அன்னபூர்ணிதான் என்னுடைய உணவுத் துறை. எப்போதெல்லாம் வீட்டில் உணவு இல்லையோ அல்லது ஒரே உணவையே ஐந்தாவது முறையாகத் தின்ன நேர்கிறதோ அப்போது அன்னபூர்ணிக்கு மெஸேஜ் போட்டு விடுவேன். என்னது, ஐந்தாவது முறையா? இதோ கணக்கு: நேற்று மதியம் சாம்பார். அதையே இரவுக்கு. காலை இட்லிக்குத் தொட்டுக் கொள்ள. இன்று மதியமும். அப்படியானால் இன்று இரவு ஐந்தாவது முறைதானே? பிடி அன்னபூர்ணியை. இன்று இரவு அப்படி நேர்ந்தது. சப்வேயிலிருந்து ஒரு சாண்ட்விச் வாங்கலாம் என்று நினைத்தேன். அவந்திகா நான் பழம் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டாள். இருந்தாலும் அவளைப் பார்க்க வைத்துக் கொண்டு நான் சாப்பிடுவது ஒரு எழுத்தாளனுக்கு அழகல்ல என்பதால் இரண்டு சாண்ட்விச் வேண்டும்.
அன்னபூர்ணியைப் பிடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஒன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை. இரண்டு, நேற்றுதான் பூனைகளுக்காகவும் எனக்காகவும் லிஷியஸ் சிக்கன் அன்னபூர்ணி மூலம் வாங்கினேன். அது இரண்டு கிலோ 700 ரூ. ஏன் காஸ்ட்லியான லிஷியஸ் சிக்கன் என்றால், மற்ற சிக்கன் சாப்பிட்டால் என் பூனைகள் ரத்த வாந்தி எடுக்கின்றன. பொய் சொல்லவில்லை. அந்திமழை அசோகன் சாட்சி. அவர் மிருக வைத்தியரும் கூட. ஆனால் எனக்கு மற்ற சிக்கன் ஒத்துக் கொள்கிறது, ரத்த வாந்தி எடுப்பதில்லை. என் வீட்டுப் பூனைகள்தான் என்னை விட மேட்டுக்குடியாக இருக்கின்றன.
இப்படி நேற்றுதான் அன்னபூர்ணி லிஷியஸ் சிக்கனுக்காக எழுநூறு செலவு செய்திருப்பதால் இன்றும் நானூறு ரூபாய் செலவு வைக்க மனம் வரவில்லை. ஸ்ரீராமிடம் சொல்லலாம். ஆனால் போன வாரம்தான் அவர் எனக்கு 2000 ரூபாயில் ஒரு புத்தகம் வாங்கிக் கொடுத்தார். ஔரங்கசீப் நாவலுக்காக. உடனேயே அவருக்கு செலவு வைக்கக் கூடாது. ஆனால் அவரை ஆர்டர் போடச் சொல்லி விட்டு நான் ஜீப்பே மூலம் பணம் அனுப்பலாம். அவர் அதைத் திருப்பி அனுப்பி விடுவார். எனவே நாமே ஆர்டர் போடலாம் என நினைத்தேன். நினைத்த நேரம் சரியில்லை. அது வேறு எனக்கு அப்போதே தெரிந்து விட்டது. கெட்டது நடக்கும்போது அது எனக்கு முன்பே தெரிந்து விடுகிறது. நல்லது நடக்கும்போது தெரிவதில்லை.
இன்னொரு முக்கிய விஷயம். இரண்டு ஆண்டுகளாக என் வங்கி அட்டை முடக்கப்பட்டிருப்பதால் நான் ஸ்விக்கி, ஸொமோட்டோ எதையும் பயன்படுத்த முடியாத நிலையில் அன்னபூர்ணியை மட்டுமே நம்பியிருந்தேன். சமீப காலமாக ஸ்ரீராமும் சேர்ந்து கொண்டிருக்கிறார். அதனால் சீனி ஒரு உபாயம் பண்ணினார். ஜீப்பே மூலம் பணம் கொடுக்க கைபேசியில் ஒரு ஏற்பாடு செய்தார். பயந்து விடாதீர்கள். என் வங்கி அட்டையில் இணைய வங்கி வேலைகளை மட்டுமே செய்ய முடியாது. ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும். வங்கிக்காரன் நேரில் வரச் சொல்கிறான். ஆனால் ஔரங்கசீப்பை முடிக்காமல் என்னால் போக முடியாது.
ஆர்டர் கொடுத்தேன். இரண்டு சாண்ட்விச். ஒன்று, சாஸ் போட்டது. சில்லி சாஸ். இரண்டாவது, சாஸ் போடாதது. இது ஒன்றும் அத்தனை சுலபமாக இல்லை.
சாண்ட்விச் எத்தனை நீளம்? பதினைந்து செண்டிமீட்டரா? முப்பது செண்டிமீட்டரா? செண்டிமீட்டர் கணக்கு புரியாதவர்களுக்கு அதை இஞ்ச்சிலும் மாற்றிப் போட்டிருந்தான்.
அடுத்து, என்ன மாதிரி ப்ரெட் வேண்டும்?
Parmesan Oregano
வறுத்த பூண்டு ப்ரெட்
வெள்ளை இத்தாலியன் ப்ரெட்
மல்ட்டிக்ரெய்ன் ப்ரெட்
மல்ட்டிக்ரெய்ன் ஹனி ஓட்ஸ் ப்ரெட்
அடுத்து, ப்ரெட் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?
வெறும் ப்ரெட்.
சீஸ் ஸ்லைஸோடு
டோஸ்ட்டட் ப்ரெட்
டோஸ்ட்டட் ப்ரெட் வித் சீஸ் ஸ்லைஸ்
டோஸ்ட்டட் ப்ரெட் வித் மாஸரேலா சீஸ் (அது என்ன எழவு சீஸோ?)
அடுத்து, என்னென்ன காய்கறிகள் போட வேண்டும்?
வெள்ளரிக்காய்
தக்காளி
வெங்காயம்
கேப்ஸிகம்
ஆலிவ்
ஊறுகாய்
ஹலாபீனோஸ்
உப்பும் மிளகும்
இதில் எட்டைத் தேர்ந்தெடுக்கலாம் என்றான். எட்டுதான் இருந்தது. எட்டையும் தேர்ந்தெடுத்தேன். அதாவது எனக்கு. அவந்திகாவுக்கு வெறும் வெள்ளரி, தக்காளி, வெங்காயம் மட்டுமே.
அடுத்தது கொஞ்சம் பிரச்சினையான பகுதி. சாஸ்.
மயோனிஸ்
மிண்ட் மயோனிஸ்
இப்படி வாயில் பெயர் நுழையாத என்னென்ன சாஸோ. மயோனிஸ் சாப்பிட்டால் எனக்கு பயங்கரமான வயிற்று வலி வரும் என்பதை மட்டும் நான் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். இதில் நீங்கள் மூன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்றான். நான் ரெண்டைத் தேர்ந்தெடுத்தேன். ரெட் சில்லி மற்றும் பார்பெக்யூ சாஸ். அவந்திகாவுக்கு நோ சாஸ்.
ஏதோ 390 ரூ ஆயிற்று.
ஆறு மணிக்கு ஆர்டர் கொடுத்தேன். ஆறு இருபதுக்கு வந்து விட்டது.
எட்டு மணிக்குப் பிரித்தேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவந்திகா பிரித்தாள். அவளுக்கும் அதே சிகப்பு நிற சில்லி சாஸ். ஒரு வாய் போட்டதுமே அவளுக்கு நெருப்பை வாயில் போட்டது போல் ஆயிற்று.
நான் சாப்பிட்டு முடித்து விட்டு அவளுக்காக மீண்டும் ஒரு முறை ஆர்டர் போடவா என்று கேட்டேன். வேண்டாம் என்று சொல்லி விட்டாள். ஸொமோட்டோவிடம் சென்று மோசமான சர்விஸ் என்று கருத்து எழுதலாம் என்று நினைத்துத் திறந்தேன்.
என் பெயர் ஆயிஷா, உங்களுக்கு என்ன பிரச்சினை, நான் உங்களுக்கு உதவி செய்வதற்காக வந்திருக்கிறேன் என்று சாட்டில் கேட்டார் ஒரு பெண்.
இன்ன மாதிரி இரண்டு சாண்ட்விச் ஆர்டர் பண்ணினேன், ஒன்றில் சாஸ், ஒன்றில் வித்தவ்ட் சாஸ், ஆனால் இரண்டுமே சாஸ் போட்டு வந்துள்ளது, அதனால் ஒன்றைப் பயன்படுத்த முடியாமல் போய் விட்டது, இப்போது என் மனைவி பட்டினி கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது என்று விளக்கினேன்.
சரி, இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம் என்று நினைக்கிறீர்கள்?
அடடா, இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று எனக்குத் தெரிந்தால் நான் ஏன் உங்களிடம் இப்படி சாட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்?
கொஞ்சம் மௌனம்.
நீங்கள் ஒரு சாண்ட்விச்சில் சாஸ் வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும். சொல்லாவிட்டால், இரண்டிலுமே சாஸ் போட்டுத்தான் தருவார்கள். சாஸ் போடாமல் சாண்ட்விச் வேண்டும் என்றால் அதை நாம்தான் ஸ்பெஷலாகச் சொல்ல வேண்டும். அதை நாம் தனியாகக் குறிப்பிட வேண்டும்.
இல்லை. ஏற்கனவே உங்கள் பக்கம் ஒரு தவறு நடந்து, அந்தத் தவறை நீங்கள் சரி பண்ணுவதை விட்டுவிட்டு, என் நேரத்தையும் வீணாக்கிக் கொண்டிருப்பதும் அல்லாமல், நான் தான் தவறு செய்திருக்கிறேன் என்று வேறு சொல்லி என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறீர்கள். இதுதான் நீங்கள் எனக்கு உதவி செய்யும் லட்சணமா?
இல்லை, நான் உதவிதான் செய்து கொண்டிருக்கிறேன். அதுதான் என் வேலை.
ஓ, சாஸ் வேண்டாம் என்று முன்கூட்டியே சொல்லாமலா இவ்வளவு நேரம் நான் உங்களிடம் புகார் செய்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள்?
அப்படியானால் போட்டோ அனுப்புங்கள்.
என் போட்டோ உங்களுக்கு எதற்கு?
இல்லை, ஆர்டர் போட்டோ அனுப்புங்கள்.
ஆர்டர் போட்டோவை எடுத்தேன். ஆனால் அனுப்ப முடியவில்லை. அனுப்பத் தெரியவில்லை. அதனால் ஆர்டர் நம்பரை ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டு அதை அனுப்பினேன்.
இல்லை, போட்டோதான் வேண்டும்.
சரி, அனுப்ப முயற்சிக்கிறேன்.
போட்டோ எடுத்தேன். அனுப்பலாம் என்று பார்த்தால் மேனேஜ் என்று வந்தது. மேனேஜை அமுக்கினால் அது வேறு எங்கு எங்கோ கண் காணாத திசைக்கெல்லாம் சென்று என்னை நிலைகுலைய வைத்தது.
சீனிக்கு போன் போட்டேன். எடுக்கவில்லை.
ஸ்ரீராமுக்கு போன் போட்டேன். எடுத்தார்.
இன்ன இன்ன மாதிரி விஷயம்.
சாட் பகுதிக்குக் கீழே கூட்டல் குறி தெரிகிறதா?
ஆமாம். அதை அமுக்கினேன். அது கேலரிக்குப் போனது. போட்டோவை அமுக்கினால் மேனேஜ் என்று வருகிறது.
அப்படியானால் சாட்டிலிருந்து விலகி விட்டு மீண்டும் முயற்சி செய்யுங்கள். போகும்.
அவர் சொன்னபடியே செய்தேன். மேனேஜ் அல்லது கேன்ஸல் என்றுதான் வந்தது. அதை அமுக்கினால்… அதுதான் ஏற்கனவே சொன்னேனே, என்னை எங்கெங்கோ கண் காணாத திசைக்குக் கூட்டிச் சென்றது.
சரி, எதற்கும் இருக்கட்டும் என்று போட்டோவை அமுக்கினேன். அது போய் சாட்டில் அமர்ந்தது.
ஆ, இந்தாருங்கள், நீங்கள் கேட்ட போ………ட்டோ.
இல்லை. இந்த போட்டோ இல்லை. சாஸ் வேண்டாம் என்று நீங்கள் சொன்னதாகச் சொன்னீர்களே, அந்த போட்டோ.
அதையும் தேடிக் கண்டுபிடித்து சென்ற முறை செய்த மாதிரியே செய்து அனுப்பினேன்.
அந்த சாண்ட்விச்சின் போட்டோ அனுப்புங்கள்.
அதை நான் குப்பையில் போட்டு விட்டேன்.
அந்த போட்டோ இல்லாமல் நான் ரெஸ்டாரண்டிடம் பேச முடியாது.
அப்படியா, இருங்கள். அதையும் அனுப்ப முயற்சி செய்கிறேன்.
குப்பைக்கூடையில் இருந்த அந்த சாண்ட்விச்சை எடுத்து போட்டோ எடுத்தேன்.
அட விடுப்பா சாரு என்று அருள்வாக்கு சொன்னாள் அவந்திகா.
பணத்துக்காக இல்லம்மா, என்னதான் நடக்குதுன்னு பாத்துருவமே.
அந்த போட்டோவையும் அனுப்பினேன்.
இன்னொரு சாண்ட்விச்சின் போட்டோவையும் அனுப்புங்கள்.
அதை எக்ஸ்ரே அல்லது ஸ்கான்தான் செய்ய வேண்டும்.
ஏன்? அதெல்லாம் வேண்டாம். போட்டோ போதும்.
முடியாது. அது என் வயிற்றில் இருக்கிறது. என் ஐஃபோனில் வயிற்றுக்குள் இருப்பதை போட்டோ எடுக்கும் வசதி இல்லை.
அந்த போட்டோ இல்லாவிட்டால் நான் ரென்ஸ்டாரண்டிடம் பேச முடியாது.
விட்டு விட்டேன்.
கொஞ்ச நேரத்தில் மீண்டும் சாட்டில் வந்தார் ஆயிஷா.
மீண்டும் உங்களுக்கு ஏதாவது உதவி தேவையென்றால், எங்களை அழையுங்கள். நானோ அல்லது செலீனாவோ வருவோம்.
நான் உங்களை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன்.
அதெல்லாம் தேவையில்லை. போட்டோ இருந்தால் போதும். இந்தப் பிரச்சினையைத் தீர்த்து விடலாம்.
சீனி வந்தார்.
இதெல்லாம் தேவையில்லாத வேலை சாரு. தப்பா வந்தா தூக்கிப் போட்டுட்டு மறுபடியும் ஆர்டர் பண்ணிக்குங்க. சப்பை மேட்டர்.
***
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai