நாளைய புத்தக வெளியீட்டு விழா

நாளை மாலை (13.2.2022) ஐந்தரை மணிக்கு வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலையில் உள்ள ஃப்ரெண்ட்ஸ் பார்க்கின் அம்மாச்சி பார்ட்டி ஹாலில் நடக்கவிருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேச இருக்கிறேன்.

அருண்மொழி நங்கையின் பனி உருகுவதில்லை.

உடன் பேசுபவர்கள் யுவன் சந்திரசேகர், எம். கோபாலகிருஷ்ணன், ஜெயமோகன். ஏற்புரை அருண்மொழி நங்கை. நன்றியுரை காயத்ரி.

ஜெயமோகனும் நானும் இதுவரை ஒரே ஒரு முறைதான் மேடையில் சந்தித்திருக்கிறோம். அராத்துவின் புத்தக வெளியீட்டில். அதற்கு அடுத்து இதுதான். என்ன பேசுவது என்று முடிவு செய்து விட்டேன். எப்படிப் பேசுகிறேன் என்று நாளை மாலைதான் தெரியும்.

டார்ச்சர் கோவிந்தனும் வருகிறார். வெளியூரிலிருந்து வர வேண்டும். சிரமப்பட்டு ஏன் வருகிறீர் என்று கேட்டேன். இரண்டு துருவங்கள் சந்திக்கின்றன, பார்க்க வேண்டாமா என்றார். நான் ஏன் வர வேண்டாம் என்று சொன்னேன் என்றால், நான் எந்தக் கூட்டத்தில் பேசினாலும் “இன்னிக்கு ஸ்பீச் அவ்ளோ நல்லா இல்ல சாரு” என்பார். இல்லாவிட்டால், “ஐ டோண்ட் லைக் இட்” என்பார். இதெல்லாம் cynicism இல்லியா என்று கேட்டால், “உமது வாசகர் வட்டத்தினர் மாதிரி என்னால் உமக்கு ஜால்ரா தட்ட முடியாது, நான் மட்டும்தான் உம்மிடம் வெளிப்படையாகப் பேசுகிறேன், அதற்காக நீர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்” என்பார்.

நாளை என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன்…