சாரு இப்படியும் இருக்கிறார்: சமஸ்

முகநூல் என்பதை என் நண்பர்கள் பலர் தங்கள் எழுத்தைப் பலருக்கும் கொண்டு சேர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.  நானும் அப்படியே.  என் தளத்தில் எழுதுவதை முகநூலிலும் பகிர்கிறேன்.  ஆனால் என் நண்பர்களில் பலர் முகநூலில் புழங்கும் பலரது பதிவுகளைப் படித்து பைத்தியமே பிடித்துப் புலம்புகிறார்கள்.  முகநூலிலிருந்து ஒரு வாரம் வெளியே வந்து மீண்டும் நுழைகிறார்கள். 

காரணம்,

புற உலகில் நாம் ஹலோ கூட சொல்லத் தயங்கும் லும்பன்களின் எழுத்தையெல்லாம் அங்கே படித்து அதை மனதுக்குள் கொண்டு செல்கிறோம்.  கக்கூஸில் எழுதும் கிறுக்கல்கள் போன்றவை அவை என்பதை அவர்கள் நினைப்பதில்லை.  அப்படி ஒரு பதிவை ஒருவர் எழுத அதற்கு சமஸ் ஒரு பதில் சொல்லியிருக்கிறார்.  வழக்கம் போல் என்னைப் பாதுகாப்பதாக நினைத்து கேவலப்படுத்தியிருக்கிறார்.  அப்படி அவர் பதில் சொல்லாவிட்டால், என்னை அவமானப்படுத்தியவரைக் கண்டு கொள்ளாமல் போவது போல் ஆகி விடுமாம்.  சரி, எப்படி என்னைப் பாதுகாத்திருக்க வேண்டும்?  அப்படி இல்லை.  வாயில் வந்ததை உளறியவருக்கு பதில் சொல்வதாக என்னை நிஜமாகவே அவமானப்படுத்தியிருக்கிறார் சமஸ்.  உளறியவர் பற்றி எனக்குக் கவலையே இல்லை.  அவர்கள் லும்பன்கள்.  ஆனால் சமஸ் என் நண்பர்.  என் மரியாதைக்குரியவர்.  

யாரோ ஒருவர் என்னைப் பற்றி எழுதியது: 

சாருவை பல இடங்களில் கவனித்திருக்கிறேன். அவர் நல்ல இலக்கியத்தை படித்ததே இல்லை.சும்மா கவன ஈர்ப்புக்காக சர்ச்சையை உருவாக்குவார்.நல்ல வாசகரே நல்ல எழுத்தாளர் ஆக முடியும்.

இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?  அரிய கருத்து.  விட்டு விட வேண்டியதுதான்.  இதற்கு பதில் சொல்கிறார் சமஸ்:

நான் அப்படி நினைக்கவில்லை. இன்றைய தலைமுறையினரில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்களிடம் நவீன இலக்கியத்தைக் கொண்டுசேர்த்த முக்கியமான நால்வரில் ஒருவராகவே சாருவைப் பார்க்கிறேன். நுட்பமான பார்வை அவருக்கு உண்டு. இந்தக் கதை விஷயத்தில் அவர் வெளிப்பாடு அவசரம் மிகுந்தது மற்றும் ஜி.குப்புசாமி போன்ற ஒருவரின் காத்திரமான பணி மற்றும் நிரூபிக்கப்பட்ட அவருடைய நம்பகத்தன்மையைப் புறந்தள்ளுவது.  சமயங்களில் சாரு இப்படியும் இருக்கிறார் என்பதாலேயே அவரை முற்றொதுக்கிப் பேசுவது முறை அல்ல.

என் பதில்:  அப்படி என்ன ஐயா நான் கொலைபாதகச் செயலை செய்து விட்டேன்?  குப்புசாமியின் மொழிபெயர்ப்பைப் படித்து, மொழிபெயர்ப்பைப் பாராட்டி, அதில் இருந்த அதிகப்படியான பக்கம் என் புத்தகத்தில் இல்லையே என்று குப்புசாமியிடம் மரியாதையுடன் விளக்கம் கேட்டேன்.  இதுதான் குப்புசாமியின் நம்பகத்தன்மையைப் புறம் தள்ளுவதா?  என்னய்யா பேசுகிறீர்கள்?  ஜி. குப்புசாமிக்காக இருபது ஆண்டுகள் வாதாடி, அவரை நிரூபித்ததே நான் தானே? அவருடைய கொள்கைப் பரப்புச் செயலாளனாக அல்லவா நான் இருபது ஆண்டுகளாக இருந்தேன்?  அதற்குப் பரிசா இது?  கதையில் ஒரு பக்கம் அதிகமாக இருக்கிறதே, அது எப்படி நிகழ்ந்தது என்று கேட்கக் கூடாதா?  கேட்டால் நம்பகத்தன்மையைப் புறம் தள்ளுவதா?  என் வெளிப்பாடு என்ன அவசரம் மிகுந்தது?  ஆனால் இதில் ஜி. குப்புசாமி இன்று எழுதியிருந்ததுதான் மிகவும் அராஜகமானது.  ஏதோ ரேமண்ட் கார்வர் என்பவர் கடவுள் போலவும் அவரை விமர்சிப்பதே கூடாது என்பது போலவும் அல்லவா எழுதியிருக்கிறார்? 

இனி குப்புசாமியின் மொழிபெயர்ப்பு எதையுமே படிக்க மாட்டேன்.  அவர் பெயரை உச்சரிக்கவும் மாட்டேன்.  ஒரு கதையைப் படித்து, அதை எல்லோருக்கும் பகிர்ந்து, எல்லோரையும் படிக்கச் செய்ததற்காக நன்றி தெரிவிப்பது இப்படியா?  உங்கள் பெயரை இருபது ஆண்டுகளாகப் பாராட்டிப் புகழ்ந்ததற்கு இத்தனை அக்கப்போரா?  இவ்வளவு அக்கப்போர் வரும் என்று தெரிந்தால் நான் படித்திருக்கவே மாட்டேனே ஐயா? 

Very disgusting…