புஷ்பா – ஒரு லும்ப்பன் கிளாஸிக்

புஷ்பாவுக்கு ஆறு வயது

புஷ்பா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறான்

புஷ்பாவுக்கு அப்பன் பெயர் கிடையாது என்றொருவன் அறிவிக்கிறான்

புஷ்பா சிணுங்கி அழுகிறான்

புஷ்பா ரௌடியாகிவிட்டான்

புஷ்பா கால் மேல் போட்டு உட்கார்ந்திருக்கிறான்

புஷ்பாவுக்கு அப்பன் பெயர் இல்லை என்றொருவன் அறிவிக்கிறான்

புஷ்பா குமுறி எழுந்து அவனை அடிக்கிறான்

புஷ்பா பெரிய தாதாவாகிவிட்டான்

ரௌடிகள் புடைசூழ போலிசுக்குக் கப்பம் கட்டுகிறான்

புஷ்பா அப்பன் பெயர் தெரியாதவன்

என்றொருவன் அறிவிக்கிறான்

புஷ்பா இறுக்கி மூடிய கைக்குள்

தன்னைத் தானே சுட்டுக்கொள்கிறான்

புஷ்பாவை இன்னொருவன் சுட முடியாது

கால் மேல் கால் போட்டிருக்கும் புஷ்பாவின் ஒரு முடியை

இன்னொருவன் பிடுங்க முடியாது

ஆனால் புஷ்பா அழுவான் ஆத்திரப்படுவான்

சித்ரவதை செய்துகொள்வான்

ஒரு அப்பன் பெயருக்காக

ஒரு அப்பன் பெயரில் உள்ளது புஷ்பாவின் ஒரே உயிர்

புஷ்பா ஒருத்தியை காதலிக்கிறான்

இன்னொருத்தியோடு நடனமாடுகிறான்

தன் தொடை மேல் அவளை அமர்த்தி

எட்டு போடுகிறான்

அந்தக் காட்சியில்

அப்பன் இல்லாமல் பிறந்த அபூர்வன் புஷ்பா

என்றொருத்தி—

இடுப்பை ஆட்டியாடும் பெண்களில் ஒருத்தி—

அறிவித்திருக்க வேண்டும்

புஷ்பா அப்போது அட்டகாசமாக சிரித்திருப்பான்

தொடை மீது அமர்த்திய பெண்ணோடு

வண்ணஜால ஒளிர் விளக்குகளுக்கடியில்

ஏழெட்டு எட்டு போட்டிருப்பான்

பெருந்தேவி எழுதிய புஷ்பா என்ற கவிதையின் ஒரு பகுதி மேலே உள்ளது.  எனக்குப் பிடித்த சமகாலக் கவிகளில் ஒருவர் பெருந்தேவி.  அவரது குறுங்கதைகளுக்கு நான் பெரும் ரசிகன். 

புஷ்பா பற்றி நான் எழுதக் கூடாது என்ற சுயக்கட்டுப்பாட்டுடன் இருந்தேன்.  புஷ்பாவைத் திட்டி என் நண்பர்கள் எழுதிய போது கட்டுப்பாட்டை இழந்து விடுவோமோ என்று பயந்தேன்.  ஆனாலும் ஔரங்கசீப் நாவல் வேலை தலைக்கு மேல் வெள்ளம் என்ற நிலையில் இருந்தது.  மூன்றாம் பாகம்.  முடிக்க வேண்டிய இடம்.  ஆனாலும் இன்று பெருந்தேவியின் கவிதை பார்த்து விரதத்தை உடைத்து விட்டு ஔரங்கசீப்பிலிருந்து வெளியே வந்து இதை எழுதுகிறேன்.

புஷ்பாவைத் திட்டுபவர்கள் அதை ஏதோ பெர்க்மன் படத்தைப் போல் எதிர்பார்த்து, அது இது இல்லை என்றதும் ஏமாந்து திட்டுகிறாற்போல் தெரிந்தது.  வியாபார மசாலா சினிமாவில் போய் கலையைத் தேடலாமா? 

ரொலான் பார்த் என்ற அறிஞனின் காலத்துக்குப் பிறகும் நாம் கலை என்றும், இந்திய சினிமாவை புஷ்பா போன்ற படங்கள் சீரழித்து விடும் என்றும் நம்பலாமா? 

புஷ்பாவில் ஏகப்பட்ட குறிப்பான்கள் உள்ளன.  வேண்டாம்.  தமிழில் எழுதினால் புரியாது.  முக்கிய வார்த்தைகளை ஆங்கிலத்திலேயே சொல்லி விடுகிறேன், தமிழில் ஆங்கிலத்தைக் கலப்பது எனக்குப் பிடிக்காது என்ற போதிலும்.

ஒரு சினிமாவை எப்படி நாம் புரிந்து கொள்ள வேண்டும்?  எந்த ஒரு படமும் signகளாலும் codeகளாலும் நிரம்பியுள்ளன.  Signifier and Signified என்ற இரண்டு வார்த்தைகள் முக்கியம்.  முதலாவது, எதையோ ஒன்றைக் குறிக்கிறது.  இரண்டாவதான சிக்னிஃபைட் என்பது குறிக்கப்படும் பொருள்.  இங்கே மதிப்பீடுகள் என்ற ஒரு விஷயமும் குறுக்கிட்டு தன் வேலையைக் காட்டுகிறது.  நான் வீடு கட்டி வாழாததால் உருப்படாதவன் என்பது என் குடும்பத்தார் என்னைப் பற்றி வைத்துள்ள மதிப்பீடு.  நானோ வீடு கட்டாததால் வெற்றி அடைந்தவன் என்று என்னைப் பற்றி மதிப்பிட்டுக் கொள்கிறேன்.  ஆக, எம்மாதிரி அர்த்தங்களை நாம் கண்டடைகிறோம் என்பது நம்முடைய மதிப்பீடுகளைப் பொறுத்திருக்கிறது.  இதுவும் இந்தக் குறிப்பான்களுக்கிடையே தன் விளையாட்டை நிகழ்த்துகிறது. 

ஆனால், இயக்குனருக்கு இந்த Signs, codes பற்றியெல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.  தெரிந்தும் இருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். 

புஷ்பா படத்தில் எது ஸைன்?  எக்கச்சக்கமாக இருக்கிறது.  சில உதாரணங்கள் சொல்கிறேன்.  புஷ்பாவின் நடை ஒரு ஸைன்.  ஒருவிதமாகத் தாங்கித் தாங்கி நடப்பது.  இங்கே தமிழ்நாட்டில் உள்ள சேரிகளில் வசிக்கும் இளந்தாரிகளில் ஒருத்தன் இப்படித்தான் நடப்பான்.  எல்லோரும் நடக்க மாட்டார்கள்.  அவர்களில் எவன் தன்னை சண்டியர் என்று நினைத்துக் கொள்கிறானோ அவன்தான் அப்படி நடப்பான்.  அவன்தான் புஷ்பா மாதிரியே சட்டை போடுவான்.  சட்டை காலரை ஒரு தினுசாக வைத்திருப்பான்.  ஆனால் அவனால் சமூகத்தில் பெரிய ஆளாக ஆகவே முடியாது.  அதிர்ஷ்டமும் துணிச்சலும் இருந்தால் அவன் விரைவிலேயே ரவுடியாக மாறுவான்.  நாற்பது வயதில் என்கவுண்டரில் போலீஸால் கொல்லப்படுவான்.  நாற்பத்தைந்து வயது வரை வாழ்ந்தால் அவன் பெரும் அதிர்ஷ்டசாலி.  அவனுக்கு வேறு வழியே கிடையாது.  இருபதிலிருந்து நாற்பது வரை அவன்தான் ராஜா.  அவன்தான் புஷ்பா.  கொலை போன்ற பெரும் குற்றச் செயல்களில் மாட்டாமல் இருந்து, சமூக சேவகர் இமேஜை எடுத்துப் போட்டுக் கொள்ள முடிந்தால் மினிஸ்டர் ஆக முடியும். 

இதை புஷ்பா என்ற திரைப்படம் மிகக் கச்சிதமாகச் செய்திருக்கிறது.  இதில் கேங்ஸ் ஆஃப் வாஸேபூரில் இருக்கும் கலை நுணுக்கங்கள் இல்லவே இல்லை.  அதனால் என்ன?  இது என்ன கலைப்படமா?  இது ஒரு பக்கா பொழுதுபோக்கு மசாலா படம்.  இதில் ஏன் ஐயா கலையைத் தேடுகிறீர்கள்?

இந்த இயக்குனரை நான் பாராட்டியது எப்போது என்றால், மூன்று மணி நேரத்தில் பத்தே பத்து நிமிடத்தைத் தவிர (ஹீரோயின் வரும் இடங்கள்!) இவர் நம்மை இருக்கை முனையில் அமர வைக்காவிட்டாலும், கொஞ்சம் கூட அலுக்காமல், சலிப்பு தட்டாமல் கதை சொல்லிக் கொண்டு போகிறார்.  இது ஒரு அசாத்திய சாதனை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.  ஏனென்றால், மற்றவர்கள் இவ்விஷயத்தில் தட்டுத் தடுமாறிக் கீழே விழுந்து விடுகிறார்கள்.  சூரரைப் போற்று என்ற படத்தை என்னால் ஒரு பத்து நிமிடம் கூடப் பார்க்க முடியவில்லை.  ஆரம்பக் காட்சியிலேயே ரயிலில் நாலைந்து பேர் கத்திப் பேசுவது மகா ஆபாசமாக இருந்தது.  சரி, அந்தக் கதை எனக்குப் பிடித்த நூலிலிருந்து எடுத்ததாயிற்றே என்று பொறுமை காத்தால் அடுத்து வரும் விமானக் காட்சி சகிக்கவே முடியவில்லை.  குடித்தவன் வாந்தி எடுத்தால் எத்தனை கொடூரமாக இருக்கும், அப்படி இருந்தது.

சூரியாவின் படங்களும் சரி, சூர்யாவின் வாழ்க்கையும் சரி, pretentiousஆக இருக்கின்றன.  சமூக சீர்திருத்தவாதி பாவனைதான் சகிக்க முடியவில்லை.  அதை விட எனக்கு விஜய் நடிக்கும் நேரடிப் பொழுதுபோக்குப் படங்கள் பிடிக்கின்றன.  அவற்றில் பாவனையே இல்லை.  சமூக சீர்திருத்தப் புடலங்காய் எதுவும் இல்லை.  வந்தியா, குட்த்த காசுக்கு சூப்பர் பண்டம்.  போய்கினே இரு.  அம்மாதிரிப் படங்கள் அவை. 

இந்தப் பின்னணியில்தான் புஷ்பா முக்கியத்துவம் பெறுகிறது.  பெரும்பாலான படங்கள் இரண்டு மணி நேரத்துக்கே தள்ளாடும் போது புஷ்பா எப்படி நம்மை மூன்று மணி நேரம் உட்கார வைக்கிறது?  அதிலும் மூன்று மணி நேர முடிவில் படம் முடியும்போது இரண்டாவது இடைவேளை என்று காண்பிக்கப்படும்போதுதான் படமே தொடங்குவது போல் உணர்கிறோம். படத்தின் இரண்டாம் பாகம் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகலாம். 

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர்கள் தம் புட்டத்தின் முக்கால்வாசி வெளியே தெரிகிறாற்போல் ஜீன்ஸ் அணிகிறார்கள்.  என் நண்பர் ஒருவரின் அலுவலகத்துக்கு பீட்ஸா கொடுக்க வரும் ஸ்விக்கி பையன் பையிலிருந்து பீட்ஸாவை எடுக்கக் குனியும்போது அவனுடைய முழுப் புட்டமும் அலுவலகம் முழுக்கத் தெரிகிறது என்றார்.  சொல்லி விட்டு சொன்னார், அதை decode பண்ணினால் என்ன அர்த்தம் கிடைக்கும் தெரியுமா?  ”கறுப்பின மக்களை ஒடுக்கும் மேட்டுக்குடியினருக்கு எங்கள் புட்டத்தைத்தான் காட்டுவோம்.” 

ஆக, புஷ்பா என்ற லும்ப்பன் (பொறுக்கி வர்க்கம்) தன் பொறுக்கித்தனத்தைக் கொண்டு பெரிய ரவுடியாகவும் கடத்தல்காரனாகவும் ஆகிறான்.  போலீஸையே போட்டுத் தள்ளுகிறான்.  போலீஸையே அண்ட்ராயரோடு வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான்.  அவன்தான் நாட்டுக்கே ராஜா.  அவனை ஒரு பயலும் அசைக்க முடியாது.  இதெல்லாம்தான் signs.  இவற்றோடுதான் நம் நிஜ வாழ்க்கை லும்ப்பன்கள் தம்மை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.  சரி, லும்ப்பனை விட்டு விடுவோம்.  சகலமானவருக்கும் (புத்திஜீவிகள் விதிவிலக்கு) இந்தப் படம் பிடித்திருப்பதற்குக் காரணம், எல்லோருமே தங்கள் நிறைவேறாக் கனவுகளையும், அபிலாஷைகளையும் இப்படத்தின் நாயகன் மூலம் காண்கிறார்கள்.  நடிகையை நினைத்து சுய மைதுனம் செய்து கொள்வதைப் போன்றது இது.  நான் சொன்ன மேற்கண்ட உதாரணத்தை வைத்து இந்தப் படம் ஒரு porn film செய்வதை மட்டும்தான் செய்வதாக நினைத்து விடாதீர்கள்.  புஷ்பாவில் பல சமிக்ஞைகள் பொதிந்து கிடக்கின்றன. 

ம் சொல்றியா மாமா, ம்ஹும் சொல்றியா.  சமந்தாவின் நடனம்.  நீலப் படங்களை விட அசைவுகள் அதிகம்.  ஆனால் தணிக்கையின் வரையறைக்குள்தான்.  அப்பாடலிலும் நடனத்திலும் உள்ள சமிக்ஞைகளை ஆபாசம் என்று ஒற்றை வார்த்தையில் ஒதுக்கி விட முடியாது.  அந்த சமிக்ஞைகளை நாம் decode பண்ண வேண்டும்.  அப்படிப் பார்த்தால், ஒவ்வொரு ஆணின் உள்மனக் கிடக்கையை அந்த நடனமும் பாடலும் காட்சிப்படுத்துகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.  எப்படி என்று விளக்க வேண்டுமா?

Samantha Ruth Prabhu's sexy moves in item song 'Oo Antava' from ‘Pushpa’ will win you over - Watch

வெளிநாட்டு இரவு விடுதிகளில் ஒரு பெரிய தூண் போன்ற தண்டு இருக்கும்.  அதன் நடுவே இரண்டு தொடைகளையும் வைத்துக் கொண்டு கீழும் மேலும் ஏறி இறங்கிக் கொண்டிருப்பாள் மேலே ஒரு ரிப்பனும் கீழே ஒரு ரிப்பனும் அணிந்த பெண்.  இங்கே அந்தத் தூண்தான் புஷ்பாவின் தொடை.  அதில் சமந்தா முன்னேயும் பின்னேயும் ‘பயணம்’ செய்கிறார்.  பாங்காக் நகரின் பிராத்தல்களில் கியூவில் நின்று கொண்டிருக்கும் தமிழர்களும் அரேபியர்களும் புஷ்பாவின் இடத்தில் தம்மையேதான் பார்த்திருப்பார்கள்.

வெகுஜன கலாச்சாரத்தைப் பற்றி மதிப்பீடு செய்பவர்களும் கருத்து சொல்பவர்களும் தயவுசெய்து ரொலான் பார்த்தின் Mythologies என்ற மிகச் சிறிய நூலைப் படித்து விட்டுச் செயல்படும்படி கேட்டுக் கொள்கிறேன். 

கத்தீட்ரலின் கட்டிட அமைப்பு ஒரு காரின் வடிவமைப்பை விட அழகியல் ரீதியாக மேன்மையானது என்று ஒருவர் சொன்னால், அதை பார்த் மிகக் கடுமையாக மறுக்கிறார்.  The Gothic cathedrals and Citroen cars have meaning only within the myth structures of their own time. 

அதோடு, முன்பு மதம் வகித்த இடத்தை இப்போது வெகுஜன கலாச்சாரம் எடுத்துக் கொண்டு விட்டது என்றும் சொல்கிறார்.  அதனால்தான் வெகுஜனத்துக்கு ரஜினியும் கமலும் கடவுளாகக் காட்சி தருகிறார்கள்.  இப்போதைய – இன்றைய லும்ப்பன் கடவுள் புஷ்பா என்கிற அல்லு அர்ஜுன்.   

***

ஒரு புள்ளிவிவரம் – Charu Nivedita