சொற்கடிகை – 8

முதலில் ஒரு கடிதம்:

Dear Charu Sir,

Greetings!

My monthly subscription to your writing is very less but I ensure that I do it meticulously on the 1st of every month. But this month, it got delayed. Apologies.

The reason why I write now is not that. We, your readers, know you are totally engrossed in writing Aurangazeb. Yet, some like me would want to see your blog live every day.

I do not know if you would believe that I login into your blog at least five times a day to see if you have written anything. Sometimes you take a break for more than a couple of days. We would be really happy if you could write at least two lines every day for readers like me. Anything under the sky. It somehow completes our day!!

It is just a request and by no means undermining your busy schedule!

Love & Regards,

Priya.

இதுபோல் பல கடிதங்கள் வருகின்றன.  இனி அடிக்கடி எழுதுகிறேன்.

என்னை வாடா போடா என்று அழைக்கும் ஒருசிலரில் அவனும் ஒருவன்.  என்னை விட சின்னவன்தான்.  ஆனால் முதல் நாளிலிருந்தே அப்படிப் பழகி விட்டது.  முப்பது வருடப் பழக்கம்.  மகாத்மா.  அந்த ஒரே வார்த்தையில் எல்லாம் அடக்கம்.  வேறு வர்ணனைகள் தேவையில்லை.  என் திருமணத்துக்காக அலைந்ததிலும், திருமணம் முடிந்த கையோடு ஒரு வீட்டில் குடியேற வேண்டுமே, அதற்காக வீடு பார்ப்பதற்காகவும் அலைந்ததில் தம்பிக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டது.  அதனால் அவன் என் திருமணத்துக்கும் நான் மருத்துவமனைக்கும் செல்ல முடியாமல் போய் விட்டது. 

அவன் ஒரு பைங்கிளி எழுத்தாளன்.  அப்படியென்றால் உங்களுக்குத் தெரியும்தானே?  ஜனரஞ்சகமாக எழுதுபவர்களை மலையாளத்தில் அப்படிச் சொல்வார்கள்.  அம்மாதிரி எழுத்தை என்னால் ஒரு முறை கூடப் படிக்க முடியாது.  குப்பை.  எனக்குப் பிடித்த ஜனரஞ்சக எழுத்தாளர் சுஜாதாதான். அவரை என்னவோ என்னால் பைங்கிளி எழுத்தாளர் என்று சொல்ல முடியவில்லை.  பைங்கிளியை விட ஜனரஞ்சகம் கொஞ்சம் மேலே என்று என் மன அகராதியில் விழுந்து விட்டது.  சரியோ தவறோ?

நண்பனுக்கு இலக்கியம் தெரியாது.  அக்கறையும் இல்லை.  அவனைப் பொறுத்தவரை அவனும் எழுத்தாளன்.  நானும் எழுத்தாளன்.  ஆனால் சமீப காலமாக பைங்கிளி எழுத்துக்கு வாசகர் எண்ணிக்கை லட்சத்தில் இருந்தாலும், சமூகத்தில் மரியாதை இல்லை.  யாருமே மதிப்பதில்லை.  அதனால் தம்பி சொன்னான், டேய் சாரு, நானும் ஒரு இலக்கிய நாவல் எழுதுகிறேன், பார். 

அது நடந்து அஞ்சு வருஷம் இருக்கும்.

சென்ற மாதம் பார்த்தேன்.  டேய் சாரு, நான் சொன்னேன் இல்லியா, இலக்கிய நாவல்.  எழுதி முடித்து இலக்கியவாதிகள் நடத்தும் நாவல் போட்டியிலும் ஆறுதல் பரிசு பெற்று விட்டது.  அதற்காக ஒரு வெளியீட்டு விழா வைக்கப் போகிறேன்.  பாராட்டு விழா அல்ல.  நீ நடத்துவது போல் விமர்சனக் கூட்டம்.  யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.  திட்டலாம்.  நீதான் வெளியிடுகிறாய்.  நீதான் சீஃப் கெஸ்ட்.  நாவல் உனக்குப் பிடித்தாலும் சரி, குப்பை என்றாலும் சரி.  மனதில் பட்டதைச் சொல்லக் கூடிய ஆள் நீ.  உனக்கு நான் சொல்லத் தேவையில்லை.  நீ என்ன திட்டினாலும் நான் கலங்க மாட்டேன்.  உண்மையைப் பேசு.  விரைவில் அரங்கத்தைப் பிடித்து விட்டு தேதி கொடுக்கிறேன்.

அவனிடம் நான் பல மணி நேரங்கள் பதில் பேசினேன்.  அப்போதுதான் இந்த சுயசரித்திரத்தை எழுத வேண்டும் என்ற வித்து மனதில் விழுந்தது.  நான் அவனிடம் சொன்னதை சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன். 

தேர் வடம் பிடித்திருக்கிறாயா என்று ஆரம்பித்தேன். 

ஓ, முன்பெல்லாம் வருடா வருடம் கோவில் திருவிழாவில் முதல் ஆளாக வடம் பிடிக்க நிற்பேன்.

இலக்கியத்தில் அந்த முதல் ஆள் சி.சு. செல்லப்பா.  அப்புறம் க.நா.சு.  அப்புறம் நூற்றுக்கணக்கான பேர்.  சக்கரத்தில் சிக்கிச் செத்தவர் பலர்.  அப்படிச் செத்தவரில் ஒருவர் புதுமைப்பித்தன்.  புதுமைப்பித்தன் ஏன் செத்தான் என்று நினைக்கிறாய்?  புதுமைப்பித்தன் இருக்க வேண்டிய இடத்தில் கல்கி என்று ஒருவர் இருந்தார்.  இலக்கியத்துக்குச் சம்பந்தமே இல்லாத ராஜாஜி இலக்கியப் பரிசான சாஹித்ய அகாதமி விருது பெற்றார்.  அந்த அகந்தையினாலும், எழுத்தாளன் என்றால் யார் என்றே தெரியாத மௌடீகத்தினாலும் ராஜாஜி புதுமைப்பித்தனுக்குக் கதை எழுதச் சொல்லித் தந்தார்.  அவலத்திலும் அவலம். 

வடம் கூட தவறான உதாரணம்.  இங்கே நடப்பது ஒரு யுத்தம்.  வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்குமான யுத்தம்.  எல்லா சமூகங்களிலும் இப்படி இல்லை.  இருக்கத் தேவையும் இல்லை.  தமிழ்நாட்டில் மட்டும்தான் வணிக எழுத்தே இலக்கியம் என்று கருதப்படுவதால், வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் வித்தியாசம் இல்லாததால் இங்கேதான் அந்த யுத்தம் தேவைப்படுகிறது.  இங்கேதான் இளைஞர்களுக்கு இலக்கியவாதிகள் பற்றி எதுவுமே தெரியவில்லை.  பெயர் கூடக் கேள்விப்பட்டதில்லை.  ஓவியத் திறமை கொண்ட ஒரு கல்லூரி மாணவன் சினிமா நடிகனை வரைந்து காட்டுகிறான்.  காரணம், அவனுக்கு ஒரு இலக்கியவாதியைக் கூடத் தெரியாது.  இலக்கியம் படிப்பது சமூக விரோதம் என்று தமிழ்ச் சமூகம் நினைத்துக் கொண்டிருக்கிறது. 

எனவே நீ எத்தனை நல்லவனாக இருந்தாலும் எங்களுக்கு எதிரிதான்.  நீ எழுதிய நாவல் இலக்கியமாகவே தேறினாலும், நான் அதைப் படிக்க மாட்டேன்.  அது பற்றிப் பேசவும் மாட்டேன்.  நீ இலக்கியத்தின் உள்ளே இருந்தால், நீ எங்களில் ஒருவன்.  இல்லையெனில் நீ அந்நியன்.  அந்நியர்கள் என்ன எழுதினாலும், எவ்வளவு நன்றாக எழுதினாலும் இங்கே இடமில்லை. 

உள்ளே எப்படி இடம் பிடிப்பது?

ரத்தம் சிந்த வேண்டும்.  சுதந்திரப் போராட்டத்தில் ரத்தம் சிந்தினார்கள் அல்லவா, அப்படிச் சிந்த வேண்டும்.  இது எல்லாமே வெளிப்புறமாக நடப்பது அல்ல.  யாரும் தடியால் அடிக்க மாட்டார்கள்.  துப்பாக்கியால் சுட மாட்டார்கள்.  ஆனாலும் ரத்தம் சிந்த வேண்டும்.  சி.சு. செல்லப்பா தன் சொத்து எல்லாவற்றையும் விற்று எழுத்து பத்திரிகையை நடத்தினார்.  தன் மனைவி கொண்டு வந்த நகையையெல்லாம் எழுத்துவுக்காக விற்றார்.  க.நா.சு.வும் அப்படியே.  எல்லா எழுத்தாளர்களுமே எழுத்துக்காக, இலக்கியத்துக்காகத் தங்கள் வாழ்வை இழந்திருக்கிறார்கள். 

திருவல்லிக்கேணியில் ஒரு கோஷ்டி இருந்தது.  ஞானக்கூத்தன் அதன் தலைவர்.  கசடதபற, , கவனம் என்று பல பத்திரிகைகளை நடத்தினார்கள்.  கசடதபற குழு என்றே அதற்குப் பெயர். அதைச் சார்ந்தவர்கள் யாரும் செல்வந்தர்கள் இல்லை.  சொற்ப சம்பளம் பெறும் கீழ்நிலை அரசு ஊழியர்கள்.   எதிலுமே பட்டுக் கொள்ளாத அசோகமித்திரனும் அந்தக் குழுவைச் சார்ந்தவரே.  இங்கே சிறு பத்திரிகை நடத்தாத இலக்கியவாதியே கிடையாது.  நான் கூட இரண்டு பத்திரிகைகளை நடத்தியிருக்கிறேன்.   

இன்று ந. முத்துசாமியின் கூத்துப் பட்டறை பெரிய சினிமா நடிகர்களை உருவாக்கும் நடிப்புப் பள்ளியாக மாறியிருக்கிறது.  ஆனால் அதை உருவாக்குவதற்காக முத்துசாமி தன் மனைவியின் நகைகளைத்தான் விற்றார்.  சம்பளத்தில் பாதியை வீட்டுக்குக் கொடுத்து விட்டு, மீதியில் கூத்துப் பட்டறையை நடத்தினார். 

இது எல்லாம் ஒரு ஐநூறு பக்கம் போகக் கூடிய கதை.  தங்களையே எரித்துக் கொண்டுதான் இலக்கிய யாகம் வளர்த்தார்கள் இலக்கியவாதிகள். 

கலாப்ரியா ஆண்டு தோறும் குற்றாலத்தில் ஒரு இலக்கிய விழா நடத்துவார்.  அதற்கு இணையான ஒரு இலக்கிய விழாவை என் வாழ்நாளில் கண்டதில்லை.   எல்லாம் கலாப்ரியா செலவு.  புது எழுத்து என்று ஒரு இலக்கியப் பத்திரிகை.  எத்தனையோ ஆண்டுகளாக மனோன்மணியால் நடத்தப்பட்டு வருகிறது.  விருட்சம் என்ற சிறு பத்திரிகையை அழகிய சிங்கர் நாற்பது ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.  பல பத்தாண்டுகளாக மாதாந்திர இலக்கியக் கூட்டமும் நடத்துகிறார்.  இதிலெல்லாம் பங்கேற்காமல் திடீரென்று நானும் ஒரு நாவல் எழுதி விட்டேன், நானும் ஒரு இலக்கியவாதி என்றால் துடப்பக்கட்டையால் அடித்துத் துரத்தி விடுவார்கள்.

ஏன், யுவன் சந்திரசேகரும், பா. வெங்கடேசனும் என்ன பத்திரிகை நடத்தினார்கள்?

(ஓ, பயல் ஹோம் ஒர்க்கெல்லாம் சரியாகத்தான் செய்திருக்கிறான் போல என்று நினைத்தபடி சொன்னேன்.)  டேய் தம்பி, யுவன் பத்திரிகை நடத்தினாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது.  ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளாக – அல்லது, அதற்கும் மேலாக – அவர் இலக்கியத்திலேயேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  அவர் கலந்து கொள்ளாத இலக்கியச் சந்திப்புகள் இல்லை.  நான் சொன்னதை வார்த்தைக்கு வார்த்தை தட்டையாகப் புரிந்து கொள்ளாதே.  பத்திரிகை நடத்தாதவர் எல்லாம் இலக்கியவாதி இல்லை என்று நான் சொல்லவில்லை.  வடம் பிடித்திருக்க வேண்டும்.  இந்த யக்ஞத்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும். 

எந்த யக்ஞத்தில்?

கல்கிக்கு எதிரான, சுஜாதாவுக்கு எதிரான, பாலகுமாரனுக்கு எதிரான யக்ஞம்.

என்னது, சுஜாதாவா?  அவரை நீ ரொம்பவும் பாராட்டியிருக்கிறாயே?

அது வேறோர் சந்தர்ப்பத்தில்.  தமிழர்களை அவர் படிக்க வைத்தார்.  ஆனால் கலாச்சார சுரணையுணர்வை மழுங்க அடித்ததில் அவருக்கும் பங்கு இல்லாமல் இல்லை.  கணையாழியில் கடைசிப் பக்கங்கள் எழுதிய சுஜாதா வேறு.  ஒரு வெகுஜனப் பத்திரிகையில் வாசகர்கள் எதிர்க்கிறார்கள் என்று தொடரையே நிறுத்திக் கொண்ட சுஜாதா வேறு.  இவ்விஷயத்தில் சுஜாதாவையும் பாலகுமாரனையும் ஒப்பிடுவதே தவறுதான்.  ஏனென்றால், ஒரு தலைமுறையின் கலாச்சார சுரணையுணர்வே பாலகுமாரனால் ஒட்டு மொத்தமாகக் காயடிக்கப்பட்டது. 

பா. வெங்கடேசன் பற்றிக் குறிப்பிட்டாய்.  பார்ப்பதற்கு அவர் குங்குமப் பொட்டு எல்லாம் வைத்துக் கொண்டு ஒரு வைதீகர் மாதிரிதான் இருப்பார்.  ஆனால் அவர் எழுதிய தாண்டவராயன் கதையும், பாகீரதியின் மதியமும் உலக இலக்கியத்திலேயே அபூர்வமாக நடக்கும் பெரும் சாதனைகள்.  அவரெல்லாம் விதிவிலக்கு.  அவரை நீ ஒரு வாக்கியம் புரிந்து கொள்வது இந்த ஜென்மத்தில் நடக்காது.  மேலும், யுவனுக்கு சொன்ன மாதிரியே பா. வெங்கடேசனும் இலக்கியத்தின் உள்ளே நின்றவர்.  இலக்கியமே அவர் உலகம்.  ஒவ்வொரு எழுத்தாளனும் குமாஸ்தா வேலைதான் செய்ய வேண்டியிருக்கிறது.  நானும் இருபது ஆண்டுகள் ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் ஸ்டெனோவாகத்தான் இருந்தேன்.  அப்படித்தான் பா. வெங்கடேசனும் ஒரு குடும்பஸ்தனாக, ஒரு அலுவலக உத்தியோஸ்தனாக இருக்கிறார்.  ஆனால் அவருடைய சாரம் அது அல்ல. அது அவருடைய எழுத்தில் இருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னே கரிச்சான் குஞ்சுவை சந்தித்த போது ”என்ன கரிச்சான் குஞ்சு, இப்படி சட்டை போடாமல் குடுமியும் பூணூலுமாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். (அப்போதெல்லாம் சார் போட்டுப் பேசும் வழக்கம் இல்லை) ஏனென்றால், அவர் அப்போது தேவி ப்ரஸாத் சட்டோபாத்யாயவின் ஒரு தலையணை சைஸ் நூலை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.  அவர் ஒரு தமிழாசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர்.  அதே சமயம் சம்ஸ்கிருத அறிஞரும் கூட.  அக்காலத்தில் தமிழாசிரியர் என்றால் சம்ஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர்களாக இருந்தார்கள்.

சட்டோபாத்யாய ஒரு இடதுசாரி.  நாத்திகவாதி.  கரிச்சான் குஞ்சுவும் புரட்சிகர இயக்கங்களின் நக்ஸல்பாரி ஆதரவுப் போராட்டங்களில் முன் வரிசையில் கொடி பிடித்து கோஷம் போட்டுச் செல்பவர்.  அதனால்தான் அப்படிக் கேட்டேனே ஒழிய தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளில் நான் தலையிடுவது இல்லை.  நானே பிற்காலத்தில் தலைமுடியின் பின்னால் ரப்பர் பேண்ட் போட்டிருந்தவன்தான்.

கரிச்சான் குஞ்சு சொன்னார், நான் ஆசாரமான பிராமண வீட்டில் ஓசி சோறு சாப்பிடுகிறேன்.  என் மகள் வீடு.  யாராவது எனக்கு இரண்டு வேளை சாப்பாடு போட்டால் இந்த க்ஷணமே குடுமியையும் பூணூலையும் அறுத்துப் போட்டு விடுவேன் என்றார். 

கரிச்சான் குஞ்சு குடுமி வைத்திருந்தது நமக்குப் பிரச்சினை இல்லை.  அவரது இலக்கியச் சாதனைகளைப் பார்க்க வேண்டும்.   சட்டோபாத்யாயவின் தலையணை சைஸ் நூலை அவர் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த போது கண்ணில் புரை நோய் வேறு வந்து விட்டது. நான் தில்லியில் இல்லாமல் இங்கே கும்பகோணத்தில் இருந்திருந்தால் ‘நீங்கள் சொல்லுங்கள் கரிச்சான் குஞ்சு, நான் எழுதுகிறேன்’ என்று சொல்லியிருப்பேன் என்றேன்.  அறுபது ஆண்டுகளுக்கு முன்பே பசித்த மானுடம் என்ற ஆண் ஓரின உறவு நாவலை எழுதியவர் அவர். 

அவர் மொழிபெயர்த்தது சட்டோபாத்யாயவின் What is Living and What is Dead in Indian Philosophy? என்ற புத்தகம்.  அதை மொழிபெயர்க்க சம்ஸ்கிருத அறிவும் தேவை.

தண்ணீர் விட்டா வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்

கண்ணீரால் காத்தோம்! என்று பாரதி பாடியபடி இந்த இலக்கியத்தை வளர்க்க எங்கள் மூத்தோரும் நாங்களும் எங்கள் வாழ்க்கையையே பலியாக்கினோம். 

வேறு சிலர் இருக்கிறார்கள்.  இருபத்து இரண்டு வயதிலிருந்து  முப்பத்து இரண்டு வயது வரை பத்தாண்டுகள் இலக்கியத்தில் மிகத் தீவிரமாக வலம் வருவார்கள்.  சிறுகதை எழுதுவார்கள்.  ஃபூக்கோவை மொழிபெயர்ப்பார்கள்.  மார்க்ஸ் எங்கெல்ஸ் என்பார்கள்.  சடாரென்று ஒருநாள் காணாமல் போய் விடுவார்கள்.  துப்பறிந்து பார்த்தால் எங்காவது அமெரிக்காவிலோ லண்டனிலோ பணியில் இருப்பார்கள்.  வீடு கட்டி, கார் வாங்கி, கல்யாணம் பண்ணி, குழந்தை பெற்று வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு நாற்பத்தைந்து வயதில் சட்டென்று குதித்து திரும்பவும் இலக்கியம் படைப்பார்கள்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியாது.  அதனால் கடுப்பான அவர்கள் சாரு எழுத்தாளரே இல்லை, ஜெயமோகன் ஹிந்துத்துவா, மனுஷ்ய புத்திரனா, டிவியில் வருவாரே அவரா என்பார்கள்.  பதினைந்து ஆண்டுகளில் அவர்களுக்கும் தமிழ்நாட்டுக்குமே எந்தத் தொடர்பும் இல்லாமல் போயிருக்கும். 

ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே.டி. பாகவதர் ஜெயிலுக்குப் போய் வந்ததும் செல்லாக் காசாகி விட்டார்.  அதற்குள் தமிழ் சினிமா பாடலிலிருந்து வசனத்துக்கு மாறி விட்டிருந்தது.  பாகவதரின் இடத்தில் அண்ணாதுரையும், கருணாநிதியும், சிவாஜி கணேசனும் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள்.  அப்படித்தான் ஆகியது அந்த ஃபாரென் ரிட்டர்ண்ட் எழுத்தாளர்களின் நிலையும். 

எனவே, நீ தொபுக்கடீர் என்று குதித்து இங்கே இலக்கியம் பண்ண முடியாது.  நான் உன்னோடு ஒரே மேடையில் அமர்வதெல்லாம் நடக்கவே நடக்காத காரியம்.

இதுதான் நான் அந்த நண்பனிடம் பேசியதன் சுருக்கம். 

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai