  அவர்களுக்கு அவர்களின் உலகம்.  உங்களுக்கு உங்கள் உலகம்.  அவர்களாவது படிக்காதவர்கள்.  நீங்கள் படித்தவர்.  படித்த பிறகு ஜனநாயகபூர்வமாக நீங்கள் சிந்திக்கவில்லையே?  நான் கடவுள் ஆர்யா போல் நீங்கள் பேசலாமா?  எளியவனையும் மூடனையும் முட்டாளையும் அவர்களது உலகில் வாழ அனுமதியுங்கள் வளன்.  அவர்களுக்கான இடத்தை வழங்குங்கள் என்றேன்.

அழுது விட்டார்.

பிறகு ஒரு வாரம் சென்று இங்கே உள்ள திருச்சபைக்கு வந்த போது என்னை என் வீட்டில் சந்தித்தார்.  (கவனம்.  நான் யாரையுமே என் வீட்டில் சந்திப்பதில்லை).  நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  Cranberry tea போட்டுக் கொடுத்தேன்.  உலகின் மிகச் சிறந்த தேநீர் இது.  கணேஷ் அன்புவும் வேறு ஒன்றிரண்டு நண்பர்கள் மட்டுமே என் கையால் அருந்தியிருக்கின்றனர்.  அராத்துவுக்குக் கூடத் தெரியாது.  விவிலியத்தில் எனக்குள்ள சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  வளன் எனக்கு ஆசிரியனான தருணங்கள் அவை.  (யூதாஸ் பற்றி ஒரு குறுநாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்)

கடைசியில் வளன் என் கையில் 200 ரூபாய் கொடுத்தான்.  ஓலைக் குடிசையில் வாழும் பெற்றோரைக் கொண்ட 20 வயது மாணவன் வளன்.

வளன், தவறாக எண்ணாதீர்கள்.  நான் மாணவர்களிடமிருந்து பணம் வாங்குவதில்லை என்றேன்.

இல்லை சாரு.  உங்களுக்காக நான் ஐந்தும் பத்துமாகச் சேர்த்தது இது.  வாங்கிக் கொள்ளுங்கள்.

ஒரு சொல் பேசாமல் வாங்கிக் கொண்டேன்.  (கூட இருந்த அவந்திகா என்னைத் திட்டினாள்.  ஆன்மீகத்தில் நீ செல்ல வேண்டிய தூரம் நிரம்ப இருக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்)

கிளம்பும் போது வளனிடம் அவருக்குத் தேவையான புத்தகங்கள் சிலவற்றைக் கொடுத்தேன்.  அவர் அதையெல்லாம் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.  ஐநூறு ரூபாய் இருக்கும்.

இதன் பெயர் தான் கொண்டாட்டம். 

இன்று வளனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.  அந்தக் கடிதம் வந்திராவிட்டால் இந்தக் கட்டுரையை நான் எழுதியிருக்க மாட்டேன்.  அந்தக் கடிதம் வந்திராவிட்டால் வளனை நான் அவன் இவன் என்று எழுதியிருக்க மாட்டேன்.  அவர் என்றே என் வழக்கம் போல் குறிப்பிட்டிருப்பேன்.

வளன் திருச்சபையில் மாணவராக இருப்பதால் எப்போதாவதுதான் போன் செய்ய முடியும்.  மதியம் நான் உங்களிடம் பேசலாமா என்று அவரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.  அழைக்கவில்லை.  எனக்கு எக்ஸைல் 2 வேலை இருந்தது.  இன்னும் முடியவில்லை.  ஆனால் இந்தக் கடிதத்தைப் பார்த்த பிறகு எக்ஸைலாவது மயிராவது என்று இதில் இறங்கி விட்டேன்.  வளனின் கடிதம்:

அன்புள்ள சாருவுக்கு,
உங்களிடமிருந்து கடந்தமாதம் பெற்றுச் சென்ற புத்தகத்தை -எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது – வாசித்து முடித்தேன்.
நான் நேரில் உங்களிடம் பேச மறந்து போன பல செய்திகளை இது என்னுடன் பேசியது! இப்படிப்பட்ட புத்தகங்கள் விற்காமல் போவது தமிழ்நாட்டின் சாபம்தான்!
இதில் உள்ள பல கட்டுரைகள் என்னை மகிழ்ச்சிப்படுத்தின. சிலது அழ வைத்தன.  படித்து முடித்த பிறகு ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளேன்.  நான் உங்களை அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா? நீங்கள் என்னை மகனாகக் கருதுவீர்களா?
அவந்திகா அம்மாவையும் கேட்டு எனக்கு முடிவைச் சொல்லுங்கள்!
துறவியாக உள்ள எனக்கு நீங்கள் இருவரும் எழுத்தின் வழி கிடைத்த தாய் தந்தை! உங்களை இழக்க நான் விரும்பவில்லை!
இதைச் சொல்லத்தான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன்.
மறக்காமல் பதில் எழுதவும்
இப்படிக்கு,
வளன்.

இதன் பெயர் தான் கொண்டாட்டம்.  நான் நியூயார்க் போகாமல் இருக்கலாம்.  என் கனவு தேசமான சிலே போகாமலேயே நான் செத்தும் போகலாம்.  ஆனால் என்னைக் கொண்டாட வளன் போல் ஆயிரம் இளைஞர்கள் தமிழில் உள்ளனர்.  அது எனக்கு சந்தோஷம்.

என் பணத் தேவைக்கு உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள்.

Account holder’s Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account number: 911010057338057

Branch: Radhakrishnan Salai, Mylapore

IFSC UTIB0000006

MICR CODE: 600211002

***

ICICI account No. 602601 505045

Account holder’s name: K. ARIVAZHAGAN

T. Nagar branch.  chennai

IFSC Code Number: ICIC0006026

 

Comments are closed.