சாரு என்னும் சகாப்தம்: ஆர். அபிலாஷ்

முன்னோடிகளின் பாதையில் நடைபோடுவது சற்று சுலபம். தமிழில் ஏற்கனவே உள்ள செண்டிமெண்டுகள், இங்கு வெற்றி பெற்றுள்ள வடிவங்கள், உருவகங்களை பயன்படுத்தி வாசகரை சுரண்டுவதும் ஓரளவுக்கு எழுத்து கைவந்தவர்களுக்கு சுலபமே. ஆனால் இங்குள்ள கதைகூறல் மரபை முழுக்க உடைத்து விட முயல்வது, உரைநடை-புனைவு எனும் இருமையை அழிப்பது, அதன் வழி சுய அனுபவத்தை சொல்லுகிறவனும் ஒரு கற்பனைப் பாத்திரமே என நிறுவுவது, எதிர்க்கதை எனும் புதிய பள்ளியை இங்கு உருவாக்குவது, ஒரு புது அழகியலுக்கு. களம் அமைப்பது, அதற்கான முன்னோடிகளை பிரஞ்சில் இருந்தும், அரபு இலக்கியத்தில் இருந்தும் தேடி தமிழுக்கு அறிமுகப்படுத்துவது என சாரு நிவேதிதா தமிழில் ஐம்பது பேர் செய்ய வேண்டிய வேலையை தனி ஒருவராக கடந்த நாற்பதாண்டுகளாக பண்ணி வருகிறார். அதிலும் மேற்கில் இருந்து யாரையும் போலச்செய்யாமல் தன் இயல்பு படியே செயல்படுகிறார் என்பது மகத்தானது. பின்னமைப்பியல் தத்துவத்தில் எப்படியெல்லாம் நாம் வாழ வேண்டும் எனக் கூறுகிறார்களோ அதை அப்படியே எழுத்திலும் நிஜத்திலும் வாழ்ந்து காட்டுபவர். சாருவின் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள், உணர்வுகளை நான் இவ்விதத்தில் மிகவும் ரசித்தேன். நாம் அரசியல் சரிநிலைகளில் திளைக்கும் போது அவர் மற்றொரு தளத்தில் இருக்கிறார்.


இது எவ்வளவு பெரிய போராட்டம், இதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு எழுத்தாளனாலே முடியும்.

தமிழ் பின்நவீன எழுத்தில் சாரு ஒரு சகாப்தம். இந்த பிறந்த நாள் தினத்தில் சாருவுக்கு என் அன்பும் முத்தங்களும்!

– ஆர். அபிலாஷ்