சொற்கடிகை – 7

ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் ரூபாய் ராயல்டி வந்துள்ளது.  கொரானா காலத்தில், குரியர் சர்விஸ் எல்லாம் நிரந்தரமாக இல்லாத நிலையில், வருமானம் இல்லாமல் பணப்புழக்கம் முடக்கப்பட்டிருக்கும் கால கட்டத்தில் இது மிகப் பெரிய சாதனை என்றார்கள் நண்பர்கள்.  பதிமூணு லட்சத்துக்கு என் புத்தகங்கள் விற்றிருக்கின்றன.  சாதனைதான்.

ஆனால் என் பார்வையில் இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.  எனக்கு வந்த ராயல்டியை பன்னிரண்டால் வகுத்தால் எவ்வளவு வரும்?  பத்தாயிரத்துக்கும் கொஞ்சம் மேலே.  இங்கே தெருமுனையில் இஸ்திரி போடுபவரின் மாத ஊதியமே 25000 ரூ. 

அ-காலம் 20 பிரதிகள் விற்றுள்ளன.  அ-காலம் எழுதுவதற்காக ஆறு மாதங்கள் இரவு பகலாகப் படித்தேன்.  முப்பது வருட வாசிப்பின் பலன்தான் அ-காலம்.  என்னுடைய அ-புனைவு நூல்களில் ஆகச் சிறந்தது அ-காலம். 

என்னை வாசகர்கள் கவனிக்கவில்லை, வாசிக்கவில்லை, கொண்டாடவில்லை என்று நான் இனி சொல்ல மாட்டேன்.  சீலேயில் இருந்து கொண்டு “பயணத்தைத் தொடர இன்னும் ஐந்தாறு லட்சம் தேவை” என்று நான் ஃபேஸ்புக் மூலமும் என் ப்ளாக் மூலமும் வேண்டுகோள் செய்ததும் ஐந்தாறு லட்சமும் உடனே என் கைக்கு வந்து சேர்ந்தது.  அனுப்பிய பல வாசகர்கள் அன்று பணம் அனுப்பியதோடு சரி.  அதற்கு முன்னும் சரி, பின்னும் சரி, என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை.  ஆனால் தீவிரமாக வாசிக்கிறார்கள்.  புத்தகங்கள் வாயிலாக அல்ல.  இணைய தளம் வாயிலாக. 

எனவே வாசிப்பு முறை மாறி விட்டது.  இனி இப்படித்தான் இருக்கும்.  ஆனாலும் 20 பிரதிகள் என்பது அவமானகரமானதுதான். 

ஆனால் ஒன்று.  உலகம் பூராவுமே எல்லா மொழிகளிலுமே புத்தகங்கள் அதிக பட்சம் 1000 பிரதிகள்தான் விற்கின்றன.  நான் முராகாமி போன்ற எழுத்து சுனாமிகளைச் சொல்லவில்லை.  என் நண்பர் Allan Sealy போன்றவர்களைச் சொல்கிறேன்.  அவர் எழுதிய The Trotter-nama என்ற 2000 பக்க நாவல் எத்தனை பிரதிகள் விற்றிருக்கும்?  ஆயிரமோ ரெண்டாயிரமோதான்.  ஆனால் வருடத்தில் ஆறு மாத காலம் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு கருத்தரங்கில்தான் இருப்பார்.  இந்தியாவில் இருப்பதே ஆறு மாதம்தான்.  இத்தனைக்கும் அவ்வளவு வசதி இல்லாதவர்.  பயணங்கள் எதுவுமே அவர் செலவில் இல்லை.   எல்லாமே கருத்தரங்க அழைப்பாளர்களின் செலவுதான்.  இப்படித்தான் வேற்று மொழி எழுத்தாளர்கள் அத்தனை பேரும் சொல்கிறார்கள். 

இதுவரை நான் ஒரு பத்து அயல்நாடுகளுக்குச் சென்றிருப்பேன்.  எல்லாமே என் சொந்த முயற்சியால், என் செலவில் சென்றது.  என் செலவு என்றால் என் வாசகர்களின் பணத்தில்.  ஒரு பயணம் கூட எந்த அமைப்பின் பேரிலும் அல்ல.  ஆனால் மிமிக்ரி கேளிக்கையாளர்களும் பட்டிமன்றப் பேச்சாளர்களும் அமெரிக்காவுக்கு மட்டுமே இருபது முறை சென்று வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.  எல்லாம் ஏதாவது ஒரு அமைப்பின் அழைப்பின் பேரில்.  பெரும்பாலும் தமிழ்ச் சங்க அழைப்பு.  தமிழ் வளர்க்கிறார்கள். 

எனக்கு அமெரிக்க மையம் நான்கு முறை வீசா மறு்த்துள்ளது.  வங்கிக் கணக்கில் பணம் இல்லை.  அமைப்பு ஏதும் அழைக்கவில்லை.  நண்பர்களின் அழைப்பு என்பதெல்லாம் நம்பக் கூடியதாக இல்லை.  இது அமெரிக்க மையத்தின் நியாயம்.    

என் எழுத்தை வாசகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் சமூகத்துக்கு எழுத்தாளர்களைத் தெரியவில்லை.  ஒரு தொலைதூர தேசத்துக்கு வீசா கேட்டேன்.  உன்னிடம் போதுமான பணம் இல்லை என்று வீசா தரவில்லை.  அந்த நாட்டின் தமிழ் இலக்கிய விருதை இதுவரை பலரும் வாங்கியிருக்கிறார்கள்.  என்னைப் போன்ற ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளன் விருதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது.  சிறையில் போடாமல் இருப்பதே பெரிய விஷயம் என்று திருப்தி கொள்ள வேண்டும்.  ஆனால் எப்போது நான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன் என்றால், அந்த விருது கொடுக்கும் அமைப்பின் தலைவர் எனக்குக் கடிதம் எழுதி, உங்களுக்கு 5000 ரூ. பணம் அனுப்ப விரும்புகிறேன், உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை அனுப்புங்கள் என்று சொன்ன போது.  நான் எழுத்தாளர்களிடமிருந்து பணம் வாங்குவதில்லை சார், உங்கள் அன்புக்கு நன்றி என்று பதில் எழுதி விட்டேன்.  அவருடைய அமைப்பின் பேரில் எனக்கு ஒரு அழைப்பு இல்லை.  அழைப்பு இருந்தால் நான் பாட்டுக்கு வீசாவை வாங்கிக் கொண்டு சுற்றி விட்டு வருவேன்.  அஞ்சாயிரம் பணம் அனுப்புகிறாராம்.  என்ன, பிச்சையா போடுகிறீர்கள் என்று நினைத்துக் கொண்டேன். 

அன்புடன் பணம் அனுப்பினால் திட்டுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள்.  நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும் என்று நினைக்கிறேன்.  என் வீட்டுக்கு வந்து 25 புத்தகங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, என்னிடம் ஒரு மணி நேரம் பேசி விட்டு, ஒரு பிரிட்டானியா பிஸ்கட் பாக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டுப் போவதை விடக் கேவலம் அந்த அஞ்சாயிரம்.  அவரால் என்னை அந்த நாட்டுக்கு வரவழைத்து ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய முடியும். ஆனால் அஞ்சாயிரம் தருகிறேன் என்கிறார். என் காசிலேயே அங்கே நான் போய் வந்து விடுவேன்.  வீசா தர மாட்டேன் என்கிறான்.  அதுதான் பிரச்சினை. 

இந்தக் கொரானா முடிந்தால் ஒரு பத்து நாடுகளுக்காவது போய் வந்து பத்து நூல்களை எழுதி விடுவேன்.  இறைவனின் கருணை வேண்டும். 

நான் இதுவரை என் தளத்தில் எழுதியதைத் தொகுத்து பத்து நூல்களைக் கொடுத்திருக்கிறார் ஸ்ரீராம்.  இதற்காக அவர் மூன்று மாதங்களைச் செலவிட்டார்.  அதற்கு மேலேயே இருக்கும்.  மருத்துவமனை போக வேண்டியது.  வீட்டுக்கு வந்ததும் தொகுப்பு வேலை.  மாறி மாறி இந்த இரண்டும்தான்.  வேறு எந்த வேலையும் பார்க்கவில்லை. 

அந்தப் பத்து நூல்களையும் அப்படியே நான் ஸீரோ டிகிரியிடம் கொடுத்திருந்தால் அனைத்தும் இந்தப் புத்தக விழாவில் வந்திருக்கும்.  என் வாசகர்களுக்குப் பெரும் கொண்டாட்டமாக இருந்திருக்கும்.  ஆனால் ஔரங்க்ஸேபை எழுதியிருக்க முடியாது. 

ஏன், ஸ்ரீராம் தொகுத்ததை அப்படியே கொடுத்தால் என்ன?  அவர் தொகுத்தார்.  எடிட் செய்தார்.  ஆனால் உள்வேலைகள் எத்தனை இருக்கின்றன?  உள்வேலை என்றால், அதுவும் எடிட்டிங்தான்.  சொல் தீண்டிப் பழகு தொகுப்பை எடிட் செய்தேன்.  ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் என்று மூன்று நாள் எடுத்தது.  மூன்று நாளும் ஔரங்க்ஸேபைத் தொடவில்லை.  சொல் தீண்டிப் பழகு எத்தனை பிரதி போகும் தெரியுமா?  18 நாள் புத்தக விழாவிலும் 90 பிரதி போகும்.  அவ்வளவுதான்.  முழுக்க முழுக்க சிஸிஃபஸ் மன்னன் கதைதான்.  சிஸிஃபஸ் மன்னனின் கதையை கூகிளில் தேடிப் படியுங்கள்.  Sisyphus. 

புத்தகத்தைச் செப்பனிடுவது என்பது சாதாரண வேலை இல்லை. க்ரியா ராமகிருஷ்ணன் அதில் நிபுணர்.  அடுத்து, சி. மோகன்.  அதற்குப் பிறகு நான்தான்.  வேறு ஒன்றிரண்டு பேர் இருக்கலாம்.  அந்த அளவு எடிட்டிங் வேலையெல்லாம் ஸ்ரீராமுக்குத் தெரியாது.  அது எப்படியென்றால், மும்பையிலிருந்து நியூயார்க்குக்கு இடையில் நிறுத்தாமல் செல்லும் விமானிகளுக்கு எத்தனை மணி நேரம் பறக்கும் அனுபவம் தேவைப்படும்?  அதை விடக் கடினமானது இந்த எடிட்டிங்.  இருபது ஆண்டுகள் சொல்லே மூச்சாக இருந்திருக்க வேண்டும். 

புத்தக விழாவில் சந்திப்போம்.  மொக்கை போடுபவர்களைத் தவிர்க்க வேண்டும்.  இப்படி எழுதினால் யாரும் பேசாமலே போய் விடுகிறார்கள்.  மொக்கை போடுபவர்களிடம் ஒரு பொதுத்தன்மையைக் காண்கிறேன்.  அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களே மொக்கை மன்னர்களாக இருக்கிறார்கள்.   

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai