(ஆணின் ஜனன ஸ்தானத்தைக் குறிக்கும் ஒரு மூன்று எழுத்து கெட்ட வார்த்தை இக்கட்டுரையில் மூன்று நான்கு முறை வருகிறது. அந்த வார்த்தையை அலர்ஜியாகக் கொண்ட கொழுந்துகள் இதைப் படிக்க வேண்டாம்…)
மூன்று நான்கு தினங்களாக இந்தப் பக்கம் வராத காரணம்தான் இன்றைய கதை. ஒருநாள் அருண்மொழி நங்கையின் பனி உருகுவதில்லை நூல். ஒருநாள் ஔரங்ஸேப் உர்தூ மொழிபெயர்ப்புக்காக சில சந்திப்புகள். நேற்று ஒரு நபரிடம் மாட்டிக் கொண்டேன். முழு நாளும் காலி.
நாலைந்து நாட்களுக்கு முன்பு தெரியாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு. தெரியாத எண் என்றால் எனக்கு ஆர்வம் அதிகம். இன்ப அதிர்ச்சி தரும் பல செய்திகள் தெரியாத எண்ணிலிருந்துதான் வருகின்றன. இது அப்படிப்பட்டது அல்ல. இதுவரை அனாதைகளாய்த் திரிந்து கொண்டிருந்த எழுத்தாளர்களை புத்தக விழாவை முன்வைத்து ’நீங்களும் ஒரு ஆள்தான்’ என்று எழுத்தாளனைப் பொய்யாக நம்ப வைக்க முயல்வார்கள் ஊடகக்காரர்கள். ஒரு இரண்டு வாரத்துக்கு எழுத்தாளர்களும் அந்தக் கனவிலேயே மூழ்கிக் கிடப்பார்கள். எனக்கு ஆரம்ப நாளிலிருந்தே புத்தக விழா என்றாலே ஒருவித அசூயையான உணர்வுதான் வரும். ஏதோ கற்கால மனிதர்கள் ஒன்று கூடும் இடம் மாதிரி இருக்கும் சென்னை புத்தக விழாவின் கழிப்பறைகள். சென்ற ஆண்டுதான் கொஞ்சம் தேவலாம். இன்னமும் நம் நாட்டில் லட்சம் பேர் கூடும் இடத்தில் கழிப்பறைகளை எப்படி வைத்திருப்பது என்று தெரியவில்லை.
இதில் பெண்களின் நிலை கொடுமை. நாள் முழுவதும் தண்ணீரே குடிக்காமல் உடம்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டும். மீறிப் போனால் கிருமித் தொற்று.
அடுத்த பிரச்சினை, மொக்கை போடுவதற்காகவே அலையும் வயசாளிகள் கூட்டம். சமயங்களில் இளைஞர்களும் மொக்கை போடுவார்கள். அடுத்து, ராயல்டி தொகை. அளவுக்கதிகமாக எரிச்சல் வரக் கூடிய அம்சம் அது. எல்லாவற்றையும் விட இன்னொரு கொடுமை, என்னை அவமானப்படுத்திய சக எழுத்தாளர்களை சந்திக்க வேண்டிய அவலம்.
ஒரு ஆள். அவர் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் வழக்கம்போல் அவருக்கு என் எழுத்து அசிங்கம். ஒருமுறை இந்தியா டுடேயில் ஒரு பத்தி எழுத ஏற்பாடாயிற்று. வாஸந்தி இல்லாத காலகட்டம். வேறொருவர் ஆசிரியர். முதல் வாரம் எழுதினேன். குறுக்குச் சால் என்பது பத்தியின் பெயர். ஒரே வாரத்தில் தொடரை நிறுத்தி விட்டார் ஆசிரியர். என்ன காரணம் என்றால், மேலே குறிப்பிட்ட நபர் இந்தியா டுடே ஆசிரியருக்கு நள்ளிரவில் ஃபோன் செய்து கெட்ட கெட்ட வார்த்தைகளில் கன்னாபின்னா என்று திட்டி, சாரு எழுத்தைப் போட்டேன்னா உன்னை வீட்டுக்கு வந்து உதைப்பேன் என்று மிரட்டிருக்கிறார். நாலைந்து நாட்கள் தொடர்ந்து மிரட்டவும் தொடர் நிறுத்தப்பட்டது.
