சொற்கடிகை – 5

டியர் சாரு,

யூ டியூப் கதை வாசிப்பு குறித்து வித்யாவுடன் சாட் செய்கையில் நீங்கள் என்னைப் பாராட்டியது பற்றிப் பகிர்ந்திருந்தேன். அதற்கு அவர் என்னிடம் கூறியதை இங்கு பகிர விரும்புகிறேன்.

“Excellent. Treasure! He is beyond my words of description. Not everyone will do what he does!” அப்போது எனக்குப் பாதிதான் புரிந்தது. அத். 84இல் வெங்கோஜி பகுதி வரும்போது முழுவதும் புரிந்தது. அற்புதம் சாரு!

அத். 85இல் அவரவருக்கான நியாயங்கள், அவைகளுக்காக விலையாகக் கொடுக்கப்பட்ட உயிர்கள் என்று அன்றைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் எந்த வித்தியாசமும் இல்லா அவலத்தைச் சுட்டுவது போல் இருந்தது.

கேள்வி: எது வீரம்?

பதில்: விவேகம்

ஒளரங்கசீப் சொல்ல வருவதை, இரு வரிகளாக மாற்றி ஆழ் மனதுக்குள் பதித்துக்கொள்ள முயன்றேன்.

-ப்ரஸன்னா

இந்தப் பாராட்டைத் தலை வணங்கி ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.  ஏனென்றால், சமூகத்தில் பொதுக்குணமாக இருந்திருக்க வேண்டிய பண்பு ஒரு சிலரிடம் மட்டுமே காணப்படும்போது இது பற்றிப் பேசவும் சிலாகிக்கவும் வேண்டியிருக்கிறது. 

ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட நிலைமை இத்தனை மோசமாக இல்லை.  ஒருவரைப் பாராட்டுவது என்ற நற்குணம் என்பது இந்தக் காலகட்டத்தில் ஒரு கெட்ட விஷயமாகவே மாறி விட்டது.

ஒரு நண்பருக்கு ஒரு கதையோ கட்டுரையோ அனுப்புவேன்.  பதிலே வராது.  நாமாக வாட்ஸப்பில் படித்தீர்களா என்று கேட்டால் படித்தேன் என்று பதில் வரும்.  அதற்கு மேல் கேட்பீர்கள்?  இப்படி ஒருத்தர் இல்லை.  நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேர் இப்படித்தான்.  அட, திட்டக் கூட செய்வதில்லை.

நான் எழுதுவது பெரும்பாலானதை சீனிக்கும் காயத்ரிக்கும் அனுப்புவது வழக்கம்.  சீனியிடமிருந்து அழைப்பு வரும்.  விலாவாரியாக நிறைகுறைகளைப் பேசி விவாதிப்பார்.  காயத்ரியிடமிருந்து பதில் வராவிட்டால் அவளுக்கு அது பிடிக்கவில்லை என்றும் கட்டை விரல் ஸ்மைலி வந்தால் சூப்பர் என்றும் பொருள் என்று ரொம்ப நாள் கழித்துப் புரிந்து கொண்டேன். 

வினித் மனம் விட்டுப் பாராட்டுவார்.  மனம் விட்டு விமர்சிப்பார்.  ஸ்ரீராம் அந்த விஷயத்தில் என் தாய் மாதிரி.  தன் குழந்தையை எந்தத் தாயாவது விமர்சிப்பாளா? 

”எனக்குத் தெரிந்து உங்களையும் ஜெயமோகனையும் தவிர வேறு எந்த எழுத்தாளரும் எந்த எழுத்தாளரையும் மனம் திறந்து பாராட்டுவதில்லை.”  சொன்னவர் டார்ச்சர் கோவிந்தன்.  மேற்கோள் மட்டுமே காட்டினேன்.  ஏனென்றால், டார்ச்சர் கோவிந்தனே இதோடு பலமுறை சொல்லி விட்டார், இப்போதெல்லாம் உங்கள் கட்டுரைகளில் ஜெயமோகன் பெயரைப் போடாமல் எழுதுவதே இல்லை என்று.  இப்போது பாருங்கள், அப்படிச் சொன்ன கோவிந்தனே ஜெயமோகன் பெயரைத்தானே சொல்கிறார்? 

என்னய்யா செய்வது?  ஜெயமோகனை விட ஃப்ரெஞ்ச் இலக்கியம் தெரிந்தவர்கள் தமிழில் அநேகம் பேர் உண்டு.  ஜெ. அந்தத் துறையைச் சேர்ந்தவர் அல்ல.  அவருக்கு மார்க்கி தெ ஸாத், ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille) போன்றவர்களையெல்லாம் பிடிக்கக் கூடப் பிடிக்காது.  ஆனாலும் தமிழில் என்னை பிறழ்வு எழுத்தாளர் (transgressive) எழுத்தாளர் என்று நிறுவி, அவ்வகை எழுத்தின் வரலாற்றையே எழுதியவர் தமிழில் அவர் ஒருத்தர்தானே?  கோவிந்தனை எனக்குப் பதினைந்து ஆண்டுகளாகத் தெரியும்.  ஃப்ரெஞ்ச் இலக்கியத்தில் இங்கே இருக்கும் எல்லோரையும் விட நன்கு பரிச்சயம் உள்ளவர்.  எழுதியிருக்கலாமே? 

விஷயம் அது இல்லை.  இங்கே யாரும் யாரையும் பாராட்டுவது இல்லை.  அபிலாஷ் போன்ற விதிவிலக்குகள் இருக்கலாம்.  நான் பொதுவாகச் சொல்கிறேன்.  மனம் விட்டுப் பாராட்டுவதைச் சொல்கிறேன்.  ஒரு சிலர் பாராட்ட முன்வந்தாலும், முனகி முனகிப் பாராட்டுகிறார்கள்.

1980களின் முற்பகுதியை நினைத்துப் பார்க்கிறேன். முள் என்ற என் முதல் சிறுகதை கணையாழியில்தான் வந்தது.  நிவேதிதா என்ற பெயரில்.  அசோகமித்திரன் அப்போது கணையாழியில் பொறுப்பாசிரியராக இருந்தார்.  கதையை வெளியிட்டு விட்டு எனக்கு ஒரு போஸ்ட் கார்டு எழுதினார்.  கார்டு முழுக்கவும் எழுதியிருந்தார்.  ஒரு ஆசிரியர் ஒரு மாணவனுக்கு எழுதுவது போல் இல்லை அக்கடிதம், ஒரு நண்பன் தன் நண்பனுக்கு எழுதுவதைப் போல் இருந்தது.  தொடர்ந்து எழுதச் சொல்லி ஊக்குவித்தார்.  மொகலாயத் தோட்டம், ஷங்கர்லால் இசை விழா என்று சிறுகதைகளாக நானும் தொடர்ந்து எழுதினேன். எல்லாம் கணையாழியில். ஒவ்வொரு கதைக்கும் அசோகமித்திரனிடமிருந்து போஸ்ட் கார்டு வரும். அந்த கார்டிலேயே கதை பற்றிய விவரமான அலசல் இருக்கும்.  கார்டின் பின்பக்கமும் எழுதியிருப்பார்.

”நன்னாத்தானே எழுதிட்டிருந்தீங்க… பின்னாலதான் என்னவோ ஆயிடுத்து…” என்று பிற்காலத்தில் அவர் சொல்லாத நாளே இல்லை.

அப்போதெல்லாம் நான் ஆண்டுக்கு ஒருமுறை தில்லியிலிருந்து சென்னை வருவேன்.  ஒவ்வொரு முறையும் அவருடைய தி.நகர் வீட்டுக்குப் போய்ப் பார்ப்பேன்.  வருகிறேன் என்று முன் அனுமதியெல்லாம் பெற்றதே இல்லை.  போய் நிற்பேன்.  இனிய முகத்துடன் வரவேற்று இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருப்பார்.  தி. நகர் பஸ் நிலையத்துக்கு எதிரே உள்ள தாமோதர ரெட்டி தெருவில் ஒரு தனி வீட்டில் இருந்தார்.  எப்பேர்ப்பட்ட வீடு தெரியுமா அது?  அது ஒரு அற்புதம்.  இப்போது அது அடுக்குமாடிக் குடியிருப்பாகி விட்டது.  அப்போதெல்லாம் நிலம் வீடு எல்லாம் குறைந்த விலைதான் என்பதால் குறைந்த விலைக்குத்தான் விற்றிருப்பார் என்று நினைக்கிறேன்.  சுற்றி வர தோட்டம் மாதிரி இடம் வேறு இருக்கும். இன்றைக்கு இருந்தால் பல கோடி ரூபாய் பெறும்.  இவர் விற்றதும் அதில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி, இவருக்கும் ஒரு அபார்ட்மெண்ட் கொடுத்து விட்டார்கள். அது பார்க்கவே சகிக்கவில்லை. 

எப்போது அவரைப் பார்க்கச் சென்றாலும் கையில் ஒரு பை நிறைய பழங்கள் வாங்கிச் செல்வது என் வழக்கம்.  வெறும் கையோடு போனதே இல்லை.  அப்படி அவரைப் பார்க்கச் சென்ற ஒரே எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன்.  பேசிக் கொண்டிருந்து விட்டு, பக்கத்தில் அந்த மெயின் ரோட்டின் முனையில் இருக்கும் இண்டியன் காஃபி ஹவுஸில் காஃபி குடிக்கப் போவோம்.  ஒருமுறை தஞ்சை ப்ரகாஷை அவரோடு பார்த்தேன்.  கதைகள்ளாம் நன்னா எழுதுவார், கட்டுரையில்தான் அக்னிப் பிரவாகமா இருக்கும் என்றார் அசோகமித்திரன். 

தஞ்சை ப்ரகாஷ் ஆஜானுபாகுவாக இருப்பார்.  அண்ணாந்து பார்த்துத்தான் பேச வேண்டும்.  துளி தொப்பை இருக்காது.  தேர்ந்த சிற்பி செதுக்கிய சிலை போன்ற உருவம்.  கூர்மையான நாசி.  நீண்டு தொங்கும் தாகூர் தாடி.  ஆனால் கருகருவென்று இருக்கும்.  கண்களில் ஒளி.  அன்பின் மொத்த வடிவம் என்றால் அது தஞ்சை ப்ரகாஷ்தான்.  ரமணர், ராமகிருஷ்ணர் போன்ற மகான்களிடம் காணக்கூடிய அதே அருள் பொலியும் கண்கள்.  தன் சொத்து அத்தனையையும் சக எழுத்தாளர்களுக்காகவே செலவு செய்தவர்.  தஞ்சாவூரில் மெஸ் வைத்தார்.  எழுத்தாளர்களெல்லாம் போய்ப் போய் சாப்பிடுவார்களாம்.  மெஸ் படுத்து விட்டது. 

துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரோடு இருந்த போது அவர் எழுத்துகளை நான் படித்தது இல்லை.  படித்திருந்தால் உயிரோடு இருந்தபோதே அவரைக் கொண்டாடியிருப்பேன்.

இப்படியெல்லாம் என்னை ஊக்குவித்தவர் அசோகமித்திரன்.  இப்போது என்னவென்றால், நம்மை விட இருபது வயது குறைந்த பொடிசுகளிடம் கதையை அனுப்பினால் பதிலே வருவதில்லை. ஃபோன் பண்ணிக் கேட்டாலும் இதோ படிக்கப் போகிறேன் என்கிறார்கள்.  இல்லாவிட்டால், படித்து விட்டேன் என்கிறார்கள். 

எல்லோரும் நண்பர்கள், நோ காமெண்ட்ஸ்.  

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai