21 தினங்கள் 12 உருப்படிகளுக்காக மாடு மாதிரி வேலை செய்தாள் அவந்திகா. மகன், மருமகள், சிங்கம் சைஸில் இரண்டு கோல்டன் ரெட்ரீவர் நாய்கள், நாய் சைஸில் ஒரு பெர்ஷியன் பூனை, எங்கள் வீட்டுப் பூனைகள் ஐந்து – எல்லாம் சேர்த்து பன்னிரண்டு. சமயம் பார்த்து பணிப்பெண்ணும் நின்று விட்டதால் எல்லா வேலையும் அவந்திகா தலையில். உட்காரக் கூட முடியாமல் பன்னிரண்டு மணி நேர வேலை. நானும் கூட மாட ஒத்தாசை செய்வேன். ஆனால் கடின வேலைகளை என்னால் செய்ய இயலாது. அவளும் என்னைச் செய்ய அனுமதிக்க மாட்டாள். பட்டாளம் இன்று காலை கிளம்பி விட்டதால் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டி, இன்று சமைக்க வேண்டாமே என்றாள் அவந்திகா. அவளுக்கு சாப்பாடு எப்போதுமே முக்கியம் அல்ல. நேற்று வைத்த சாம்பார், ரசம் எல்லாம் இருக்கிறது. நான் வேறு மாதிரி. அன்னபூர்ணிக்கு மெஸேஜ் செய்தேன். மீன் குழம்பு வேண்டும். உடனே அன்னபூர்ணி அழைத்து விட்டார். அய்ரை, வஞ்சிரம், விரால் – இதில் எது வேண்டும் என்றார். விரால் என்றேன். இதோ இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது குழம்பு வந்து விட்டது. பொதுவாக மீன் குழம்பு என்றால் தொட்டுக் கொள்ள எதுவும் எனக்குத் தேவைப்படாது. ஆனால் விரால் என்று காதில் விழுந்ததும் விரால் வறுவல் நன்றாக இருக்குமே என்று வறுவலும் சொல்லி விடு என்றேன்.
என்னால் இந்த வேலையைச் செய்ய இயலாது. முதலில் கடை தேட வேண்டும். அதிலிருந்து ஆரம்பிக்கும் வேதனைக் கதை. பைத்தியம் பிடிப்பது போல் ஆகி விடும். உங்களுக்கு இந்த வேலையெல்லாம் தூசு. எனக்கு மண்டை காய்ந்து விடும். காலையில் நடந்த ஒரு வேதனைக் கதையைச் சொல்கிறேன். நான்கு மணிக்கு எழுந்து தியானம் செய்ய அமர்ந்தேன். கணினியின் திரையில் வெளிச்சம் இருந்தது. அதை நான் பொதுவாக எதுவும் செய்ய மாட்டேன். ஏனென்றால், எதையாவது ஒன்று கிடக்க ஒன்று செய்து ஏதாவது ஏடாகூடம் ஆகி வேலை கெட்டு விடும் என்ற பயம். ஆனால் கார்த்திக் சொன்னான், கணினித் திரையின் கீழ்ப் பகுதியில் இருக்கும் ஒரு குமிழை அழுத்தினால் வெளிச்சம் மறைந்து இருட்டாகி விடும். தேவைப்படும் போது அதே குமிழை அழுத்தினால் வெளிச்சம் வந்து திரை தெரிய ஆரம்பிக்கும். செய்தும் காண்பித்தான் என்பதால் இந்த எளிமையான வேலைக்கா பயந்தோம் என்று நினைத்து குமிழை அழுத்தி திரையை இருளாக்கி விட்டு தியானத்தில் அமர்ந்தேன். தியானத்தை முடித்து விட்டு வேலை செய்ய நினைத்து குமிழை அழுத்தினால் வெளிச்சம் வரவில்லை. முடிந்தது கதை. எந்த வேலையும் செய்ய இயலவில்லை. என் கைபேசியை எடுத்து அதில்தான் பத்து மணி வரை படித்துக் கொண்டிருந்தேன். பத்து மணிக்கு சீனி கொடுத்திருந்த ஒரு எண்ணுக்கு போன் செய்தேன். முன்பெல்லாம் கணினியில் பிரச்சினை என்றால், தெரிந்தவர்களையே அழைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் அம்பத்தூரிலிருந்தோ, மறைமலைநகரிலிருந்தோ வருவார்கள். சீனிதான் கச்சேரி சாலையிலேயே ஆட்கள் கிடைக்கும்போது ஏன் இப்படி சிரமப்பட வேண்டும் என்று சொல்லி, கச்சேரி சாலை கணினி சேவை மையத்தின் எண்ணையும் கொடுத்தார். பத்து மணிக்கு போன் செய்ததும் ஐந்து நிமிடத்தில் எஞ்ஜினியர் வந்தார்.
வந்ததும் கணினியின் அருகில் ஒரு டப்பா இருக்குமே, அதில் எதையோ அமுக்கினார். திரை தெரிய ஆரம்பித்தது. பணம் வேண்டாம் சார் என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார். அப்புறம் சீனியை அழைத்து அந்த டப்பாவின் பெயர் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். சிபியூ என்று பெயராம். சே, அதை ‘ஆன்’ பண்ண மறந்து விட்டேன்.
காரணம், ஔரங்கசீப். மற்ற கதைகளைப் போல் இல்லை. மற்ற கதைகள் ஆட்டோஃபிக்ஷன். இது இன்னொருத்தரின் கதை. அதுவும் மிகவும் சிக்கலான மனிதர். எனக்கு மற்ற எழுத்தாளர்களைப் போல் காலையில் நாவல், மதியம் குமுதம், மாலை உயிர்மை, இரவு சினிமா என்று எழுத முடியாது. அந்தத் திறமை எனக்கு இல்லை. ஔரங்கசீப் என்றால் நானே ஔரங்கசீப்பாக மாற வேண்டும். அப்படி மாறினால் மற்ற வேலைகளை உறக்கத்தில் செய்வது போல்தான் செய்வேன்.
இப்படிப்பட்ட நிலையில் அன்னபூர்ணி மாதிரி ஒரு பத்து இருபது நண்பர்கள் உள்ளனர். அவர்களால்தான் என் இயக்கம் பங்கமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.