நல்ல நிறைபோதையில்தான் மிரட்டல் போன் வருமாம். எடிட்டரோ குழந்தை குட்டிக்காரர். அப்போது கைபேசி இல்லாததால் பழைய காலத்து ஃபோன்தான். இப்படி மிரட்டல் ஃபோன் வருகிறதே என்று ரிஸீவரை எடுத்து வைத்து விட்டும் தூங்க முடியாது. பத்திரிகையாளர். எந்த நேரத்திலும் எந்த செய்தி வேண்டுமானாலும் வரும். அதனால் அவருக்கு வரும் எல்லா ஃபோனை அழைப்பையும் எடுத்துப் பேச வேண்டிய நிலை. எடுத்தால் நள்ளிரவில் இப்படி மிரட்டல். கணவர் உறங்குகிறார் என்று மனைவி எடுத்தால், உன் புருசன் கிட்ட சொல்லி வை தங்கச்சி, அந்த சாரு நிவேதிதாங்கிற புடுங்கியோட கட்டுரையை (அண்ணாச்சி பெண்களிடம் கெட்ட வார்த்தை பேச மாட்டார்!) மீறி உம் புருசன் போட்டான்னா வீட்டு வாசல்ல வந்து தர்ணா பண்ணுவோம், சொல்லிர்றியா, மறந்துராதே… என்று ழகரம் ழகரமாகக் கலந்து பேசினால் அந்த கிராமத்துப் பெண்மணி என்ன செய்வார்? வாஸந்தியாக இருந்தால் போ மேன் என்று சொல்லி விட்டு காரியத்தைப் பார்ப்பார். அந்த தைரியம் எல்லாம் அபிராமணர்களுக்கு வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. (சோ, பாலசுப்ரமணியன் போன்றவர்களை மனதில் வைத்து எழுதுகிறேன்.)
கடைசியில் இந்த போதை மிரட்டல் நள்ளிரவு ஃபோன் அழைப்புகளால் எடிட்டரின் குடும்பமே பயந்து போயிருக்கிறது. இப்படியாக அந்தத் தொடர் ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது இந்தியா டுடேயில் ஒரு படைப்புக்கு 1500 ரூ. கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம். மற்ற பத்திரிகைகளில் அப்போது 100 ரூ. கொடுப்பார்கள். கல்கியில் 75 ரூ. (தினமலர் எப்போதுமே விதிவிலக்கு. அப்போதே 2000 ரூ.)
இன்னொரு எடிட்டர். நாகர்கோவிலிலிருந்து கொல்லிப்பாவை என்று ஒரு பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதற்கு ஒரு படைப்பை அனுப்பினேன். என்னுடையது கூட அல்ல. நண்பரின் படைப்பு. நான் செப்பனிட்டேன். பதில் ஒரு கார்டு. அதில் “இம்மாதிரி உங்கள் கோமண அலசலையெல்லாம் பிரசுரம் செய்வதற்காக நாங்கள் பத்திரிகை நடத்தவில்லை” என்று எழுதினார் எடிட்டர்.
என் வயது 28 இருக்கும். இள ரத்தம். இப்படி ஒரு பதில் எழுதினேன்.
ராஜகோபாலின் சு…க்கு,
சாரு நிவேதிதாவின் சு… எழுதிக் கொண்டது. கோமணம் என்ன, என் சு..யைக் கூட அலசுவேன், இஷ்டம் இருந்தால் போடு, இல்லாவிட்டால் குப்பையில் தூக்கி எறி
இப்படிக்கு
சாரு நிவேதிதாவின் சு…
என்று பதில் கார்டு போட்டேன். உடனே அந்த நாகர்கோவில்காரர் என்ன செய்தார் தெரியுமா?
