பொதுவாக என் எழுத்தைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குப் புரியும். நான் மனிதர்களை விரும்பவில்லை. குறிப்பாக இந்தியர்களின் பழக்க வழக்கங்கள் எனக்கு மிகுந்த எரிச்சலைத் தருகின்றன. இந்தியர்கள் ஒன்றும் நரகத்திலிருந்து வரவில்லைதான். ஆனால் இவர்கள் இவர்களின் பெற்றோரினால் இப்படியாகத்தான் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். எங்கள் வீட்டுக்கு மேல் வீட்டில் குடியிருப்பவர்கள் பெரும் கோடீஸ்வரர்கள். ஆனால் மேல் வீட்டிலிருந்து எங்கள் பால்கனியில் சகலமும் வந்து விழுகிறது. வாழைப்பழத் தோல், சாக்லெட் காகிதங்கள், கோழி மற்றும் ஆட்டு எலும்புத் துண்டு, தரை பெருக்கும் துடைப்பானிலிருந்து விழும் அழுக்குத் தண்ணீர், இப்படி ஏராளம். குழந்தைகளிலிருந்து முதியோர் வரை இப்படித்தான் வாழ்கிறார்கள், இப்படித்தான் அவர்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதனால்தான் என் வாசகர் வட்ட நண்பர்களுக்கு நான் பயிற்சி கொடுக்கிறேன். அப்படிப்பட்ட வாசகர் வட்டத்திலிருந்து ஒரு முக்கியமான ஆள் வந்து ஒரு ஒட்டு மொத்த விழாவையே காலி பண்ணுகிறான் என்றால் நான் அது பற்றி அதிகம் யோசிக்கிறேன். யாருக்குமே நான் சொல்வதன் வீரியம் புரியவில்லையோ என சந்தேகப்படுகிறேன். நண்பர்கள் போன் செய்து ”இந்த விஷயத்தை இதோடு விட்டு விடுங்கள், வேலையைப் பாருங்கள், உங்கள் வேலையை இந்தச் சின்ன விஷயம் கெடுத்து விடக் கூடாது” என்று கவலையுடன் சொல்லும் போது என் கவலை அதிகமாகிறது. என் வேலையே இதுதானே? அடுத்த மனிதனின் தோளை உடைத்து விட்டு ஒரு ஸாரி கூட சொல்லாமல் போகும் மனித மனோபாவம் பற்றித்தானே நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்? அம்மாதிரி காரியத்தை என் வீட்டிலிருந்தே ஒருத்தன் செய்கிறான் என்றால் – அதுவும் பல முறை கண்டித்த பிறகும் தொடர்ந்து செய்கிறான் என்றால், அது கவலைக்குரிய விஷயம்தானே? கண்டிப்பதைப் பற்றியும் கவலைப்படவில்லை என்றால் அது, ஒன்று, தடித்தனம் அல்லது அகங்காரம். இதுதான் என்னுடைய இத்தனை ஆண்டுக் கால பிரச்சினையே. மற்றவர்களுக்காக ஒருத்தன் சிந்திக்கிறான்; மற்றவர்களின் உணவை, கலாச்சாரத்தை, மதத்தை, கடவுளை, ஏன் கற்பனையைக் கூட மற்றவன் உருவாக்குகிறான். அப்படிப்பட்டவர்கள்தான் ஃபாஸிஸ்டுகள் என்கிறேன்.
எனக்கு ஏன் மனித இனத்தைப் பிடிக்கவில்லை, அதிலும் குறிப்பாக இந்தியர்களைப் பிடிக்கவில்லை என்றால், மற்றவர்களைத் துன்புறுத்துவதை அவர்கள் ஒரு கலையாகப் பயின்று செய்து கொண்டிருக்கிறார்கள். வரிசையில் நிற்காமல் குறுக்கே புகுந்து நிற்கிறான். அது பற்றிக் கொஞ்சமும் அவனுக்கு வெட்கம் இல்லை. இன்னொருத்தர் பொருளை அபகரிப்பதிலும் வெட்கம் இல்லை. கோடீஸ்வரன் கூட இதில் விதிவிலக்கு இல்லை. கீழே ஒரு கைபேசி கிடந்தால் அவன் பாட்டுக்கு சுவாதீனமாக எடுத்து ஜேபியில் போட்டுக் கொள்கிறான்.
சரி, இன்னொரு உதாரணம் சொல்கிறேன். இதே உதாரணத்தையே நூறு முறை எழுதி விட்டேன். ஆனால் இதையெல்லாம் படித்து விட்டு வினித் மாதிரி இளைஞர்கள் புறப்பட்டு வந்து கொண்டே இருப்பதால் நானும் சொன்னதையே சொல்லிக் கொண்டு கிடக்க வேண்டியிருக்கிறது. ஹைதராபாதில் சீனி வீட்டில் என் மொழிபெயர்ப்பாளர் வந்தார். அவரோடு பேச வேண்டியிருந்தது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் ஒரு எழுத்தாளனுக்குக் கடவுள் மாதிரி. அவர் செய்த ஒரு வேலையால் அவரை என் வாழ்விலிருந்தே ஒதுக்கி வைத்து விட்டேன். இப்படி நீங்கள் ஒவ்வொருத்தரையாக ஒதுக்கிக் கொண்டே போனால் தனிமைப்பட்டுப் போவீர்கள் என்கிறார் கோவிந்தன். மயிரே போச்சு என்றேன்.
மொ-ர் பெயர் புனித் என்று வைத்துக் கொள்வோம். புனித் ஒரு செயின் ஸ்மோக்கர். எனக்கு செய்ன் ஸ்மோக்கர்களை ரொம்பவும் பிடிக்கும். காரணம், நான் ஒரு பயந்தாங்கொள்ளி. சாகசமே கொஞ்சம் கூட பிடிக்காது. பயமே காரணம். அப்படிப்பட்ட எனக்கு, ஒருத்தன் மரணத்தோடேயே விளையாடுகிறான், சாகசம் புரிகிறான் என்றால் பிடிக்குமா பிடிக்காதா? ஆனாலும் புனித்தை ஏன் ஒதுக்கி விட்டேன் என்றால், சிகரெட்டைக் குடித்துக் குடித்து சீனி வீட்டுத் தரையில் வைத்து நசுக்கி நசுக்கிப் போட்டார். நாங்கள் அனைவரும் தரையில் அமர்ந்திருந்தோம். சாம்பலையும் தரையிலேயே தட்டினார். தரை பூராவும் சிகரெட் சாம்பல் மற்றும் நசுக்கப்பட்ட சிகரெட் துண்டுகள். அதோடு கரித் தீற்றல்கள். ஒரு பணியாளர் டீமையே வைத்தால்தான் தரையைச் சுத்தம் செய்ய முடியும் போல் இருந்தது. இத்தனைக்கும் சாம்பல் கிண்ணமும் வைக்கப்பட்டாயிற்று. அவர் அந்த சாம்பல் கிண்ணத்தைச் சுற்றித்தான் சிகரெட்டுகளை நசுக்கிக் கொண்டிருந்தார். கலைஞனாம். கலைஞர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்.
அதோடு முடிந்தது அவர் நட்பு. இன்னொரு நண்பர். இப்போது அவர் பெரிய புள்ளி. செய்ன் ஸ்மோக்கர். இப்படித்தான் சிகரெட்டைத் தரையில் வைத்து வைத்துத் தேய்ப்பார். அவருடைய 80 வயதான அம்மாதான் அடிக்கடி வந்து அந்தத் தீய்ந்த சிகரெட் துண்டுகளை எடுத்துப் போட்டு, தரையை சுத்தம் செய்வார். எனக்கு ரத்தக் கண்ணீர் வரும். இத்தனைக்கும் அது அவர் வீடு. அவர் பெரிய மார்க்ஸிஸ்ட். கம்யூனிஸ்ட். பெரியாரிஸ்ட். ஜாதியில் அய்யங்கார். அவரையும் என் வாழ்விலிருந்து ஒதுக்கி விட்டேன்.
இதையெல்லாம் விட அக்கிரமம் வினித் செய்தது. உங்களுக்கு அந்த நிகழ்ச்சியை அவன் ஒருத்தனாக இருந்து காலி செய்தது மட்டும்தான் தெரியும். கோவா கதையை நான் தனியாக எழுதியிருக்கிறேன். முதல் நாள்தான் முகத்திரை அணியாமல், ஹெல்மட் போடாமல் 3000 ரூ. அபராதம் கட்டினார்கள். மறுநாளும் ஹெல்மட் போடாமல், போலீஸைப் பார்த்து விட்டு வண்டியை ஓட்டிக் கொண்டே ஹெல்மட்டை எடுத்து மாட்ட, வண்டி சரிந்து காலில் அடி, வண்டிக்கும் அடி என்றால் உடம்பில் எத்தனை பெரிய தடித்தனம் வேண்டும்? இத்தனைக்கும் நான் பலமுறை வினித்தின் வண்டியில் ஏறியிருக்கிறேன்.
நேற்று காலை கோவிந்தன் லைனில் வந்து “என்ன இருந்தாலும் நீங்கள் வினித்தின் பெற்றோர் பற்றி எழுதியது தவறுதான்” என்று டார்ச்சர் கொடுத்தார். கோவிந்தன் பெயரை இனிமேல் டார்ச்சர் கோவிந்தன் என்று மாற்றி விட்டேன். ஏனய்யா, நான்தான் இந்தியப் பெற்றோர் பண்ணும் அக்க்குறும்புகள் பற்றித் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேனே? கோவிந்துக்குக் கோவம் வரக் காரணம், அவருக்கு ஒரு பெண்ணும் பையனும் இருக்கிறார்கள். தடிமாட்டுக்கு வயது 25. பசுவின் வயது 20. ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால், ரெண்டு தடிமாடும் இன்னமும் கோவிந்துவிடம்தான் சோறு ஊட்டிக் கொள்கின்றன. கோவிந்துதான் ரெண்டுக்கும் ஜட்டி துவைத்து கொடுக்கிறார். அது கூடப் பரவாயில்லை. துவைத்த ஜட்டியைக் காயப் போடுவதும் கோவிந்துதான். காய்ந்ததை எடுத்து மடித்து வைப்பதும் நம் கோவிந்தே. ”நீர் நெஞ்சில் ஈரம் இல்லாதவர், அதனால்தான் இப்படிப் பச்சிளம் பாலகர்களைப் பற்றிப் பழித்துப் பேசுகிறீர்” என்று என்னை வேறு திட்டுகிறார் கோவிந்து. இப்படியாக வளர்த்து சமூகத்தில் விடுகிறார்கள் பெற்றோர் என்ற ஜந்துக்கள். அப்படி விட்டதால்தான் 300 பேரை வைத்து ‘செய்ய’ ஒரு 25 வயதுப் பொடியனுக்கு மனசு வருகிறது. “’இன்னும் ரெண்டு நிமிடம்’ என்று எனக்குத் துண்டு சீட்டு அனுப்பத் தெரிகிறது. அவனை ஒன்றும் சொல்ல முடியவில்லையா?” என்று காயத்ரியிடம் கேட்டேன். அவனுக்குப் பின்னாலேயே நின்று பேனாவால் எல்லாம் அவன் முதுகைக் குத்தினேன் என்றாள். அவன்தான் அசரவில்லையாம். திரும்பி வேறு பார்த்து, “இன்னும் ரெண்டு நிமிடத்தில் முடித்து விடுவேன்” என்று வேறு சொல்லி விட்டு அதற்குப் பிறகு பத்து நிமிடம் போட்டிருக்கிறான்.
இதற்காகத்தான் நான் எந்த இலக்கியக் கூட்டத்துக்கும் போவதில்லை. இப்படி யாராவது ஒருவர் வந்து தாலியறுத்து விடுகிறார்கள். தொடர்ந்து நடக்கிறது. செல்லப்பாவை நான் எந்த அளவுக்கு மதிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். அது வேறு. லௌகீக நடைமுறை வேறு. பல ஆண்டுகளுக்கு முன்னால். திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் அழகிய சிங்கர் நடத்தும் விருட்சம் கூட்டம். செல்லப்பா அவர் எழுதி இன்னும் அப்போது பிரசுரம் ஆகியிருக்காத சுதந்திர தாகம் நாவலிலிருந்து சில பக்கங்களைப் படித்துக் காண்பிக்கிறார். வயதாகி விட்டதால் அவர் படிப்பது அவ்வளவும் ழழா ழழாஆஆ ழெழேழே ழொழோ ழழோ என்றே கேட்கிறது. ஐந்து நிமிடம் ஆனது. எழுந்து நின்று குறுக்கே புகுந்து, யாருக்காவது புரிகிறதா என்று கத்தினேன். யாரும் பதில் சொல்லவில்லை. ”மிஸ்டர் செல்லப்பா, இதை யாரையாவது விட்டுப் படிக்கச் சொல்லுங்கள்” என்றேன். (அப்போதெல்லாம் சார் என்ற வார்த்தை இலக்கிய வட்டத்தில் புழங்குவதில்லை). முடியாது, நானேதான் படிப்பேன் என்றார் ஃபாஸிஸ்ட். அப்படியானால் நான் மேஜையைத் தட்டுவேன் என்றேன். தட்டிக்கோ என்றார். மீண்டும் ழழாழா ழொழோழோ கதைதான். நான் டமால் டமால் என்று மேஜையைத் தட்டிக் கொண்டே இருந்தேன். ஐந்து நிமிடம் கழித்து கை விரல்கள் சிவந்து ரத்தம் கட்டி விட்டதால் நான் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து விட்டேன்.
அங்கே நடந்தது ஒரு ஈமச் சடங்கைப் போல் இருந்தது எனக்கு. யாருக்குமே புரியாமல் ஒரு புத்தக வாசிப்பு.
அதையெல்லாம் மிஞ்சி விட்டான் வினித். ஏனென்றால், அவன் செய்த லந்து காரணமாக, நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியான பரிசளிப்பு விழாவே சரியாக நடத்த முடியவில்லை. பரிசளிப்பு விழா நடந்த போது எல்லோரும் சாப்பிடப் போய் விட்டோம்.
ஏன் கொதிக்கிறேன் என்றால், என் வயது இந்த மாதத்தோடு 68 முடிகிறது. இனிமேல் மார்க்ஸ் பற்றிப் பேச எனக்கு சந்தர்ப்பம் வராது. எண்பதுகளின் மத்தியில் அவரை நான் பார்த்தது. இந்த நாற்பது ஆண்டுகளில் அவரைப் பற்றிப் பேச இதுதான் முதல் வாய்ப்பு. கடைசி வாய்ப்பும் இதுவே. அதை வந்து பறித்துக் கொண்டான் படுபாவி வினித். இனிமேல் ஜென்மத்துக்கும் நான் மார்க்ஸ் பற்றிப் பேச முடியுமா? அவருக்குமே இதுதான் முதல் தடவையாகக் கிடைத்த முதல் மரியாதை. என் ஆசான் என நான் நினைக்கும் ஒருத்தரைப் பற்றி நான் என் அனுபவங்களை உங்களுக்குச் சொல்வதை இந்தப் பையன் தட்டிப் பறித்து விட்டான். அதிலும் இரண்டு ஆண்டுகளாக நான் எந்த இலக்கியக் கூட்டத்திலும் பேசியிருக்கவில்லை.
நிறப்பிரிகை வந்து கொண்டிருந்த போது வினித்தின் பெற்றோரே பள்ளிக்கூட மாணவர்களாக இருந்திருப்பார்கள். வினித் வயது இப்போது 25. இவன் வந்து என் வாழ்விலே ஒருமுறை கிடைத்த வாய்ப்பைத் தட்டிப் பறித்து விட்டான்.
இப்போது புரிகிறதா என் கோபத்துக்கான காரணம்?
மேலும், நிறப்பிரிகை கூட்டங்கள் இரண்டு தினங்கள் இரவு பகலாக நடக்கும். பகல் முழுதும் கருத்தரங்கம். கட்டுரை வாசிப்பு, விவாதங்கள். இரவிலும் விவாதங்கள். பகலில் மாட்டுக்கறி விருந்து உண்டு என்று அழைப்பிதழிலேயே போடுவார்கள்.
இது பற்றி இன்று யாருக்குத் தெரியும் சொல்லுங்கள்? இது பற்றித்தான் நான் பேசுவதாக இருந்தேன். எங்களுக்கு வேண்டாம், தமிழர்களாகிய எங்களுக்கு சரித்திரம் வேப்பங்காய் என்று சீட்டுக் கொடுத்து விட்டாள் காயத்ரி. நானாக இருந்தாலும் சீட்டுதான் கொடுத்திருப்பேன். வேறு வழியில்லை. இவன்தான் பத்து நிமிடம் பேச வேண்டியவன் நாற்பது நிமிடம் பேசி எங்கள் நேரத்தைத் திருடி விட்டானே?
நிறப்பிரிகையில் ஏன் மாட்டுக் கறி விருந்து போட்டார்கள்? ஏனென்றால், மாமிசம் உண்பவன் மனிதர்களில் மட்டமானவன் என்று புனித நூலாகக் கருதப்படும் கீதையில் இருக்கிறது. கீதையை அக்கு வேறு ஆணி வேறாகப் படித்தவன் நான். பலருடைய உரையையும் நான் படித்திருக்கிறேன். சம்ஸ்கிருதமும் படிக்கத் தெரியும். மூலத்தையும் படித்த பிறகே சொல்கிறேன். அதனாலேதான் நிறப்பிரிகை கூட்டத்தில் மாட்டுக் கறி விருந்து போட்டார்கள்.
(அப்படிப் போட்ட மார்க்ஸுக்கு இன்று தயிர் சாதமும் மோர் மிளகாயும் கொடுத்து விருந்து என்றால் அது ஒரு நகைமுரண் இல்லையா? இன்னும் அஞ்சாயிரம் ஆண்டு போனாலும் நாங்கள் உருப்படவே மாட்டோம் என்று விளிம்பு நிலை மனிதர்களாகிய “நாம்” சரித்திரத்தின் முன்னே செய்தி பகர்கிறோம்.)
இப்போதாவது – நாற்பது ஆண்டுகள் கழிந்த பிறகாவது மார்க்ஸ் கவனிக்கப்பட்டாரே என்று ராம்ஜிக்கும் காயத்ரிக்கும் தனிப்பட்ட முறையிலும், ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கும், தமிழரசி அறக்கட்டளையினருக்கும் நான் நன்றி சொல்கிறேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து இதைச் சொல்கிறேன். தயவுசெய்து யாரும் இதைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.
அடுத்த மனிதனைத் துன்புறுத்தாதே. அடுத்த மனிதனின் உணவைத் திருடுவதை விட மோசமானது அடுத்த மனிதனின் நேரத்தைத் திருடுவது.
இரண்டாவது, அடக்கம் வேண்டும். இன்றைய இளைஞர்களிடம் அது அறவே இல்லை. அப்படியென்றால் என்ன என்றும் அவர்களுக்குத் தெரியாது. பூனைகளிடம் போய் இலக்கியம் பேசினால் அதுகளுக்குப் புரியுமா? அதைப் போலவே இளைஞர்களிடம் அடக்கம் பயிலுங்கள் என்றால் மேலும் கீழும் பார்க்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், எனக்கு இதனால் சல்லிக் காசு பிரயோஜனம் இல்லை.
அடக்கம் இல்லை என்பதை எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். எவன் ஒருவன் எதிராளிக்கு இடமே கொடுக்காமல் பேசிக் கொண்டே இருக்கிறானோ அவன் அடக்கம் இல்லாதவன். அவன் உருப்படுவது ரொம்பக் கஷ்டம். அப்படியே உருப்பட்டாலும் அவன் மற்றவர்களின் நகைப்புக்கு உரியவனாகவே எப்போதும் கருதப்படுவான்.
அடக்கமின்மை என்பது இன்னும் பல்வேறு ரூபங்களில் வெளிப்படும். சுரணையற்ற தன்மை மற்றொரு உதாரணம். ஒரு பெரும் கூட்டமே சத்தம் போட்டு, கை தட்டி உன்னை உட்கார வைக்கிறது என்றால் நீ எந்த அளவுக்கு சுரணையற்று இருக்கிறாய் என்று பார்த்துக் கொள்.
இதிலிருந்தெல்லாம் வினித் கற்றுக் கொள்வான் என்று நான் நம்பவில்லை. நாலு ஆண்டுகளாகப் புரிந்து கொள்ளாதவன் இனிமேலா புரிந்து கொள்ளப் போகிறான். தவறு அவன் பெற்றோர் மீதுதான். அவர்கள்தான் அவனை அப்படி வளர்த்திருக்கிறார்கள். இந்தியப் பெற்றோர் இப்படித்தான் இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் தறுதலைகளாக இருக்க அவர்களே காரணம்.
மற்றபடி ஸீரோ டிகிரி பதிப்பகம் நடத்திய விருது விழா, நாவல் போட்டி விழா தமிழ் இலக்கிய சூழலில் இப்படி ஒரு விழா நடந்ததே இல்லை என்ற அளவுக்குச் சிறப்பாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு நடத்திய ஒரு மாநாடுதான் நினைவுக்கு வருகிறது. தற்காலத்தில் விஷ்ணுபுரம் விழாக்கள் ஒரு கொண்டாட்டமாக நடந்து வருவதைக் கேள்விப்படுகிறேன். காமராஜர் அரங்கில் என் வாசகர் வட்டத்தினர் நடத்திய விழாக்கள் சினிமா விழாக்களையும் மிஞ்சக் கூடியவை. ஊர் பூராவும் கட் அவுட் வைத்து அல்லவா கொண்டாடினோம்?
இனிமேல் அப்படி விழா எடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அதற்கு ஆகும் ஐந்து ஆறு லட்சம் ரூபாயில் எங்காவது வெளிநாடு சென்று வரலாம்.
மேற்குறிப்பிட்ட விழாக்கள் எதிலும் சேராமல் தனிப்பட்ட முறையில் பல சிறப்புகளோடு நடந்தது ஸீரோ டிகிரி விழா. உணவை அத்தனை பேரும் ரசித்தார்கள். பொதுவாக நட்சத்திர ஓட்டல்களில் சாப்பாடு சுவைக்காது. ஆனால் பல்லவாவில் உணவு பிரமாதமாக இருந்தது. அதிலும் அந்தத் தேங்காய்ச் சட்னி அட்டகாசம். தயிர் சாதமும் மோர் மிளகாயும்தான் சாப்பிட முடியாமல் போனது. மாலை ஏழு மணிக்கு சாப்பிடுபவன் நான். அன்றைய தினம் பத்து மணி ஆகி விட்டதாலும், அநேக அய்ட்டங்கள் இருந்ததாலும் முடியவில்லை. பெரிய கல்யாணத் தளிகை மாதிரி இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துகள்.
***
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai