ஒரு நெருங்கிய நண்பர் நேற்று போன் செய்து “30 ஆண்டுகளுக்கு முன்னால் நிறப்பிரிகையிலோ அல்லது வேறு எதிலோ க்ரியா டிக்ஷனரி வெளிவந்த புதிதில் அதை விட லிஃப்கோ டிக்ஷனரியே தேவலாம் என்பது போல் எழுதியிருந்தீர்களே, ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டார். நன்றாக ஞாபகம் உள்ளது என்றேன். அப்புறம் எப்படி இப்போது க்ரியா டிக்ஷனரி ராமகிருஷ்ணனின் முக்கியமான பங்களிப்பு என்று சொல்கிறீர்கள் என்று கட்டையைப் போட்டார்.
கொஞ்சம் திகைத்த நான் “கனிந்து விட்டேன் போலிருக்கிறது” என்று சமாளித்தேன். அப்போதும் விடவில்லை நண்பர். நீங்கள் பயன்படுத்துகிறீர்களா என்றார். “இல்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் வந்த போது வாங்கிப் பார்த்தேன். நான் தேடிய எதுவும் இல்லை. சரி, பாமரர்களுக்கு ஆனது என்று விட்டு விட்டேன். திட்டியும் எழுதினேன்” என்றேன்.
“அப்புறம் ஏன் இப்போது பாராட்டு?”
இப்போதும் கனிந்து விட்டேன் என்று சமாளிக்க முடியவில்லை. உண்மையான காரணத்தைச் சொன்னேன். இப்போது யாருக்கும் தமிழ் தெரியவில்லை. தெரிந்த மொத்த வார்த்தைகளே அம்பதுதான். அப்படிப்பட்டவர்களுக்கு க்ரியா அகராதி உதவும். அதுவும் தமிழ்ப் பணிதானே என்று நினைத்து இப்போது கருத்தை மாற்றிக் கொண்டேன். இதுதான் உண்மை. மற்றபடி தமிழ் எழுத்தாளர்களுக்கு அந்த அகராதி உதவாது. உதவக் கூடியது எது என்று சொல்கிறேன். நேற்று செய்த தவறை நான் சரி செய்ய வேண்டும்.
மதுரைத் தமிழ்ப் பேரகராதி இரண்டு தொகுதிகள். இது சற்று கடினமானது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அகராதி.
ஆனால் நான் பயன்படுத்துவது நிகண்டு. எட்டு தொகுதிகள். ஒவ்வொன்றும் ஒரு சின்ன தலையணை அளவு இருக்கும். இதுதான் எல்லாவற்றிலும் ஆகச் சிறந்தது. Tamil Lexican என்று இருக்கும். 1982 பதிப்பு. மெட்றாஸ் யுனிவர்சிட்டி என்று ஆங்கிலத்தில் இருக்கும். இது மட்டும் கையில் இருந்தால் மொழி பற்றிய கவலையே இல்லை. மற்றபடி நீங்கள் லிஃப்கோ வைத்திருப்பதும் க்ரியா டிக்ஷனரி வைத்திருப்பதும் உங்கள் விருப்பம்.
நேற்றைய பிரச்சினை பற்றி பல எதிர்வினைகள் வந்தன. எல்லாவற்றையும் வெளியிடத் தேவையில்லை. என் எழுத்தை வாசிப்பவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். ஏன் எல்லோரையும் பகைத்துக் கொள்கிறீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார். நண்பர்களே பொல்லாங்கு பேசும் போது என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் எனக்கு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை. நான் எஸ்.ரா. இல்லை. வளன் அரசு இது பற்றி முகநூலில் எழுதியிருப்பது:
”ஜி.குப்புசாமி ரேமண்ட் கார்வரின் ‘வீட்டுக்கு இவ்வளவு அருகில் இவ்வளவு தண்ணீர்’ சிறுகதை பற்றி சாரு எழுதியிருந்ததற்கு எதிர்வினையாற்றுகிறேன் என்ற பெயரில் பெரும் அபத்தம் செய்திருக்கிறார். அதற்கு சமஸ் கொடுத்த அறிமுகத்தில் இன்னொருவர் அடிப்படை அறிவின்றி உளறுகிறார். அதற்கு நடுநிலையாக பதிலளிக்கிறேன் என்று சமஸ் சொல்லியிருப்பதைப் பார்க்கும் போது, The hottest place in Hell is reserved for those who remain neutral in times of conflict என்ற வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது. ‘யாருடைய எலிகள் நாம்?’ என்ற தொகுப்பைக் கொடுத்த சமஸ் இப்படிப் பேசுவதைப் பார்க்கும் போது வேதனையாகத் தான் இருக்கிறது.”
எனக்கு ஆங்கில இலக்கிய உலகில் அறிமுகம் தந்தவர் ஒரு நண்பர். உலகின் மதிப்பு மிக்க Granta பத்திரிகை ஒருமுறை இந்திய சமகால இலக்கியம் பற்றி ஒரு தொகுப்பு கொண்டு வந்தது. இந்திக்கு ஒரு எடிட்டர், வங்காளம், மராத்தி, மலையாளம், கன்னடம் என்று பல ஆசிரியர்கள். அவர்கள்தான் தங்கள் மொழியில் சிறந்ததை ஆங்கில இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். தமிழுக்கு என் நண்பர். அவர் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் போன்ற கமர்ஷியல் ஆட்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தார். இத்தனைக்கும் என்னை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தி உலகம் பூராவும் என்னைத் தெரியச் செய்தவர். என்னை மேற்குலகம் நபகோவுக்கு இணையானவர் என்று சொன்னால் அதற்குக் காரணமாக இருந்தவரே இந்த நண்பர்தான். அவர் ஒரு அமெரிக்கர். தமிழ் அறிந்தவர். நான் வாழ்நாள் பூராவும் கடமைப்பட்டிருக்க வேண்டியவர். ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் பதிப்பித்தவர். ஸீரோ டிகிரி ஆங்கிலத்தில் வெளிவந்து அடுத்த ஆண்டே அது அமெரிக்கப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஏஷியன் கிளாஸிக் என்ற அந்தஸ்தைப் பெற்றது. ஆங்கிலத்தில் வெளிவந்த அடுத்த மாதமே அமெரிக்காவிலிருந்து வாசகர் கடிதங்கள் வந்து விட்டன. அமெரிக்க வாசகர்களிடமிருந்து. ஏனென்றால், சென்னையில் வெளிவந்த போதே நூல் அமெரிக்காவிலும் வெளிவந்து விட்டது. அவர் அமெரிக்கர் என்பதால் இது சாத்தியம் ஆயிற்று.
அந்த அளவுக்கு எனக்கு வாழ்வு கொடுத்தவர். இந்திய இலக்கியத்தில் தமிழின் அடையாளமாக அவர் கொடுத்தது பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார். நான் ஆங்கிலப் பத்திரிகையில் எழுதினேன், என் நண்பர், பதிப்பாளர், சமகாலத் தமிழ் இலக்கியத்தின் மீது மூத்திரம் அடித்திருக்கிறார் என்று. அவர் உடனே முகநூலில் அறிவித்தார்: ”நான் இனி உன்னுடைய (அவருடைய you என்பது அப்படித்தான் தொனித்தது) எந்தப் புத்தகத்தையும் என் பதிப்பகத்தின் மூலம் வெளியிட மாட்டேன். யார் வெளியிடுகிறார் என்று பார்த்து விடுகிறேன்.” அவர் சாபம் கொடுத்தது போல் வேறு எந்தப் பதிப்பாளரும் என் ஆங்கில நூலை வெளியிட முன்வரவில்லை. ஒரு பிரபலமான பதிப்பகம் மார்ஜினல் மேனை வெளியிட முன்வந்த போது ஆயிரம் பக்கத்தை முந்நூறு பக்கமாக வெட்டித் தாருங்கள் என்றார்கள். மறுத்து விட்டேன். ஸீரோ டிகிரியில் வந்தது. ஆங்கில உலகம் அதை self publishing என்று புறக்கணித்து விட்டது. நல்லது என்று சொல்லி விட்டேன். எதற்குச் சொல்கிறேன் என்றால், எனக்கு வாழ்வு அளித்தவரையே பகைத்துக் கொண்டேன், ஒரு பொதுக் காரணத்துக்காக. கன்னடத்தில் லங்கேஷும் யு.ஆர். அனந்தமூர்த்தியும், தமிழில் பட்டுக்கோட்டை பிரபாகரா? என்னய்யா, நீ அமெரிக்கராக இருந்தால் என் இலக்கியத்தை அவமதிப்பாயா? என் உயிரே போனாலும் உன்னை விட மாட்டேன் என்று மூன்று வரியில் எழுதினேன். கதி கலங்கிப் போனார் அன்பர். அதனால்தான் அப்படி எனக்கு சாபம் விட்டார். அது இன்றளவும் பலிக்கத்தான் செய்தது. பரவாயில்லை. நான் சத்தியத்தின் புதல்வன். சத்தியம் என்னைக் கை விட்டாலும் பரவாயில்லை. சாகின்ற வேளையில் ஏன் என்னைக் கை விட்டாய் என்று கவிதை எழுதி விட்டுச் செத்துப் போவேன்…