அறம்

பொதுவாக நான் பதிப்புச் சூழல் பற்றி எது எழுதினாலும் ஸீரோ டிகிரி நண்பர்களைப் பிடித்துக் கொள்கிறார்கள்.  எனக்கும் ஸீரோ டிகிரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  காயத்ரி, ராம்ஜி இருவரும் என் நெருங்கிய நண்பர்கள்.  அவ்வளவுதான்.  சென்னையில் பாரதிராஜா மருத்துவமனை என்று உள்ளது.  அதற்கும் பாரதிராஜாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  அதன் முதலாளி பாராதிராஜாவின் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்.  அதைப் போலத்தான் இதுவும்.  எனவே இப்போது நான் எழுதப் போகும் இந்த விஷயத்துக்கும் ஸீரோ டிகிரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே அவர்களுக்கு எந்தக் குடைச்சலும் கொடுக்காதீர்கள்.  

நேற்று என் பதிப்பக நண்பர் ஃபோன் செய்தார்.  சென்ற ஆண்டு சென்னை புத்தக விழாவில் அவருடைய அரங்கில் நான் கண்ட காட்சியை நினைவு படுத்தினார். இரண்டு எழுத்தாளர்கள் வெவ்வேறு சமயங்களில் வந்தவர்கள் ஓசியில் புத்தகம் வாங்கிச் சென்றார்கள்.  ஒருவர் இப்போது பணம் இல்லை, வீட்டுக்குப் போய் ஜீப்பே பண்ணுகிறேன் என்றார்.  பல மாதங்கள் நான் நண்பரிடம் அவர் ஜீப்பே பண்ணினாரா என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.  ஏன் ——— நீங்கள் இத்தனை வெகுளியாக இருக்கிறீர்கள் என்று கேட்டார் பதிப்பக நண்பர்.  கோடிட்ட இடத்தில் அவர் என்னை அழைக்கும் வார்த்தை.  ஒரு உறவு முறை சொல்லியே அழைப்பார்.

இதை நான் இங்கே எழுதுவதன் காரணம், இம்மாதிரி விஷயங்களுக்கு நான் தான் பூனைக்கு முதலில் மணி கட்டுவது.  எழுத்தாளர்களுக்குத் தகுந்த சன்மானம் கொடுங்கள், ஓசியில் படிக்காதீர்கள் என்று ஒரு போர் வீரன் மாதிரி 20 ஆண்டுகளாகப் போராடி வெற்றி கண்டவன் நான்.  அதற்காக நான் பட்ட அவமானங்கள் பல.  இப்போது இதற்கும் நானே மணி கட்டுகிறேன்.

பதிப்பகத்தார் அவர்களாகக் கொடுத்தால் வாங்கிக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.  ஆனால் ஓசியில் எதிர்பார்ப்பது எப்பேர்ப்பட்ட கொடுமை.  அதுவும் நம் புத்தகம் அல்ல.  வேறு யார் யாரோ எழுதியது.  அதுவும் நம் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளரும் அல்ல.  நம் எல்லோருக்குமே தெரியும், பதிப்பகத்தில் எந்த லாபமும் இல்லை என்று.  அப்படியே இருந்தாலும் நாம் எப்படி ஓசியில் எதிர்பார்க்கலாம்.  ஒரு ஓட்டலில் போய் மூக்குப் பிடிக்க சாப்பிட்டு விட்டு தன் சீருடையைக் காண்பித்து விட்டு வெளியே நழுவும் டிராபிக் போலீஸுக்கும் இந்த ஓசி எழுத்தாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?  இத்தனைக்கும் அந்த இரண்டு பேரும் கடும் வசதியில் உள்ளவர்கள்.  சொந்த வீடு, கார் எல்லாம் வைத்திருக்கும் மேல் நடுத்தர வர்க்கம்.  

நாம்தான் ராயல்டி பற்றிப் புகார் சொல்கிறோம்.  நாமே வழிப்பறிக் கொள்ளை செய்தால் என்ன அர்த்தம்? நான் கேட்கிறேன், வழிப்பறிக் கொள்ளைக்கும் அந்த எழுத்தாளர்கள் செய்ததற்கும் என்ன வித்தியாசம்?  

நான் எழுத்தாளர்களெல்லாம் ஞானிகள்,  துறவிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  இவர்களோ வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள்.  நான் என் வீட்டுக்கு வந்து தன் புத்தகத்தைக் கொடுக்கும் இளம் எழுத்தாளருக்கே ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்புவேன்.  அது புத்தகத்தின் விலை அல்ல.  சக எழுத்தாளனை நானே கௌரவப்படுத்தாவிட்டால் எப்படி?

எனவே நண்பர்களே, புத்தக விழா வருகிறது.  பதிப்பகங்களில் சென்று ஓசியில் புத்தகங்களை அள்ளாதீர்கள். எல்லோரும் அப்படி அல்ல.  ஓரிருவர் அப்படிச் செய்வது நம் எல்லோருக்கும் அவப்பெயர்.  

அறம் என்றெல்லாம் பேசுகிறோம்.  எழுத்தாளன் ஆவதே அறச்சீற்றத்தின் காரணமாகத்தான்.  நாம் போய் வழிப்பறியில் ஈடுபடலாமா?  ஈடுபட்ட அந்த இரண்டு எழுத்தாளர்களும் என் ப்ளாகைப் படிப்பவர்கள் அல்ல.  இந்தப் பதிவு அவர்களுக்கானது அல்ல.  ஆனால் நாம் நம்முடைய சூழல் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  அதனால் எழுதினேன்.