நாம் கேள்வியே பட்டிருக்காத
– எழுத்து உரு கூட இல்லாத – ஏதோ ஒரு ஆதிவாசி மொழியில் எடுக்கப்பட்ட முதல் சினிமா எப்படி
இருக்கும்? நேற்று வரை அப்படித்தான் நான் கன்னட
சினிமா பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். பி.வி.
காரந்த் இயக்கத்தில் வெளிவந்த சோமன துடி
(1975), கிரிஷ் காஸரவள்ளியின் கட ஷ்ரத்தா
(1977), தபரண கதெ (1986) போன்ற கிளாஸிக்குகள் விதிவிலக்கு. அப்படிப்பட்ட விதிவிலக்குகள் எந்த மொழியிலும் எந்த
நேரத்திலும் தன்னிச்சையாக நிகழலாம்.
தெலுங்கு சினிமா பற்றி கேட்கவே வேண்டியதில்லை. தமிழும் தெலுங்கும் ஒன்றுக்குள் ஒன்று. இதைப் பார்த்தால் அதைப் பார்க்க வேண்டாம். அதைப் பார்த்தால் இதைப் பார்க்க வேண்டாம். ஒரே ஒரு வித்தியாசம், இங்கே நாலைந்து முதலமைச்சர்களைக் கொடுத்து விட்டது தமிழ் சினிமா. (இன்னும் ரெண்டு பேர் க்யூவில் நிற்கிறார்கள்!) தெலுங்கு ஒரே ஒருத்தரைத்தான் சீஃப் மினிஸ்டர் நாற்காலியில் அமர்த்தியது.
உயிர்மையில் தொடர்ந்து பல ஆண்டுகள் சினிமா விமர்சனம் எழுதியதற்குப் பிறகு, கடந்த பத்து ஆண்டுகளாக நான் சினிமா மதிப்புரைகள் எழுதுவதில்லை. சமீப காலமாக சினிமாவும் அதிகம் பார்க்கவில்லை. நேரமில்லை என்பது ஒரு காரணம். மேலும், தமிழ் சினிமா இயக்குனர்கள் பெரும்பாலும் ஓரிரு நல்ல படங்களைக் கொடுத்து விட்டு, அதற்குப் பிறகு மொக்கை போட ஆரம்பித்து விடுகிறார்கள். அதைப் போய் ஏன் பார்த்து நம்மையும் வருத்திக் கொண்டு, அதை விமர்சித்து எழுதி அவர்களையும் வருத்த வேண்டும் என்பது இன்னொரு காரணம்.
இந்த நிலையில் சமூகத்தில் அதிகமாகப் பேசப்படும் படங்களைக் கூட பார்க்க விருப்பம் இருப்பதில்லை. ஏனென்றால், படம் பெரிய சமூக சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்டிருந்தால் ஒரேயடியாக எல்லோரிடமிருந்தும் பாராட்டைப் பெற முடிகிறது. சினிமா ஒரு கலை என்பதே பலருக்கும் மறந்து விட்டது. நீதி போதனை சொல்வதா சினிமாவின் வேலை? அப்படிப்பட்ட சமூகச் சீர்திருத்தப் படங்களைப் பார்த்தால் அவை சினிமாவாகவே இருப்பதில்லை. விமர்சித்தால் நம்மையே சமூக விரோதி என்று சொல்லி விடுகிறார்கள். அந்த அளவுக்கு இப்போது சமூக சீர்திருத்தம், சமூக அக்கறை போன்ற விஷயங்கள் சுலபத்தில் செலாவணியாகும் சமாச்சாரங்களாக இருக்கின்றன.
இந்த நிலையில்தான் மிகவும் தயங்கித் தயங்கி ஒரு கன்னடப் படத்தின் பெயரைச் சொல்லி என்னைப் பார்க்கச் சொன்னார் புவனேஸ்வரி. அதுதான் கருட கமனா ரிஷப வாஹனா. ஏதோ சாமிப் படம் போலிருக்கிறது, அதை கலாபூர்வமாக எடுத்திருக்கிறார்கள் போல என்று ட்ரைலரைப் பார்த்தால் City of God மாதிரி இருந்தது. என்னடா இது அதிர்ஷ்ட காலம் என்று அடித்துப் பிடித்துக் கொண்டு போய் கருட கமனா ரிஷப வாஹனா படத்தைப் பார்த்தேன்.
படத்தைப் பார்த்து முடித்ததும் என் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு எழுதியே ஆக வேண்டும் என்று அமர்ந்தேன். ஆனால் அது சுலபமாக இல்லை. ஏனென்றால், படத்தில் ஷிவா என்ற பாத்திரத்தில் நடிக்கும் ஒருத்தர் யார் என்று தெரிய வேண்டும். விசாரிக்க ஆரம்பித்தேன். அவர்தான் படத்தின் இயக்குனர் ராஜ் ஷெட்டி என்றும், அவர் ஹீரோவாக நடித்துள்ள இன்னொரு படம் ஒரு மொட்டையின் கதை (ஒந்து மொட்டய கதெ) என்றும் அறிந்து அந்தப் படத்தையும் பார்த்தேன். மொட்டையின் கதை படத்தின் இயக்குனரும் ராஜ் ஷெட்டிதான். இத்தனைக்கும் மொட்டையின் கதை 2017இலேயே வந்திருக்கிறது.
மொட்டையின் கதை படப்பிடிப்பு வெறும் 16 தினங்களில் முடிந்திருக்கிறது. ஆனால் அதற்காக இரண்டு ஆண்டுகள் உழைத்திருக்கிறார்கள். 25 லட்சம் ரூபாய் செலவில் எடுத்து கோடி ரூபாயைத் தாண்டி வசூல் செய்திருக்கும் படம்.
மொட்டைத் தலையனான ஜனார்த்தனா (ராஜ் ஷெட்டி) கன்னடப் பேராசிரியர். வழுக்கை காரணமாகத் திருமணத்துக்குப் பெண் கிடைக்கவில்லை. 28 வயது. கூச்ச சுபாவம் கொண்டவன் ஆதலால் ஜனார்த்தனாவுக்கு நண்பர்கள் யாரும் இல்லை. நடிகர் ராஜ்குமாரின் தீவிர ரசிகன். அவன் அறையில் இருக்கும் ராஜ்குமாரின் புகைப்படமும் அவர் நடித்த படங்களின் பாடல்களும் படத்தில் ஒரு பாத்திரமாகவே ஆகியுள்ளன. ஜனார்தனாவின் வாழ்வில் நடக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் – அது சோகமோ, துக்கமோ, காதலோ, காதல் தோல்வியோ எதுவாக இருந்தாலும் அப்போது அந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற ஒரு ராஜ்குமாரின் பாடல் அவன் செவிகளில் ஒலிக்கும்.
இது ஒரு நகைச்சுவைப் படம். ஆனால் நகைச்சுவை என்ற பெயரில் செயற்கையாக அமைக்கப்படும் காட்சிகளைக் கொண்ட படம் அல்ல. எதார்த்த வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அபத்தத் தருணங்கள்தான் இப்படத்தின் நகைச்சுவை.
