இன்று சாருவுக்கு பிறந்த நாள் என்று காலையில் கண் விழிக்கும்போதே நினைவுக்கு வந்தது. எழுத்தாளர்களுக்கிடையே வரும் சச்சரவுகள், பதிப்பாளர்- எழுத்தாளர்களுக்கிடையே வரும் கசப்புகளை எல்லாம் தாண்டி நட்பின், அன்பின் உயரிய கண்ணியத்தை எப்போதும் என்னை உணரச் செய்தவர் சாரு. அவரை புண்படுத்தக்கூடிய பல வாசகங்களை பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனால் அவர் ஒருபோதும் அதைப்பொருட்படுத்தியதில்லை. எழுத்திலோ பேச்சிலோ எந்தக் கசப்பையும் என் மேல் வெளிபடுத்தியதில்லை. உயிர்மையைவிட்டு எவ்வளவோ விலகிச் சென்றபிறகும்கூட உயிர்மை அவர் எழுத்து வாழ்க்கைக்கு அளித்த பங்களிப்பை குறிப்பிடாமல் இருந்ததில்லை. அவரது வெளிவரவிருக்கும் புதிய கவிதை தொகுப்பிற்கு சில மாதங்களுக்குமுன்பு முன்னுரை கேட்டிருந்தார். நான் எழுதவே விரும்பினேன். என் வாழ்க்கையின் அல்லல்களால் அது எப்படியோ தள்ளிப்போயிற்று. அதைக்கூட எந்த சுடுசொல்லும் இன்றித்தான் பெயர்குறிப்பிடாமல் பதிவு செய்திருந்தார். சுஜாதாவிற்குப்பிறகு என் கவிதைகளை நிபந்தனையின்றி கொண்டாடியவர். அதற்காக மற்றவர்களிடம் திட்டு வாங்கியிருக்கிறார். இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவில் ஒரு எழுத்தாளன்மேல் சாரு காட்டிவந்திருக்கும் நீடித்த அன்பு தமிழ்ச்சூழலில் அபூர்வமான ஒன்று. ஏனெனில் நவீன இலக்கிய சூழல் என்பது வெறுப்பின், அற்பத்தனங்களின் நிலம்.
உங்கள் வாசகனாக அன்பும் வாழ்த்தும் சாரு. உங்கள் வசீகரமும் உங்கள் எழுத்தின் வசீகரமும் என்றும் நீடித்திருக்கட்டும்.