புதுவை ஞானம் என்று ஒரு நண்பர். 35 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரியில் பழக்கம். எல் ஐ சியில் வேலை. அப்போதைய எல் ஐ சி சம்பளம் எங்கள் அரசாங்க சம்பளத்தையெல்லாம் விட மூன்று மடங்கு ஜாஸ்தி. பொதுவுடைமைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர். அவர்தான் அந்தப் பத்திரிகையை எனக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு நான் ஃபிடல் காஸ்ட்ரோவுக்குக் கடிதம் எழுதிப் போட்டு, அந்தப் பத்திரிகை பல காலம் எனக்கு வந்து கொண்டிருந்தது. ஏழை எழுத்தாளன், சந்தாவெல்லாம் அனுப்ப முடியாது என்று எழுதி என் விலாசம் எழுதியிருந்தேன். Granma என்று பெயர். இன்னமும் அப்பிரதிகள் என்னிடம் உண்டு.
அதில் இதுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாத அரிதான தென்னமெரிக்கப் படைப்புகளை ஸ்பானிஷிலிருந்து முதல் முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவார்கள். அப்படித்தான் எனக்கு அலெஹோ கார்ப்பெந்த்தியர் போன்றவர்கள் வாசிக்கக் கிடைத்தார்கள்.
அதில் ஒருமுறை ஒரு கவிதையைப் படித்து 1980இலோ என்னவோ நான் எழுதிய லத்தீன் அமெரிக்க சினிமா என்ற நூலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டேன். சற்றே நீண்ட கவிதை. Rigoberto Lopez Perez. நிகாராகுவாவைச் சேர்ந்த கவி. 25 வயதில் அவன் ஒரு விஷயத்தை வெளியே சொன்னான். தேசத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த சர்வாதிகாரி சொமாஸாவை இன்னும் ஒரு ஆண்டில் சுட்டுக் கொல்லுவேன் என்றான். சொல்லி விட்டுத் தலைமறைவாகி விடவில்லை. சொன்னது போலவே அடுத்த ஆண்டுக்குள் சுட்டுக் கொன்றான். அவன் சொமாஸாவைச் சுட்டதுமே பாதுகாவலர்கள் அவனைச் சுட்டார்கள்.
அந்தச் செயலுக்கு முன் அவன் தன் அன்னைக்கு ஒரு கடிதம் எழுதினான். கவிதை வடிவிலான கடிதம். ரிகபெர்த்தோ பெரஸ் பற்றி இப்போது கூட கூகிளில் நாலு வரிதான் இருக்கும். நான் 1980இல் மொழிபெயர்த்தேன். என்னுடைய நாற்பது ஆண்டுக் கால மொழிபெயர்ப்புப் பணி என்பது இத்தகைய அரசியலை உள்ளடக்கியது.
அப்துர்ரஹ்மான் முனிஃப் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர். நோபல் பரிசு பெற்ற நகிப் மெஹ்ஃபூஸை விடவும் சிறந்த எழுத்தாளர். சவூதி அரசர் அவர் நண்பர். அரசரைக் கிண்டல் செய்து எழுதினார். சவூதி அவரை நாடு கடத்தியது. வேறொரு தேசத்தில் வாழ்ந்தார். உலகப் புகழ் பெற்ற பிறகு சவூதி அவரை அழைத்தது. போய்யா என்று மறுத்து விட்டார். அவரை மொழிபெயர்த்தேன்.
இப்படி 500 பேர்.
அ-காலம் படித்துப் பாருங்கள். தப்புத் தாளங்கள் படித்துப் பாருங்கள். நான் மொழிபெயர்த்த ஊரின் மிக அழகான பெண் என்ற தொகுதியையாவது படித்துப் பாருங்கள். நீங்கள் சார்ந்திருக்கும் மொழிபெயர்ப்புத் துறையைச் சார்ந்தது. எத்தகைய எழுத்தாளர்களை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று புரியும். எதையுமே படிக்காமல் என்னிடம் பேசவே பேசாதீர்கள்.
