சமஸ் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள இக்குறிப்பை அவர் அனுமதியின்றி இங்கே பகிர்ந்து கொள்கிறேன். சமஸ் ஆட்சேபிக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன். அவரது அருஞ்சொல் இணைய இதழை நாம் அனைவரும் வாசிக்க வேண்டும். சமஸ் தமிழ் பத்திரிகையுலகுக்குக் கிடைத்த சொத்து. மற்றவர்களுக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் என்றால், மற்றவர்கள் ஒரு கோட்பாட்டோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு விடுவார்கள். இடதோ வலதோ. சமஸ் ஒரு நடுநிலைப் பத்திரிகையாளர்.
பின்வரும் குறிப்பில் வாசகர்கள் சந்தா கட்டுவது பற்றி, நன்கொடை கொடுப்பது பற்றி எழுதியிருக்கிறார். நான் இந்தப் போக்கை முதல் ஆளாக 21 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைத்தேன். வாசகர்கள் நன்கொடை அனுப்பலாம் என்று சொல்லி தைரியமாக என் அக்கவுண்ட் நம்பரை பொதுவெளியில் போட்டேன். ஏன், விகடனும் குமுதமும் சந்தா வைக்கும் போது நான் நன்கொடை என்று போடக் கூடாதா என்பது எனக்கு நான் சொல்லிக் கொண்ட சமாதானம். ஊரே என்னைக் கேலி பேசியது. மிகக் கேவலமாக எழுதினார்கள். ஒரு பத்திரிகையாளரான ஞாநியே என் பெயரைப் போட்டு இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று எழுதினார். பிரபஞ்சன் பெயர் குறிப்பிடாமல் எழுதினார். ஆனால் விதி வலிது. இரண்டு பேருமே ஒருசில ஆண்டுகளிலேயே வாசகர்களிடம் பண உதவி கேட்டு எழுதினார்கள். அது பண உதவியே அல்ல. உங்கள் எழுத்துக்கான கட்டணம் என்றேன் நான். ஒரு வாசகர் ஞாநியைப் பார்த்து “நீங்கள் மாடு மேய்த்து சம்பாதிக்கலாம்” என்று ஆலோசனை சொன்னார். எனக்கு இன்று கூட ஒரு ஆபாசக் கடிதம் வந்தது. ஏன் ஐயா, ஒரு நடிகர் தன் வித்தையைக் காண்பித்து அம்பது கோடி சம்பளம் வாங்கும் போது நான் என் எழுத்துக்குக் காசு கொடுங்கள் என்று கேட்கக் கூடாதா? அதன் பெயர் பிச்சையா? சரி, பிச்சையாகவே இருக்கட்டும். இந்திய மரபின் படி ஞானிகள் பிச்சையெடுப்பதே மரபு. ஞானி என்பதன் பொருள், ஞானத்தை வழங்குபவன். தியாகராஜரும் அப்படி வாழ்ந்தவரே. அக்காலத்தில் குருநாதர்கள் தம் வித்தையை அளித்து விட்டு அதற்கு இத்தனை கட்டணம் என்று சொல்ல மாட்டார்கள். தட்சணைதான் வழக்கம்.
விவேகானந்தர் அமெரிக்காவில் ஒரு பெரிய ஆன்மீக அமைப்பை நிறுவுவதற்காக அல்லது கோவில் கட்டுவதற்காக நன்கொடை கேட்டார். ஒரு கோடீஸ்வரரும் கொடுத்தார். இவர் நன்றி சொல்லவில்லை. கோடீஸ்வரர் அது பற்றி விவேகானந்தரிடம் வெளிப்படையாகவே கேட்டார். அதற்கு விவேகானந்தர் எங்கள் தேசத்தில் பொருள் கொடுத்தவர்தான் நன்றி சொல்வது வழக்கம் என்றார். ஞானத்தை அந்த அளவு மதித்த தேசம் இந்தியா. இன்றளவும் வட இந்தியாவில் அப்படித்தான். ஒரு ஒடிஸ்ஸா கிராமத்தில் நான் பான் வாங்கிப் போட்டுக் கொண்ட போது – வெறும் பத்து குடிசைகளே இருந்த குக்கிராமம் அது – நானும் என் நண்பரும் எழுத்தாளர்கள் என்று தெரிந்ததும் கடையில் இருந்த பையன் காசு வாங்க மறுத்து விட்டான். வேத வியாசரின் வாரிசுகளிடம் பணம் வாங்குவது பாபம் என்றான். இன்னமும் என்னால் நம்ப முடியாத சம்பவம் அது. பத்து வயதுப் பையன் அவன்.
21 ஆண்டுகளுக்கு முன்னால் என்னைப் பிச்சைக்காரன் என்று சொல்லும் போது நான் கலங்கவில்லை. நான் செய்யும் காரியத்தில் தெளிவாக இருந்தேன். என் எழுத்தே எனக்கு சோறு போட வேண்டும் என்று நம்பினேன். என் நண்பர் அழகிய சிங்கர் ஒருமுறை “உங்களிடம் எல்லாம் பிடித்திருக்கிறது. வாசகர்களிடம் காசு கேட்பதுதான் தர்ம சங்கடமாக இருக்கிறது” என்றார். இப்படி ஒரு நூறு பேர் சொல்லியிருப்பார்கள். அப்போதெல்லாம் 5000 வருடத்துப் பாரம்பரியத்தை நான் மாற்ற முயற்சிக்கிறேன் என்ற உறுதி கொண்டேன்.
இன்று அது நடந்து விட்டது. ஜெயமோகனின் பேச்சுகள் பலவும் கட்டண உரைகளாக நடைபெறுகின்றன. வாசகர்களின் பொருள் உதவியில் விஷ்ணுபுரம் விருது விழா தென்னகத்தின் மிகப் பெரிய இலக்கிய விழாவாக நடக்கிறது.
மகிழ்ச்சி. சமஸின் குறிப்பு கீழே:
”ஒரு கட்டுரை வாசிப்பதற்குள் வாசகரைத் தொந்தரவுக்குள்ளாக்கும் வகையில் தளத்தில் 9 விளம்பரங்கள் வரக் கூடாது…”
“சமஸ், அப்படியென்றால் சந்தாதாரர்கள் மட்டுமே வாசிப்பதாக ‘அருஞ்சொல்’ தளத்தைக் கொண்டுவரப்போகிறீர்களா? ஏனென்றால், ஒரு கட்டுரைக்கு 9 விளம்பரங்கள் போட்டாலும், கூகுள் ஆட்சென்ஸ் கொடுப்பதன்னவோ ஒருவர் வாசித்தால், 10 பைசாதான். அதுவும் வேண்டாம் என்றால், கட்டாய சந்தாதான் ஒரே வழி!”
“நான் விளம்பரங்களுக்கு எதிரி இல்லை. நியுயார்க் டைம்ஸ் மாதிரி தொந்தரவுக்குள்ளாமல் மேலே கீழே நடுவில் என்று 3 வரலாம். அதற்கு மேல் கூடாது. அதேபோல, சந்தாதாரர்களுக்கு மட்டும் என்று தளத்தைப் பூட்டிவைக்கவும் மாட்டேன். ஏனென்றால், மன்னார்குடி போன்ற சிறுநகரிலிருந்து நான் இன்றைக்கு இந்த இடத்துக்கு வர பல நல்ல இணைய தளங்கள் எனக்கு வாசிக்கக் கிடைத்தது முக்கியமான காரணம். இது எனக்குத் தார்மிக விஷயம். பல ஆயிரம் மாணவர்கள் இதை வாசிக்கிறார்கள். அது தடைபடக் கூடாது. விரும்பியவர்கள் மட்டும் சந்தா செலுத்தலாம்; வசதியற்றவர்கள் சும்மா வாசிக்கட்டும்; அவர்களுக்கும் சேர்த்து, வசதியுள்ளவர்கள் செலுத்தட்டும். ‘தி கார்டியன்’ அப்படித்தானே செய்கிறார்கள்!”
“சமஸ், எந்த ஊரில் நீங்கள் இருக்கிறீர்கள்? ‘தி கார்டியன்’, ‘தி வயர்’ எல்லாம் ஆங்கிலத்தில் புழங்கும் ஊடகங்கள். அங்கே எல்லாம் லட்சங்களில் அவர்களுக்கு வாசகர்கள் பணம் கட்டுவார்கள். டாடாக்கள், அஸிம் பிரேம்ஜி போன்றவர்கள் கொடை தருவார்கள். தமிழ் வாசகர்கள் புத்தகங்களுக்கே பிடிஎஃப் கேட்பவர்கள். தவறாக நினைக்காதீர்கள். இன்னும் நம்மாட்கள் வாசிப்புக்கு அவ்வளவு செலவிட்டுப் பழகவில்லை.”
“அப்படியா? அப்படியென்றால் நாம் பழக்குவோம். நண்பரே, தவறாக நினைக்காதீர்கள். எனக்கு வேறு நம்பிக்கை இருக்கிறது. சமூகத்துக்கு ஒரு நல்ல விஷயத்தைக் கொடுத்து, அது முக்கியமான விஷயம் என்பதை நாம் உணர்த்தியும்விட்டால், தமிழ்ச் சமூகம் தன் கையில் ஏந்திக்கொள்ளும். மக்களை நம்புங்கள்!”
மூன்று மாதங்களுக்கு முன் அட்மின் + டெக்னிகல் நண்பர்களுடன் நடந்த உரையாடல் இது.
“சரி, இப்போது ஏன் இதைச் சொல்கிறாய்?” என்றுதானே கேட்கவருகிறீர்கள்? பொருளியல் அடிப்படையிலும் என் நம்பிக்கையைத் தமிழ் வாசகர்கள் ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். தமிழில் அதிகமான பதிவுகள் தரும் விகடன் போன்ற பத்திரிகைக்கான ஆண்டு சந்தா இன்று ரூ. 899- ஆயுள் சந்தா ரூ.8999-. அப்படியென்றால், அன்றாடம் வெறும் இரண்டு கட்டுரைகளைத் தரும் ‘அருஞ்சொல்’லுக்கு வாசகர்கள் அனுப்பும் சந்தா தொகை எவ்வளவாக இருக்கும்? ரூ. 1 லட்சம் அனுப்பும் ஒரு வாசகரையோ, சமூகத்தையோ எப்படி மதிப்பிடுவீர்கள்? யாரோ ஒருவர், சமஸுக்கு வேண்டப்பட்டவர் இப்படிக் கொடுத்திருக்கலாம்; அதற்காக இந்த சந்தா திட்டம் நல்ல வழிமுறை என்று சொல்ல முடியுமா என்று கேள்வி எழலாம். இல்லை நண்பர்களே! நாங்கள் சந்தா தொடங்கி ஒன்றரை மாதக் காலம் ஆகிறது. சில நூறு பேர் அதற்குள் சந்தாதாரர்கள் ஆகியிருக்கிறார்கள். அவர்களில் 95% பேர் ரூ.100-500 செலுத்துபவர்கள். ஏனையோர் ரூ.1000, ரூ.5000, ரூ.10000, ரூ.25000 என்று செலுத்தியிருக்கிறார்கள்.
ஒருவர் நூறு ரூபாய் செலுத்துகிறாரா அல்லது லட்ச ரூபாய் செலுத்துகிறாரா என்பது இல்லை விஷயம்; அவர்கள் வைக்கும் நன்மதிப்பும், நம்பிக்கையுமே ஓர் ஊடகத்துக்கான உண்மையான வெகுமதி.
டிஜிட்டல் மார்கெட்டிங் துறையைச் சேர்ந்தவரான நண்பர் அராத்து சமீபத்தில் அலுவலகத்துக்கு வந்திருந்தார். இந்த விஷயங்களைக் காட்டினேன். “இது உங்க மேல வாசகர்கள் வெச்சிருக்குற நம்பிக்கையோட விளைவுங்க!” என்றார்.
இப்படி சந்தா அனுப்புபவர்கள் கூடவே எழுதி அனுப்பும் குறிப்புகளை இங்கே பகிர வேண்டும் என்று எண்ணுகிறேன்; தமிழ் வாசகச் சூழலுக்கான நம்பிக்கை ஒளியை அவை வழங்கும்!