முகத்தை அஷ்ட கோணலாக்கிப் பாடும் சாஸ்திரீய இசைக் கலைஞர்கள் பற்றி அராத்து மிக மோசமான பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். பொதுவாக இது விஷயங்களை நான் அவரோடு நேரில்தான் விவாதிப்பது வழக்கம். ஆனால் இதை அவர் பொதுவில் எழுதியிருப்பதால் நானும் பொதுவிலேயே எழுத வேண்டியிருக்கிறது. எனக்குக் கிரிக்கெட் தெரியாது. மைதானத்தில் நடுவில் ஏன் ஒரு இடம் மட்டும் புல் இல்லாமல் வெள்ளையாக இருக்கிறது என்று கேட்கும் அளவுக்குத்தான் எனக்கு கிரிக்கெட் ஞானம் உண்டு. அதனால் கிரிக்கெட் பற்றி நான் எழுதுவதில்லை. மூடிக் கொண்டு இருக்கிறேன். அதற்கென்றுதான் அபிலாஷை நாங்கள் நேர்ந்து விட்டிருக்கிறோம் நீயே ஜமாய் ராஜா என்று. அப்படித்தானே சீனியும் சாஸ்த்ரீய சங்கீதத்தை விட்டு விட வேண்டும்? ஏன் தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைக்கிறீர்கள்? அவர்கள் எக்ஸ்டஸியில் சந்நதம் வந்தது போல் பாடுகிறார்கள். அவர்களைப் போய் நீ ஏன் முகத்தை நெளிக்கிறாய் என்றால் என்ன அர்த்தம்? அவன் தான் தன்னிலையிலேயே இல்லையே ஐயா? நான் எழுத்தாளன். என் நடவடிக்கைகள் அப்நார்மலாகத்தான் இருக்கும். அது சீனிக்கே தெரியும். ஆனால் ஒரு காமன்மேன் என்னைப் பைத்தியம் என்று சொல்லுவான். அப்படித்தான் சீனியும் சாஸ்த்ரீய சங்கீதக் கலைஞர்கள் பற்றிச் சொல்லுகிறார்.
பொதுவாகவே இன்றைய எழுத்து உலகில் சராசரித் தன்மை பெருகி விட்டது. மீடியாக்ரிட்டி. செவ்வியல் இசை தெரியாது. மேற்கத்திய செவ்வியல் சுத்தம். காதுகளால் கேட்டதே இல்லை. உலக சினிமா தெரியாது. உலக வரலாறு தெரியாது. சுருக்கமாகச் சொன்னால், எல்லாவற்றிலும் ஒரு பாமர ரசனை. பாமரத்தன்மை. இதுதான் இன்றைய எழுத்தாளன். ஆனால் அசோகமித்திரனையும் இன்னும் பலரையும் படித்து விட்டதால் எழுத வருகிறது.சீனி இவர்களில் ஒருத்தர் இல்லை. என் சில்ஸிலாவில் அப்படிப்பட்ட ஒருவர் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் நமக்குத் தெரியாத விஷயங்களில் கருத்து சொல்வதிலிருந்தும் நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நானும் எவ்வளவோ உளறக் கூடியவன் தான். ஆனால் நண்பர்கள் மத்தியில்தான் உளறுவேன். பொதுவில் உளற மாட்டேன். சீனிக்கும் அதே அறிவுரையைக் கூறுகிறேன். இது குறித்து நான் எந்த விவாதமும் செய்யக் கூட விரும்பவில்லை. ஒரு தவறை சுட்டிக் காட்டவே இதை எழுதுகிறேன். கிட்டத்தட்ட இது பாடி ஷேமிங் போன்ற விஷயம். முகத்தைப் பார்க்கப் பிடிக்காவிட்டால் கண்களை மூடிக் கொண்டு கேளுங்கள். மேலும், உங்களுக்குப் பிடித்தது பிடிக்காதது என்ற விஷயத்தை ஏன் பொதுவில் வைக்கிறீர்கள்? சாஸ்த்ரீய சங்கீத ரசிகர்கள நீங்கள் நினைப்பது போல் நினைக்கவில்லை. நீங்கள் வெளி ஆள். நீங்கள் ஏன் உள்ளே வந்து கருத்து சொல்கிறீர்கள்? விஞ்ஞானிகள் விவாதிக்கும் மேடையிலே புகுந்து என்னாங்கடா உளறுகிறீர்கள் என்று ஒரு பாமரன் சொல்ல முடியுமா? தமிழ்நாட்டில் முடியும். ஏனென்றால், இங்கே யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.
