பின்வரும் கேள்வியும் பதிலும் இன்று மாலை நடந்த அக்கப்போருக்கு முன்பே எழுதப்பட்டது.
பிடிக்காத எழுத்தாளர்கள் இத்தனை பேரைச் சொல்கிறீர்கள், பிடித்தவர்கள்?
காயத்ரி ஆர்.
பதில்: என் வாழ்க்கை வரலாற்றையே கேட்கிறாய். சொல்கிறேன். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் பிற்பகுதி மற்றும் எண்பதுகளில் நான் பெரிதும் இலக்கியத்தை விடவும் தத்துவவாதிகளையே பயின்று கொண்டிருந்தேன்.
முதலில் படித்தது Émile Durkheim. இந்தத் தத்துவவாதிகள் பற்றி நான் இப்போது எதுவும் எழுதப் போவதில்லை. கூகிளில் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். 1980இல் நிலைமை அப்படி இல்லை. இந்த ஃப்ரெஞ்ச் சமூகவியல் அறிஞரை எனக்கு அறிமுகப்படுத்தி ஆரம்பக் கல்வியை அளித்தது படிகள் ஆசிரியர் குழுவில் இருந்த சிவராமன்.
Henri Bergson: ஃப்ரெஞ்ச் தத்துவவாதியான ஹென்றி பெர்க்ஸன்தான் எனக்குக் காலத்தையும் வெளியையும் பற்றிய புரிதலை ஏற்படுத்தினார். குறிப்பாக, காலம் நகர்ந்து கொண்டே இருப்பது. நிலையானது அல்ல. முடிவற்றது. ஆனால் வெளி (Space) நிலையானது. இவர்தான் பிற்காலத்திய ஜான் பால் சார்த்தர், ஹைடேக்கர், தெல்யூஸ் (Gilles Deleuze) போன்றவர்களுக்கு முன்னோடியாக விளங்கியவர்.
கீர்க்கேகார்ட் (Søren Kierkegaard) என்னையும் என் எழுத்தையும் வெகுவாக பாதித்த தத்துவவாதி
க்ளாத் லெவி ஸ்த்ராஸ் (Claude Lévi-Strauss)
லூயி அல்தூஸ்ஸர் (Louis Pierre Althusser)
ஜான் பால் சார்த்தர் (Jean-Paul Sartre)
ஜாக் தெரிதா (Jacques Derrida)
மிஷல் ஃபூக்கோ (Michel Foucault)
ரொலான் பார்த் (Roland Barthes)
ஜாக் லகான் (Jacques Lacan)
ஹெலன் சிஸூ (Hélène Cixous)
லூஸ் இரிகாரே (Luce Irigaray)
ஜூலியா க்றிஸ்தவா (Julia Kristeva)
இந்தப் பட்டியலில் நான் படிக்காமல் விட்டவர்கள் Jean-François Lyotard, Jean Baudrillard.
இலக்கியவாதிகள்: தமிழில் என் மூத்த இலக்கியவாதிகள் காஃப்கா காஃப்கா என்று ஜபித்துக் கொண்டிருந்த வேளையில் எனக்குப் பிடித்தமாக இருந்த எழுத்தாளர்கள் ஜான் ஜெனேவும், லூயி ஃபெர்தினாந் செலினும். செலினின் Journey to the End of the Night, North, Rigadoon என்ற நாவல்களைப் பற்றி 1980களின் முற்பகுதியில் வெளிவந்த இலக்கிய வெளிவட்டம் பத்திரிகையில் எழுதியிருக்கிறேன். இன்றளவும் எனக்குப் பிடித்த ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் செலின்.
இன்னொரு முக்கியமான விஷயம். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றி நான் தமிழ்ச் சூழலில் யாரும் பேசிக் கேள்வியே பட்டதில்லை. உதாரணமாக, இவர்கள் ஆல்பர் கம்யூ கம்யூ என்று கத்திக் கொண்டிருந்த போதுதான் நான் அமைதியாக செலின் பற்றியும் அந்த்தோனின் ஆர்த்தோ (Antonin Artaud) பற்றியும் மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தேன்.
மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade)
ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille) இவரைப் பற்றி தமிழ் இலக்கிய உலகம் தெரிந்து கொள்ளவே இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் ஆகும். அநேகமாக அது நடக்காமலே கூடப் போகலாம். ஒன்றும் இல்லை, இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவரது கண்ணின் கதை என்ற சிறு நாவலை மொழிபெயர்த்து வீட்டில் வைத்திருந்தேன். ஒரு இலக்கிய நண்பர் வீட்டுக்கு வந்தார். இதைக் கொடுத்தேன். அவர் ஒரு சிறுபத்திரிகை ஆசிரியரும் கூட. இரண்டு பக்கங்கள் படித்து விட்டு ஓடியவர்தான். அதற்குப் பிறகு இருபது ஆண்டுகளாகப் பேச்சு வார்த்தை இல்லை. இந்த நாவல் இப்போது இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது. படித்தால் நான் சொல்வது உங்களுக்குப் புரியும். 1928இல் போர்னோ மொழியில் எழுதப்பட்ட இந்த நாவல் பற்றி ரொலான் பார்த்தும் சூஸன் சொண்டாகும் எழுதிய பிறகுதான் இதன் இலக்கிய முக்கியத்துவத்தை உலகம் புரிந்து கொண்டது. ஜார்ஜ் பத்தாய் சார்த்தரை விடவும் புகழ் பெற்ற தத்துவ ஆசிரியராக இருந்தும் இந்த நாவல் போர்னோ மொழியில் இருந்ததால் புனைப்பெயரில்தான் வெளியிட்டார். வெளிவந்த போது எழுதியவர் ஜார்ஜ் பத்தாய் என்று யாருக்கும் தெரியாது. சூஸன் சொண்டாக் எழுதிய மிக நீண்ட மதிப்புரை எனக்கு இணையத்தில் கிடைக்கவில்லை. தேடி எடுத்துப் படியுங்கள். மிகவும் முக்கியமான ஒரு வாசிப்பு. இதையெல்லாம் நானும் தமிழவனும் எஸ். சண்முகமும் பா. வெங்கடேசனும் நாகார்ச்சுனனும் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் பேய்த்தனமாகப் படித்துக் கொண்டிருந்தோம் என்பது இப்போது ஞாபகம் வருகிறது.
இந்த இணைப்பில் கண்ணின் கதை கிடைக்கிறது. இருதய பலவீனம் உள்ளவர்களும் கலாச்சாரக் காவலர்களும் படிக்க வேண்டாம்.
http://www.totuusradio.fi/wordpress/wp-content/uploads/2010/09/bataille_story_of_eye.pdf
Georges Perec ஜார்ஜ் பெரக்கும் என்னைக் கவர்ந்த, என்னை மிகவும் பாதித்த ஒரு ஃப்ரெஞ்ச் இலக்கியவாதி. இவரது Life: A User’s Manual என்னைப் பெரிதும் ஈர்த்த ஒரு நாவல். என்ன துரதிர்ஷ்டம் என்றால், இந்த நாவல்களையெல்லாம் படித்தவர்கள் தமிழ்ச் சூழலில் ஓரிருவர்தான் இருப்பார்கள். அதனால் நான் பேசுவது யாருக்குமே அர்த்தமாகாது. என் எழுத்து இவர்களுக்கு எப்படி அந்நியமாக இருக்கிறதோ அதைப் போலவேதான் நான் படிக்கும் இலக்கியவாதிகளும் இவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள். இவருடைய A Void நாவலைப் பற்றி என் நாவல்களிலேயே பேசியிருக்கிறேன். La disparition. ஃப்ரெஞ்ச்சில் e என்ற உயிரெழுத்தே இல்லாமல் எழுதப்பட்ட நாவல். எ வாய்ட் என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட போது நாவலில் The என்ற வார்த்தை இல்லாமல் வந்தது. ஆங்கிலத்தில் the இல்லாமல் எழுதுவது எவ்வளவு கடினம் என்று உங்களுக்குத் தெரியும்.
Walter Abish. இவர் பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். தமிழில் அறியப்படாதவர்.
Flann O’Brian அயர்லாந்தைச் சேர்ந்தவர். என்னை மிகவும் பாதித்தவர்.
மற்றபடி பத்தொன்பதாம் நூற்றாண்டு ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்கள் பால்ஸாக், மாப்பஸான், குஸ்தாவ் ஃப்ளெபர் (இவரை மிகவும் பிடிக்கும்), எமிலி ஸோலா, விக்தர் யூகோ, கவிஞர்கள் பால் வெர்லேய்ன், ஆர்த்தர் ரேம்போ.
மிஷல் வெல்பெக் (Michel Houellebecq)
இவர்கள் தவிர லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் பலர்.