கல்யாணத் தரகனாக வரும் ஒரு தமிழன் ஜனார்தனாவுக்குப் பெண் தேடுவதில் உள்ள சிரமங்களை அவனை வைத்துக் கொண்டே அவன் அம்மாவிடம் தமிழில் விளக்கும் காட்சி ஒரு உதாரணம். வழுக்கை மட்டும் பிரச்சினை இல்லை, கன்னடப் பேராசிரியராக இருப்பதும் பிரச்சினைதான், அதனாலேயே யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள் என்கிறான் கல்யாணத் தரகன். அங்கே தரகன் தமிழனாக வருவதே ஒரு நகைச்சுவைதான். ஏனென்றால், தொலைக்காட்சியில் ராஜ்குமாரின் படத்திலிருந்து கன்னடத்தின் மேன்மை பற்றிப் பேசி, ’கன்னடத்துக்காக உயிரையும் கொடுப்போம்’ என்பது மாதிரி ஒரு வீர வசனம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எதார்த்தத்திலோ கன்னடப் பேராசிரியர் என்பதாலேயே ஜனார்தனாவுக்குப் பெண் கிடைக்கவில்லை. இந்த இடத்தில் கன்னடம் என்பதை எடுத்து விட்டு, இந்திய மொழிகளில் எந்தப் பெயரைப் போட்டாலும் இதுதான் நிலைமை. பிராந்திய மொழிகளுக்கு அந்தந்த பிராந்தியங்களில் எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை.
ராஜ்குமாரின் வீர வசனத்தைக் கேட்டு கல்யாணத் தரகனை வீட்டை விட்டு விரட்டி விடுகிறான் ஜனார்தனா. உடனே, ஐயோ இப்படி வீர வசனத்தைக் கேட்டு விரட்டி விட்டேனே, இப்போது யார் எனக்குப் பெண் பார்ப்பார்கள் என்று மனசுக்குள் புலம்புகிறான்.
ஜனார்தனாவை கன்னட வகுப்பு மாணவர்கள் கிண்டல் செய்கிறார்கள். ஜனார்தனா கன்னடத்தில் எழுதும் காதல் கடிதம் கல்லூரியில் அட்டண்டராக இருக்கும் ஸ்ரீனிவாசுக்குப் புரியவில்லை. அவன் காதல் கடிதத்தை ஹாய் டியர் என்று ஆரம்பித்து எழுதுமாறு யோசனை சொல்கிறான். அந்தக் கல்லூரிக்கு வரும் புதிய ஆங்கிலப் பேராசிரியர் மீது சக பேராசிரியை காதல் கொள்கிறாள். அவளை ஒருதலையாய் காதலித்துக் கொண்டிருப்பான் ஜனார்தனா. இப்படி எங்கு திரும்பினாலும் மொட்டைத் தலைக்கு அடிக்கு மேல் அடியாய் விழுகிறது.
இரண்டரை மணி நேரம் ஓடும் இந்தப் படத்தை இரண்டு மணி நேரமாக ஆக்கியிருந்தால் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும். கடைசி அரை மணி நேரம் கொஞ்சம் இழுவையாக இருந்தது. முடிவையும் பாதிப் படத்திலேயே யூகிக்க முடிவதால் முதல் பாதியில் இருந்த சுவாரசியம் போய் விடுகிறது.
ஆனால் இந்தப் படத்தைப் போல் ஒரு படம் தமிழில் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் கூட எடுக்கப்படும் சாத்தியம் இருக்கிறதா என்று தெரியவில்லை. எடுக்கப்பட்டாலும் வியாபார ரீதியாக இந்த அளவுக்கு மாபெரும் வெற்றியையும் லாபத்தையும் ஈட்டித் தருமா என்பதும் சந்தேகமே. எல்லாவற்றையும் விட சிறப்பு என்னவென்றால், இப்படியான தோற்றத்தைக் கொண்ட ஒருவரைத் தமிழ் சினிமா ஹீரோவாக ஏற்றுக் கொள்ளுமா? தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். சினிமா உலகத்தினருக்குத்தான் துணிச்சல் இல்லை.
ஒரு மொட்டையின் கதையை இயக்கிய ராஜ் ஷெட்டியின் இரண்டாவது படம்தான் கருட கமனா ரிஷப வாஹனா. இதை இயக்கி, முக்கியப் பாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார் ராஜ் ஷெட்டி. தற்கால இந்திய சினிமாவில் நடிப்புத் துறையில் நான் பெரிதும் மதிப்பவர்கள் நவாஸுத்தீன் சித்திக்கி, ஃபஹத் ஃபாஸில், குரு சோமசுந்தரம் ஆகியோர். இவர்களுக்கு நிகராக கருட கமனவில் நடித்திருக்கிறார் ஷிவா என்ற பாத்திரத்தை ஏற்றுள்ள ராஜ் ஷெட்டி. அதுவும் மொட்டையின் கதையில் ஏற்றிருந்த பாத்திரத்துக்கு நேர் எதிர். மொட்டைக் கதையில் பயந்தாங்கொள்ளி. இண்ட்ரோவெர்ட். கருட கமனாவில் இம்மென்றால் குடலை உருவிப் போடும் ரவுடி. ஷிவா. ஷிவாவிடம் ஒரு பழக்கம், யாரைக் கொலை செய்தாலும் அவர்களது காலணியை எடுத்துப் போட்டுக் கொண்டு வந்து விடுவான். அவ்வாறாக அவன் ஒருமுறை அந்த ஊர் இன்ஸ்பெக்டரின் ஷூவை அணிந்திருக்கிறான்.
நடிப்பில் பிரமிப்பை ஏற்படுத்துகிறார் ராஜ் ஷெட்டி. ஒரு ரவுடி பாத்திரத்தில் என்ன நடிப்பை வெளிப்படுத்த முடியும்? இங்கேதான் வேறு சில விஷயங்களைப் பேச வேண்டியிருக்கிறது. இரண்டு படங்களிலும் மங்களூர் ஒரு பாத்திரமாகவே இடம் பெறுகிறது. கருட கமனாவில் அதிகமாகவே.
இந்த இரண்டு படங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் மங்களூர் கன்னடம் மற்ற பிராந்தியங்களில் வசிக்கும் கன்னடர்களுக்குப் புரியாமல் சப்டைட்டில் பார்த்துத்தான் புரிந்து கொண்டார்கள் என்று அறிந்தேன். சென்னையில் வார்த்தைக்கு வார்த்தை ’ங்கோத்தா’ போடுவது மாதிரி மங்களூர்ப் பேச்சில் கெட்ட வார்த்தைகள் சரளமாகப் புழங்குகின்றன. அதனால் சப்டைட்டிலின் வாக்கியங்களில் பாதிப் பகுதி டேஷ் டேஷாகவே வருகிறது. மற்றபடி தணிக்கைத் துறையினர் பீப் ஒலி கொடுக்காததால் படத்தில் பிரச்சினை இல்லை.
கருட கமனா ரிஷப வாஹனா இந்தியாவின் கேங்ஸ்டர் படங்களில் ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. முக்கியமாக, படத்தில் ஹீரோ என்று ஒருவர் இல்லை. ஷிவாவும் ரவுடி (ரிஷப வாஹன ஷிவா). ஹரியும் (கருட வாஹன விஷ்ணு) ரவுடி. படத்தின் ஒரு ஓரமாக வரும் கதைசொல்லியான சப் இன்ஸ்பெக்டர் பிரம்மய்யாவும் (பிரம்மா) ஹீரோ இல்லை.
முன்னால் ஷிவா (ராஜ் ஷெட்டி). பின்னே வருவது ஹரி (ரிஷாப் ஷெட்டி).
பொழுதுபோக்கையும் கலையையும் ஒன்றாக இணைத்திருக்கிறது கருட கமனா. நாட்டுப் பாடல்கள், மங்களூர்ப் பிராந்தியத்தைச் சேர்ந்த புலி வேஷ ஆட்டம் இரண்டும் படத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. படத்தில் புலி வேஷ ஆட்டம் படத்தின் கதையோடு சேர்ந்து வருகிறது. அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் ஆடும் புலி வேஷ ஆட்டத்தையும் கருட கமனாவில் ராஜ் ஷெட்டி ஆடும் புலி வேஷத் தாண்டவத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இது நடனத் திறமை சார்ந்தது அல்ல. கருட கமனாவில் புலி வேஷம் என்பது அந்த நிலத்தின் கலாச்சார அடையாளம்.
ஒரு மொட்டைக் கதையில் ஜனார்தனா (ராஜ் ஷெட்டி)
கருட கமனா… ரவுடிகளின் கதையாக இருந்தாலும், படத்தில் சரளமாக வெட்டுக் குத்து நடந்தாலும் அதோடு கூடவே படம் முழுவதும் நாம் ஒரு கலாச்சாரப் பயணம் மேற்கொள்வது போலவே இருந்தது. புலி வேஷ ஆட்டமும் இசையும் சில உதாரணங்கள்.
இரண்டு படத்துக்குமே இசை மிதுன் முகுந்தன். இப்படி ஒரு இசையை இந்திய சினிமாவில் வெகு அரிதாகவே கேட்டிருக்கிறேன். கருட கமனாவின் சிறப்புக்கு மிக முக்கியக் காரணங்கள் இசையும், ஒளிப்பதிவும் என்று சொல்லலாம். இரண்டுமே உலகத் தரத்தை எட்டுபவை.
இதுவரையிலான சினிமா ஃபார்முலா எல்லாவற்றையும் காலி பண்ணியிருக்கிறது கருட கமனா. மற்ற படங்களில் – உதாரணமாக, புஷ்பாவையே எடுத்துக் கொள்வோம், அதில் வரும் ரவுடி புஷ்பாதான் அந்தப் படத்தின் ஹீரோ. அவர் அல்லு அர்ஜுன் என்ற சினிமா ஹீரோ. ஆனால் படத்தில் புஷ்பா ஒரு பொறுக்கி. நம்முடைய தனுஷ் படங்களின் ஹீரோ மாதிரி. பள்ளிக்கூடத்தின் பக்கமே ஒதுங்கியிருக்க மாட்டான். அந்தப் பொறுக்கி ஒரு வெள்ளை நிறத் தோல் ஹீரோயினைக் காதலித்தால் அவள் அவனைக் காதலித்தே தீர வேண்டும். அது தமிழ் சினிமா விதி. அதேதான் புஷ்பாவில் நடக்கிறது. ஆயிரக்கணக்கான இந்திய சினிமாவில் நடப்பது அதே கதைதான். ரஜினி படம் உட்பட. ஆனால் கருட கமனாவில் ஹீரோ இல்லை. இரண்டு பொறுக்கிகள் மற்றும் ஒரு சப் இன்ஸ்பெக்டர். சப் இன்ஸ்பெக்டரும் ஹீரோ இல்லை. பலர் முன்னிலையில் எம்.எல்.ஏ.விடம் கன்னத்தில் அறை வாங்கி விட்டு அவமானப்பட்டு, கூனிக் குறுகி வீட்டுக்குப் போகிறார்.
சப் இன்ஸ்பெக்டர் மங்களாபுரத்துக்கு மாற்றலாகி வந்த அன்றே அவர் வீட்டு வாசலில், அவர் மனைவியையும் மகளையும் மகனையும் குறிப்பிட்டு, ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் அவர்கள் காலி என்பது போல் ஹரியும் ஷிவாவும் கட் அவுட் வைத்திருக்கிறார்கள். தன் ஜீப் டிரைவரின் முன்னே குலுங்கிக் குலுங்கி அழுகிறார் சப் இன்ஸ்பெக்டர். ஒரு கட்டத்தில் அந்த சப் இன்ஸ்பெக்டர் கமுக்கமாக இருந்து கொண்டே ரவுடிகளுக்குள் ஒரு பெரிய கோஷ்டி மோதல் உண்டாகக் காரணமாக இருக்கிறார். அவருக்குள் இருக்கும் வன்மமும், வன்முறையும் அங்கே வெளிப்படுகிறது.
ராஜ் ஷெட்டியின் ஒரு பேட்டியில் பார்த்தேன். ”அம்மாதிரி சந்தர்ப்ப சூழ்நிலை வந்தால் நாம் யாராக இருந்தாலும் நாமும் அந்த மூவரில் ஒருவராக ஆக வாய்ப்பு இருக்கிறது. மனித குலம் அத்தனை வன்முறையானது” என்கிறார் ராஜ் ஷெட்டி.
அந்த வகையில் இந்தப் படம் மனித சாராம்சம் குறித்த ஆழமான விசாரணையைக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதுதான் இந்தப் படத்தைத் திரும்பத் திரும்ப காண வைக்கிறது.
கருட கமனா ரிஷப வாஹனா எந்த விதத்தில் மற்ற படங்களிலிருந்து வித்தியாசப்படுகிறது என்று பார்த்தால், அதை இரண்டு வார்த்தைகளில் விளக்கி விடலாம். Sense and Nonsense. எதெல்லாம் தர்க்கத்துக்கும், அறிவார்த்தப் புரிதலுக்கும் எதிராக இருக்கிறதோ அது நான்சென்ஸ். வழக்கமான படங்களில் வரும் கதையிலிருந்து பாத்திரப் படைப்பு, சம்பவங்கள் வரை எல்லாமே நம்ப முடியாததாக இருக்கும். நான் – சென்ஸ். புஷ்பாவில் ஒரு டிஎஸ்பியை புஷ்பா வெறும் அண்ட்ராயரோடு வீட்டுக்கு அனுப்புவான். இப்படி எதார்த்த வாழ்வில் ஒரு ரவுடி செய்ய முடியுமா? போலீஸ்தான் ரவுடியை அப்படிச் செய்ய முடியும். ஆனால் கேங்ஸ்டர் படத்தில் வரும் ’ரவுடி ஹீரோ’ என்ன வேண்டுமானாலும் செய்வான். நிஜ வாழ்வில் அப்படி ஒரு டிஎஸ்பியை ஒரு ரவுடி அண்ட்ராயரோடு அனுப்பினால் பன்னிரண்டு மணி நேரத்துக்குள் ரவுடியை என்கவுண்டரில் போட்டுத் தள்ளி விடுவார்கள்.
ஆக, சினிமாவில் நடப்பது எல்லாமே நான் – சென்ஸ் என்ற சட்டகத்தில் வருபவை. அந்தச் சட்டகத்தைத் தூள் தூளாக நொறுக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜ் ஷெட்டி. படத்தில் ஹீரோ கிடையாது. வில்லன்கள்தான் பிரதான பாத்திரங்கள். ஹீரோவாக இருந்திருக்கக் கூடிய சப் இன்ஸ்பெக்டர் பிரம்மய்யாவிடம் எந்த அதிகாரமும் இல்லை. எம்.எல்.ஏ. பிரம்மய்யாவை பலர் முன்னிலையில் கன்னத்தில் அறைந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறான்.
படத்தின் மற்றுமொரு விசேஷம், ஹீரோயின் என்ற நான்சென்ஸ் இல்லை. ஹீரோயின் மட்டும் அல்ல, கருட கமனாவில் பெண்களே இல்லை. ஆரம்பக் காட்சியில் வரும் ஹரியின் அம்மா மட்டும்தான். அதுவும் ஒரு ஏழெட்டு நிமிடங்கள்தான்.
இந்திய சினிமாவில் கருட கமனா ரிஷப வாஹனா ஒரு மைல்கல் மட்டும் அல்ல; இனி வரும் கேங்ஸ்டர் படங்களின் கட்டமைப்பையே மாற்றியமைக்கக் கூடிய ஒரு முன்னோடிப் படமும் கூட.
***
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai