நான்தான் ஔரங்கசீப்…

நான்தான் ஔரங்கசீப்… எப்போது முடியும் என்று பலரும் கேட்கிறார்கள். அந்த அளவுக்கா சலிப்புத் தட்டுகிறது என்று கேட்பேன். இல்லை, புத்தகமாகப் படிக்கும் ஆர்வத்தில் கேட்கிறேன் என்று பதில் வரும். எப்படியோ, எல்லோருக்கும் என் பதில் இதுதான்: எப்போது முடியும் என்று எனக்கே தெரியாது. ப்ளூப்ரிண்ட் மாதிரி போட்டு எழுதியெல்லாம் எனக்குப் பழக்கமில்லை. அது பாட்டுக்குப் போகும், முடியும். எனக்கு எதுவும் தெரியாது. நடப்பு அத்தியாயங்கள் மூன்றாம் பாகம். இன்னும் ஒரு பாகம் இருப்பது மட்டும் தெரியும். ஆக, இன்னும் ஒரு இருபது அத்தியாயங்கள் வரலாம். அல்லது, ஐம்பது போகிறதோ, அதுவும் தெரியாது.

ஆனாலும் சீக்கிரம் முடித்தாக வேண்டும். அப்போதுதான் கடந்த நான்கு ஆண்டுகளில் ப்ளாகில் எழுதியதையெல்லாம் தொகுக்க முடியும். ஸ்ரீராம் தொகுத்துக் கொடுத்திருக்கும் என்னுடைய பத்து நூல்களை ஒருமுறை படித்துப் பார்த்து பதிப்பகத்துக்குக் கொடுக்க முடியும். இதற்கிடையில் தியாகராஜாவை ஜூனுக்குள் முடிப்பதாக வாக்களித்திருக்கிறேன். அது முக்கால்வாசி முடிந்த நாவல். அநேகமாக அந்த நாவல் என்னுடைய வழக்கமான வாசகர்களுக்குப் பிடிக்காது. முற்போக்கு நாவல் என்று சொல்வோம் அல்லவா, அது போல தியாகராஜாவை ஒரு பிற்போக்கு நாவல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

நான்தான் ஔரங்கசீப்… நாவலின் மூன்று அத்தியாயங்கள் பிஞ்ஜ் செயலியில் வர முடியவில்லை அல்லவா? அதை இன்னும் ஒரு வாரத்தில் – அதாவது, பிஞ்ஜில் கதை அந்தக் கட்டத்தைத் தாண்டிய பிற்பாடு – நம் தளத்தில் வெளியிடலாம் என்று இருக்கிறேன். மூன்று பேருக்கு அதை அனுப்பி கருத்து கேட்டேன். ஷோபா சக்தியும் சீனியும் அனுப்பிய அன்றைய இரவே கருத்து சொல்லி விட்டார்கள். மூன்றாவது நபர் டார்ச்சர் கோவிந்தன். கருத்து வரவில்லை. படித்தாரா என்றும் தெரியாது. தினமும் ஒரு மணி நேரம் பேசுகிறோம். நான் ஒருநாள் ஞாபகப்படுத்தினேன். இதோ இப்போதுதான் படிக்கலாம் என்று இருக்கிறேன் என்றார். அது முடிந்து இரண்டு பகல், இரண்டு இரவு முடிந்து விட்டது. இன்றும் பேசினோம். ஒரு மணி நேரம். நானும் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. ஆச்சரியம் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்காகத்தானே டார்ச்சர் என்று பட்டப் பெயர்?

நான்தான் ஔரங்கசீப்… பற்றி வளன் அரசு:

ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன் பூனேயில் தத்துவம் படித்துக்கொண்டிருந்த போது, அஜந்தா எல்லோரா சென்றிருந்தோம். அதே பயணத்தில் ஔரங்காபாத்தில் சில இடங்களையும் சுற்றி வந்தோம். படிப்பின் நிமித்தம் சென்ற பயணங்கள் என்பதால் அதற்கேயுரிய அசட்டைத் தனத்துடன் இருந்துவிட்டேன். ஔரங்காபாத் பிபி க மஹல் வெறும் மினி-தாஜ்மஹல் என்றே அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது சாரு ஔடங்கசீப் நாவலில் ஔரங்காபாத் பற்றியும் அங்கிருந்த சூஃபி துறவிகள் குறித்து எழுதும் போதும் எப்பேர்பட்ட இடங்களுக்குச் சென்று வெறும் புகைப்படம் மட்டும் எடுத்து வந்துள்ளோம் என்று வருத்தமாக இருக்கிறது. பிபி க மஹலுக்கு பின் இருக்கும் கதையை நாவலில் படித்த போது அவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது. இனிமேல் ஔரங்காபாத்துக்கு என்னால் சென்று வர முடியுமா என்றும் சந்தேகமாக இருக்கிறது.சாரு அறிமுகப்படுத்தியதால் ஆக்தோவியா பாஸின் ‘In Light of India’ வாசித்தேன். நம் வரலாறுகளை வெளிநாட்டுக் கவிஞன் எழுதியிருக்கிறான். பக்தி இயக்கத்தை விரிவாக எழுதி அதன் தொடர்ச்சியாக மொஹலாயப் பேரரசின் வரலாற்றை எழுதிச் செல்கிறார் ஆக்தோவியா பாஸ். அதை மிக விரிவாக சுவாரசியமாக வேறொரு கோணத்தில் ஔரங்கசீப் நாவலில் எழுதியிருக்கிறார். தமிழில் இதற்கு முன்பும் இதற்கு பின்பும் இப்படி ஒரு நாவல் வரப் போவதேயில்லை. இலவசமாக #Bynge செயலியில் படிக்கக் கிடைக்கிறது. நான் 85 அத்தியாயங்களையும் முடித்துவிட்டேன்.