ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மாலை நான்கு மணிக்கு ஸீரோ டிகிரி அரங்கில் அமர்ந்திருப்பேன்.
வந்து ஒரே ஆளாக நின்று கொண்டு பல மணி நேரம் மொக்கை போடும் கொடுஞ்செயலை மட்டும் செய்யாதீர்கள். இப்படி எழுதினால் என்ன ஆகிறது என்றால் தூரத்தில் நின்றபடியே என்னைக் கை காண்பித்து ஏதோ முணகியவாறு சென்று விடுகிறார்கள். அவர்கள் இளைஞர்கள். இந்தத் தளத்தை வாசிப்பவர்கள். ஆனால் மொக்கை போடும் ஜென்மங்கள் அத்தனையும் அறுபதுக்கு மேற்பட்டதுகள், இந்தத் தளத்தை வாசிக்காததுகள். என்ன செய்வது என்று தெரியவில்லை. கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
கையெழுத்து போடுவது மிகவும் பிடித்த செயல்.
மேலும், சுஜாதா சொன்ன ஒரு விஷயம் ரொம்பப் பேரை பாதித்திருக்கிறது. எழுத்தாளனை ஒரு நல்ல வாசகன் சந்திக்க மாட்டான். கொடூரமான பேத்தல் இது. நானெல்லாம் உருவானதே எழுத்தாளர்களை சந்தித்ததால்தான். ரமணர் உங்கள் அருகில் நிற்கிறார் என்றால் அவரைச் சந்திக்காமல் இருப்பதா உங்களுக்கு நன்மை பயக்கும்? என்ன பைத்தியக்காரம் இது! அப்படியிருந்தால் சுஜாதா ஏன் வாழ்நாள் முழுவதும் சுந்தர ராமசாமியை சந்திக்க விரும்பினார்? (கடைசி வரை சு.ரா. சுஜாதாவை சந்திக்க அனுமதிக்கவில்லை)
எழுத்தாளனை சந்திப்பது உங்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத அனுபவம். சினிமாக்காரரை சந்தித்து அவர் உங்கள் மொபைல் போனைத் தட்டிக் கடாசுவதா உங்களுக்குத் தேவை? எப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டி சமூகம் இது!
எழுத்தாளனை சந்திப்பது ஒரு கொண்டாட்டம். புத்தக விழாவில் அதைக் கொண்டாடுவோம். உங்களைச் சந்திக்கவே அங்கே வருகிறேன். ஒரு சின்ன வேண்டு்கோள். என்னுடைய புத்தகங்களில் மட்டுமே கையெழுத்துப் போடுவேன். கல்கி புத்தகத்தில் எல்லாம் கையெழுத்துப் போட மாட்டேன்.