ஒரு புள்ளிவிவரம்

அமெரிக்காவில் வசிக்கும் என் சிநேகிதி ஒருவர்.  அவர் வசிக்கும் நகரில் மெட்ரோ இல்லை.  கார்தான் ஒரே வாகனம்.  அவருடைய ஊதியத்தில் கார் வாங்க முடியவில்லை.  அதனால் அதிக அளவு போக்குவரத்து இல்லை.  இரவிலோ வெளியிலேயே போக முடியாது.  கறுப்பின, விளிம்பு நிலை மனிதர்களின் தொல்லை.  ஆனால் தமிழக உறவினர்களோ “அவள் அமெரிக்காவில் பெரிய வேலையில் இருக்கிறாள், கூரையைப் பிய்த்துக் கொண்டு டாலர் கொட்டுகிறது” என்றே நினைக்கிறார்கள்.  இது அந்தப் பெண் சொன்னது.  இப்படி ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கே வாழ்கிறார்கள்.  அது எனக்குத் தெரியும்.

ஆனால்,

எனக்கு அதிக வாசகர்கள் இருப்பது அமெரிக்காவில்தான்.  உள் நாட்டில் – தில்லியில், கல்கத்தாவில், மும்பையிலிருந்து – இதுவரை எனக்கு ஒரு கடிதம் கூட வந்ததில்லை.  இத்தனைக்கும் தில்லியிலும் மும்பையிலும் லட்சக்கணக்கான தமிழர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் அமெரிக்காவிலிருந்து ஏகப்பட்ட கடிதங்கள் வருகின்றன.  ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரே ஒரு நண்பர் தொடர்பில் இருக்கிறார்.  சந்தாவும் அனுப்பி வைப்பார்.  கனடாவிலிருந்து இரண்டு பேர்.  இருவருமே சந்தா அனுப்புவார்கள்.  இவ்வளவுதான்.  ஆனால் அதிக அளவு கடிதங்கள் வருவது அமெரிக்காவிலிருந்து. 

அமெரிக்காவிலிருந்து நான்கு பேர் சந்தா அனுப்புகிறார்கள்.  ம்.  நான்கு பேர்.  இப்போது முதல் பத்தியை ஞாபகம் கொள்ளுங்கள்.  இங்கே தமிழ்நாட்டிலிருந்துதான் எனக்கு வரும் சந்தா மற்றும் நன்கொடை எல்லாம்.  எல்லோருமே மாத வருமானம் 30000 இலிருந்து 60000 வரை கொண்டவர்கள்.  இதில் ஆட்டோ ஓட்டுநர்கள், அச்சகத்தில் வேலை செய்பவர்கள், கோவில் குருக்கள் போன்றவர்களும் உண்டு.  300 ரூபாயாவது அனுப்பி விடுகிறார்கள்.  40000 ஊதியம் வாங்குகின்ற என் நண்பன் ஒருத்தன் மாதம் 1200 ரூ. அனுப்புகிறான்.  வேண்டாம் என்றேன்.  கேட்கவில்லை.

என் சொந்த செலவுக்குப் பணம் தேவையில்லை.  கொரோனா காலம் முடிந்து மேற்கொள்ள வேண்டிய பயணங்களுக்குப் பணம் தேவை.  ஆனால் அதை விட உடனடித் தேவை பூனை உணவுக்கு.  இருபது பூனைகள்.  இதில் ஐந்து என் வீட்டில் இருக்கின்றன.  அதில் டெட்டி என்ற குட்டி, நான் எங்கே போனாலும் நாய் போலவே என் பின்னாலேயே வரும்.  நான் குளிக்கப் போனால் வாசலிலேயே அமர்ந்திருக்கும்.  நிழல் போலவே என்னை ஒட்டிக் கொண்டிருக்கிறது.  அவந்திகாவிடம் கொடுத்தால் போகாது.  என்னிடமே வந்து ஒட்டிக் கொள்ளும்.  முழுக் கறுப்பு நிறக் குட்டி. 

சென்ற மாதம் பெய்த அடை மழையில் கீழே ஒரு குட்டி மாட்டிக் கொண்டது.  இரண்டு மாதக் குட்டி.  அதைக் கொண்டு வந்து விடுகிறேன் என்றாள் அவந்திகா. 

வேண்டாம்மா, பூனை உணவுக்காக இந்த எழுபது வயதில் எல்லோரிடமும் கையேந்த வேண்டியிருக்கிறது.  அது பரவாயில்லை.  என் ஞானத்தைக் கொடுத்துத்தான் கேட்கிறேன்.  ஆனால் இன்னும் இன்னும் பளுவை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டாமே என்றேன். 

அந்தக் குட்டி பெர்ஷியன் பூனை போல் புஸு புஸு என்று இருக்கும். மழை முடிந்து சில தினங்களில் வாய் வழியாக சுவாசித்தது.  பூனை வாய் வழியாக சுவாசிக்கக் கூடாது.  அவந்திகா அதற்கு மேல் என் பேச்சைக் கேட்க விருப்பமில்லாமல் அதை எடுத்துக் கொண்டு மருத்துவரிடம் சென்றாள்.  மருத்துவம் செய்து கொண்டு வந்தாள்.  நுரையீரலுக்குள் நீர் புகுந்து விட்டது.  மதியமே குட்டி இறந்து விட்டது.  என் கண்களிலிருந்து ரத்தம் கசிந்தது என்று சொன்னால் அது தேய்வழக்காகி விடும்.  அவந்திகா கேட்ட போதே எடுத்துக் கொண்டு வா என்று சொல்லியிருக்க வேண்டும்.  ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காகப் பிச்சை எடுக்கலாம்.  ஆனால் அந்த உயிர் பெண் உடலைக் கொண்டிருந்தால் நூறு உயிர்களாகி விடுகிறதே என்று எனக்குக் கவலை.  இதோ, என் லக்கி இதோடு பன்னிரண்டு குட்டிகளை இறக்கியிருக்கிறது.  ஒரு ஈடுக்கு நான்கு குட்டிகள்.  இப்போதும் கர்ப்பமாக இருக்கிறது.  ஆனாலும் அந்த உயிர் போனது என்னுடைய ஈவிரக்கமற்ற தன்மையினால், அல்லது, வறட்டு கௌரவத்தினால்.  வித்தையைக் கொடுத்து விட்டுக் கையேந்தினால் அதில் என்ன தவறு?

நேற்று எழுதிய கதை (ஆசீர்வாதம்) என் சுயநினைவில் எழுதப்பட்டது அல்ல.  ஒரு மணி தியானத்தில் இருந்து, அந்த gnostic மனநிலையிலேயே எழுதியது.  திரும்பிக் கூடப் படித்துப் பார்க்கவில்லை.  அதைப் படிக்கும் வாசகருக்கு அது எந்த ஞானத்தையும் கொடுக்காதா என்ன? 

அது ஏன் விளிம்புநிலை மக்களும், அன்றாடம் காய்ச்சிகளும் மட்டுமே எனக்கு சந்தா அனுப்புகிறார்கள் என்ற கேள்வி என்னைக் குடைந்து கொண்டே இருக்கிறது.  ஏன் அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கணக்கான கடிதங்கள் மட்டும் வருகின்றன, ஆனால் நான்கு பேர் மட்டுமே சந்தா அனுப்புகிறார்கள்?  அந்த நால்வரையும் நான் நேரில் பார்த்ததில்லை என்ற போதிலும் அவர்களை என் குடும்ப உறுப்பினர்களைப் போல நினைக்கிறேன். 

தமிழ்நாட்டில் கீழ் நடுத்தர வர்க்கத்தைத் (30000 – 60000) தாண்டியவர்களில் ஒன்றிரண்டு பேர்தான் சந்தா அனுப்புகிறார்கள்.  கீழ் நடுத்தர வர்க்கத்திலோ அத்தனை பேரும் சந்தா அனுப்புகிறார்கள்.  இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. 

இப்போது எங்கள் வீட்டு பட்ஜெட்டில் அரிசி, பால், மளிகைச் சாமான், கரண்டு பில், வாடகை போக இன்னொரு ஐட்டமும் சேர்ந்திருக்கிறது.  இரண்டு ஆண்டுகளாகவே.  அது, தர்மம்.  ஆம், எங்கள் பட்ஜெட்டில் மட்டும் அல்ல.  ராகவனிடம் கேட்டபோது அவரும் அதைத்தான் சொன்னார்.  இஸ்திரி போடுபவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தெருவில் காய்கறி விற்போர், துப்புரவுப் பணியாளர் போன்ற விளிம்பு நிலை மக்களுக்கு அவ்வப்போது பண உதவி செய்ய வேண்டியிருக்கிறது.  எல்லோரும் உதவுகிறார்கள்.  இல்லாவிட்டால் தெருத் தெருவாக பிணங்கள்தான் கிடக்கும். 

எனவே, நான் எனக்காகக் கேட்கவில்லை.

பூனைகளுக்காகவும், மற்ற தர்ம காரியங்களுக்காகவும், என் எழுத்துச் செயல்பாட்டுக்காகவுமே கேட்கிறேன்.  பயணமும் புத்தகங்களும்தான் எழுத்துச் செயல்பாடு. 

பணமாக வேண்டாம்.  பொருளாகக் கொடுங்கள்.  என் கணினி மூன்று முறை செயல்படவில்லை.  மாதம் ஒருமுறை என்று வைத்துக் கொள்ளுங்கள்.  மூன்று முறையும் கச்சேரி சாலையில் உள்ள கணினிப் பொறியியலாளர் வந்தார்.  மூன்று முறையும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை.  வறுபுறுத்தியும் மறுத்து விட்டார்.  அவர் என் வாசகராம். 

என் உயிரை உருக்கி உங்களுக்கு எழுத்தாகத் தருகிறேன். 

பதிலாக,

இந்தப் பிரபஞ்சத்தில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவராசிகளுக்காகக் கேட்கிறேன்.  சந்தா அல்லது நன்கொடை அனுப்புங்கள்.  பூனை உணவாக ஆர்டர் பண்ணினாலும் சரிதான்.  எனக்கு எழுதினால் விவரம் தருகிறேன்.  charu.nivedita.india@gmail.com

திரும்பவும் சொல்கிறேன், மாணவர்கள், வீட்டில் இருக்கும் பெண்கள், சக எழுத்தாளர்கள் பணம் அனுப்ப வேண்டாம். 

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai