11
ஔரங்ஸேப் இன்னொரு அத்தியாயம் எழுத வேண்டும். அதனால் அந்த அதிரடி விஷயத்தை நாளை எழுதுகிறேன். பில்டப் கொடுக்கவில்லை. உண்மையிலேயே அதிரடிதான். நீண்ட கதை என்பதால் நேரம் வேண்டும்.
அதற்கு முன்னால் வேறொரு விஷயம். அருண்மொழி நங்கையின் புத்தக வெளியீட்டு விழா முடிந்து வெளியே வந்து ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அஜிதனும் வந்தார். பேசினேன். ஜெயமோகன் கட்டம் போட்ட சட்டை போடாமல் வந்தது மனசுக்கு ஆறுதலாக இருந்தது. அஜிதன் படு ஸ்மார்ட்டாக இருந்தார். மூன்று வயதில் பார்த்தது. ஜெயமோகனும் விக்ரமாதித்யனும் இரவு முழுதும் தத்துவம் பேச நான் அஜிதனுடன் விஜய் படங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். தர்மபுரியில் ஜெயமோகனின் இல்லம். எதிரே பிரம்மராஜன் வீடு. பிரம்மராஜனும் ஜெயமோகனும் பேசிக் கொள்வதில்லை. ஆனால் குழந்தை அஜிதன் பிரம்மராஜன் வீட்டுக்குப் போய் வருவான்.
அருண்மொழி நங்கை விழாவில் ஜெயமோகனோடு நண்பர்கள் பலர் பேச விரும்பி நின்று கொண்டிருந்ததால் அங்கிருந்து நான் நகர்ந்தவுடன் சிவகுமார் என்னைப் பிடித்துக் கொண்டார். சிவகுமாரை நான் தினமும் எம்மார்சி நகர் பார்க்கில் வாக்கிங் போகும்போது பார்க்கிறேன். பேசுகிறேன். தினமும். அவர் என்னவோ அன்றைய தினம் காணாததைக் கண்டது போல் என்னிடம் பெரும் கதைகளைப் பேச ஆரம்பித்து விட்டார். அவர் தம்பியையும் அறிமுகப்படுத்தி மிக நீண்ட உரைகளை ஆற்ற ஆரம்பித்தார்.
அடக் கடவுளே, என் இலக்கிய நண்பர்களை நான் பல ஆண்டுகள் கழித்து சந்திக்கிறேன். சிலரை சந்தித்து இருபது ஆண்டுகள் இருக்கும். அவர்களோடு எல்லாம் நான் பேச வேண்டும். சிவகுமார் பாட்டுக்குப் போட்டுக் கொண்டேயிருந்தார். பக்கத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் நெளிந்து கொண்டிருந்தார். ராகவனுக்கு என் நிலைமை தெரிந்து விட்டது. சிவகுமாரோ விடுகிறாற்போல் இல்லை. பதினைந்து நிமிடம் கழித்து நானே கிளம்புகிறேன் என்று சொல்லி விட்டு கடுப்புடன் வந்து காரில் ஏறிக் கொண்டேன். சீனியோடு எனக்குப் பல விஷயங்கள் பேச வேண்டுமாக இருந்தது. அதுவும் சிவகுமாரால் முடியாமல் ஆயிற்று. அவர் தம்பியை அறிமுகம் செய்ய அதுவா நேரம், அதுவா இடம்? அவர் தம்பி மந்தவெளியில்தான் இருக்கிறார். என்னை சந்திக்க வேண்டுமென்றால் பார்க்குக்கு வர வேண்டியதுதானே?
ஏனய்யா எழுத்தாளன் என்றால் இப்படி ஏறி ஏறி மிதிக்கிறீர்கள்? நீங்களெல்லாம் எப்படி வாழ்கிறீர்கள்? எப்படி குடும்பம் நடத்துகிறீர்கள்? உங்களையெல்லாம் உங்கள் மனைவி மக்களெல்லாம் எப்படி சகித்துக் கொள்கிறார்கள்?
ராகவன் அடிக்கடி என்னிடம் தன்னடக்கமாக நான் ஒரு காமன்மேன் சார் என்று சொல்லிக் கொள்வார். நான் மறுப்பேன். ”என்னால் உங்களோடு ரெண்டு நாளைக்கு மேல் பழக முடிகிறது என்றாலே நீங்கள் காமன்மேன் இல்லை என்று அர்த்தம், காமன்மேன்களோடு நான் பழகுவதே இல்லை” என்பேன்.
ராகவன் என்றால் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் என்னைப் பார்த்தால் வந்திருக்கிறேன் என்று என்னைப் பார்த்து தலையாட்டி விட்டுக் கிளம்பி விடுவார். என்னைப் போட்டு இப்படி டார்ச்சர் செய்ய மாட்டார்.
சிவகுமாருக்கு இந்த நிகழ்ச்சி பற்றி எப்படித் தெரியும் என்று ராகவனை மறுநாள் கேட்டேன். மன்னிச்சிடுங்க சார், நான்தான் சொன்னேன் என்றார்.
அப்போது சிவகுமார் வந்து என்னிடம் ஆஹா, சாரு சார், நேற்று உங்களோடு பேசியதில் எனக்கு ரொம்ப சந்தோஷம் சார் என்றார்.
எனக்கு ரொம்ப துக்கம் சார் என்றேன்.
ஐயோ ஏன் என்றார்.
எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை சிவகுமாரிடம் காண்பித்தேன்.
அது இது:
சாருவுக்கு,
நேற்று அருண்மொழி நங்கை அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தேன். என் இடத்திலிருந்து வளசரவாக்கம் 17 கி.மீ. தூரம். என் கணவரை அவ்வளவு தூரம் பைக் ஓட்ட வைக்கலாமா என்று யோசித்தேன். ஆனால் அவருக்கும்தான் உங்களைத் தெரியுமே? உங்கள் எழுத்தை நான் அவருக்குப் படித்துக் காண்பிப்பது வழக்கம். விழா பற்றி அவருக்கும் தெரியும் என்பதால் போகலாம் என்றார். நான் தயங்கினேன். உன் வாழ்க்கையையே மாற்றி அமைத்தவர் என்கிறாய், ஏன் யோசிக்கிறாய் என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார்.
உங்களோடு நிறைய பேச வேண்டும் என்று நினைத்தேன். மூன்று பேர் உங்களிடம் பேசிக் கொண்டு இருந்தார்கள். நானும் கணவரும் நீண்ட நேரம் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டே இருந்தோம்.
கடைசியில் நீங்கள் கிளம்பும்போதுதான் வந்து உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆமாம், கை கொடுக்க ஏன் அவ்வளவு தயங்கினீர்கள்?
——
இந்தப் பெண்தான் என் பிறந்த நாள் அன்று வந்த கடிதத்தில் தன் ஆயுளில் பாதியைத் தருகிறேன் என்று எழுதியது.
இந்தக் கதையின் நீதி என்னவென்றால், தினந்தோறும் பார்க்கில் சந்தித்து மணிக்கணக்கில் பேசும் நண்பர்களெல்லாம் இம்மாதிரி நிகழ்ச்சிகளில் வந்து மொக்கை போட்டுக் கொல்லாதீர்கள். என்னை சந்தித்துப் பேச வாய்ப்பே இல்லாதவர்கள் என்னோடு பேச சந்தர்ப்பம் கொடுங்கள்.
வாழ்க்கையில் கொஞ்சமாவது அமெரிக்கையாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இதெல்லாம் சொல்லிக் கொடுத்து வருவது அல்ல. நாமேதான் தெரிந்து கொள்ள வேண்டும்.