எழுதுவதற்கு உகந்த நேரம் (சிறுகதை)

இந்த விஷயத்தைப் பற்றிப் பல எழுத்தாளர்களும் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.  சிலருக்குக் காலை நேரம்.  பலருக்கு இரவு. அதோடு, எழுதும் நேரம் குறித்து பல சுவாரசியமான தகவல்களும் அவர்களின் பதிலில் கசிவதுண்டு. அதனால் இந்தக் கேள்வியைக் கேட்பவர்களும் மிகுந்த உற்சாகத்துடனே கேட்டு வைக்கிறார்கள்.  என்னிடமும் பல நண்பர்கள் இதைக் கேட்பதுண்டு.  முந்தாநாளும் ஒரு நண்பர் கேட்டார்.  அவருக்கு என்ன பதில் சொன்னேன் என்று ஞாபகம் இல்லை.  எதுவுமே படிக்காதவன் கேள்வித் தாளைப் பார்த்து என்ன பதில் எழுதுவான்?  அப்படித்தான் நானும் ஏதாவது அவரிடம் உளறியிருப்பேன்.  நேற்று மாலை நடந்த சம்பவங்களின் போதுதான் எனக்கே இந்தக் கேள்விக்குத் தெளிவான பதில் கிடைத்தது. 

அதை விளக்குவதற்கு முன் இன்னொரு விஷயம்.  ஒரு ஊரில் ஒரு பிரபலமான ரோட்டோர டீக்கடை.  அந்தக் கடை டீ அந்தப் பிராந்தியத்திலேயே பிரசித்தம்.  அவ்வளவு நன்றாக இருக்கும்.  எப்போதுமே பத்து பேர் நின்று கொண்டிருப்பார்கள். 

மாஸ்டர், ஒரு டீ சக்கரை கம்மி.

மாஸ்டர், ரெண்டு டீ, ஒரு டீ சக்கரை கம்மி, ஒரு டீ நார்மல் சக்கரை.

மாஸ்டர், ஒரு டீ, சக்கரை தூக்கல்.

மாஸ்டர், மூணு டீ, ரெண்டு டீ லைட்டு, ஒரு டீ ஸ்ட்ராங்கு.

மாஸ்டர், ஒரு காப்பி.

மாஸ்டர், ஒரு பிளாக் டீ.

இப்படி ஆளாளுக்குக் கூச்சல் போட்டுக் கொண்டிருப்பார்கள்.  அத்தனை பேருக்கும் டீ போட்டுக் கொண்டும், காசை வாங்கிக் கல்லாவில் போட்டுக் கொண்டும் இருக்கும் மாஸ்டர் மாதிரிதான் நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  மேல் விவரங்கள் கீழே படியுங்கள்.

அவந்திகாவுக்கு தினமும் மாலை ஏழிலிருந்து ஒன்பதரை வரை ஆன்லைனில் ஆன்மீக வகுப்பு.  வீட்டில் சப்தமே இருக்கக் கூடாது.  நான் என் அறைக் கதவை மூடிக் கொண்டு தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன்.  ஓ, அதற்கு முன்னால் சில காரியங்களைச் செய்வேன்.  அதைச் சொல்ல வேண்டும்.  எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்று செக்யூரிட்டிகள்.  அவர்களில் ஒருவர் டேவிட்.  இரவு நேரத்தில் பூனைகளுக்கு உணவு கொடுப்பது அவர் வேலை.  அதற்காக அவருக்குத் தனியாக சம்பளம் கொடுத்து விடுவாள் அவந்திகா.  பத்து பூனைகள்.  கீழ்த்தளத்தில் வசிக்கின்றன.  எட்டு மணி வாக்கில் வந்து கதவை மெதுவாகத் தட்டி அம்மா அம்மா என்று அழைப்பார்.  உள் அறையில் கதவை மூடிக் கொண்டு வேலை செய்யும் எனக்கு அந்த சத்தம் காதில் விழாது.  ஏசி ஓடும் என்பதால் அறைக் கதவை மூடித்தான் வைக்க வேண்டியிருக்கும்.  டேவிட்டை உத்தேசித்து ஆறரை மணிக்கே பூனை உணவைத் தயாராக அது அதற்கான பாத்திரங்களில் போட்டு வைத்து விட்டேன்.  ஒரு நீட்டமான டப்பாவில் 350 கிராம் விஸ்காஸ் பூனை உணவை போட்டு மூடி வைத்தேன்.  அது அந்த டப்பாவில் பாதி வரும். முன்பெல்லாம் டப்பா முழுவதும் போடுவேன்.  பாதிதான் செலவாகும்.  ஆனால் காலையில் பார்த்தால் மீதி எதுவும் இருக்காது.  அதேபோல் விஸ்காஸ் ஈர உணவு பாக்கெட் மூன்று கொடுப்பேன்.  ஒரு பாக்கெட் நாற்பது ரூபாய்.  இரண்டுதான் செலவாகும்.  மீதி ஒன்று காலை உணவுக்கு.  ஈர உணவையும் காய்ந்த உணவையும் கலந்து கொடுப்பது.  ஆனால் ஒரு கட்டத்தில் காலையில் பார்த்தால் ஈர உணவும் ஒரு பாக்கெட் மீதி இருக்காது.  எங்கே போனது என்று புலன் விசாரணை செய்ததில் இவர் எடுத்ததாக அவர்.  அவர் எடுத்ததாக உவர்.  இவர் அவர் உவர் எவர் என யாருக்கும் தெரியவில்லை.  கடைசியில் பிராணி நல ஆர்வலர்கள் இக்காலத்தில் அதிகமாகி விட்டது மட்டும் புரிந்தது.  அதிலிருந்து காய்ந்த உணவு 350 கிராமும் ஈர உணவு இரண்டு பாக்கெட்டும் கொடுக்க ஆரம்பித்தேன்.  காய்ந்த உணவில் ஈர உணவைக் கலந்து போடுவது முறை. 

பிராணி நல ஆர்வலர்கள் பெருகித்தான் விட்டார்கள் போல.  அவந்திகாவைக் காண அவளுடைய ஒரு சிநேகிதி வந்தார். என் நண்பர்களை நான் வீட்டில் சந்திப்பதில்லை.  ப்ரூ ரூம் என்று ஒரு ரெஸ்டாரண்டில்தான் சந்திப்பது.  அவந்திகா வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை என்பதால் வீட்டில்தான் சந்திப்பு.  வீட்டில் விஸ்காஸ் உணவு மூட்டைகள் இருப்பதைப் பார்த்த அந்தப் பெண்மணி “எங்கள் வீட்டுப் பூனைகள் சரியாக சாப்பிடாமல் இளைத்துக் கிடக்கின்றன, ஒரு மூட்டை கொடுத்தால் தேவலாம்” என்றார். நானாக இருந்தால் “எனக்குக் கிடைப்பதே ரொம்பக் கடினம் அம்மா” என்று அன்புடன் சொல்லி மறுத்திருப்பேன்.  அவந்திகா கர்ணனைப் போல.  உடனே எடுத்துக் கொடுத்தாள்.  ஒரு மூட்டை 2000 ரூ. பிச்சை எடுத்தாராம் பெருமாளு, அதைப் பிடுங்கித் தின்னாராம் அனுமாரு என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது. 

பிறகு ஒரு மாதம் சென்று அந்தப் பெண்மணி அவந்திகாவுக்கு போன் போட்டு பூனை உணவு தீர்ந்து விட்டது, ஒரு மூட்டை வேண்டும் அம்மா என்றார்.  இதற்கு முன்னால் என்ன உணவு சாப்பிட்டன என்று கேட்டாள் அவந்திகா.  நாங்கள் சாப்பிடுவதைத்தான் போடுவோம், ஆனால் இப்போது என் அம்மா வீட்டில் கொடுத்து விட்டதால் அங்கே சரியாக அவைகளுக்கு சாப்பாடு கிடைக்கவில்லை என்றார்.  அதற்கு அவந்திகா, எங்களுக்கே பூனை உணவு திண்டாட்டமாக இருக்கிறது அம்மா, எப்போதும் கொடுத்த உணவையே கொடுங்கள் என்று சொல்லி விட்டாள்.  எனக்கு அப்பாடா என்று இருந்தது.  ஆக மொத்தம், பிராணி நல ஆர்வலர்கள் பெருத்து விட்டது மட்டும் உறுதியானது.

சரி, நேற்றைய கதைக்கு வருகிறேன்.  முன்பெல்லாம் நான் டேவிட் வந்து அம்மா அம்மா என்று மெதுவாகக் கூப்பிட்டு கதவைத் தட்டிய பிறகுதான் டப்பாவில் உணவைப் போடுவது, ஈர உணவுப் பாக்கெட்டுகளை எடுப்பது, பத்து பூனைகளுக்கும் பத்து குழிக் கிண்ணங்களை எடுப்பது என்ற மூன்று வேலைகளையும் செய்வேன்.  அதற்குள் எனக்கு வேர்த்து விறுவிறுத்து நெஞ்சு வலி வந்து விடும்.  ஆஞ்ஜைனா என்று பெயர்.  சரியாவதற்கு ஒரு மணி நேரம் ஆகும்.  எதையும் எனக்குப் பரபரப்பாகச் செய்ய முடியாது.  செய்யவும் கூடாது.  டேவிட்டை வெளியே நிறுத்தி வைத்து விட்டு எப்படி நிதானமாகச் செய்வது?  சில சமயங்களில் ஈர உணவு கார்ட்டன் தீர்ந்து போயிருக்கும்.  புதிய கார்ட்டனை கத்தி எடுத்து வந்து கிழித்துத்தான் எடுக்க வேண்டும்.  பத்து கிண்ணங்களையும் பாத்திரக் கூடையிலிருந்து சத்தம் எழாமல் எடுக்க வேண்டும்.  அதெல்லாம் சர்க்கஸில் கீழே வலை இல்லாமல் பார் ஆடுவதைப் போன்றது.  அப்போது பார்த்துத்தான் பீங்கான் பாத்திரம் தரையில் சல்லென்று விழுந்து உடையும். 

இதனால்தான் ஆறு மணிக்கே அந்த மூன்று வேலைகளையும் பதற்றமில்லாமல் முடித்து வைத்து விடுவேன்.  காய்ந்த உணவு, ஈர உணவு, பாத்திரங்கள்.  வீட்டுக்கு வெளியே உள்ள மேஜையில் வைத்து விடலாமே, டேவிட் கதவைத் தட்டாமலேயே எடுத்துக் கொண்டு போக ஏதுவாக இருக்குமே என்றேன்.  டேவிட்டைத் தவிர மற்ற யாரும் கூட எடுத்துக் கொண்டு போவார்கள், பரவாயில்லையா என்றாள் அவந்திகா.  அதுவும் வாஸ்தவம்தான்.  பிராணி நல ஆர்வலர்கள் அதிகமாகி விட்டதைத்தான் நாம் பார்த்தோம் இல்லையா?

அதனால் வீட்டுக்கு உள்ளேயே வைத்திருப்பேன்.  டேவிட் வந்து கேட்டதும் எடுத்துக் கொடுப்பேன்.

நேற்றைய கதை.  இதற்கிடையில் லக்கி என்ற தாய்ப் பூனையும் அதன் நான்கு குழந்தைகளும் அவந்திகாவின் அறையில் வசித்தன.  குட்டிகள் வயது ஒன்றரை மாதம்.  பெயரெல்லாம் வைத்தாகி விட்டது.  ஆனால் கதைக்குத் தேவையில்லை.  கதை, ஒரு எழுத்தாளனான எனக்கு எழுதுவதற்கு உகந்த நேரம் எது என்பது பற்றியது.  ஏழரை மணி அளவில் அந்த அறையில் போய் எட்டிப் பார்த்தேன்.  ஐந்தும் தூங்கிக் கொண்டிருந்தன.  சாப்பிடும் நேரம்.  சரி, கேட்டால் கொடுக்கலாம் என்று என் அறைக்கு வந்து தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன். 

திடீரென்று என் அறைக் கதவை யாரோ படார் படார் என்று தட்டியதில் ஒருக்கணம் மிரண்டு போய் பிறகு நிதானம் அடைந்து திறந்தேன்.  உள் தாழ்ப்பாள் எல்லாம் போட மாட்டேன்.  ஆனாலும் வகுப்பில் இருக்கும்போது என்ன செய்வாள் அவந்திகா?  டேவிட் டேவிட் என்றாள் பதற்றத்துடன்.  மணியைப் பார்த்தேன்.  எட்டு.  உடனே போய் எடுத்து வைத்திருந்த காய்ந்த உணவு, ஈர உணவு, பாத்திரம் மூன்றையும் கொடுத்தேன். 

திரும்பவும் வந்து விட்ட இடத்திலிருந்து எழுத ஆரம்பித்தேன். ஒரு அரை மணி நேரம் சென்றிருக்கும்.  திரும்பவும் கதவு படார் படார் என்று அறையப்பட்டது.  திடுக்கிடல்.  ஆசுவாசம்.  பிறகு பார்த்தால் லக்கி லக்கி என்றாள் அவந்திகா மிகுந்த பதற்றத்துடன்.  லக்கி கிறா கிறா என்று கத்திக் கொண்டிருந்தது.  பசி. 

போய் ஐந்து பூனைகளுக்கும் உணவு கொடுத்தேன்.  திரும்பவும் வந்து அமர்ந்து, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். 

இப்படித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் நாள் முழுவதும். ஆண்டு முழுவதும்…

இன்று அதில் ஒரு கூடுதல் விசேஷம்.  ஹாலில் கிளாஸ் எடுத்தால் கார்த்திக்கின் பிராணிகள் வேறு வந்து தொந்தரவு கொடுக்கின்றன, நான் உன் அறையிலேயே வந்து கிளாஸ் எடுக்கிறேன் என்று சொல்லி அவந்திகா தன் மடிக் கணினியை எடுத்துக் கொண்டு வந்து என் அருகே அமர்ந்து விட்டாள். ஆமாம், கார்த்திக்கும் அவன் மனைவி அனுவும் தமது இரண்டு நாய்களோடும் ஒரு பூனையோடும் வந்திருக்கிறார்கள்.  இரண்டும் சிங்கம் போல் இருக்கின்றன.  பூனை நாய் போல் இருக்கிறது.  நான் தெற்கே பார்த்து அமர்ந்திருக்க, அவந்திகா மேற்கு பார்க்க அமர்ந்திருக்கிறாள்.  அதாவது, என் வலது புறத்தில் அவள் முதுகு.  என் கையைத் தூக்கினால் அவள் மீது இடிக்கும்.  என் அறை அவ்வளவு சின்னது.  கிறித்தவப் பாதிரிமார்கள் பிரசங்கம் பண்ணும் போது பேசுவார்கள் இல்லையா, அந்தக் குரலில் மிக உரத்துக் கத்தி பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறாள்.  கடவுளைக் கண்ணாரக் கண்டவர்களின் பரவசம் ஐயா.  அதிலெல்லாம் நம்மைப் போன்ற சாமான்யர்கள் குறுக்கிடக் கூடாது. 

நான் இந்தக் கதையை இவ்வாறாக எழுதி முடிக்கிறேன்…

என்னதான் சொல்லுங்கள், மார்க்கி தெ சாத் மனநோய் இல்லத்தில் டிஷ்யூ பேப்பரில் தனது நாவல்களை எழுதியதை விட நான் சௌக்கியமாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  டிஷ்யூ பேப்பர் சரி, எதைக் கொண்டு எழுதுவது?  பென்ஸிலை கடத்திக் கொண்டு வந்து கொடுத்தாள் ஒரு பெண்.  அந்தப் பெண்ணுக்கும் ஸாதுக்கும் காதல் மலர்ந்ததாக ஸாதின் சரித்திரம் சொல்கிறது.  இருந்தாலும் அவரை விட என் நிலை தேவலாம் என்பதில் எனக்கு ஒரு சிறிதும் சந்தேகம் இல்லை.   

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai