டன் டன் டன் டண்டனக்கர: சிறுகதை: அராத்து

அதிகாலை ஐந்து மணிக்கு போன் அடித்தால் பெரும்பாலும் எனக்குக் கேட்காது. அதிசயமாக எழுந்து மொபைலை எடுத்தேன். தங்கை. அப்பா இறந்து விட்டார் என்று தோன்றியது.
போனை எடுத்தேன்.

“அப்பா…”

“ஆமாண்ணா.“

அப்பாவுக்கு இப்போது சாகும் அளவுக்கு ஏதுமில்லை. அவர் சாவை யாரும் எதிர்பார்க்கவுமில்லை. அதனால், தங்கையின் அழைப்பைப்  பார்த்ததுமே அப்பா இறந்து விட்டார் என்று எனக்குத் தோன்றியது ஆச்சர்யமானது ஆகிறது. எனக்கு இல்லை, உங்களுக்கு.

எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஆளுக்கு ஒரு ஊரில் இருந்தோம். அதனால் எப்படிச் செல்வது என்று சடுதியில் அவளுடன் திட்டமிட்டு விட்டு போனை வைத்தேன்.

மனைவியும் குழந்தைகளும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். அறையை விட்டு வெளியே வந்து இன்னொரு அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டேன். அங்கே கிடந்த ஒற்றைக் கட்டிலில் அமர்ந்து கொண்டேன்.

உடனே அழுகை வரவில்லை. அழுகை வரவழைக்கவும் முயலவில்லை. சிறிது நேரம் அப்பாவின் வாழ்க்கை, அவர் வாழ்வில் என்ன அடைந்தார், எவ்வளவு அனுபவித்தார், ஏன் பிறந்தார் என ஒரு மூன்றாம் மனிதன் போல அந்த ஆத்மாவை அணுகினேன். அழுகை வந்தது. சிறிது நேரம் அழுதேன். கடவுளிடம் அப்பாவுக்காக பிரார்த்தித்தேன். இந்த ஆத்மாவுக்கு இனி அலைச்சல் மற்றும் அர்த்தமற்ற கவலைகள், துன்பங்கள் ஏதும் வேண்டாம் என வேண்டிக்கொண்டேன்.

அழுகையை முடித்துக்கொள்ளலாமா என்று சோதித்துக்கொண்டேன். இந்த நேரத்தில் இந்த உதாரணத்தைச் சொல்வது ரசமாக இருக்காதுதான், ஆனாலும் புரிய வைக்க வேண்டியதுதான் முதல் தேவை என்பதால் சொல்கிறேன். வெளியே கிளம்பும் முன் டாய்லெட்டில் இன்னும் கொஞ்சம் உச்சா வருகிறதா? ஆய் வருகிறதா என முக்கி முக்கிப் பார்ப்பார்கள் இல்லையா? எவ்வளவுதான் உஷாராக முக்கிப் பார்த்து, ஆட்டி, உதறிக்கொண்டு போனாலும், அடுத்த பத்து நிமிடத்தில் சிலருக்கு நிமிண்டி வெறுப்பேற்றும் அல்லவா? அதைப்போல இன்னும் அழுகை வருமா என சோதித்துக்கொண்டேன்.

இதற்கு முக்கிப் பார்க்க முடியாது . அதனால் இரண்டு வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்தேன்.

1)முன்பு போலவே இன்னும் கடுமையாக பிரார்த்தித்துப் பார்தேன். இந்த ஜீவனுக்கு ஏன் இவ்வளவு அலைச்சல்? இந்த ஜீவன் இந்த வாழ்க்கையில் என்ன சுகம் கண்டது இறைவா?

அழுகை முட்டவில்லை.

2) அப்பாவின் உயிரோடு இருக்கும் முகத்தை ஞாபகத்தில் கொண்டு வந்து இறந்து போன முகத்தை கற்பனையில் கொண்டு வந்து கொஞ்சம்  அலங்கோலமாக வாயைத்திறந்து வைத்துக்கொண்டு கேவிப் பார்த்தேன். கொஞ்ச அழுகை வந்து நின்று விட்டது.

