நன்றி மனுஷ்ய புத்திரன்

என்னுடைய கவிதைத் தொகுதியான ஸ்மாஷன் தாராவுக்கு நேற்று நள்ளிரவு மனுஷ்ய புத்திரன் எழுதிய முன்னுரை கிடைத்தது. நான் அதை அதிகாலையில் படித்தேன்.

ஹமீது அவர் பணி புரிந்து கொண்டிருந்த பதிப்பகத்திலிருந்து பிரிந்து வந்திருக்காவிட்டால் ஸீரோ டிகிரி பதிப்பகம் வரும் வரை நான் என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்துக் கொண்டிருந்திருப்பேன். முதல் முதலாக, துணிச்சலாக என் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்தவர் ஹமீது. என்னுடன் ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பர்கள் கூட முன் வர மறுத்த செயல் அது.

ஆனால் இதற்காக எல்லாம் ஒருவருக்கொருவர் இலக்கியத் துறையில் நன்றி பாராட்டிக் கொள்வது ஹமீதுக்கும் வழக்கம் அல்ல; எனக்கும் வழக்கம் அல்ல. அதாவது, நட்பு கருதி என் நாவல்களை அவர் பாராட்டுவது இல்லை. நானும் நட்பு கருதி அவர் கவிதைகளைப் பாராட்டியது இல்லை. கோபம் வந்தால் முகநூலில் அவரை ப்ளாக் பண்ணுவேனே தவிர அவர் கவிதை மோசம் என்று எழுத மாட்டேன். அது என்னையே நான் அவமானப்படுத்திக் கொள்ளும் செயல். கோபம் வந்தால் அவர் குடிக்கும் வோட்காவில் தண்ணீரை அதிகமாகக் கலப்பேனே தவிர அவரது கவிதைப் பங்களிப்பை மறுக்க மாட்டேன்.

ஹமீதும் இப்படித்தான். நட்புக்காகவெல்லாம் அவர் என்றுமே என் நாவல்களைப் பாராட்டிப் பேசியதில்லை.

அதன் காரணமாகவே நான் அவரிடம் என் கவிதைத் தொகுதிக்கு முன்னுரை கேட்டேன்.

ஸீரோ டிகிரி நாவல் வந்த போது ஆள் ஆளுக்குப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் போர்னோ போர்னோ தான் பேச்சு. தரை மட்டத்துக்கு இறங்கி சரோஜாதேவி என்றெல்லாம் திட்டினார்கள். அப்போது இந்திரா பார்த்தசாரதிதான் முன்வந்து எல்லாரையும் ஓரம் கட்டுகிறாற்போல் ஒரு மதிப்புரை எழுதினார். இத்தனைக்கும் இ.பா.வுக்கும் எனக்கும் எந்தப் பழக்கமும் இல்லை. நான் அசோகமித்திரனின் மாணவன். அ.மி. அதை குப்பை என்று சொல்லி விட்டார். பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் காயத்ரியிடம் சொல்லி விட்டேன், “ஹமீதிடமிருந்து முன்னுரை வந்தால் புத்தகத்தைப் போடுங்கள், இல்லாவிட்டால் வேண்டாம்” என்று.

ஏனென்றால், ஹமீதிடம் நான் முன்னதாகவே “பையன் பாஸா?” என்று கேட்டு விட்டேன். ”என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? நாம் எப்போது நட்புக்காக இலக்கிய விஷயத்தில் கருணை காட்டியிருக்கிறோம்? முன்னுரையைப் பாருங்கள்” என்று சொல்லி விட்டார் ஹமீது.

அந்த வார்த்தைதான் நம்பிக்கை.

ஆனால் கேலியும் கிண்டலும் வந்து கொண்டேயிருந்தன.

பொறுக்க முடியாமல் ஒருநாள், ஆதி சங்கரரின் சம்ஸ்கிருதக் கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்து என் பெயரைப் போட்டு என் தளத்தில் வெளியிட்டேன். அதற்கும் திட்டு, கிண்டல், நையாண்டி.

அப்போதுதான் புரிந்தது மற்றவர்களின் கவிதா ரசனை. அதற்குப் பிறகு தெம்பாகி விட்டேன். அந்தக் குறிப்பிட்ட கவிதை மட்டும் தொகுதியில் இல்லை.

காலையில் காயத்ரியிடம் பேசினேன். உற்சாகமான குரலில் கூடிய சீக்கிரம் கொண்டு வந்து விடலாம் என்றாள். மறுபடியும் ஒரு வருஷம் ஆகுமோ என்றேன், சீரியஸ் குரலில். அவளோ, சேச்சே, ஒரு வருஷம் எல்லாம் ஆகாது என்றாள், உற்சாகமான குரலிலேயே.

தொகுப்பு சில மாதங்களில் வந்து விடும் என்று நினைக்கிறேன்.