சீனி, கோபிக்க மாட்டீர்கள் என்று தெரியும். எனக்கு என் கடவுளை ஒருவர் அதிலும் என் நண்பர் அவமதித்தது போல் தெரிகிறது. அதனால்தான் கடுமையாக எழுதியிருக்கிறேன். pl bear with me…
***
அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியதற்கு நான் எழுதிய எதிர்வினை மேலே உள்ளது. இதற்கு பதில் கொடுக்கும் அராத்து பின்வருமாறு எழுதியுள்ளார்:
சாரு , அந்தப்பதிவில் நான் முதன்மையாகக் குறிப்பிட்டு இருப்பது , திரையிசைப் பாடல்கள் பாடும் பெண்களைத்தான்.அப்படியே கர்நாடக சங்கீதம் பாடுபவர்களையும் இழுத்து விட்டு வேடிக்கை பார்த்தேன்.
எனக்கு கர்நாடக சங்கீதம் சுத்தமாகத் தெரியாது…ஆனாலும் அதன் மீது ஏதோ ஒரு நக்கல் மனோபாவம் – எனக்கு பர்ஸ்னலாக. நான் பல சமயங்களில் , ஜாலியாக வெளாட்டுக்கு பல சம்ப்பவங்கள் செய்வதுண்டு. அதைப்போல ஒன்றுதான் அப்படி எழுதியது. சீரியஸாக அணுகவில்லை சாரு.மற்றபடி அழகாக இருக்கும் நங்கைகள் தங்கள் முகங்களை கோமாளி போல மாற்ற்றிக்கொள்கிறார்களே என்ற பேரன்பும் அந்த போஸ்டின் அடிநாதம் என்பதையும் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்!
***
மேலே உள்ள அராத்து பதிலுக்கு என் பதில்:
சீனி, நீங்கள் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் எழுத்தாளர்களை இந்தியாவில் வழிகாட்டியாக நினைக்கிறார்கள். அதற்காக நாம் ரமணர் மாதிரி வாழ வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாகவே நீங்கள் கவனித்திருக்கலாம். தமிழ்நாட்டில் – தமிழ்நாட்டில் மட்டும்தான் – கர்னாடக சங்கீதத்தின் மீது ஒரு இளக்காரம் நக்கல் மனோபாவம் இருக்கிறது. உங்களுக்கும் அப்படி இருக்கலாம். ஆனால் தயவுசெய்து வெளியே சொல்லாதீர்கள். ஏனென்றால், ஒட்டு மொத்த சமூகமே அப்படித்தான் இருக்கிறது. கர்னாடக சங்கீதம் பாடுபவர்களைப் பார்த்து கழுதை கத்துவது போல் கத்திக் காண்பிப்பார்கள். ஒரு பிராமணர் சொன்னார். அவருக்கு இப்போது 75 வயது இருக்கும். அவர் பள்ளியில் படிக்கும் போது கழுதை மாதிரி கத்திக் காண்பிப்பார்களாம் பையன்கள். அதாவது, பிராமணன் என்றால் கர்னாடக சங்கீதம் பாடுவான். எப்படிக் கத்துவார்கள் என்பதற்குக் கழுதை உதாரணம் சொல்லியிருக்கிறேன். நேரில் என்றால் அவர்கள் நக்கல் செய்வது போலவே செய்து காண்பிப்பேன். இதற்கும் கமர்ஷியல் எழுத்தாளர்கள் நம்மைக் கிண்டல் செய்வதற்கும் அவமானப்படுத்துவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இப்படிக் கல்லடி பட்டுக் கொண்டிருக்கும் நாமே நம் சக கலைஞர்களை அவமானப்படுத்தலாமா?
சாஸ்த்ரீய சங்கீதம் என்பது நம் தேசத்து சொத்து. அப்ரஹாம் பண்டிதர் உலகின் முதல் இசையே தமிழ் இசை என்கிறார். உலகின் முதல் குரங்கு தமிழ்க் குரங்கு கதை அல்ல அது. அவர் தான் சொன்னதை நிறுவுகிறார். மொத்தம் 4000 பக்கங்கள். நான் முதல் தொகுதியைப் படித்திருக்கிறேன். கர்னாமிர்த சாகரம். உண்மையிலேயே அது சாகரம்தான் அது. அந்த நூலில் சிலப்பதிகாரத்தில் பொதிந்துள்ள தமிழிசைக் குறிப்புகள் பற்றி ஆய்வு செய்கிறார். கர்னாமிர்த சாகரத்தை மூலமாகக் கொண்டுதான் எஸ். ராமனாதன் சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம் என்ற ஆய்வு நூலை எழுதினார். இந்த ஆய்வு நூலுக்கு நான் ஒரு நீண்ட மதிப்புரையை 1982இல் எழுதினேன். மீட்சி பத்திரிகையில்.
தியாகராஜர் ராமனை நினைத்துக் கீர்த்தனைகள் பாடிய படி ஒவ்வொரு தெருவாகச் சென்று உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்தார். அப்போது அவரைக் கேலி செய்தவர்கள் உண்டு. அவர் வணங்கிய ராமர் படத்தை ஆற்றில் போட்டார் அவர் அண்ணன். அந்தக் கேலிக்கும் சாஸ்த்ரீய சங்கீதக் கலைஞர்களை தமிழ்ச் சமூகம் செய்யும் கேலிக்கும் அதிக வித்தியாசம் இல்லை.
பண்டிட் ஜஸ்ராஜ் என் கடவுள். அவர் நீங்கள் சொல்கிறாற்போல் படு பயங்கர அங்கசேஷ்டை செய்துதான் பாடுவார். அவரை முகத்தைக் கோணாமல் பாடச் சொன்னால் செத்து விடுவார்.
கையையும் காலையும் கட்டிப் போட்டு விட்டு ஓடு என்றால் எப்படி சீனி ஓடுவது? சங்கீதம் பாடும் போது முகம் ஏன் கோணுகிறது என்றால் அது உடல்கூறு வல்லுனனைக் கேட்க வேண்டிய கேள்வி. நான் எழுதும் போது இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை அவந்திகா அழைப்பாள். நானும் எழுந்து செல்வேன். பா. ராகவன் பேசும் போது அழைத்திருக்கிறாள். நீங்கள் பேசும் போது… உங்களுக்குத் தெரியும். இப்படி என் நண்பர்கள் எல்லோருமே. இப்படி இந்த உலகத்தில் நான் ஒருத்தன் மட்டுமே எழுத முடியும். எல்லாரும் இப்படி எழுத வேண்டும் என்று நீங்கள் உத்தரவு போட முடியுமா? டிக்கட் கௌண்டரில் டிக்கட் போடுபவர் எப்படி டிக்கட் போட்டுக் கொண்டே கதை எழுதுவார்? அப்படித்தான் நான் எழுதுகிறேன். அதேபோல் எழுது என்று எல்லோரையும் சொல்ல முடியாது. உங்களுக்கு எழுதுவதற்குத் தனிமை அல்லது தொந்தரவு இல்லாத சூழல் எப்படித் தேவையோ அப்படித்தான் இசைக் கலைஞனுக்கு அங்கசேஷ்டையும். அது உங்களுக்கு சேஷ்டை. அவனுக்கு அது சரீரத்தின் வெளிப்பாடு.
பொதுவாகவே தமிழ்ச் சமூகத்தில் உன்னதங்களுக்கு மதிப்பு இல்லை. உன்னதங்கள் அவமரியாதை செய்யப்படுகின்றன. அது கலைக்கும் பொருந்தும். இசை, இலக்கியம் இரண்டுமே அவமதிக்கப்படும் இன்றைய சூழலில் நாம் அந்த ஃபிலிஸ்டைன் கும்பலில் சேரலாகாது.