மீண்டும் சீரியஸாக அப்பாவுக்காக கடவுளிடம் பிரார்த்தித்தேன். கடவுளுக்கு இவன் சீரியஸாக பிரார்த்திக்கிறான் என்ற தகவல் போய்ச் சேர வேண்டுமே! அவருக்கு இருக்கும் 1008 தகவல் தொடர்புப் பிழையில்  நாமும் சிக்கலைக் கொடுத்துவிடக்கூடாது என்ற அடிமன விழிப்புணர்வுதான் காரணம்.

அழுகையை சோத்தித்துக்கொள்வதற்கு முக்கியக் காரணம் , குழந்தைகள் பயந்துவிடக்கூடாது என்பதுதான். அவர்கள் பிறந்த பின் வீட்டில் நிகழும் முக்கியச் சாவு. தங்கள் அப்பாவே கேவிக் கேவி அழுதால் குழந்தைகள் மனதில் என்ன விதமான குழப்பங்கள் விளையுமோ என்ற முன்னெச்சரிக்கைதான்.

மனைவியை எழுப்பினேன். ”என்ன காலங்காத்தால எழுந்துட்டீங்க? இல்ல நைட்டு ஃபுல்லா தூங்கவே இல்லையா?” என்றாள்.

விஷயத்தைச் சொன்னேன்.

”அதை ஏன் இவ்ளோ லேட்டா சொல்றீங்க? நீங்க யாரும் உங்க வீட்ல என்னை ஒரு ஆளாவே மதிக்கிறதில்லை. கல்யாணம்தான் சொல்றதில்லைன்னா  கருமாதியும்…“ என கடைசி வாக்கியத்தை முழுங்கிக்கொண்டு, வேறு பல சொற்களைத் திரட்டி  புலம்ப ஆரம்பித்தாள்.

அதிக பட்சம் 30 நிமிடங்கள் தாமதமாகச் சொல்லியிருக்கிறேன். அதுவும் எங்க அப்பா செத்ததுக்கு அவள் தூக்கத்தை ஏன் கெடுப்பானேன், இன்னும் 30 நிமிடம் தூங்கட்டுமே என்ற நல்லெண்ணத்தில். அவள் புலம்பிக்கொண்டே காஃபி போட ஆரம்பித்தாள். காஃபி போட்டுக்கொண்டே பலருக்கும் போனில் அழைத்துத் தகவலைச் சொல்ல ஆரம்பித்தாள். எத்தனை பேர் எழவுச் செய்தியோடு கண் விழித்தார்களோ தெரியவில்லை.

“நான் ரெடி ஆவறேன். குழந்தைங்க எழுந்தா நீ எதுவும் சொல்லாத, நானே சொல்லிக்கறேன்” என்று சொல்லி விட்டுக் கிளம்பத் தயாராக ஆரம்பித்தேன்.

குளிக்கும் போது அப்பா நினைவுக்கு வந்தார். யாரோடும் சேராத ஒற்றை மனிதர். எதிர்பாரா சாவு என்றாலும், வயதும் ஓரளவு சாவதற்குத் தயாராகும் வயதுதான். சாவதற்கு ஒருமாதம் முன்பு கூட ஓடும் பஸ்ஸில் போய் ஏறினார் என ஊர்க்காரர் ஒருவர் போனில் பேசும்போது புகார் அளித்தார்.

நல்ல காலம், மருத்துவமனை, படுத்த படுக்கை என்றில்லாமல் போய்ச் சேர்ந்து விட்டார். இதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். சாவிலும் ஓடி விட்டார்.

இதே மாதிரி  ஒரு காலைப் பொழுதில்தான் கோகுலுக்கு ஒரு டெக்னிக்கல் சந்தேகம் கேட்க போன் அடித்தேன்.

கோகுல் போன் எடுக்கவில்லை.

கோகுல் என் சொந்த ஊர்க்கார பையன். அவனுடைய அப்பா எனக்கு மூன்றாம் வகுப்பிலோ நான்காம் வகுப்பிலோ வாத்தியார்.

”பொய் சொல்லக் கூடாது, புலால் உணவு கூடாது“ என்று ஒரு வகுப்பு முழுவதும், மணி அடிக்கும் வரையிலும் இதையே சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது.

நாங்கள் அனைவரும் இதை கத்திக் கத்திச் சொல்லிக்கொண்டு இருந்தோம். இதைத்தான் மெக்காலே கல்வி முறையின் சதி என்கிறார்கள் போலும். ஏனெனில் அந்த வகுப்பில் படித்த மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் கடும் பொய்யர்கள் ஆனோம். தேவையே இல்லாமல் பொய் சொல்ல ஆரம்பித்தோம். தேவைக்குப் பொய் சொல்வதை விட தேவையில்லாமல் பொய் சொல்வது எங்கள் வாடிக்கை ஆனது. உண்மையை மாற்றி சொன்னால்தானே பொய்? நாங்கள் உண்மையை அடியோடு நிராகரித்து விட்டு, சுயம்புவான பொய்களை உருவாக்கினோம்.

அது மட்டுமல்லாமல் கோகுல் அப்பா  நாடக நடிகரும் கூட. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது என்னை ஹீரோவாகப் போட்டு, “அஸ்வத்தாமன்“ என்ற இரண்டு  மணி நேர நாடகத்தை இயக்கினார். நான்தான் அஸ்வத்தாமன்.

“என்ன? அடித்ததுமல்லாமல் ஆணவமாகப் பேசினானா? யுத்தம் செய்யும் முறைகளைப் புறக்கணித்து உன் தொடையில் கதையால் தாக்கியதும் அல்லாமல் உன் முடி மீது எட்டி உதைத்தானா? சொல், துரியோதனா சொல்.“

எத்தனை முறை சொல்லிக்கொடுத்து இருந்தால் இன்னும் நினைவிருக்கும்? இதைப்போல கணிதம் அறிவியல் பாடங்களை அப்போது சொல்லிக்கொடுக்க ஆள் இல்லாமல் போனது.

இப்படி ரிஹர்சலில் கர்ஜிக்கும்போதே எனக்குப் பெண் ரசிகர்கள் உண்டானார்கள். எல்லோரும் ஏழாம் வகுப்பு , எட்டாம் வகுப்புப் பெண்கள். உடன் படிக்கும் பெண்களை மயிரைக் கூட மதிக்காத ஓர் உணர்வு பொங்கிப் பிராவிகித்துக்கொண்டிருந்த காலம் அது. மேடையில் இரண்டு மணி நேரம் கர்ஜித்து முடித்ததும் பெண் ரசிகைகள் கூட்டம் அதிகமானது. நான் ஐந்தாம் வகுப்பு என்பதால் அப்போது பெரிதாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியவில்லை.

நான் ஆறாம் வகுப்பு நகரத்தில் வேறு பள்ளியில் சேர்ந்தாலும், மாவட்டக் கலைக் கழகப் போட்டிக்காக எனக்கு நாடகப் பயிற்சி கொடுத்தார் கோகுலின் தந்தை. அப்போது கோகுல் பொடியன். ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருப்பான். ஆனால் அவனின் அக்காக்கள் இரண்டு பேர், அவர் சொல்லிக்கொடுப்பதையும், நான் நடிப்பதையும் பார்த்து சிரித்துக்கொண்டே இருப்பார்கள். அது அந்த வயதில் ஒருவித எரிச்சல் உண்டாக்கும் சிரிப்பு. அதிலும் இரண்டு மாதத் தொடர் பயிற்சி. தொடர் சிரிப்பு. அஜீத்துக்கு எதிராக பலர் செய்துகொண்டிருக்கும் சதிகளைக் காட்டிலும் கோகுலின் இந்த அக்காக்கள் எனக்கு எதிராக தொடர்ந்து செய்து வந்த சதியின் வீரியம்  அதிகம். ஆனால் நானும் அஜீத் போலவே சதியை வென்று மாவட்ட அளவில் முதல் பரிசு வாங்கி அவரிடம் கேடயம் கொடுத்து ஆசி பெற்றேன்.