சீலேவைச் சேர்ந்த கவிஞர்கள் பாப்லோ நெரூதா, நிக்கானோர் பார்ரா. உலகப் புகழ் பெற்ற சீலே நாவலாசிரியர் ரொபர்த்தோ பொலாஞோவை எனக்குப் பிடிக்காது. ஆனால் மரியா லூயிஸா பொம்பாலைப் (María Luisa Bombal) பிடிக்கும். பொம்பாலின் ஒரு சிறுகதையை மொழிபெயர்த்தும் இருக்கிறேன். ஊரின் மிக அழகான பெண் தொகுதியில் அந்தக் கதை உள்ளது. அந்த்தோனியோ ஸ்கார்மேத்தாவைப் (Antonio Skarmeta) பிடிக்கும். இவர் பற்றி எழுதியிருக்கிறேன். I dreamt the snow was burning என்ற அற்புதமான நாவல் இவர் எழுதியது. இது சீலே.
கூபாவில் அலெஹோ கார்ப்பெந்த்தியர் (Alejo Carpentier). இவரைப் பற்றி எண்பதுகளின் முற்பகுதியிலேயே எழுதியிருக்கிறேன். மேஜிகல் ரியலிஸத்தின் பிதாமகர் காப்ரியல் மார்க்கேஸ் கிடையாது, அந்த எழுத்து வகை லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் ஆரம்பத்திலேயே உள்ளது, அதை மிகவும் வலுவாகத் தன் எழுத்தில் கையாண்டவர் கார்ப்பெந்த்தியர் என்பது என் கட்டுரைகளின் சாரம். ஒரு கட்டுரை இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்தது. அதேபோல் காப்ரேரா இன்ஃபாந்த்தேயும் (Cabrera Infante) மிகவும் பிடித்தவர். என் எழுத்தின் மீது தாக்கம் செலுத்தியவர். இவரது Three Trapped Tigers மற்றும் Infante’s Inferno ஆகிய இரண்டும் மிக முக்கியமான நாவல்கள். கார்ப்பெந்த்தியர், இன்ஃபாந்த்தே இருவரும் கூபாவைச் சேர்ந்தவர்கள்.
இப்படி தென்னமெரிக்காவைச் சேர்ந்த ஒவ்வொரு தேசத்தின் எழுத்தாளர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். சிலரை மொழிபெயர்த்திருக்கிறேன். குறிப்பாக, ஹுலியோ கொர்த்தஸார் (Julio Cortazar). போர்ஹேஸ். உண்மையில் காயத்ரியின் கேள்விக்கு நான் ஒரு புத்தகம்தான் பதிலாக எழுத வேண்டும்.
இப்படிப் பிரித்துக் கொள்ளுங்கள்: முதலில் ஃப்ரெஞ்ச் இலக்கியம். அடுத்து, லத்தீன் அமெரிக்க இலக்கியம். அடுத்து, சமகால அரபி இலக்கியம். அதை நான் தப்புத் தாளங்கள் என்ற நூலிலும் சமீபத்திய அ-காலம் என்ற கட்டுரைத் தொடரிலும் எழுதியிருக்கிறேன். (இத்தொடர் இப்போதும் Bynge.in இல் படிக்கக் கிடைக்கிறது.) மொராக்கோ, சிரியா, அல்ஜீரியா, லெபனான் போன்ற நாடுகளின் இலக்கியம்.
ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறேன். முன்பு காஃப்கா, அப்புறம் ஆல்பெர் கம்யூ, இப்போது ரேமண்ட் கார்வர் என்று தொடர்ந்து சில பெயர்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இதை நான் இந்தியர்களிடம் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கும் காலனியாதிக்க அடிமை மனோபாவம் என்றே கருதுகிறேன்.
நீங்கள் கார்வர் என்றால், நான் முகம்மது ஷுக்ரி என்று சொல்லுவேன். கார்வர் சிறுகதை ஷுக்ரி நாவல் என்றாலும் அரபியில் கார்வரை விட நன்றாக எழுதும் ஒரு நூறு பேர் இருக்கிறார்கள். ஜெனேயைப் பார்த்து போடா வெள்ளைக்காரா, உன்னை விட நான் சிறந்த எழுத்தாளன் என்று சொன்னவன் முஹம்மது ஷுக்ரி. மொராக்கோ. மொரோக்காவில் மட்டும் முப்பது பேர். லெபனானில் முப்பது பேர். எல்லோரையும் தூக்கி அடிக்கக் கூடிய அப்துர்ரஹ்மான் முனிஃப். சவூதி அரேபியா. எல்லோரைப் பற்றியும் வண்டி வண்டியாக எழுதிக் குவித்திருக்கிறேன். படிக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் சொல்வதே புரியாது. அவர்களைப் போய்ப் படிக்கச் சொல்லவில்லை. உங்களுக்காக நான் படித்து கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். அதையாவது படித்துத் தொலைத்து விட்டுத்தான் என்னோடு உரையாட வேண்டும். எதுவுமே தெரியாமல் ரேமண்ட் கார்வர் எப்பேர்ப்பட்ட புடுங்கி தெரியுமா என்று உளறக் கூடாது.
நாஸ்திகனாக இருந்த என்னை நம்பிக்கையாளனாக மாற்றிய நூல் The Blinding Absence of Light. மொராக்கோவைச் சேர்ந்த தாஹர் பென் ஜெலோன் ஃப்ரெஞ்சில் எழுதியது. அதைப் படித்து தொழுகையின் அரசியல் என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். இருபது ஆண்டுகள் இருக்கும். அது நிழலற்ற பெருவெளி என்ற மடத்தனமான தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால் அதில் தொழுகையின் அரசியல் என்ற கட்டுரை பற்றியே எதுவும் இல்லை. கேட்டிருந்தால் அதை முன்னுரையாகவே போட்டுக் கொள்ளக் கொடுத்திருப்பேன். எப்படித் தெரியும் என்று கேட்டதற்கு என் கட்டுரையைப் படித்துத்தான் தெரிந்து கொண்டதாகச் சொன்னார்கள்.
ராத்வா அஷூர் என்று ஒரு எழுத்தாளர். இவரது க்ரானாடா என்ற நாவலின் ஒரு பகுதியை இருபது ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்த்தேன். ஊரின் மிக அழகான பெண் என்ற என் மொழிபெயர்ப்புத் தொகுதியில் அது இடம் பெற்றுள்ளது. அந்த நாவல் சமீபத்தில் வந்திருக்கிறது. அந்த நாவல் பற்றி ஒரு அன்பர் இணையத்தில் ஒரு மிக நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். அதில் என் மொழிபெயர்ப்பு பற்றி அவர் ஒரு வார்த்தை குறிப்பிடவில்லை. யாருக்கும் என் செயல்பாடுகள் பற்றி எதுவுமே தெரியாது. என்னை அவர்கள் படிப்பதே இல்லை. ஆனால் வீடு தேடி வந்து பேசுகிறார்கள். ஆம், க்ரானாடா பற்றி எழுதியிருந்த அன்பர் என் வீட்டுக்கு வந்து அந்த நூலைக் கொடுத்து விட்டுப் போனார். அப்போது கூட நான் முன்பு செய்தது பற்றிச் சொன்னேன். சும்மா தகவலாக.
போகட்டும். இப்படி எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள். அவர்கள் யாரையும் தமிழ்நாட்டில் தெரியாது. உதாரணமாக, ஃப்ரெஞ்ச் லெஸ்பியன் எழுத்தாளர் காலத். Colette (1873 – 1954) இவரைப் பற்றியும் நீண்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இவரைப் பற்றி ஃப்ரான்ஸிலேயே கொஞ்சம் பேருக்குத்தான் தெரியும்.
என் தேர்வுகளில் ஒரு அரசியல் இருப்பதை மட்டும் கவனியுங்கள். டேய் போடா, வெள்ளைத்தோல்காரா, உன்னை விட நான் பெரிய எழுத்தாளன் என்று முஹம்மது ஷுக்ரி ஜான் ஜெனேயிடம் சொன்னான் அல்லவா? அதுதான் என் தெரிவுகளின் அரசியல். உண்மையிலேயே ஷுக்ரி ஜெனேயை விடப் பெரிய ஆள்தான். அது அவருடைய அல்-கூப்ஸ் அல்-ஹஃபி நாவலைப் படித்தால் தெரியும். Naked Bread என்று தலைப்பு. ஷுக்ரி பிச்சை எடுத்து வாழ்ந்தவர். குப்பைக் கிடங்குகளில் சட்டையில்லாமல் நாய்களோடு சண்டையிட்டபடி ரொட்டித் துண்டுக்காக அவர் அலைந்த போது அவருடைய பட்டப் பெயர் அல்-கூப்ஸ் அல்-ஹஃபி. முதல் வார்த்தைக்கு ரொட்டி என்று பொருள். அரபு நாடுகளில் இருப்பவர்களுக்குத் தெரியும். எழுதப் படிக்கத் தெரியாதவர். சிறையில் இருக்கும்போதுதான் அரபி கற்றுக் கொண்டு அங்கே உள்ள நூலகத்தில் உலக இலக்கியம் பயின்று எழுத ஆரம்பித்தார். சிலரைப் போல் சுய அனுபவக் கதைகளை மட்டும் டெஸ்டிமனி லிட்ரேச்சர் போல் எழுதவில்லை. சர்வதேச இலக்கியம் பயின்று அதேபோல் எழுதினார்.
இப்படி ஏராளம் உண்டு.