எல்லோரும் மொழிபெயர்ப்பு என்று சொல்லிக் கொண்டு மூல ஆசிரியனையும் தமிழையும் கொலை செய்யும் வேளையில் குப்புசாமி மட்டும்தான் இருப்பவர்களில் நன்றாகச் செய்கிறார் என்று சுமார் இருபது ஆண்டுகளாக அவரை ப்ரமோட் செய்து கொண்டிருக்கிறேன். இப்போது கூட மானே தேனே என்றெல்லாம் அடைமொழி சேர்த்த பிறகுதான் என் புத்தகத்தில் ஒரு பக்கம் குறைவாக இருக்கிறதே, என்ன விஷயம் என்று விளக்குங்கள் என்றுதான் எழுதினேன். வெறுமனே இது மட்டும்தான் என்றால் போன் செய்து கேட்டிருப்பேன். அந்தக் கதை வேறு குப்பையாக இருந்ததால் அதை எழுதவும் செய்தேன். இதில் என்னய்யா பிரச்சினை இருக்க முடியும்? உங்களுக்கெல்லாம் உங்கள் பணியைக் கேவலப்படுத்தி எழுதுகிறார்களே அவர்கள்தான் லாயக்கு. ஒரு நண்பர் குப்புசாமியை மோசமாக விமர்சித்து, இது மொழிபெயர்ப்பே இல்லை என்று எழுதியதால் மனம் மிகவும் நொந்த குப்புசாமி மூன்று மாதம் எதுவுமே செயல்பட முடியாமல் போய் நான் அவருக்கு போன் செய்து திட்டினேன். நானெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு அவர் திட்டினதுதான் பெரிதாகப் போயிற்றா என்று உரிமையுடன் கண்டித்தேன். ஆனால் இப்போது தோன்றுகிறது, அவர்கள்தான் இவருக்கு லாயக்கு என்று.
நான் செய்தது இரண்டு காரியங்கள். கார்வரின் கதையை விமர்சித்தேன். அதில் தலையிட குப்புசாமிக்கு உரிமை இல்லை. கதையின் முடிவு பற்றி விளக்கம் கேட்டேன். அதிலும் மானே தேனே எல்லாம் போட்டுத்தான். விளக்கம் கொடுத்து விட்டு மூடிக் கொண்டு போயிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு என் எழுத்து எதையுமே படிக்காமல், எனக்குப் பாடம் எடுக்கிறார் குப்புசாமி. போதும். எனக்கு வேறு வேலை கிடக்கிறது.
இப்போது அராத்து எழுதியதைப் பகிர்கிறேன்:
சிறுகதைகள் மீது எனக்கு ஆர்வம். உள்நாட்டு சிறுகதைகள் தாண்டி வெளிநாட்டு ஆசாமிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கவும் ஆர்வம் உண்டு. இந்த ஆர்வம் பெரிய மரியாதை சார்ந்ததோ , வறட்டுத்தனமாக உருவாக்கிக்கொண்ட சுத்த ஹம்பக்கான உணர்ச்சிவசப்படும் மனநிலை சார்ந்ததோ அல்ல. நம்மூர்ப் பெண்கள் , வெளிநாட்டுக்காரி யோனியை எப்படி மெயிண்டெயின் செஞ்சி வச்சிருக்கா என்று பார்க்கும் ஆர்வம் போன்றதுதான். அடச்சீ , இவ்ளோதான் உன் பண்டமா என நம் பெண்கள் போவது போல நானும் பலமுறை போயிருக்கிறேன். சில அரிய பண்டங்களைக் கண்டு வியந்து பாராட்டியும் இருக்கிறேன்.ஆனால் வெளிநாட்டு இலக்கியங்களை முன்னிட்டு , செடல் குத்திக்கொண்டு, தீச்சட்டி கையில் ஏந்திக்கொண்டு தையா தக்கா எனக் குதித்ததில்லை. ஆனால் ஒரு ஆண் எந்த வெளிநாட்டு யோனியைப் பார்த்தாலும் , ஆஹா , ஓஹோ இதுதாண்டா யோனி , நம்மூர் யோனி எல்லாம் சாணி என்று பிரகடனம் செய்வது போல இலக்கிய உலகிலும் நடந்து வருவதை பரிதாபமாகப் பார்த்து கடந்து வந்திருக்கிறேன். இந்த யோனி மேட்டரில் பாத்து மட்டும் பரவசமடைந்து கதறும் ஆண்களைப் போலத்தான் இந்த இலக்கிய இன்ஃபீரியிராட்டி கேஸ்களை வைத்திருந்தேன். கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு .”ஓத்தவன் சும்மா இருக்க பாத்தவன் ஊத்திகிட்டே இருப்பான்”சமீபத்தில் அருஞ்சொல் தளத்தில் ரேமண்ட் கார்வார் சிறுகதை ஒன்று ஜி.குப்புசாமி மொழிபெயர்ப்பில் வந்தது. சாரு பகிர்ந்து இருந்ததும் ஆர்வத்துடன் வாசித்தேன். சிறுகதையே எனக்குப் பிடிக்கும். சாரு பகிர்ந்து இருக்கிறார் , சாரு நல்ல மொழிபெயர்ப்பாளர் எனச் சொல்லும் குப்புசாமி மொழிபெயர்த்து இருக்கிறார்,வேறு என்ன வேண்டும் ?முதலில் அது ஒரு சிறுகதையே இல்லை எனத் தோன்றியது. அது ஒரு குறு நாவல். இனி நாவல் எல்லாம் எழுதி சிறுகதை என்பார்கள் போல.அடுத்து அது ஒரு மரண மொக்கை. சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் எகிறிக்கொண்டு இருந்தது. என்னடா இது ? ஒண்ணும் இல்லாத விஷயத்தை வச்சி இந்த ஆள் சல்லடை சலிச்சிட்டு இருக்காரே என முழுதுமாக படித்து முடித்தேன். கடைசி ஓவரில் இந்தியா எப்படியாவது 47 ரன் அடிச்சி வின் பண்ணிடும் என்ற நம்பிக்கையுடன் மேட்ச் பார்ப்பது போல கடசி வரைப் படித்தால் ….ஒரு மயிரும் இல்லாத சிறுகதை அது. படித்தவர்கள் , தங்களுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையால் ஏதேதோ இட்டுக் கட்டலாம். அதுல அது இருக்கு , இது இருக்கு , பூடகமா சொல்றாரு , அது இது எனச் சொல்லலாம். அது அவர்கள் உரிமை. அதே போல இதை ஷிட் என்று சொல்லும் உரிமையும் இருக்க வேண்டும். இந்த சிறுகதையில் இருந்த ஒரே சிறப்பான விஷயம் – ஒரு பிணம் ஆற்றின் கரையில் கிடக்கிறது. குடித்து விட்டுக் கூத்தடிக்கலாம் எனப் போன சில நண்பர்கள் , அவர்கள் திட்டம் கெட்டுவிடுவதை விரும்பாமல் , உடனே தகவல் சொல்லாமல் 3 நாட்கள் குடித்து முடித்து விட்டு சாவகாசமாகத் தகவல் சொல்கிறார்கள். இந்த ஒரு தருணம் மட்டுமே அற்புதமானத் தருணம். வேறு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இந்தத் தருணத்தை வைத்து வேறு ஏதேனும் அற்புதத்தை சிறுகதையில் நடத்தி இருக்க முடியும். ஆனால் ரேமண்ட் கார்வர் , திருவிழாவில் குச்சி மிட்டாய் , பலாச்சுளை , கைமுறுக்கு , பஜ்ஜி என சகலத்தையும் தின்று கொண்டே ஊர் சுற்றி கடைசியில் வாந்தி எடுப்பது போல எடுத்து வைத்திருக்கிறார். இது என்னடா வம்பு என சாருவை போனில் பிடித்தேன். அடக்கமாக , இதுல எனக்கு புரில , கடைசில ஏதாச்சும் குழப்பம் நடந்திருக்கா ? கதையே குழப்பமா அல்லது மொழிபெயர்ப்பா? என்று கேட்டேன். குப்புசாமி என்பதால் படிச்சி பாக்காமலேயே ஷேர் பண்ணிட்டேன் , படிச்சிட்டு கால் பண்றேன் என்றார். பிறகு படித்து விட்டுத்தான் அந்தக் கதையை விமர்சித்து கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையிலும் , குப்புசாமியைக் குறை சொல்ல வில்லை. அவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டார். ஆங்கிலத்தில் கதை இங்கயே முடிஞ்சிடுதே , தமிழில் ஏன் நீளுது என்றார். இதற்கு குப்புசாமி , நான் மூலப்பிரதியில் இருந்து மொழிபெயர்த்தேன் , அதில் இது இருக்கிறது என்றால் முடிஞ்சிப் போச்சி. ஆனால் அன்னார் ஒரு வியாக்கியானம் எழுதியுள்ளார். அதில் சாரு ஒரு குழந்தை போல என்றெல்லாம் சொல்லிக்கொண்டே , ”அவசரக்குடுக்கைத்தனமாக “ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். சாரு எப்போதும் குப்புசாமியை இதைப் போல வார்த்தையைப் பயன்படுத்திப் பேசியதில்லை. மட்டுமல்லாமல் ரேமண்ட் கார்வார் நாமாவளி ஒன்றையும் இயற்றியுள்ளார் குப்புசாமி. குப்புசாமி சார் , நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளர். உங்கள் மொழிபெயர்ப்பில் குறை சொன்னால் கூட , அதை விமர்சனம் என்று மூடிக்கொண்டு போக வேண்டும். மூலத்தை விமர்சித்தால் , மூல எழுத்தாளரை விமர்சித்தால் எல்லாம் கட்சிக்காரன் போல கொடி பிடித்துக்கொண்டு “தலைவர் வாழ்க “ கோஷம் போட்டுக்கொண்டு வரக்கூடாது. உங்கள் நல்லதுக்குத்தான் சொல்கிறேன். மொழிபெயர்ப்பாளர் வேறு , எழுத்தாளர் வேறு , இலக்கிய விமர்சகர் வேறு , தாழ்வுணர்ச்சி தங்கமகன்கள் வேறு. ஒரு எழுத்தாளருக்கு இன்னொரு எழுத்தாளரை விமர்சிப்பதற்கும் குப்பை என்று சொல்வதற்கும் உரிமை உள்ளது. நீங்கள் ஒரு குப்பையை மொழி பெயர்த்தால் , அதுவும் குப்பையாக இருப்பதாக ஒரு எழுத்தாளர் சொன்னால் நீங்கள் பெருமைப் படத்தான் வேண்டும். ஏனென்றால் நீங்கள் சரியாக மொழிபெயர்த்து இருக்கிறீர்கள். குப்பையை குப்பையாகவே கொடுத்து இருக்கிறீர்கள். குப்பையை தங்கம் என்றெல்லாம் சொல்லி ஒரு மொழிபெயர்ப்பாளர் மல்லுக்கட்டக் கூடாது. நீங்கள் ஓரான் பாமுக் நாவல் மற்றும் பல உலக இலக்கியங்களை மொழி பெயர்த்து இருப்பதாக அறிகிறேன். நல்ல செயல், நல்ல முயற்சி. இதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். நீங்கள் பெரும்பாலும் உலக அளவில் “ஹிட்” அடித்ததையே மொழி பெயர்க்கிறீர்கள். ஒரு மொழிபெயர்ப்பாளர் அப்படித்தான் இயங்க முடியும். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஜாக்கிசான் படங்களை இங்கே ரிலீஸ் செய்ததைப் போல. ஆனால் ஒரு எழுத்தாளர் அப்படி இயங்க முடியாது. உலக அளவில் ஹிட் அடித்ததை , அவர் ரசனைப் படி , அவரின் இவ்வளவு நாள் இலக்கியக் கற்றல் மற்றும் செயல்பாடுகளின் மூலம் அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதை கறாராகச் சொல்வார். இதிலெல்லாம் முட்டிக்கொள்ளக் கூடாது. ஒரு எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் கருத்து ரீதியாக சண்டையிட்டுக்கொள்வதையே நான் ரசிக்க வில்லை. சாரு நிவேதிதாவின் கடந்தகால செயல்பாடுகளை பார்த்துவரும் எவருக்கும் தெரியும், எந்த சார்பும் இல்லாமல் பாராட்ட வேண்டியதை பாராட்டியும் , விமர்சிக்க வேண்டியதை விமர்சித்தும் வந்திருக்கிறார். உலக அளவில் பாப்புலரான இலக்கிய சமாச்சாரங்களை மட்டும் அவர் எடுத்தியம்பியதில்லை. கேத்தி ஆக்கருக்கு தன் புத்தகத்தை சமர்ப்பித்ததில் தொடங்கி , இந்தியா அறியவே அறியாத பல உலக இலக்கியவாதிகளை இங்கே அறிமுகப் படுத்தியிருக்கிறார். இதில் முக்கியமான விஷயம் அவர்களில் பலர் பாப்புலர் இலக்கிய அந்தஸ்து அற்றவர்கள். அதற்காக பாப்புலர் ஆசாமிகளை பாராட்ட மாட்டார் என்று அல்ல. யோசா (லோசா வா யோசாவா ) போன்ற ஆட்களையும் தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறார். ஆனால் முகம்மது சுக்ரி போன்ற எழுத்தாளர்கள் , சாரு இல்லையென்றால் இங்கே ஒருவருக்கும் தெரியாது. நேக்க்ட் பிரட் எழுதிய அவன் கதையை , அவனுக்கும் ஜெனே வுக்குமான உறவு அது இது என தனிப்பட்ட சந்திப்பிலேயே அவ்வளவு சொல்வார். அமெரிக்கா , ரஷ்யா , இங்கிலாந்து ஹேங்க் ஓவர் மட்டும் சாருவிடம் இல்லை. எழுத்து நன்றாக இருந்தால் மொராக்கோ , லத்தீன் அமெரிக்கா , இந்தியா என்ற எந்த பாகுபாடும் இல்லை சாருவிடம். சமீபத்தில் கூட சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரைப் பற்றி எழுதியிருக்கிறார். அதே நேரத்தில் , வெளி நாட்டு ஹேங்க் ஓவர் ,தாழ்வு மனப்பான்மை கோஷ்டிகளிடம் இல்லாத ஒரு சிறப்பம்சம் சாருவிடம் உண்டு. இங்கே , தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்கள் பற்றி பழுப்பு நிறப்பக்கங்கள் எழுதியிருக்கிறார். நிறைய உரையாற்றி இருக்கிறார். அவரின் சமகால எழுத்தாளர்கள் பற்றி எழுதியிருக்கிறார். மனுஷ்யபுத்திரனை அவர் அளவுக்கு நிகழ்காலத்தில் கொண்டாடியவர்கள் யாருமில்லை. என்னுடைய முதல் நாவல் தற்கொலை குறுங்கதைகளுக்கு அவ்வளவு நீண்ட முன்னுரை. அந்த முன்னுரையை கல்லூரிகளில் இலக்கியப் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம். நான் அப்போது ஒரு பொடியன். முதல் நாவல். சரி நான் அவருக்கு நண்பன் என சப்பைக் கட்டு கட்டுவீர்கள். அவரை இதுவரை சந்தித்தே இராத சாதனாவின் “தொலைந்து போன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிளுக்கு” எவ்வளவு பாராட்டி எழுதினார். அதுவும் சாதனாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இதைப்போல நிறைய சொல்லிக்கொண்டு போகலாம். இன்று அவர் எழுதியிருந்த பதிவில் ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்த்தேன். ”எழுத்து என்றால் – எழுத்தை மட்டும் பாருங்கள். சாதி , வர்க்கம் , மதம் , மெண்டல் , குடிகாரன் , மூன்றாம் பாலினம் ,சைக்கோ , விளிம்பு நிலை மனிதன் , சமூகத்தின் குற்றவுணர்ச்சிக்கு சொறிந்து கொடுக்கும் வாழ்வை வாழ்ந்துகொண்டிருப்பவன் போன்ற லேபில்கள் எல்லாம் வேண்டாம் ” என்ற அடிநாதத்தை அந்த பதிவில் கண்டுகொண்டேன். அதிலும் இப்போது தமிழ்ச் சூழலில் – அம்மா வுக்கு ஏற்படும் நோய் , அப்பாவின் கடன் , பாட்டியின் பேதி இதையெல்லாம் ரொமாண்டிசைஸ் செய்து எழுதி கண்ணீர் உகுக்க வைக்கும் இந்தக் காலச் சூழலில் இந்த கட்டுரை அவசியமானது. ஆனால் அப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது. விருதுகள் கூட அப்படிக் கொடுக்கலாம். படிக்கும் உங்களுக்கு என்னய்யா ? ஒருவன் பாதிக்கப்பட்டால் நிவாரணம் கொடுக்கலாம். அவன் எழுதுவதை எப்படிக் கொண்டாட முடியும் ?இப்போது குப்புசாமி கட்டுரையைப் படித்ததும் தான் ரேமண்ட் அவர்கள் ஒரு மெண்டல் மனநிலைக்குப் போய் வாழ்ந்து வந்ததே தெரிய வருகிறது. அந்த நிலையில் அவர் மனம் போன போக்கில் என்னமோ செய்திருக்கிறார். ஓவியம் , கவிதையில் கூட மெண்டலாக ஏதேனும் செயலாம். பலர் அப்படித்தான் செய்துகொண்டு மெண்டல் இல்லை என நடித்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். சிறுகதை என்பது கான்ஷியஸாக இயங்க வேண்டிய ஒரு தளம். லௌகீக வாழ்வை விட , ஷேர் மார்க்கெட்டில் பல கோடிகளை ஹேண்டில் செய்வதை விட கான்ஷியஸாக இயங்க வேண்டும். மனதில் ஒரு ரிதம் செட் ஆகும். அப்போது இயற்கைக்கு மீறிய கான்ஷியஸோடு எழுத வேண்டியது சிறுகதை. நினைத்த போதெல்லாம் கவிதை மாதிரி சிறுகதை எழுதி விட முடியாது. நானே ஒரு சிறுகதை எழுத்தாளன் தான். ஆனால் நான் சிறுகதையை விட அதிகமாக , மிக அதிகமாக கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.பத்து வருடங்களில் 20 சிறுகதைகள் தான் எழுதியிருப்பேன். பலர் வாழ்க்கை முழுக்கவே 10 சிறுகதைகள் தான் எழுதியிருப்பார்கள். ஆண்டன் செகாவை சிறுகதை மாஸ்டர் என்பார்கள். முதலில் படித்தபோது எனக்கும் பெருமயக்கமாக இருந்தது . இப்போது யோசித்துப் பார்த்தால் அவரும் என்னவோ மேஜிக் தான் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் அவர் எழுதிய காலத்தை வைத்துப் பார்த்தால் அது ஒரு பெரிய பாய்ச்சல்தான். அதே போல புதுமைப்பித்தனின் பொன்னகரம். அதுவும் நரம்பால் எழுதப்பட்ட சிறுகதை போலத் தோன்றும். இது காலத்தால் அழிக்க முடியாத , மதிப்பு மாறாத சிறுகதை என்பது என் எண்ணம். ”ஏ ஜோக்கர் வாஸ் ஹியர் ““நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்திண்ணிகளும்’போன்ற சிறுகதைகளை 30 + வருடங்களுக்கு முன்பே எழுதிய சாரு நிவேதிதா உலகின் எந்த சிறுகதையையும் விமர்சிக்க உரிமை உள்ளது. அதற்கு பதில் சொல்ல யாருக்கு இலக்கியத் தகுதி உள்ளது என்பது அவரவர் சென்ஸிபிளிட்டியைப் பொருத்தது.