அதன் பிறகு சென்னை வந்து செட்டில் ஆகி, ஒரு நிறுவனம் ஆரம்பித்து, அதில் நொண்டியடித்துக்கொண்டு இருந்த போது, வேலை வேண்டும் என்று பச்சை மண்ணாக சென்னை வந்து இறங்கினான் கோகுல். அவனும் என்னுடன் சேர்ந்து நொண்டியடித்து இப்போது ஒரு கம்பெனியில் டெக்னிக்கல் அசோசியேட் இயக்குநராக உள்ளான்.

சில நிமிட இடைவேளையில் கோகுல் போனில் அழைத்தான்.

“சாரிண்ணே, போன் எடுக்க முடியாத அவசரம்.“

“பரவல்ல தம்பி, இப்ப ஃப்ரீயா?”

“இன்னும் கொஞ்ச நேரத்துல ஃப்ரீ ஆயிடுவேண்ணே.“

கோகுலுடன் பேசிக்கொண்டு இருக்கையிலேயே ஆழி தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்து என் மடியில் அமர்ந்து கொண்டு, சோகமாக முகத்தை வைத்துக்கொண்டான். விழிப்பு வந்து விட்ட சோகம்தான் அது.

“ஃப்ரீ ஆயிட்டு கூப்பிடு கோகுல். ஏதாச்சும் சிக்கலா ? நான் ஏதாச்சும்…”

“ஆஸ் யூசுவல் தாண்ணே, அப்பாவை திரும்ப போரூர் ராமச்சந்திராவுல சேர்த்திருக்கேண்ணே.“

”ஓஹ், நீ மட்டும்தானா, இப்பவும்?”

“அண்ணே ஒன் மினிட், கூப்படறாங்க, டூ மினிட்ஸ்ல திரும்ப கூப்புடறேன்.”

ஆழி மடியில் அமர்ந்து கொண்டே ஒரு கொட்டாவி விட்டான்.

பெரும்பாலான தொலைபேசி உரையாடல்களை நான் ஸ்பீக்கர் போட்டு பேசுவது வழக்கம்.

கோகுல் அப்பா, அதுதான் என் வாத்தியார் கடந்த பல வருடங்களாகவே ஒரு குறிப்பிட்ட பிரச்சனையால் அவதிப்படுகிறார். இதுவரை பத்துப் பதினைந்து முறைக்கு மேல் மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்த்தாகி விட்டது. இப்போது அநேகமாக பதினேழாவது முறையாக இருக்கலாம். ஆரம்பத்தில் ஓரிரு முறை மருத்துவமனைக்கு வந்த குடும்ப உறுப்பினர்கள் பிறகு நிறுத்திக்கொண்டார்கள். ஒவ்வொரு முறையும் கோகுல்தான் லேப்டாப் சகிதம் மருத்துவமனை வராண்டாவில் டாப் அடித்து உட்கார்ந்து விடுவான். வீட்டுக்கு அழைத்துச் சென்றாலும், வாத்தியார் படுத்த படுக்கைதான். கிட்டத்தட்ட கடந்த மூன்று ஆண்டுகளாக இதே நிலைமைதான்.

மீண்டும் கோகுல் போன் அடிக்க, ஆழி எடுத்துக்கொடுத்தான். ஆழியின் துக்கக் கலக்கம் விலக ஆரம்பித்து கண்களில் ஒளியும் முகத்தில் பொலிவும் கூடிக்கொண்டு இருந்தது.

“ம்ம்… சொல்லு கோகுல்.“

“பழைய மாதிரிதாண்ணே, நாலைஞ்சி நாள் ஹாஸ்பிடல்ல இருக்கணுமாம்.“

”கோகுல், நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?“

”சொல்லுங்கண்ணே…”

“டிஸ்சார்ஜ் ஆயி வீட்டுக்குப் போனதும் பெட் ரெஸ்ட் தானே?”

“ஆமாண்ணே.”

“சார்க்கு தனி ரூமா?”

“ஆமாண்ணே.”

“யார் கவனிச்சிக்கிறா?”

“மோஸ்ட்லி நான்தான், அக்கா எப்பவாச்சும் சாப்பாடு குடுக்க வருவாங்க, மத்தபடி டாய்லெட், குளுப்பாட்டறது எல்லாம் நான்தான்.“

“எத்தனை மணிக்குத் தூங்குவாரு? எத்தனை மணிக்கு முழிப்பாரு?“

“மாத்திரைல்லாம் குடுக்கறதால பத்து மணிக்கெல்லாம் தூங்கிடுவாருண்ணே, ஏழு மணி பக்கம் எழுந்திருப்பாரு.“

“நடு ராத்திரில எழுந்திருப்பாரா?”

“ஆமாண்ணே, பெல் வச்சிருக்கேன். அதை அடிப்பாரு, நான் போய் என்னான்னு பாத்து தண்ணி, இல்ல பாத்ரூம்…”

“சரி, ஒண்ணு பண்ணு, நடு ராத்திரி எழுந்து கூப்புடுறாரு இல்ல, அப்ப போய் என்ன வேணுமோ செஞ்சிட்டு, ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சி அவர் மூஞ்சில தலையணையைப் போட்டு அதும் மேல ஏறி ஒக்காந்துக்கோ கோகுல்.“

“அண்ணே…”

ஆழி மடியை விட்டு இறங்கி விட்டான்.

“இல்லப்பா… செண்டிமெண்ட் எல்லாம் பாக்காத, அவருக்கும் இதான் நல்லது. பாவம், ஓடியாடிட்டு இருந்த மனுஷன். நாலு வருஷமா படுத்த படுக்கையா இருக்காரு, ஹாஸ்பிடல், ஆப்பரேஷன்னு எக்கச்செக்க பெயின்…“

“போங்கண்ணே… சும்மா… அதெல்லாம் பாவம்ணே, நீங்க எப்பவும் இப்டித்தான் வெளாட்டா…”

”இல்ல தம்பி சீரியஸா சொல்றேன். தலையணை மேல ஒக்காந்துட்டு இருக்க ஒரு மாதிரியாத்தான் இருக்கும். எதாச்சும் பொண்ணு கூட அப்ப சாட் பண்ணு, இல்லன்னா ஏதாச்சும் கவிதை படிச்சிட்டு இரு.“

ஆழி “யார்ரா இவனுங்க கிறுக்கனுங்க” போல பார்த்துக்கொண்டு இருக்க…

”அண்ணே… சும்மாருங்கண்ணே அதெல்லாம் என்னால முடியாது… சும்மா ஏதாச்சும் பேசிகிட்டு…”

“புரியிது தம்பி, நீ அப்டியே வளந்துட்ட, சரி வேற ஒரு டீல்.“

”எனக்கு எந்த டீலும் வேணாம்ணே.”

“சும்மா கேளுப்பா…  உனக்குக் கஷ்டமாத்தான் இருக்கும். எனக்கும் வாத்தியார்தான். எனக்கும் கடமை இருக்கு. ஒரு நாள் என்னைக் கூப்பிடு. நைட் வீட்ல யாரும் இருக்க வேணாம். உனக்காக நான் தலையணை போட்டு மேல ஒக்காந்துட்டுப் போயிடறேன். நீ மறுநாள் காலைல டிக்ளேர் பண்ணிக்கோ. சரி, உங்க அபார்ட்மெண்ட்ல சீசிடிவி கேமரா இருக்கா?”

”ஏண்ணே சும்மா…”

“தம்பி சும்மா இல்ல. சும்மால்லாம் செய்ய மாட்டேன். எதிர்காலத்துல எங்க அப்பாவுக்கு இப்டி ஒரு நிலைமை வந்தா, நீ பதிலுக்கு இதே மாதிரி செய்யணும்.“

“இது எதுவும் வேணாம்… ஆளை விடுங்க.“

“நான் அப்டி பண்ணிட்டு என்  வீட்டுக்கு வந்து நைஸா தூங்கிடுவேன். நீதான் மறுநாள் காலைல எனக்கு கால் பண்ணி சொல்லி அழுவணும் என்னா?”

“அண்ணே ப்ளீஸ்ணே…”

“சரி, யோசிச்சி அப்புறமா பர்ஸனலா கூப்டு சொல்லு.“

“சரிண்ணே , உள்ள கூப்புடறாங்க, அப்புறமா பேசறேன்.”

போன் அணைத்து வைத்ததும் ஆழி…

“என்னாப்பா இப்டி மட்டமா பிஹேவ் பண்றீங்க?”

“இல்லடா ஆழி, பாவம்தான அவரு? இப்ப ஃப்யூச்சர்ல எனக்கே இப்டி ஆனா, நீதான் எனக்கு இப்டி பண்ணணும், ஓகேவா?”

“சான்ஸே இல்ல, நான்லாம் இப்டி கேவலமா பண்ண மாட்டேன்.“

“ப்ளீஸ் ஆழி… உன்னை விட்டா எனக்கு யாருடா இருக்கா? ப்ளீஸ்டா பண்ணுவியா?”

“சாரிப்பா, செய்ய மாட்டேன்.“

“யேய், நான் டெய்லி ரொம்ப கஷ்டப்படுவேண்டா.“

“அப்பா, காலையிலயே டார்ச்சர் பண்ணாதீங்க, அப்டி ஆச்சின்னா, அப்ப யோசிச்சி என்ன தோணுதோ செய்யறேன்.”

“கண்டிப்பா தலையணையை மூஞ்சில போட்டு ஒக்காருவியா ஆழி?“

“அப்பா, லூஸு மாதிரி பேசாதீங்க.”

”ப்ளீஸ்டா.”

 ”சரிப்பா,  உங்களுக்காக டிரை பண்றேன்.”

ஆழி எழுந்து ஓடிப் போன சில நாட்களில் ஒருமுறை கோகுல் வீட்டுக்குப் போக வேண்டி வந்தது. அப்போது வாத்தியாரை அவர் அறையில் சென்று சந்திக்கவில்லை. கோகுல் வீட்டில் ஆழிக்குக் கொடுத்த தின்பண்டங்களை ஆழிக்குக் கொடுத்தேன்.

அடுத்த சில நாட்களில் கோகுல் போன். அதே போல ஸ்பீக்கர் போன்.

“அண்ணே, அப்பா போயிட்டாருண்ணே.”

“தம்பி, உடனே வரேன், எப்டி தம்பி?“

“நைட்டு பாத் ரூம் போவ பெல் அடிச்சாருண்ணே, கூட்டிட்டு போய் வந்தேன். தண்ணி குடுத்து படுக்க வச்சேன், காலைல பாத்தா…”

கோகுல் தேம்ப,

“தம்பி ஒன் அவர்ல வரேன்“ என்று கூறி போனை கட் செய்தேன்.

“ஏங்க சாவு வீட்டுக்கு போய்ட்டு வந்தா, வீட்டுக்குள்ள வரக்கூடாது , வர்ரப்ப எனக்கு போன் பண்ணுங்க.”

நான் இருப்பதோ அபார்ட்மெண்ட். தோட்டம் தொறவு ஏதும் இல்லை.

“ஏன்டி போன் பண்ணா என்னா செய்வ? தெருவுல தண்ணியை வப்பியா?”

“ஆமா, தெருவுலயே குளிச்சிட்டு உள்ள வாங்க.“

“ஏய், தெருவுல எப்டி குளிக்க முடியும்?”

“ஹலோ, அப்டியே டிரஸ்ஸோட தலைக்கு தெருவுல தண்ணி ஊத்திட்டு, உள்ள வந்து ஷாம்பூ, பாடி வாஷ் போட்டு குளிச்சிக்கலாம்.”

“இல்ல, நீ தெருவுலயே பாடி வாஷ், ஷாம்பு எல்லாம் ரெடி பண்ணி வை, மொத்தமா அங்கயே முடிச்சிக்கிறேன்.”

“அய்ய, தெருவுலயே முண்டகட்டயா குளிப்பீங்களா?“

“நான் குளிப்பேன், ஆனா தெரு தாங்காது. ஜட்டி போட்டு குளிச்சிக்கிறேன். ஜட்டிக்குள்ள சோப்பு போடுறது ஒண்ணும் பெரிய காம்ப்ளக்ஸ் இல்ல.“

“ஏதோ பண்ணித்தொலைங்க, ஆனா குளிக்காம வீட்டுக்குள்ள வந்துடாதீங்க.“

உடை மாற்றிக்கொண்டு கிளம்புகையில், ஆழி, “அப்பா நேத்து நைட்டு எங்க இருந்தீங்க?” என்று கேட்டான்.

