பத்து வயதிலிருந்தே அந்த வியாதி உண்டு. மறதி. இங்கே அவசியம் வயதைச் சொல்லி விட வேண்டும். இல்லாவிட்டால், வயசாய்டுச்சு இல்லப்பா என்று சொல்லி நம்மைக் காலி பண்ணி விடுவார்கள். வயசு பற்றி நாளை எழுதுகிறேன். அந்த அச்சுறுத்தலால்தான் முதல் வாக்கியத்திலேயே சொல்லி விட்டேன். பத்து வயதிலிருந்தே எனக்கு மறதி வியாதி உண்டு. சும்மா எல்லோருக்கும் வரும் மறதி இல்லை. வினோதமான மறதி. ஒருத்தரின் பெயர் ரகு என்று வைத்துக் கொள்வோம். அவர் பெயர் ரகு என்பது மறந்து விடும். ஆனால் இரண்டு எழுத்து என்று மட்டும் ஞாபகத்தில் நிற்கும். ரகுபதி என்ற பெயர் மறந்து விடும். ஆனால் நாலு எழுத்துப் பெயர் என்று ஞாபகம் இருக்கும். ஏம்மா, அந்த நாலு எழுத்துப் பெயருள்ள நண்பர் நல்லா இருக்காரா என்று கேட்பேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பு அவந்திகாவின் அலுவலகத்துக்கு போன் செய்தேன். அவளுடைய அலுவலகப் பெயர் வேறு. கல்யாணம் ஆன புதிதில் அவள் தனக்கு வேறொரு பெயர் வேண்டும் என்றாள். ஏனென்றால், அவள் பெயரை உச்சரித்தாலே அய்யங்கார் என்று சொல்லி விடுகிறார்களாம். சொன்னால் என்ன என்று கேட்டேன். ஏம்ப்பா, உன் பெயரை அறிவழகன் என்று சொன்னால் இரண்டு விஷயங்கள் உடனடியாகத் தெரிந்து விடுகிறது என்று நீதானே சொல்வாய் என்றாள். சரிதான். அறிவழகன் என்று சொன்னவுடன் என் தந்தை திமுக அனுதாபி என்றும், நான் அ-பிராமணன் என்றும் உங்களுக்குத் தெரிந்து விடும். எதற்குத் தெரிய வேண்டும் என்பது என் கேள்வி. ஒருத்தன் தன் குடும்ப வரலாற்றையெல்லாம் சுமந்து கொண்டா திரிய வேண்டும்? பிராமணர்கள் அறிவழகன் என்றெல்லாம் பெயர் வைக்க மாட்டார்கள். சீனி போன்ற வித்தியாசமான ஆட்கள் வேண்டுமானால் அழகிய மணவாளன் என்று வைப்பார்களே தவிர நிச்சயமாக அறிவழகன் என்று வைக்க மாட்டார்கள். சீனியின் மகன் பெயர் ஆழிமழைக் கண்ணன். புனைப்பெயராக வைக்க வேண்டியதை பெயராகவே வைத்து விட்டார். இந்தப் பெயர் வேண்டாம், உச்சரிக்கக் கடினமாக இருக்கும், எல்லோரும் ஆலிமலைக் கன்னன் என்றோ ஆளிமளைக் கந்நண் என்றோ குதறுவார்கள் என்றேன். தஸ்தயேவ்ஸ்கி, லெஃபாவ்ர் என்றெல்லாம் அவன்கள் நம்மைச் சாகடிக்கவில்லையா என்று திருப்பிக் கேட்டார். நான் மூடிக் கொண்டேன்.
எழுத்தாளன்களின் பிள்ளைகளாகப் பிறப்பதில் நூற்றுக்கணக்கான வசதிகள் உண்டு. மகனோ மகளோ வேலைக்குப் போன பிறகு எவ்ளோ சம்பளம் என்று கேட்க மாட்டான், கேர்ள் ஃபிரண்டோடு இரவு நேரத்தில் வீட்டு மாடியில் தங்கி விட்டு காலையில் எழுந்து போகும் கேர்ள் ஃப்ரெண்ட் யார் என்று கேட்க மாட்டான், ஏன் இவ்ளோ குறைச்சலா மார்க் வாங்கினே என்று கேட்க மாட்டான். இப்படி நூற்றுக்கணக்கான வசதிகள் இருந்தும் பிறந்த உடனேயே அவன் வைக்கும் பெயர் இருக்கிறது பாருங்கள், குழந்தை ஆயுசுக்கும் காலி. எழுத்தாளன் இடதுசாரியாக இருந்தால் மா சே துங், சே குவேரா, புரட்சி என்று பெயர் வைத்துக் கழுத்தை அறுப்பான்கள். தமிழ் ஆர்வலர் என்றால், தமிழினிது,குழரசி என்று கொல்லுவான்கள். இந்தக் கும்பல்தான் அப்படி என்றால், சிறு பத்திரிகை இலக்கிய எழுத்தாளன்கள் இன்னொரு தினுசு. த்வன்யபாலினி, ஆன்யா, அத்விகா என்று மர்டர் நடக்கும். குழந்தைக்கு வினோதமான சம்ஸ்கிருத பெயர் என்றாலே அப்பா ஒரு இலக்கிய எழுத்தாளர் என்று புரிந்து கொள்ளலாம். அரவிந்தன், நாகார்ச்சுனன் போன்ற பெயர்கள் என்றால் அப்பன் புத்திஜீவி என்று பொருள் கொண்டு விடலாம். புத்திஜீவிகள் பெரும்பாலும் பௌத்தர்களாக இருக்கப் பிரியப்படுவார்கள்.
சரி, அவந்திகா அலுவலகத்துக்கு ஃபோன் பண்ணினேனா? எண்களைச் சுழற்றினேன். அதிகாரி ஃபோனை எடுத்தார். அவளுடைய அலுவலகப் பெயர் மறந்து விட்டது. போனைத் துண்டித்து விட்டு ரொம்ப நேரம் யோசித்து பெயரைப் பிடித்து மீண்டும் போன் செய்தேன்.
இப்போது புத்தக விழா வருகிறதா, பெரும் பீதியில் இருக்கிறேன். நற்றிணை பதிப்பகம் யுகன் என் பக்கத்தில் நிற்கிறார். இன்னொரு பக்கம் ராஜேஷ். ராஜேஷிடம் யுகனை அறிமுகப்படுத்த வேண்டும். யுகன் பெயர் மறந்திருக்கும். நற்றிணை பதிப்பகம் உரிமையாளர் என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்வேன். யுகன் ஒரு மகாத்மா என்பதால் என்னை மன்னித்து விடுவார். ஆனால் துரதிர்ஷ்டவசமான சந்தர்ப்பங்களில் ராஜேஷ் பெயரே மறந்து விடும். முடிந்தது கதை. நல்லவேளையாக ராஜேஷும் ஒரு மகாத்மா என்பதால் கோபிக்க மாட்டார்.
உங்களிடம் உங்கள் மனசாட்சி, உன்னை உன்னால் மன்னிக்கவே முடியாத பிழை அல்லது குற்றம் என்ன செய்திருக்கிறாய் என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள். என்னிடம் சொல்ல வேண்டாம். மனசாட்சிதானே? மனதிலேயே சொல்லிக் கொள்ளுங்கள். என் மனசாட்சி அப்படிக் கேட்டால், எனக்குக் கொஞ்சம் கஷ்டம்தான். நான் சொத்துக்கு ஆசைப்பட்டதில்லை. பணத்தாசை இல்லை. பெண்ணாசையை வெளியே சொன்னதில்லை. அடுத்தவனைக் கெடுத்ததில்லை. ஆனாலும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மன்னிக்க முடியாத குற்றம் என்று சொல்லி விடலாம்.
அது ஒரு பெரிய இலக்கிய விழா. ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கிறேன். அவர் பெயர் மட்டும் அல்ல, அவர் யார் என்பதும் மறந்து விட்டது. யுகன் விஷயத்தில் நற்றிணை பதிப்பகம் மறக்கவில்லை. யுகன் என்ற பெயர் மட்டுமே மறந்தது. ஆனால் இவர் விஷயத்தில் இவர் யார் என்பதே மறந்து விட்டது. ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ் இலக்கியத்தில் என் மதிப்புக்கு உரியவர் என்பது மட்டும் புரிகிறது. கவிஞரா, நாவலாசிரியரா, சிறுகதையா, விமர்சகரா… ஒன்றும் ஞாபகம் இல்லை. நம் மனதில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்தவர் என்று தெரிகிறது. பெயர் தெரியவில்லை. யார் என்றும் தெரியவில்லை. ஆனால் அந்த உருவம் என் வணக்கத்துக்கு உரிய நபருக்கானது என்பதில் மட்டும் எனக்கு சந்தேகம் இல்லை. நான் போதையிலும் இல்லை. அதை விடக் கொடுமை என்னவென்றால், நான் என்னை மன்னிக்கவே முடியாது என்பது ஏன் என்றால், தமிழ் இலக்கியச் சூழலிலேயே வெற்றிலைப் பாக்கு போடும் ஒரே ஆள் அவர்தான். வெற்றிலை போட்டுப் போட்டு பல் கூட லேசாகக் காரை படிந்திருக்கும். அப்படியிருந்தும் பெயர் மறந்து விட்டது; ஆள் யார் என்று மறந்து விட்டது.
ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். என் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். மண்டை வெடித்து விடும் போல் இருந்தது. ஏன் அவரிடமே கேட்டு விட வேண்டியதுதானே என்று உங்களில் யாரேனும் கேட்கலாம்.
முடியாது. மோடியிடம் சென்று நீங்கள் யார் என்று கேட்பீர்களா? உங்களை எங்கோ பார்த்திருக்கிறேனே? முடியுமா? கவுண்டமணியிடமே சார் என்ன ஃபீல்ட்ல இருக்கிறீங்க என்று கேட்டவன் நான். ஆனால் அப்போது நான் பத்து ஆண்டுகள் தமிழ் சினிமாவிலிருந்தும் தமிழ்ச் சூழலிலிருந்தும் விலகி இருந்தேன். கவுண்டமணியை எனக்கு அப்போது யார் என்றே தெரியாது. நண்பர் மணி அவரை மெரினா பீச்சில் கலங்கரை விளக்கத்துக்குக் கீழே இரவு எட்டு மணி அளவில் அறிமுகப்படுத்தி வைத்த போது அப்படிக் கேட்டேன். அது வேறு. ஆனால் இதோ என் முன்னே பேசிக் கொண்டிருப்பவர் என் இலக்கிய உலக சகா. என் பெரு மதிப்புக்குரியவர்.
ஒருமணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர் நகர்ந்ததும் பக்கத்தில் இருந்த ஒரு நெருங்கிய நண்பரிடம் “இப்போது பேசிக் கொண்டிருந்தாரே, அவர் பெயர் என்ன?” என்று ரகசியமாகக் கேட்டேன். என்னை ஒரு தினுசாக முறைத்து விட்டு தேவதச்சன் என்றார். மன்னிக்கவே மாட்டேன் என்னை.
கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு மறதி நேற்று நடந்தது. அந்த ஊர் மெக்ஸிகோவில் இருக்கிறது. அந்த ஊரை நான் பார்த்தே ஆக வேண்டும். ஒரு ஹிந்துவுக்கு காசியும் ராமேஸ்வரமும் மாதிரி எனக்கு அந்த ஊர். கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் டியாகோ நகர எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஊர் அது. வழக்கம் போல் பெயர் மறந்து போனது. மறக்கவே கூடாத பெயர். ஏன் என்று, அந்த ஊருக்குச் சென்று வந்த பிறகு எழுதுகிறேன். ப்ரஸன்னாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அமெரிக்கா செல்வது பற்றிக் குறிப்பு வந்தது. கொரோனா அலை முடிந்த பிறகு வீசா கொடுக்க ஆரம்பித்தால் முதலில் மெக்ஸிகோதான் போக வேண்டும் என்றேன். எல் ஸால்வதோர், தொமினிகன் ரிபப்ளிக், ஹெய்த்தி, கூபா போன்ற மத்திய அமெரிக்க நாடுகள், ப்ரஸீல், சீலே போன்ற தென்னமெரிக்க நாடுகள் – பிறகுதான் யு.எஸ். பற்றி யோசிக்க வேண்டும் என்றேன்.
இதுவரை என் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று காரணம் காட்டி நாலு முறை வீசா மறுத்து விட்டது யு.எஸ். தூதரகம். இப்போது ஒரு நண்பரிடமிருந்து கடன் வாங்கி இரண்டு ஆண்டுகளாக வங்கியில் போட்டு வைத்திருக்கிறேன். வீசா கிடைத்ததும் திருப்பித் தர வேண்டும். ஆனால் உலகம் பூராவுமே சுற்றுலாப் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. ஆக, உலகம் திறந்ததும் முதல் வேலை மெக்ஸிகோதான்.
அந்த ஊர் எல் பாஸோ என்று மெஸேஜ் அனுப்பினார் ப்ரஸன்னா. எழுத உட்கார்ந்து விட்டால் எல்லாம் ஞாபகம் வந்து விடும். பேச்சுதான் பிரச்சினை எனக்கு. எல் பாஸோ டெக்ஸஸில் உள்ளது. எல் பாஸோவைத் தொட்டுக் கொண்டிருக்கும் மெக்ஸிகோ நகர் ஹுவாரஸ் நகரம். மெக்ஸிகோ போனால் ஹுவாரஸும் போக வேண்டும். ஆனால் ஹுவாரஸை விட வண்ணமயமான நகரம் சான் டியாகோ நகருக்கு அருகில் உள்ள அந்த மெக்ஸிகோ நகர்தான்.
இதை எழுத ஆரம்பித்ததும் மனதில் வந்து விட்டது ஊரின் பெயர். Tijuana. த்திஹுவானா என்று உச்சரிக்க வேண்டும். ஸ்பானிஷில் ஜே, ஹ உச்சரிப்பில் வரும்.
***
சீனி இந்த சொற்கடிகை தொடரில் முன்பு எழுதியதெல்லாம் திரும்ப ரிபீட் அடிக்கிறது என்றார். அடிக்கும்தான். ஏனென்றால், இது சுய சரித்திரக் குறிப்புகள். வேறு வழியில்லை. வேண்டுமானால், பழைய நூல்கள் தொகுக்கப்படும் போது அந்த நூல்களில் வரும் விவரங்களை நீக்கி விடலாம். இதுதான் மூலம். இதில் நீக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அல்லது, புதிதாக என்னிடம் வரும் வாசகர்களுக்கு இது எல்லாமே புதிதாக இருக்கலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எழுதுங்கள். இப்படியே தொடரலாமா? கத்தரி போடலாமா?
charu.nivedita.india@gmail.com
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai