நேற்று நந்தினி கிருஷ்ணன் பேசும்போது ஒரு யோசனை சொன்னார். நான்தான் ஔரங்கசீப்… நான்கு பாகங்களாக உள்ளது. இப்போது மூன்றாம் பாகம் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது வர இருக்கும் புத்தக விழாவில் முதல் பாகத்தை வெளியிட்டால் என்ன என்பது நந்தினியின் கேள்வி. ஆர்வமும் கூட. இது சம்பந்தமாக எனக்கு வேண்டும் என்பதற்கும் வேண்டாம் என்பதற்கும் சரிசமமான காரணங்கள் எழுகின்றன. வேண்டாம் ஏன் என்றால், 2000 பக்கம் என்றாலும் எல்லோரும் ஒரு சேரப் படிப்பதையே விரும்புவார்கள். வேண்டும் ஏன் என்றால், முதல் பாகத்தை இப்போதே படித்து விடலாம், எப்படியும் நான்காம் பாகம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்து விடும்தானே?
உங்கள் கருத்து என்ன?
கீழே வருவது நிர்மலின் மதிப்புரை:
சமீபத்தில் நம் நாட்டின் முக்கிய தலைவர் “ஒவ்வொரு ஒளரங்கசீப்புக்கும் ஒரு சிவாஜி தோன்றுவான்” எனக்கூறினார். கூட்டம் ஆர்ப்பரித்தது.
சாரு “நான்தான்ஔரங்கசீப்…” என்னும் தலைப்பில் Bynge appபில் எழுதுவதை வாசிக்காமல் தவிர்த்து வந்தேன். ஒன்னு ரெண்டு மெசேஜ்னா பரவாயில்ல, முழு பக்கத்தையும் என் 13 இஞ்சு போனில் வாசிக்க சிரமமாகஇருந்தது. புத்தகமாக வெளிவரும் போது வாசிக்கலாமென தவிர்த்து வந்தேன்.
ஆனால் முதல் வரியில் நான் கூறிய நிகழ்வும், அதற்குக் கிடைத்த கரகோசமும் அதை மாற்றியது. இந்தியாவில் இன்றைய அரசியல் சூழலில் வெறுக்கப்படுகிற ஒரு மனிதனைப் பற்றியல்லவா சாரு எழுதுகிறார் என்பது புரிந்தது. இப்படியான ஒரு வரலாற்று ஆளுமையை வைத்து அதுவும் “நான்தான் ஒளரங்கசீப்” என்கிற தலைப்பில் எழுதுவதே Transgressive தான். அப்படியானதைச் சுட சுட வாசிப்பது எவ்வளவு முக்கியம். அதை விவாதிப்பதுஉண்மையிலே பயன் உள்ளதாக இருக்குமே எனத் தோன்றியது. விடாது வாசித்தேன்.
சாருவின் எழுத்துக்களில் “ நான்தான் ஒளரங்கசீப்” என்றென்றும் புகழப்படுகிற படைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்பது சில அத்தியாங்கள் கடக்கும் பொழுதே தெரிந்துவிட்டது. காரணம் – தகவல்களும் அதைச் சொல்ல பயன்படுத்தும் பலவித முறைகளும்.
அவை வாசிப்பை எளிதாக்கி, நாவலோடு நம்மை பிணைத்துவிடுகிறது.
ஒளரங்க்சீப்
ஆடம்பரங்கள் மீது விருப்பம் இல்லாதவன். தொப்பி தைத்து விற்றும், குரான் எழுதிய விற்றும் கிடைக்கிறபணத்தைக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளான். தன் கல்லறையின் மீது மேற்கூரை இருக்கக் கூடாது, தான்வாழ்ந்த சுவடே இருக்கக் கூடாது என்றும், மிகுந்த இறை அச்சமும், கண்ணியமுமாக வாழ்ந்து இருக்கிறான். அவன் மீது இருக்கும் அனைத்து குற்றசாட்டுக்களும் முகலாயர்களும் வரலாற்றில் பல அரசர்களும் செய்ததுதான். அரசாட்சியைப் பிடிக்க செய்யும் கொலைகள், மாற்று நம்பிக்கைகளைச் சார்ந்த வழிபாட்டுத்ததளங்களை அழித்தல் போன்றவை “நல்ல முகலாய மன்னர்கள்” என நாம் கொண்டாடுகிற பலர் செய்ததுதான். ஒளரங்கசீப் மற்ற மன்னர்களைப் போல அந்தப்புரத்தில் பெண்களைக் கொண்டு நிரப்பியவன் அல்லன். மது மற்றும் எந்த போதையிலும் ஈடுபாடு கொண்டவன் கிடையாது. அவனது வாழ் நாளில் சுவைத்தது ஒரே ஒரு துளி மதுதான். அதுவும் காதலுக்காக.
மன்னர் உப்பரிகையில் காட்சி தந்ததும் அவரை வணங்கிய பின்னர்தான் உணவு உண்ண வேண்டும் என்றமுறையை மாற்றியவன். மரியாதை நிமித்தம் கால்களில் விழும் முறையை எதிர்த்தவன். முழுக்க முழுக்க குரான் சொல்லும் நெறி முறைகளைக் கடைபிடித்தவன்.
இப்படியானவனுக்கு எப்படி “ஒளரங்கசீப் தீமை குணம் கொண்டவன்” என்கிற கட்டமைப்பு உருவானது. அதை யார் உருவாக்குகிறார்கள், அதன் தேவை என்ன? போன்ற கேள்விகளை நாவலை வாசிக்கும் பொழுது நமக்குள்எழுவதை தவிர்க்க முடியவில்லை.
சூஃபிகள் என்றால் எப்பொழுதும் இறைவனைத் துதித்துப் பாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களது சமாதியில் அற்புதம் நிகழும். அதனால் மக்கள் சென்று வழிபடுகிறார்கள் என்பதுதான் என் புரிதலாக இருந்தது.சாரு இந்த நாவலில் சூஃபிக்களின் மக்கள் பணி, விதவை ஆதரவு, அனாதைகளுக்கு ஆதரவு , அறியாது செய்யும் சிறு குற்றங்களை மன்னித்தல், ஏழைகளுக்கு இரங்குதல், ஆளுகிறவர்களைக் கேள்வி கேட்டல் போன்றவற்றை நமக்கு காட்டுகிறார். எப்படி அவர்கள் ஊர் காவல் தெய்வங்களாக இருந்தார்கள் என்பதையும் புரிய வைக்கிறார்.
இந்தியத்தன்மை என பல உண்டு. அதில் முக்கியமானது “எளிமை”க்கு முக்கியத்துவம் தருவது. எல்லாம் இருந்தும், எல்லாம் செய்யும் வல்லமை இருந்தும், எளிமையானவர்களை இந்த மண் கொண்டாடும். அவர்கள் இந்த உலகில் எங்கிருந்து வந்தாலும் சரி, அது தூய சவேரியாராக இருந்தாலும் சரி, அந்தோனியாராகஇருந்தாலும் சரி, ஆப்கனிலிருந்து வந்த சூஃபி Palang Posh Naqshbandi ஆக இருந்தாலும் சரி.
இந்தியாவின் இந்த நூற்றாண்டின் கேள்வியான இந்து – இஸ்லாம் உறவைக் குறித்து நமக்குள் பல கேள்விகளையும்பல விளக்கங்களையும் நாவல் முழுவதும் தூவிச் சென்று கொண்டே இருக்கிறார் சாரு.
வாள் முனையில்தான் இஸ்லாம் இந்தியாவில் பரவியது என்றே நானும் நம்பியிருந்தேன் அந்தப் புரிதலை கேள்விக்குள்ளாக்கிறது நாவல்.
நாவல் முழுக்க இரண்டே இரண்டு பேரின் உரையாடல் மட்டும் தான். ஆனாலும் “இப்படி அவர் கூறினார்”, “அதற்கு நான் இப்படி பதில் சொன்னேன்” என்பது போன்ற வாக்கியங்களை நாவலில் எங்கும் பார்க்க முடியாது.அதற்காக நாடகப் பாணியிலும் எழுதப்படவில்லை.
ஔரங்கசீப் நாவலில் உரையாடலை எந்தளவுக்கு சலிக்காமல் கொண்டு போகக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதை நாம் கற்றுக்கொள்ள முடியும். நாவலில் பலவிதமான முறைகளை பயன்படுத்தியிருக்கிறார் சாரு.
கீழ வருவது ஒளரங்கசீப்பில் வரும் வாக்கியங்கள்.
“முகலாயர்களும்ஆப்கானியர்களும் இருவேறு இனங்கள். ஒரே ஒற்றுமை. மது.”
இந்த வாக்கியத்தைப் பலவாறாக எழுதிப் பார்த்தேன்.
1.முகலாயர்களும், ஆப்கானியர்களும் இருவேறு இனங்களாக இருந்தாலும் கூட அவர்களை இணைத்தது என்னவோ மதுதான்.
2.முகலாயர்களும், ஆப்கானியர்களும் இனத்தால் வெவ்வேறானவர்கள். ஆனால் அவர்களிடம் இருந்த பொதுவான விருப்பம் மதுபானமாக இருந்தது .
3.ஆப்கானியர்கள் வேறு இனம். முகலாயர்கள் வேறு இனம். இருவருக்குமான பொதுத்தன்மை என்பது மதுதான்.
4.வெவ்வேறு குணம் கொண்ட இரு வேறு இனங்களாக அடையாளப்படுத்தப்படும் முகலாயர்களுக்கும், ஆப்கானியர்களுக்கும் மது என்கிற பொதுவான ஒற்றுமை இருந்தது .
சாருவின் வாக்கியத்தில் இருக்கும் ரிதம், லயம், மேஜிக் இது எதிலும் வரவில்லை. மணிரத்தினம் படத்து வசனம்போலும் இல்லாமல், நீட்டி இழுத்துச் செல்வது போலும் இல்லாமல், நேர்த்தியான பறையின் தாளக்கட்டோடு பயணிப்பதுதான் சாருவின் எழுத்து நடை .
இந்த வாக்கியங்களை உடைத்துப் பார்த்தால்.
“ஒரே ஒற்றுமை” என்பது ஒரு வாக்கியம். “மது” என்கிற ஒற்றைச் சொல் அடுத்த வாக்கியம். சாருவின் எழுத்துநடையில் இரட்டை எழுத்து வாக்கியங்கள், ஒற்றைச் சொல் வாக்கியங்கள் பல உண்டு. அது சாருவின் எழுத்தில் இருக்கும் Uniqness.
மேலும் சாருவின் “ Loop Writing Style” குறித்தும் எழுத பல இந்த நாவலில் இருக்கிறது.முதலில் ஒரு பத்தி ஆரம்பிக்கும், அதைத் தொடர்ந்து ஒரு கதை சொல்வார், பின்னர் அடுத்தக் கதை, அந்த கதைக்கான விளக்கம், அந்த விளக்கத்தை தொடர்ந்து இன்னோரு கதை, அந்த கதைக்கான விளக்கம், அதைத் தொடர்ந்து துவக்கத்தில் ஆரம்பித்தக் கதைக்கான விளக்கத்தோடு ஓவ்வொரு அத்தியாயமும் முடியும். இதற்கு நான் வைத்த பெயர் “ சுருள்வாள்” Writing Style”.
அடுத்து, ஒரே நபர்தான் முழு அத்தியாத்திலும் பேசியிருப்பார். அவரது கருத்துக்கள்தான் இருக்கும். ஆனால் ஒரே மூச்சாக அந்த கதாபாத்திரம் சொல்லாது. இடையில் ஏதாவது இடையூறுகள், இடைமறிப்புகள் வைத்துவிடுவார். இதுவும் யூனிக்னெஸ் தான். இப்படி பல சொல்லிக் கொண்டே போக முடியும்.
கல்லறையில் இருக்கும் மனிதன் போல வாழ்வது, ஒரு ஃபகீர் வாழ்க்கை வாழ்வது குறித்து இந்த நாவல்தொடர்ந்து பேசிக் கொண்டே வருகிறது. இஸ்லாமுக்குள் இருக்கும் இந்த இறையியல் குறித்து தெரிந்து கொள்ள முடிகிறது. அக்லாப், ஆதாப், இமான், தாக்வா போன்ற இஸ்லாமிய ஆன்மீக கொள்கைகளை குறித்த அறிமுகம் கிடைக்கிறது .
ஃபகீர்களையும் சாமியார்களையும் ஆட்சியில் அமர்த்தினால் என்னவாகும் என்பதையும் புரிந்து கொள்ளமுடிகிறது.
ஒரு பிச்சைக்காரன் போல வாழ்ந்த ஒரு மன்னன் ஏன் இத்தனை படுகொலை செய்ய வேண்டும். அரியாசனை மீது இருந்த போதையா.
அவனை பொருத்தவரை இந்த தேசத்தை ஆள்வது என்பது இந்த உலகில் அவனுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட கடமை. அந்த கடமையை நிறைவேற்றுவது மட்டுமே அவனின் ஒரே விருப்பமாக இருக்கிறது. ஒளரங்கசீப்போடு மகாபாரத கிருஷ்ணரை ஒப்பிடுவதெல்லாம் உண்மையிலே ஆச்சரியமான ஒப்பீடுதான். தேச நலனுக்காக செய்யப்பட்ட கொலைகளே அதிகம் வரலாற்றில்.
முதலில் இந்த நாவலை வாசிக்கும் முன் ஒருவேளை இது வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து, வரலாற்றைக் கட்டுடைத்து, புதிய ஒளரங்கசீப்பை காட்டுவோரோ என எதிர்பார்த்தேன். இதில் வரும் கணக்கில் அடங்காவரலாற்று நிகழ்வுகள் மூலம் நம்மால் புதிய ஒளரங்கசீப்பை உருவாக்க முடியாது.
அவன் நல்லவனா கெட்டவனா என்கிற தீர்ப்புக்கு வர முடியாது. அவனது ஆளுமையின் மீது ஒளிபாய்ச்சி அவனுக்கு
புதிய வடிவத்தையும் நம்மால் அளிக்க முடியாது. மேலும் இப்படியான மறுகட்டமைப்புதான் இந்த நாவலின் நோக்கம் எனவும் நான் கருதவில்லை.
ஒளரங்கசீப் குறித்து நமக்கு தெரியாத தகவல்களை சொல்கிறார். அதை வைத்து நமக்குள் தீமை X நன்மை என்கிற இரட்டைத்தன சிந்தனையை சந்தேகிக்க வைக்கிறார். நம்மிடம் இருக்கும் பொதுபுத்தி மீது கல் எறிகிறார் சாரு. பொத்தாம் பொதுவா நிறுவப்படுகிற Grand Narrative கருத்தாடலை சந்தேகிக்க கற்றுக் கொடுக்கிறார் சாரு எனதான் எனக்குத் தோன்றுகிறது.
முழு வரலாற்றை விவாதிக்காமல் ஒரு அரசியல் தலைவரால் ஒளரங்கசீப்பின் பெயரைச் சொல்லி, அதை ஒருகுழுவினருக்கு எதிரான குரலாக மாற்றி
கரவொலி பெற முடிகிறது அல்லவா. இது எப்படி நிகழ்கிறது. இதற்கும் ஒளரங்கசீப்பைக் குறித்து பல்வேறு வழிகளில் கட்டமைத்த தீமையானவன் என்கிற சித்திரத்திற்கும் என்னதொடர்பு என்பது போன்ற கேள்விகள் வாசிக்க வாசிக்க எழுந்த வண்ணம் இருக்கிறது. மேலும் இந்த உலகுக்கு அதன் போக்குக்கும் ஒளரங்கசீப்புகள் தேவை இருந்து கொண்டேதான் இருக்கிறது எனவும் புரிகிறது.
தனது மற்றொருவனாக கருதும் சிவாஜியைக் குறித்து இப்பொழுதுதான் பேச ஆரம்பித்துள்ளார் ஆலம்கீர். கொக்கரக்கோ குறுக்கீடுகளுக்குள் அதை எப்படி ஆலம்கீர் சொல்லப் போகிறார் என்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சியர்ஸ்
நிர்மல்