புஷ்பா : பெருந்தேவியின் எதிர்வினை

சாரு இக்கட்டுரையில் அல்லுவின் உடல்மொழி குறியீடு குறித்து எழுதியிருப்பது முக்கியம். புஷ்பாவைப் பார்க்கும்போது எனக்கும் அனுராக் காஷ்யப்பின் கேங்க்ஸ் ஆஃப் வஸேபூர் நினைவுக்கு வந்தது. அப்படி வந்திருக்க வேண்டிய படம் இது. காஷ்யப்பின் படத்தில் பகைக் குழுக்கள், கதாபாத்திரங்களுக்கு இடையிலான dynamics அற்புதமாக இருக்கும். புஷ்பாவிலோ நாயக ஆராதனை மட்டும்தான். புஷ்பா சின்னப் பையனாக இருக்கும்போதே கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பதாக ஃப்ளாஷ்பேக்கில் காட்டுவதெல்லாம் நம் மண்ணுக்கே உரித்தானது.

என் கவிதைக்கு விதையே அந்தக் காட்சிதான். ஊ(ம்) சொல்றியா பாடல் பற்றி எனக்கு பெரிய கருத்து இல்லை. வழக்கமான வெகுஜன ஈர்ப்புக் காட்சியமைப்பு. ஒரு சின்ன தலைகீழாக்கம் பாடல் வரிகளில் மட்டும் நடக்கிறது. காபரே நடனங்கள் அல்லது ஐட்டம் பாடல்களில் முன்பெல்லாம் ஆடுகின்ற பெண்மணி ‘என்னைப் பார், என்னழகைப் பார்’ என்று சுய வர்ணனை செய்துகொள்வார். ஆனால் இந்தப் பாடலில் விவரிப்பு தன்னைப் பார்க்கின்ற கண்களை அவாவுகின்ற ஆண்களைக் குறித்ததாக மாறுகிறது. வருங்காலத்தில் வரும் இத்தகைய பாடல்களில் ஆண் உடல் காட்சிப்படுத்தப்பட வேண்டும். (இப்பாடலிலேயே அல்லுவை வைத்து செய்திருக்கலாம். ஏனோ நடக்கவில்லை.) வருங்காலத்துக்குப் பின்னான வருங்காலத்தில் ரோபாட்கள் பார்த்திருக்க ஆணும் பெண்ணும், ஆணும் பெண்ணும் ரோபாட்டும் ஆடுவார்கள். பெண்ணுக்கும் ஆணுக்கும் ரோபாட்டுக்கும் குழந்தை பிறக்க அதற்கான கொண்டாட்டத்தில் இத்தகைய நடனங்கள் நடப்பதாகக் காட்சிப்படுத்தப்படும். பார்க்கத்தானே போகிறோம்!

என் குறுங்கதைகளை தொடர்ந்து கவனப்படுத்துவதற்கு அன்பும் நன்றியும், சாரு! கவிதை வரிகளைப் பகிர்ந்ததற்கும்! சுபோஜெயம்,