வினித் போன்றவர்களைப் பற்றி விமர்சித்து எழுதுவதால் வினித்துக்கு மனக்கஷ்டம் என்பது போக, இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது நான்தான். உதாரணமாக, பொள்ளாச்சி மகாலிங்கம் மாதிரி ஒரு கோடீஸ்வரருக்கு என் எழுத்து பிடிக்கிறது, சந்திக்க நினைக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே வினித் பற்றிய கட்டுரைதான் அவருக்கு முன்னே காண்பிக்கப் படும். அதைப் படித்த பிறகு மனிதர் என் பக்கம் திரும்பிப் பார்ப்பாரா? அதனால்தான் சொல்கிறேன், என் நண்பர்கள்தான் எனக்குப் பெரிதும் பிரச்சினையாக இருக்கிறார்கள் என்று. எழுதாமல் இரேன் என்றால் முடியாது. மீனைத் தூக்கித் தரையில் போட முடியுமா? எப்போது நான் வினித் பற்றி எழுதாமல் இருப்பேன் தெரியுமா? அவன் என் வாழ்விலேயே இல்லை என்றால் எழுத மாட்டேன். இதோ இத்தோடு இனி அவனைப் பற்றி எழுதப் போவதில்லை.
இதற்கிடையில் என் நீண்ட காலத் தோழி ஒருவர் இப்படி வாட்ஸப் மெஸேஜ் அனுப்பினார். அவர் சொல்வதும் உண்மைதான். அதனால் அதை உங்களிடம் பகிர்கிறேன்.
“இம்மாதிரி நண்டு சிண்டுவையெல்லாம் நீங்கள் ஏன் தூக்கி விடுகிறீர்கள்? அதற்கு அவர்கள் தகுதியானவர்கள் அல்ல. மற்றவர்களுக்கான உங்கள் சேவையை நிறுத்துங்கள். உங்கள் மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களால் உங்கள் பெயர்தான் கெட்டுப் போகிறது. நீங்கள் ரொம்பவும் சிநேகமாக இருப்பதும் வெகு சுலபத்தில் நெருங்கி விடக் கூடியவராகவும் இருப்பதால்தான் இப்படி ஆகிறது.
புதையல் என்பது எளிதில் நெருங்கக் கூடியதாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால்தான் அதன் மதிப்பு தெரியும். இனிமேலாவது உங்களுக்குத் தெரிய வேண்டும், நீங்கள் விலை மதிப்பில்லாத புதையல் என்று. எனவே இனிமேலாவது சராசரி மனிதர்களைப் போல் இந்த மூடர்களிடையே பழகாதீர்கள்.
நான் ஏதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னியுங்கள். நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.
***
சமீப காலத்தில் எனக்கே இப்படியெல்லாம்தான் தோன்றிக் கொண்டிருக்கிறது. அதனால் இனிமேல் கவனமாக இருக்க வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே நான் பழகுவதற்குக் கடினமான ஆள் என்று பேர் எடுத்தவன். அப்படியே நடந்து கொண்டால் இப்படியான பிரச்சினைகள் வராது. பார்க்கலாம்.