அப்போது நான் பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரியில் பிரின்ஸிபாலுக்கு ஸ்டெனோவாக இருந்தேன். அந்தக் கல்லூரி தொடங்கி அப்போதுதான் ஆறு மாதம் ஆகியிருந்தது. ஏதோ ஒரு கன்னடத்துக்காரர்தான் பிரின்ஸிபால். அவர் ஏற்கனவே என் மீது கொலைவெறியில் இருந்தார். பேராசிரியரை பாஸ்டர்ட் என்று திட்டுவார். எனக்கு எப்படி அது தெரியும் என்றால், நான் பிரின்ஸிபால் சேம்பரின் பின் பக்கம் உள்ள கக்கூஸில் அமர்ந்திருப்பேன். அங்கேதான் என்னுடைய டைப்ரைட்டர் இருக்கும். வேண்டாம். இதை நான் விரிவாக கதையாக எழுதலாம் என்று இருக்கிறேன். அந்த பிரின்ஸிபாலுக்கு நாகர்கோவில்காரர் புகார் கடிதம் அனுப்பி விட்டார். மொட்டைக் கடுதாசி அல்ல. தன் பெயர் போட்டு புகார் கடிதம். என் கடிதத்தின் நகலையும் அனுப்பியிருந்ததால் அந்தக் கன்னடத்துக்கார பிரின்ஸிபால் தனக்கு வேண்டிய பேராசிரியர்களை அழைத்து கடிதத்தைப் படிக்கச் சொல்லி அர்த்தம் கேட்டு, அதை மொழிபெயர்த்து தில்லியில் உள்ள என் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி என்னை ஒரே வாரத்தில் தில்லிக்குத் தூக்கி விட்டார்கள்.
பிரின்ஸிபாலும் சில பேராசிரியர்களும் ஆண்குறியைக் குறிக்கும் மூன்று எழுத்து கெட்ட வார்த்தையைக் குறித்து ஒரு நீண்ட ஸ்டாஃப் மீட்டிங் போட்டதெல்லாம் ஒரு மிகப் பெரிய அபத்த நகைச்சுவை. ஒரு பேராசிரியர் சொல்கிறார். சார், இப்படி எழுதுபவர் நிச்சயம் நக்ஸலைட்டாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள்தான் இப்படியெல்லாம் எழுதுவார்கள்.
அன்றைய இரவு முழுவதும் எனக்கு ஒரே சு.. கனவாகவே வந்து பயமுறுத்தியது.
நான் ஒரு வருட காலம் தில்லிக்குப் போய் வேலையில் சேராமல் சம்பளமும் இல்லாமல் பாண்டிச்சேரியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். குடியின் மீது அதீத பிரியம் கொண்டிருந்த நான் பாண்டிச்சேரியில் ஒரு பியர் கூட குடித்ததில்லை. கல்யாணி பியர் அப்போது நாலு ரூபாய். அது கூட இருக்காது. கொல்லிப்பாவை ஆசிரியர் ராஜகோபால் என்னுடைய சு… கடிதத்தை புகைப்படம் எடுத்து சக தமிழ் எழுத்தாளர்கள் இருநூறு பேருக்கு அனுப்பியிருந்தார்.
அதற்கு எதிர்வினை காண்பித்த ஒரே ஒழுக்கவாதி ஞாநி.
அப்போது நான் ஞாநி வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன். ஞாநி பீட்டர்ஸ் காலனியில் வசித்தார். நியூ காலேஜ் எதிரே. இந்த சு… கடிதம் படித்து விட்டு எனக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அதன் சுருக்கம், நீங்கள் இனிமேல் என் வீட்டுக்கு வர வேண்டாம்.
இதை வாசிக்கும் உங்களைப் பார்த்து யாராவது நீ இனிமேல் என் வீட்டுக்கு வராதே என்று சொல்லியிருக்கிறார்களா? மூஞ்சியில் காறித் துப்புவதற்கும் அதற்கும் என்ன வித்தியாசம்? அதோடு ஞாநியின் நட்புக்கு ஒரு குட்பை சொல்லி விட்டேன்.
இப்படிப்பட்ட மகான்களைக் கொண்டது தமிழ் இலக்கியச் சூழல். ஒன்றை மறந்து விடாதீர்கள். இவர்கள் அனைவருமே தனிப்பட்ட வாழ்வில் அற்புதமான மனிதர்கள். என்னிடம் மட்டுமே இப்படி நடந்து கொள்கிறார்கள். காரணம், என் எழுத்து.
ஒரு சக எழுத்தாளர். ஸ்ரீகாந்த் என்று பெயரிடுவோம். மிகவும் இனிமையாகப் பேசுவார். 25 ஆண்டு பழக்கம். பழகுவதற்கு மிக இனிமையானவர். ஏதோ ஒரு வெளியூரில் அவரோடு மூன்று நாட்கள் உடன் இருந்து பழகும்படி நேர்ந்தது. அங்கிருந்து கிளம்பும்போது அவருக்கு என் புதினங்களை அனுப்புவதாகச் சொல்லியிருந்தேன். அப்படியெல்லாம் நான் யாருக்குமே பண்ணினதில்லை. அவரது இனிமையான பேச்சு அப்படி என்னை சொல்லச் செய்தது. அனுப்பி இரண்டு ஆண்டுகள் ஆகியும் புத்தகங்கள் கிடைத்தன என்று ஒரு செய்தி வரவில்லை. நான் என்ன என் புத்தகங்களைப் படிக்கவா சொன்னேன்? தபால் கிடைத்தது என்று கூட செய்தி இல்லை. நானும் கவலைப்படவில்லை. கிடைத்திருக்குமோ இல்லையோ, அதுதான் கொஞ்சம் சம்சயமாக இருந்தது. பின்னர் அது பற்றியும் நினைப்பதை விட்டு விட்டேன். அவரோடு தொடர்பு கொள்வதையும் நிறுத்தி விட்டேன்.
பிறகு இரண்டு ஆண்டுகள் சென்று ஏதோ ஒரு பேச்சில், நான் அனுப்பிய புத்தகங்கள் கிடைத்ததா என்று கேட்டேன். கிடைத்தன என்றதோடு நிறுத்திக் கொண்டார். நானும் மூடிக் கொண்டேன்.
அதே ஸ்ரீகாந்த்தோடு இன்னொரு சம்பவம். ஏதோ காரணத்தால் அவரோடு பேச வேண்டிய சந்தர்ப்பம். பேசினேன். பேச்சு இசையின் பக்கம் நகர்ந்தது. நீண்ட நேரம் பேசினேன். மறுநாளும் பேசினோம். மறுநாளும் பேசினோம். இசை, இலக்கியம், இப்படி. ஒருநாள் நான் ஒரு குறிப்பிட்ட நவீன பாடலைப் பற்றிக் குறிப்பிட்டேன். அதன் லிங்கை அனுப்புவதாகவும் அதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன் என்றும் சொன்னேன். மறுநாள் கேட்டு விட்டு மெஸேஜ் செய்கிறேன் என்றார். சொல்லி இரண்டு ஆண்டுகள் இருக்கும். இன்று வரை எந்த செய்தியும் இல்லை. ஆனால் நேரில் பார்த்துப் பேசினால் படிபடியாய் தேன் பிடித்துக் கொள்ளலாம். அப்போதுதான் எனக்குத் தோன்றியது, அவரோடு நான் பேசியது முழுக்கவும் நானாக போன் செய்தால்தான். அவராக என்னோடு ஒருமுறை கூடப் பேசியது இல்லை. கடந்த 35 ஆண்டுகளாக. அவருடைய உலகில் நான் இல்லை என்பது மட்டும் அல்ல, நான் அவருக்கு ஒரு அசூயையாக இருக்கிறேன் என்பதும் புரிந்தது. அப்புறம் ஏன் பேசும் போது தேனாய்க் கொட்டுகிறது? அது அவரது இயல்பு போல.
இதோடு முடிந்திருந்தால் இதில் சுவாரசியம் இல்லை. சமீபத்தில் சாமிநாதன் என்ற நண்பர் ஸ்ரீகாந்த் பற்றிக் குறிப்பிட்டு அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரைத் தான் கண்டதே இல்லை என்றார்.
எப்படி?
யாரிடமும் இல்லாத – உங்களிடம் மட்டுமே நான் கண்ட ஒரு குணம் அவரிடம் இருக்கிறது.
என்னவென்றால், சாமிநாதன் தான் சமீபத்தில் வெளியிட்ட தன் சிறுகதைத் தொகுதியை ஸ்ரீகாந்துக்கு அனுப்பினார். கிடைத்த ஒரு மணி நேரத்தில் போன் செய்து கிடைத்த தகவலைச் சாமிநாதனுக்குச் சொல்லியிருக்கிறார் ஸ்ரீகாந்த். ஓரிரு தினங்களில் அந்தத் தொகுதி பற்றியும் அரை மணி நேரம் பேசியிருக்கிறார். அது மட்டும் அல்ல, தகவல் பரிமாற்றத்தில் அவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்றார் சாமி.
எப்படி?
யாருக்காவது நாம் ஒரு உதவி செய்தால் அந்த உதவியைப் பெற்றவர் அதற்கு மேல் அது பற்றி எந்தத் தகவலையும் நமக்குத் தர மாட்டார். நாமாகக் கூப்பிட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் ஸ்ரீகாந்த் ஒவ்வொரு நாளும் போன் செய்து அந்தப் பணியின் தற்போதைய நிலவரத்தைச் சொல்லி விடுகிறார். அக்னாலட்ஜ் பண்ணுவதில் சமர்த்தர்.
அதே ஸ்ரீகாந்த் ஏன் என்னிடம் மட்டும் வேறு மாதிரி நடந்து கொண்டார்? ஒரே காரணம்தான். ஸ்ரீகாந்துக்கு என் எழுத்து பிடிக்கவில்லை. அதனால்தான் நான் அனுப்பிய ஏழெட்டு புத்தகங்களும் அவருக்குப் போய்ச் சேர்ந்த தகவலைக் கூட ஒரு ஃபோன் செய்தியில் சொல்லவில்லை.
இதைத் தட்டச்சு செய்யும் போது, நான் எழுதிய லத்தீன் அமெரிக்க சினிமா என்ற நூலை சுந்தர ராமசாமிக்கு அனுப்பிய போது அவர் ஒரு கடிதம் எழுதி நன்றி தெரிவித்திருந்தது ஞாபகம் வருகிறது. இத்தனைக்கும் நான் அவருடைய ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலை fake என்று விமர்சித்து சிறியதொரு புத்தகமே போட்டிருந்தேன். அது அவர் லத்தீன் அமெரிக்க சினிமா என்ற என் நூலை எதிர்கொள்ள எந்த விதத்திலும் தடையாக இல்லை.
ஆக, சாமிநாதனிடம் அவ்வளவு நல்ல முறையில் நடந்து கொண்ட ஸ்ரீகாந்த் என் விஷயத்தில் ஏன் அப்படி மௌனம் சாதித்தார்? சாமிநாதனும் ஸ்ரீகாந்தும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது காரணமாக இருக்கலாமா?
எனக்குத் தெரியவில்லை. அது பற்றி யோசிப்பதும் என் வேலை இல்லை. ஆனால் ஒரே விஷயத்தை ஸ்ரீகாந்த் இரண்டு நபர்களிடம் எப்படி வெவ்வேறு விதமாக எதிர்கொள்கிறார் என்பது எனக்கு முக்கியமாகப் படுகிறது. அது மட்டும் அல்ல; இன்னொரு நண்பரும் கூட ஸ்ரீகாந்த் பற்றி சாமிநாதன் சொன்னது போலவே சொன்னார். ஸ்ரீகாந்த் எந்த விஷயத்தையும் உடனுக்குடன் தெரிவித்து விடுவார், அக்னாலட்ஜ் பண்ணுவார் இத்யாதி. இவரும் ஸ்ரீகாந்த்தின் சாதியைச் சார்ந்தவர்தான்.
இங்கே நான் சாதி பற்றிக் குறிப்பிடுவதன் காரணம், என்னால் வேறு காரணங்களை யூகிக்க முடியவில்லை.
ஸ்ரீகாந்த் பற்றி சீனியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது சீனி ஒரு சம்பவம் சொன்னார். அது ஒரு இலக்கியக் கூட்டம். நானும் இருந்தேன். ஸ்ரீகாந்த், சீனி எல்லோரும் இருந்தோம்.
ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த் அரங்கின் உள்ளேயிருந்து வெளியே வருகிறார். சீனி உள்ளே செல்கிறார். உள்ளே கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஸ்ரீகாந்த் கழிப்பறை செல்கிறார் போல. அந்த இடத்தில் அப்போது வேறு யாருமே இல்லை. எல்லோரும் உள்ளே இருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த்தின் கண்களைப் பார்க்கிறார் சீனி. ஒரு பிரேதத்தின் கண்களைப் போல் இருந்ததாகச் சொன்னார் சீனி. ஸ்ரீகாந்த் என்னைத் தவறாக எண்ணி விடக் கூடாது. எந்த அளவுக்கு ஒரு மனிதன் இன்னொரு மனிதனை உணர்ச்சியற்றுப் பார்க்க முடியுமோ அந்த அளவுக்கு ஸ்ரீகாந்த் தன்னை உணர்ச்சியற்றுப் பார்த்தார் என்பதற்கு சீனி சொன்ன உதாரணம் அது. சீனி நடிப்பதில் வல்லவர். செம ரகளை பண்ணுவார். இவரும் அதேபோல் பிரேதம் மாதிரியே பார்த்துக் கொண்டு செல்கிறார். இப்போது ஒருவரோடு ஒருவர் மோதும் நிலை. அவருக்கு இவர் ஒதுங்க அதே பிரேதக் களையோடு அவர் இவரைக் கடந்து போகிறார்.
என் மீதும் அப்படியே. வெறுப்பின் பார்வை இல்லை. பிரேதப் பார்வை கூட இல்லை. 45 ஆண்டுகளாக எழுதுகிறேன். 35 ஆண்டுகள் அப்படித்தான் தமிழ்ச் சமூகமும் அறிவுஜீவிகளும் என்னைக் கடந்தார்கள். பொருட்படுத்தவே இல்லை. வெறுக்கவில்லை. கண்டு கொள்ளவே இல்லை. அது அப்படியே இம்மி பிசகாமல் அராத்துவுக்கு நடக்கிறது.
சீனியை ஸ்ரீகாந்த் படித்திருக்கிறார். கடும் அசூயை உணர்வு உண்டாகிறது. ஆனால் அதை வெளிக்காட்டினால் சீனிக்கு கௌரவம் ஆகி விடும். ஒதுக்கித் தள்ளு. புறக்கணி. பிரேதப் பார்வை கொள். அதுதான் நடக்கிறது. இதற்கெல்லாம் நடுவிரலைக் காண்பிப்பது தவிர வேறு என்ன செய்ய முடியும்?
ஸ்ரீகாந்த் பற்றி நல்ல விதமாக என்னிடம் சொன்ன சாமிநாதனின் சிறுகதைத் தொகுதியைப் பற்றிப் பாராட்டிப் பேசியிருக்கிறார் அமர்நாத் என்ற இன்னொரு எழுத்தாளர். இந்த அமர்நாத்தை எனக்கு 30 ஆண்டுகளாகத் தெரியும். வளர்த்திக் கொண்டு போக விரும்பவில்லை. 30 ஆண்டுகளாக என்னைப் பிரேதப் பார்வையோடு கடந்து செல்பவர். ஒரு ஹலோ இல்லை. ஒரு முகமன் இல்லை. பிரேதக் களை. அவர்தான் சாமிநாதனின் முதல் சிறுகதைத் தொகுப்பைப் பற்றி சாமிநாதனிடம் அரை மணி நேரம் பேசியிருக்கிறார்.
இதனால் எல்லாம் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் இந்தப் பிரேதங்களையெல்லாம் புத்தக விழாவில் சந்திக்க வேண்டுமே என்ற ஒரு சின்ன எரிச்சல்தான்.
புத்தக விழா என்றால் எனக்கு அலர்ஜி உண்டாவதற்கு இன்னும் சில லௌகீகக் காரணங்களும் உண்டு. குளிர்சாதன வசதி இல்லை என்பது முதல் புகார். ப்ரா, ஜட்டி வாங்கப் போகும் மால், கேளிக்கைக்குப் போகும் சினிமா அரங்கம், மளிகைக் கடை முதல்கொண்டு குளிர் வசதி செய்து வைத்துக் கொண்டிருக்கும் இந்த சமூகம் ஞானத்தை வழங்கும் புத்தக விழாவை இப்படி குளிர்சாதன வசதி இல்லாமல் வைத்திருக்கிறது.
இப்படி எழுதினால் யார் எனக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமோ அவர்கள்தான் என்னை எதிர்க்கிறார்கள். பதிப்பாளர்களின் நலனுக்காக நான் பேசுவது பதிப்பாளர்களுக்கே தெரியவில்லை. ஏதோ நான் அவர்களைத் திட்டுவதாக நினைத்துக் கொள்கிறார்கள். சென்னை புத்தக விழாவுக்குள் சென்றால் ஏதோ சுண்ணாம்புக் காளவாய்க்குள் சென்றது போல் இருக்கிறது. அப்படி ஒரு வெக்கை.
இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் என்னைச் சந்திப்பதில் என் வாசகர்களுக்கு மகிழ்ச்சி. அவர்களின் மகிழ்ச்சி என்னுடைய மகிழ்ச்சி என்பதால் புத்தக விழா எனக்கு இனிமையானது. நாளை சந்திப்போம்.
ஒரு அதிரடி சம்பவம் என்று சொன்னேன் அல்லவா? அதை இன்று இரவுக்குள் பதிவேற்றுகிறேன்.
***
சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai