அசைவம்

பா.ராகவன் நேற்று ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அலுவலகம் போய் நூற்றுக்கணக்கான புத்தகங்களில் கையெழுத்துப் போட்ட மாதிரி நானும் ஒருநாள் அங்கே செல்லலாம் என்று நினைக்கிறேன். மதிய உணவுதான் பிரச்சினை. ஒரே சைவர்களாக அமர்ந்திருக்கும் இடத்தில் நான் மட்டும் அசைவம் சாப்பிட கூச்சப்படுவேன். அதனால் பக்கத்திலேயே இருக்கும் ஒரு உலகத் தரமான அசைவ உணவுக் கூடத்துக்கு- கோவை அலங்கார் விலாஸ் – நான் மட்டும் நைஸாகப் போய் வந்து விடலாம் என்று யோசனை. அது ஒரு பிரபல இசையமைப்பாளரின் நெருங்கிய உறவுக்காரர் வைத்திருக்கும் உணவகம். அவர் ஒரு உணவு ரசிகர் என்பதால் பார்த்துப் பார்த்து சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவருடைய பார்ட்னரான ஷங்கரும் என் வாசகர். அவரும் ஒரு உணவு ரசிகர். ஷங்கரும் நானும் ஒரு காலத்தில் ஒவ்வொரு ஓட்டலாக அதிருசிகரமான உணவை நாடி நாடி ஓடியிருக்கிறோம். எங்கோ ஒரு இடத்தில் லெபனான் உணவு என்றால் நாங்கள் அங்கே இருப்போம். இப்போது ஷங்கரே உணவகம் வைத்தும் ஒரே ஒரு முறைதான் சென்றிருக்கிறேன். அசைவ உணவுப் பிரியர்களுக்கு நான் அண்ணா நகரில் இருக்கும் கோவை அலங்கார் விலாஸை பரிந்துரைக்கிறேன்.

ஆனால் எனக்கு பாரா அளவுக்குக் கையெழுத்துக்குக் கேட்பார்களா என்று சம்சயமாக இருக்கிறது. இன்று பாருங்கள். காயத்ரி எழுதிய கதையைப் பகிர்ந்திருந்தேன். ஒம்போது லைக். அவள் பகிர்ந்திருந்தாள். அம்பது நூறு லைக்குகள் அள்ளிக் கொண்டு போகின்றன. இளம் எழுத்தாளர்களுக்குத்தான் காலம் போல. இவ்வளவு எழுதிக் குவித்தும் என்னை இளம் எழுத்தாளர் என்கிறீர்களா என்று பாரா சண்டைக்கு வரக் கூடாது. வயதைச் சொன்னேன். மட்டும் அல்லாமல் புதிய புத்தகங்கள் எதுவும் வரவில்லை. என் கவிதைத் தொகுதியையாவது கொண்டு வா என்றேன். மனுஷ் முன்னுரை வேண்டும் என்றாள். அதுவும் வந்து விட்டது. இன்னும் என்ன? நிகனார் பார்ரா முன்னுரை வேணுமாம். அடப் பாவிகளா!

ஔரங்கசீப் எப்போது முடியும் என்று எனக்கே தெரியவில்லை. மூன்றாம் பாகம் வந்து விட்டேன். ஆனால் மூன்றாம் பாகத்தோடு முடிந்து விடும். அது மட்டும் உறுதி.