இசைக் கலைஞர்களுக்கு நம்மைத் தெரியாது என்றால், அதற்காக நாம் அவர்களை அவமதிக்க முடியுமா? ஓவியர்களுக்குக் கூடத்தான் எழுத்தாளர்களைத் தெரியாது. அதற்காக ஓவியத் துணிகளைக் கிழித்துப் போடலாமா?
யாருக்குத்தான் எழுத்தாளர்களைத் தெரிகிறது? ஹிந்துஸ்தானி சங்கீதம் அழியாது. அங்கே அதற்குப் பெருவாரியான ரசிகர்கள் உண்டு. இங்கே கர்னாடக சங்கீதம் தமிழைப் போல் அழிந்து விடும். இன்று எழுத்தாளர்களுக்கே தமிழ் எழுதத் தெரியவில்லை. கொடூரமான தமிழ்க் கொலைகளை எழுத்தாளர்களின் கதைகளில் பார்க்க முடிகிறது. அதேபோல் கர்னாடக சங்கீதமும் போய் விடும். அப்படி அழிந்தால் அது ஒரு மொழியும், பண்பாடும், கலாச்சாரமும் அழிந்ததற்கு சமம். தொல்காப்பியத்துக்கு முன்னால் எத்தனையோ இலக்கியப் பொக்கிஷங்கள் இருந்தன. எல்லாமே போய் விட்டது. அப்படியே கர்னாடக சங்கீதமும் போய் விடும். மனித குலமே கூட அழியலாம். கயாமத் என்றும் பிரளயம் என்றும் சொல்வது போல.
அது, அது பாட்டுக்கு நடக்கட்டும். படைப்பாளிகளான நாம் ஏன் அழிவு வேலையில் ஈடுபட வேண்டும்? அதிலும் ஃபிலிஸ்டைனின் கும்பலோடு சேர்ந்து கொண்டு?
இன்னொரு விஷயம். பொதுவாக நமக்கு ஒவ்வாத, நமக்குப் புரியாத விஷயங்களை நக்கல் அடிப்பது ஃபிலிஸ்டைன் சமூகத்தின் வழக்கமாக உள்ளது. முற்போக்காகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ஒரு பெரியாரிஸ்ட், இடதுசாரி பிராமணர். பத்திரிகை அலுவலகத்தில் உதவி ஆசிரியரிலிருந்து ஆசிரியராக முன்னேறினார். உடனே மதிய உணவுக் கூடத்தில் ஒரு உத்தரவு போட்டார். இனிமேல் யாரும் அசைவ உணவு கொண்டு வரக் கூடாது. அதற்கு முன்னால் ஆசிரியராக மூத்த தலைமுறை பிராமணர்கள் இருவரும் அப்படி உத்தரவு போட்டதில்லையே, நீங்கள் பெரியாரிஸ்டாயிற்றே என்று இன்னொரு பெரியாரிஸ்ட் கேட்டதற்கு, அப்போது அலுவலகத்தில் ஏசி இல்லை, இப்போது ஏசி போடப்பட்டு விட்டதால் கதவு மூடியிருக்கிறது இல்லையா, அதனால்தான் சொல்கிறேன் என்றாராம் பெரியாரிஸ்ட்.
நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அடுத்தவரின் சுதந்திரத்தில் தலையிடலாகாது. அதிலும் கலைஞர்கள் விஷயத்தில் தலையிடுவது மிகவும் தவறு. உங்கள் பதிலுக்கு விருப்பக் குறி இட்டிருப்பவர்கள் அத்தனை பேரும் இந்த ஃபிலிஸ்டைன் சமூகத்தின் பாமர ரசனையின் பிரதிநிதிகள் என்றே அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.
இதெல்லாம் சினிமாப் பாடகர்களை முன்வைத்துச் சொன்னதாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு அவர்களைப் பற்றி எதுவும் தெரியாது. கிரிக்கெட் மாதிரி. அவர்களைப் பற்றி மட்டும் எழுதியிருந்தால் நான் பாட்டுக்கு ஔரங்கசீப்பை எழுதிக் கொண்டிருந்திருப்பேன். உங்கள் குறிப்பில் சாஸ்த்ரீய சங்கீதக் கலைஞர்களையும் இழுத்ததால்தான் இத்தனை விளக்கம்.