“வீட்லதாண்டா.“

“பொய் சொல்லாதீங்க, கோகுல் வீட்டுக்கு போனீங்களா?”

“இல்லடா, சத்தியமா இங்கதான் இருந்தேன், எங்கயும் போகலை.“

“சாரிப்பா, எனக்கு சந்தேகமா இருக்கு, நான் 100க்கு போன் பண்ணி சொல்லப்போறேன்.“

“யேய் ப்ளீஸ்டா, அப்டில்லாம் செஞ்சிடாதடா. இது ரெண்டு பேர் வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயம்டா.”

”இல்லப்பா, இதெல்லாம் எனக்குப் புடிக்காது, நான் போன் பண்ணி கம்ப்ளைண்ட் பண்ணப்போறேன்.“

”நான் உன்கிட்ட எதா இருந்தாலும் ஃபிராங்கா பேசுவேன் இல்ல, சத்தியமா நான் நேத்து நைட் வீட்லதான் இருந்தேன், எங்கயும் போகலை.“

“அப்ப கோகுல் அங்கிள் செஞ்சாரா?”

“அது எனக்கு எப்டிடா தெரியும்? செஞ்சி இருந்தாலும் அது அவங்க குடும்ப விஷயம், நாம தலையிட முடியாது இல்ல?”

“நீங்கதான ஐடியா குடுத்தீங்க? நான் போலீஸ் கேட்டா சொல்லுவேன்.“

“தோ பாரு, போலீஸே என்கொயரி பண்ண வந்தாலும், நானும் கோகுலும் பேசினதை சொல்லக் கூடாது சரியா?“

“சாரிப்பா, போலீஸ் கேட்டா என்னால பொய் சொல்ல முடியாது. எல்லா உண்மையும் சொல்லிடுவேன்.“

இது என்னடா வம்பு ? எனக்கு வாத்தியார் ஒரு பீரியட் முழுக்க சொல்லிக் கொடுத்ததை என் மகன் பிடித்துத் தொங்குகிறானே என நினைத்தபடியே ஒரு பெரிய மாலை வாங்கிக்கொண்டு கோகுல் வீட்டுக்குச் சென்றேன்.

கோகுல் சோகத்தினூடே சாவு ஈவண்டை நிர்வகித்துக்கொண்டும், நண்பர்களுக்கு ஆணைகள் பிறப்பித்துக்கொண்டும் இருந்தான். நான் சில பாடை நிர்வாக ஆலோசனைகளை வழங்கி விட்டு மாடி ஏறி வாத்தியாரைப் பார்க்கச் சென்றேன்.

வாத்தியார் நிம்மதியாகப் படுத்துக் கிடக்க , சில பெண்கள் அந்த அறை முழுக்க இருந்தனர். என்னைப் பார்த்ததும் சிலர் விசும்ப ஆரம்பித்தனர். கோகுலின் இரண்டு அக்காக்களும் அழுது வீங்கிய முகத்துடன் இருந்தனர்.

“சீனு… பாரு சீனு உங்க சாரை“ என்று மூத்த அக்கா அழுதுகொண்டே வாத்தியாரைக் காட்டினாள். இவள்தான் நான் நாடகம் நடிக்கையில் அதிகம் சிரித்து வெறுப்பேற்றிய ஆள்.

“ஓக்கே, தெரியும் வனி” என்றேன்.  மேலும், “சார் நல்ல வாழ்வு வாழ்ந்தாரு, கல்யாணச் சாவுதான்“ என்றெல்லாம் தேறுதல் வார்த்தைகள் சொல்லி விட்டு மாடியில் இருந்து கீழே இறங்குகையில், கோகுலிடம் ”தம்பி நான் சொன்ன மாதிரி ஏதாச்சும் பண்ணிட்டியா?” என்று கேட்டேன்.

“அண்ணே… என்னண்ணே, அப்பா…” என்று அழத் தயாரானவனை அணைத்துத் தேற்றி ,

“சரி, இப்ப ஆவறதை பாப்போம்“ என்று கூறி, அங்கே விநியோகித்துக்கொண்டிருந்த டீயை கல்யாண மண்டப ஜக்கில் இருந்து பேப்பர் கப்பில் வாங்கிக் குடித்து விட்டு சுடுகாடு சென்று, தெருவில் குளித்து, வீட்டினுள் நுழைந்தேன்.

இப்போது தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த ஆழியிடம் அப்பா இறந்ததைப் பதமாகக் கூறி, கிளம்ப ஆயத்தமானால், மனைவி வீடு மாற்றுவதைப்போல எக்கச்சக்க லக்கேஜ்களை கட்டிக்  கட்டி செயிண்ட் தாமஸ் மவுண்ட் தலைமைத் தபால் நிலையம் போல கடாசிக் கொண்டிருந்தாள். நிர்ணயித்த நேரத்தை விட இரண்டு மணி நேரம் தாமதமாகக் கிளம்பினோம்.

இமயா, சாவுக்கு வரமாட்டேன் என்றாள். ஏனென்று கேட்டதற்கு, “தனக்கு சாவுக்கு செல்வது பிடிக்காது” என்றாள்.

“அதான் ஏன்னு சொல்லு“ என்றால் அவளுக்கு டெட் பாடி பிடிக்காதாம்.

ஒருவழியாய் எல்லோரையும் தூக்கி காரில் அடைத்து அப்பா ஊருக்குச் சென்றேன்.

இது நடந்து ஓரிரு மாதங்கள் கழித்து கோகுல் போன் செய்து இன்று சந்திக்க வரலாமா என்றான்.

“இல்ல தம்பி, ஊர்ல இல்ல, அப்பா ஊர்ல இருக்கேன்.“

“ஓ அப்டியாண்ணே, அப்பா நல்லா இருக்காரா?“

”உன் கிட்ட சொல்லலை இல்ல, அப்பா ரெண்டு மாசத்துக்கு முன்னால தவறிட்டாரு. அதான் கொஞ்சம் அஃபீஷியல் வேலை பாக்கி இருக்கு, அதுனால அப்பா ஊர்ல இருக்கேன்.”

மறுமுனையில் நீண்ட அமைதி.

பிறகு,

“ஏண்ணே சொல்லலை?” என்றான்.

“இல்லப்பா, நீ சென்னைல இருக்க, சொன்னா நீ ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வரணும். வரமுடியலைன்னா, என் கிட்ட ஏதாச்சும் காரணம் சொல்லணும். பொய் சொல்லணும். எதுக்கு உனக்கு தர்மசங்கடம்னு…”

“அண்ணே டூ மச்ணே… நீங்க பெரிய அட்வான்ஸ்னு நினைச்சிகிட்டு இப்டில்லாம் பண்றது நல்லால்லைண்ணே…“

“ஏம்பா, உனக்கும் எங்க எப்பாவுக்கும் கனக்‌ஷனே கிடையாது. அவரை ரெண்டு தடவை பாத்திருப்பியா? அதை விடு, ஓப்பனா சொல்லு, சொல்லியிருந்தா வந்திருப்பியா? உண்மையா  சொல்லு. சொல்லாம விட்டதுதானே உனக்கும் ஜாலி?“

“அண்ணே சும்மா கடுப்பாக்காதீங்கண்ணே, எப்பப் பாத்தாலும் இப்டியே பேசிகிட்டு. நீங்க என்னை கூப்டாம விட்டது, எனக்கு சொல்லாம விட்டது தப்புதாண்ணே. நீங்க கூப்டு இருக்கணும்.“

“இல்ல தம்பி, ஓப்பனா சொல்லிடறேன். நானே எதிர்பாக்காம அவர் செத்து போயிட்டாரு. அவருமே எதிர்பாக்கலை. நார்மல் டெத் தான். உன்னைக் கூப்புட வேண்டிய தேவையே வரலை தம்பி, சாரி தம்பி…“

“போங்கண்ணே… ஏதாச்சும் ஹெல்ப் வேணுமாண்ணே?“

”இல்ல தம்பி… எல்லாத்தையும் முடிச்சிட்டேன். அதை விடு,  சார் எப்டி செத்தாரு, நார்மல் டெத் தானா?”

—————————————————–